திரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்

திரை ரசனை வாழ்க்கை 6
Karnan (2021) Tamil Movie: Made Collections In Crores - Tech Kashif
 
டி ஆர் செவண்டன் (கணக்கு எண் 474 என்று நினைவு) எனும் ஓர் எளிய வாடிக்கையாளர்தான், வங்கனூர் எனும் சிற்றூரின் இளம் ஊழியனாக வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்த என்னிடம் நிறைய கேள்விகளும் விவாதங்களும் எழுப்பியவர். நடுவயதுக்காரர். ஆனால், வேறொரு பெரியவர் வரும்போதே, தலையைத் தாழ்த்திக் கொண்டு நுழைவார், கண்ணை இறுக மூடிக்கொண்டு கைகூப்பி வணங்குவார், நாங்கள் எழுந்து நின்று வணங்கி, இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொள்வோம்.  அந்த ஊருக்குள் நுழையும்போதே, திடீர் என்று ஊரின் இடதுபுறம் சாலை பிரிந்து வேறெங்கோ முடிச்சு முடிச்சாக வீடுகள் சில இருந்த இடத்தில் தன்னை முடித்துக் கொண்டது. மேற்படி இருவருமே அதே ஊரை, இல்லை, ஊரின் சேரி என்றழைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியைச் சார்ந்தவர்கள். ஆனால், செவண்டன் கேள்விகளோடு வாழ்ந்தவர்.
சாதீய படிநிலைகளைப் பற்றிய பாடங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியான தருணங்களாக வாய்த்துக் கொண்டே இருக்கிறது. ‘இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே’ என்றார் பாவேந்தர் பாரதிதாசன். 
னி மனித வாழ்க்கை, சண்டை சச்சரவு, தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, காதல், குடும்பம் இப்படியாக நிறைய கதைகள் வாசிக்கிறோம், திரையில் காண்கிறோம். சமூகத்தின் ஒட்டு மொத்த முகத்தை, அதன் கூட்டு அவஸ்தையை, கூட்டுக் கண்ணீரை,  கூட்டாக எழுந்து நிற்கும் ஆவேசத்தைத்  திரையில் அதிகம் காண்பதில்லை.  அத்திப்பட்டி எனும் சிற்றூரின் கூட்டுக் கவலையை, அதற்குத் தீர்வு கேட்டு ஒரே முகமாக அந்த ஊர் திரண்டு நின்றதை கோமல் சாமிநாதன் அவர்களது தண்ணீர் தண்ணீர் பேசியது. அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினால், அதிகார வர்க்கமும், அரசு எந்திரமும் எப்படி அதை அடக்கி ஒடுக்கும் என்பதையும் அந்தப் படைப்பு மக்களுக்குக் கொண்டு சேர்த்தது.
உரிமை கேட்பது ஒரு பக்கம், யார் கேட்பது என்பதும் சேர்த்து நோக்கப்படும் சமூகம் இந்திய சமூகம். தங்கள் பிறப்பினால் சுமக்க நேர்ந்த சாதி, அதன் வம்சாவழி சூட்டப்பட்ட பெயர்கள், பெயர்களைத் தொலைத்துக் கட்டிவிட்டு பொதுப்பெயர்களை சூட்டிக் கொண்டால் குறைந்துவிடாத சாதீய இழிவின் பளு, புதிய பெயர்களுக்கான அபாரதத்தையும் சேர்த்து வலிக்கிறது. கர்ணன் என்ற பெயரே கலகத்தின் முதல் குரலாக இருக்க, படம் இன்னும் அடிப்படை அம்சங்களின் நுணுக்கங்கள் பற்றிய பார்வையையும் எடுத்து வைக்கிறது.
‘இதெல்லாம் ஒரு ஊரு, இவனுக எல்லாம் ஒரு ஆளு, பஸ் ஒண்ணு தான் கேடு’ என்று பார்க்கும் ஆதிக்கப் பார்வை. பொத்திப் பொத்தி வளர்க்கும் கோழிக்குஞ்சு கொஞ்சம் சுதந்திரமாகப் பஞ்சாரத்தை விட்டு வெளியே காலெடுத்து வைத்தால், அதை அப்படியே தூக்கிக் கொண்டுபோய்விட என்றே காத்திருக்கும் பருந்து. ‘தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா’ என்ற கேள்வி. 
திரையில் தோன்றும் உயிரினங்கள் ஒவ்வொன்றும், இயற்கைக் காட்சிகள் ஒவ்வொன்றும், மனிதர்களது உடல் மொழியும், கண்களும் கதை சொல்லிப் பார்க்க நேர்வது எத்தனை அற்புதமான அனுபவம் என்பது விவரிக்க முடியாதது. அந்த வரிசையில், கர்ணன் அப்படியான ஓர் அசத்தல் அனுபவத்தை அளித்தது.
அவமதிப்புக்கு உள்ளாக்கப்படும் ஒரு சமூகம் எந்தச்  சுரணையுமற்று அதை ஏற்றுக் கொண்டு குனிந்தே நடக்க விதிக்கப்பட்ட மக்கள், ஒரு கட்டத்தில் நிமிர்ந்து நிற்பார்கள், கேள்வி கேட்பார்கள்  என்பதைச் சொல்லும் படம் கர்ணன். அதை வசனமாகப் பேசாமல், தொகுத்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தாமல்,  கண்ணீரால் கடத்தாமல் பளிச்சென்று பார்ப்போர் உள்ளத்தோடு நேரடியாக உரையாடும் ஒரு மொழியில் பேசுகிறது.  என்ன கதை என்று கேட்பவர்களுக்கு இது தான் கதை. காலா காலத்தின் கதை. 
பொடியன் குளம் மக்கள் தங்கள் கிராமத்திற்கு ஒரு பேருந்து வரவேண்டும் என்று கூடக் கேட்கவில்லை.  சாலையில் எங்கே இறங்கிக் குறுக்கே நடந்தால் ஊருக்குப் பக்கமாக இருக்குமோ அங்கே ஒரு பேருந்து நிறுத்தம் கேட்கின்றனர். ஆனால் ஊருக்கே வருகிறது, பேருந்து அல்ல, வாகனங்களின் ஊர்வலம், காவல் துறை பட்டாளமே வந்து இறங்குகிறது. கேட்டதைக் கொடுப்பதை விடக், கேட்பவர்களது வாயை அடைப்பது எளிதானது என்று  அதிகார வர்க்கத்திற்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்களைப் போருக்கு அழைக்கிறது சட்டம் ஒழுங்கு காப்பாற்ற வேண்டிய துறை. எந்த பதிலும் அவர்கள் சொல்லக் கூடாது என்பது அதன் எதிர்பார்ப்பு. அவர்கள் அந்தப் பதிலைக் கொடுக்கையில் அது இன்னும் விசுவரூபம் எடுக்கிறது, தனது படையின் எந்த வரிசையில் இருப்போரையும் பலி கொடுத்தாவது சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டியது அதன் தருமம். 
ஆனால் அந்தச் சட்டத்திற்கு எல்லாம் மேலே உயரே உன்னதமான பீடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது அரசியல் சாசனம். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பது அதன் பிரகடனம். சட்டத்தின் பிரம்பு ஒவ்வொரு முறை ஓங்கும்போதும், முதல் அடியை அந்த சாசனத்தின் மீது போட்டுத்தான் தனது திருப்பணியைத் தொடங்குகிறது. 
இதன் தத்துவங்கள் எல்லாம் அறிந்தவர்கள் அல்ல பொடியன் குளம் மக்கள். அவர்களது செல்லச் சிறுமி ஒருத்தி பட்டப்பகலில் மொட்டை வெயிலில் நட்ட நடுச் சாலையில் வலிப்பு கண்டு விழுந்து துடித்துத் தனது துடிப்புகள் அடங்கிப் போகிறவரை கடந்து போகும் எந்த மவராசனும் வண்டி நிறுத்தி முதலுதவி தந்தோ, வேறெங்கும் எடுத்துப்போய்க் காப்பாற்றவோ முனைப்பு காட்டாதது தற்செயலானது அல்ல, அறத்தின் வீழ்ச்சியுமல்ல, ஏதோ இரக்க சிந்தனையுள்ளவர்கள் அந்த பூமியில் யாருமே இல்லை என்பதாலும் அல்ல. அப்படித்தான் அது நிகழ்கிறது. 
அந்தச் சிறுமி பின்னர் அந்த மக்களது உளவியல் பரிமாற்றங்களில் கலந்து உயிர்ப்போடு காட்டுப் பேச்சியெனும் நாட்டார் தெய்வமாக நிலைத்து விடுகிறாள். ஆற்றுப்படுத்தவும் செய்கிறாள்,  ஆவேசமும் கொள்ள வைக்கிறாள்.
வீட்டிடை பொந்தினுள் இருக்கும் பூனை பேசுகிறது, பின்னர், அப்படியான மறைவிடங்களிலிருந்து இரும்பு ஆயுதங்களும் ! பட்பட்டென்று சிறகடிக்கும் பட்டாம் பூச்சியும், ஊர்ந்து போகும் புழுவும், நத்தையும், தூண்டிற் புழுவைக் கவ்வப் போய்க் காவல் துறை அதிகாரியின் முள்ளில் சிக்கித் துடிக்கும் மீனும், முன்னங்கால் கட்டுப் போட்டுவிட்டதால் தத்தித் தத்திக் கால காலமாக ஊரைக் கடந்து செல்ல முடியாது திணறிக் கொண்டிருக்கும் கழுதையும் எல்லாம் பேசுகின்றன படத்தில். 
அதன் கட்டறுபடும் வேளையில் அது ஒய்யாரமாக ஓடிப்போய் மலையுச்சியில் பேச்சியோடு நிற்கும் மலைச் சிகரமும்,  ஊர்க்காரர்கள் நிறத்திலேயே கம்பீரமாக மின்னும் கறுப்புக் குதிரையும், சடார் என்று திரும்பிப் பார்க்கும் நாயும்…..படத்தில் பேசவே செய்கின்றன. அவர்களோடு பேச மறுப்பவர்கள், அதிகாரத்திலும், ஆதிக்கத்திலும் இருப்பவர்கள் மனநிலை மட்டுமே. 
குளத்தில் கல்லெறியும் நாயகன், குளத்து மீனை இரு கூறாக்கி வாள் வீசவும் செய்கிறான், ஓடப்பராயிருப்போர் உதயப்பராகவும் ஆகிடுவார் என்பதை உணர வைக்கவும் செய்கிறான்.  அவனைப் பார்க்கப் பார்க்கக் காதல் உலை பொங்க வைத்துக் கொண்டாடுபவளும் அண்ணனின் சுய மரியாதைக்கே முதலிடம் கொடுத்துக் காதலனைக் கேள்விக்கு உட்படுத்துபவளாகவும் இருக்கிறாள். அதில் நொந்து போய்ச் சோர்ந்து கிடக்கும் நாயகனை அவனுடைய அக்காள், இராணுவ வேலைக்கோ,  வேறெதற்கோ போய் உருப்படியாயிரு என்று பாசத்தால் விரட்டிக் கொண்டே இருக்கிறாள்.  
வன்தொண்டனாக இருக்கும் அவனது முரட்டுப் பாசத்தையும், உரிமை மீதுறும் வசவுகளையும் சிரிப்பால் பருகியபடி மிகுந்த பொறுப்புணர்வோடு வழி நடத்தும் ஏம ராஜா எனும் (ஆசை மனைவி மஞ்சனத்தியைப் பறிகொடுத்துவிட்ட) தாத்தா, அவனைக் காதலியோடும், அவனது குடும்பத்தோடும், ஊர்ப் பெருந்தலைகளோடும் இழை பிசகாது ஒட்ட வைப்பவராகவும், அவனது சேக்காளியாகத் தன்னை மாற்றிக் கொண்டு தமது வாலிப மீட்சி உணர்வுக்குத் தீனி போட்டுக் கொள்பவராகவும், அவனது நலனை ஊரார் நலனோடு பின்னிப் பிணைந்து நெசவு செய்பவராகவும் வாழ்ந்து மறைகிறார்.
குரு சேத்திரங்கள் எப்போதோ எங்கோ அல்ல இப்படியான ஒடுக்குமுறைக்கு ஆட்படும் பொடியன் குளங்களில் அவ்வப்பொழுது நேர்ந்து கொண்டே இருக்கும் என்பதே கர்ணன் சொல்ல வருவது. இதிகாச பாத்திரங்களின் பெயர்கள் இப்போது வேறு சமூக எதார்த்த எதிரொலியாக துரியோதனன், திரௌபதை, கண்ணபிரான், அபிமன்யு  என…
போர்க்களத்தை ஒதுங்கி இருந்து விவரிப்பவனாக, உத்திகள் சொல்பவனாக, பார்வையாளனாக, படை நடத்துபவனுக்கு சாரதியாக மட்டும் இருந்தவன்  மகாபாரத கண்ணன். பொடியன் குளத்து குரு சேத்திரத்தில் காவல் துறை உயரதிகாரியாக வரும் கண்ணபிரான், தள்ளி நின்று அழித்தொழிப்பை  மேற்பார்வையிடவே செய்து கொண்டிருந்தாலும், தனது முன் வினைப் பலனை (காவல் நிலையத்தில் வைத்து ஊர்ப் பெரியவர்களை அடாத அடி அடித்துத் துவைத்து எடுத்ததற்கு) அடைந்தே தீர வேண்டி நேர்கிறது. கண்ண(பிரா)னே காட்டுகிறான், சாற்றுகிறான், கண்ண(பிரா)னே தன்னைக் கொலை செய்யுமளவு கர்ணனை ஆத்திரமூட்டி விடவும் செய்து விடுகிறான்.  அது அந்த யுத்தத்தின் தருமம் அல்ல. சமூக ஏற்றத் தாழ்வு குறித்து மரபணுவுக்குள் கால காலமாகக் கடத்தப்பட்டு வந்திருக்கும் விஷயங்களின் துயரமிக்க வெளிப்பாடு.
கல்லூரியில் சேர்க்க மகளை அழைத்துச் செல்கையில், சாதீய இழிவுச் சொல் எத்தனை காதில் விழுந்தாலும் பேசாமல் கேட்டுக் கொண்டு வந்திறணும் என்று சொல்லும் தந்தை, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் நேரத்தில் வம்புக்குச் சீண்டும் இளவட்டங்களின் ஆதிக்க உணர்வைத் தட்டிக் கேட்கப்போய்ப் படும் அவமானமும், அடியுதையும் ஒரு காட்சி. வயிற்றுப் பிள்ளைக்காரி வெயிலில் எந்நேரம் நின்றாலும் நிற்காமல் போகும் பேருந்துகளில் ஒன்றைக் கோபத்தோடு அவளது மகன் கல்லெறிந்து நிறுத்தும் காட்சி. பேருந்து பின்னர் அடித்து நொறுக்கப் படும் காட்சி. பேருந்து நிறுவன உரிமையாளரே, விபரீத நிலைமையை வளர்க்க வேண்டாம், புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்னபிறகும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஊர்ப் பெரியவர்கள் அப்புறம் என்ன ஆனார்கள் என்று ஊராரைத் தவிக்க விடும் காட்சி.
இவற்றை ஒரு சுவாரசியமான கதைபோக்காக, சின்னச் சின்ன நிகழ்வுகளாகப் பார்க்க முடியாத அவஸ்தையை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் அவரது குழு பார்வையாளருக்குள் ஏற்படுத்துவது தான் கர்ணன் படத்தை முக்கியமானதாக கவனிக்க வைப்பது. பேருந்தை அடித்து நொறுக்கியவர்களைத் தற்காத்து வைப்பது என்று ஊர்க்குடும்பன் துரியோதனன் (ஜி எம் குமார் என்னமாகச் செய்திருக்கிறார், ஆஹா) சொல்ல, ஒரு கட்டத்தில் வடமலையான் (யோகி பாபு) உண்மையைச் சொல்லிவிடும்போது, காமிரா உயரே சென்று நீர்த் தேக்கத் தொட்டியின் மேற்பரப்பில் ஒளிந்து உட்கார்ந்திருப்போரைக் காட்டுகிறது. பின்னர் காவல் நிலையம் முழுக்கத் தேடியும், எங்கே என்று தட்டுப்படாத ஊர்ப்பெரியவர்கள், காவல் நிலையத்தின் மொட்டை மாடியில் அடித்து நொறுக்கி வீசி ஒளித்து வைக்கப் பட்டிருப்பதைக் காட்டுகிறது காமிரா. வேறு சமயங்களில் உயரங்களைத் தொட முடியாதபடிக்குத்  தாழ்த்தப்பட்டே இருக்கின்றனர் அவர்கள்.
தாங்களும் மனிதர்கள் தான், தங்களுக்கும் ஊரருகே பஸ் நிக்கணும், ஊர்ப் பிள்ளைகள் படிக்கணும், வேலை தேடணும் என்பது தான் மையப்புள்ளி. அதற்கு வழி மறுக்கப்படுகையில், கலகக் குரல் எழும்புகிறது. எதிர்த்துக் கேட்டால் ஊரே அழியும், அடிமைப்பட்டுப் பிழைக்கப் பார் என்று அதிகார வர்க்க அறிவுறுத்தல் ஆவேசத்தைத் தூண்டவே செய்கிறது. அதற்குப் பின், நிலைமைகளில் மாற்றங்கள் நிகழவே செய்கின்றன. ஆனால், கொடியை உயர்த்துபவன் (படத்தில் கர்ணன் உயர்த்துவது வாள்), அதற்கான விலையைக் கொடுத்தே – சிறை பிடிக்கப்பட்டுத்  தண்டிக்கப்பட்டு ஊர் மீள்கிறான், வெற்றி வரவேற்புக்கும், இடைக்காலத்தில்  மரித்துப் போனவர்களுக்கான வழிபாடுகளுக்கும் இடையே. 
ஒட்டு மொத்த சமூக விடுதலைக்கான அரசியல் தெறிப்பு அல்ல கர்ணன்.  ஆனால், அதற்கான விதைகளை ஆழ ஊன்றும் உணர்வுகளின்  வெடிப்பு.  எனவே தான் அது விஷயங்களை நேரடியாகப் பேசுகிறது. நீண்ட கால வியூகங்கள் தீட்டும் காட்சிகள் இல்லை இதில். சம கால வாழ்க்கை, நாம் வசதியாக நம்புவதைப் போல் இராத உண்மையை முகத்தருகே பேசுகிறது திரைப்படம். 
தனுஷ் அசாத்திய உழைப்பை, கதைக்களத்திற்கு உரிய பங்களிப்பை நடிப்பிலும், பாட்டிலும் வழங்கி இருப்பது மிகுந்த பாராட்டுக்கு உரியது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், த இராமலிங்கம் அவர்களது  படத்தொகுப்பும் நிறைய பேசப்படும். சந்தோஷ் நாராயணன், மாரி செல்வராஜ் பேசத் தொடங்கும்போதே அதற்கான பின்னணி இசையைத் தொடுக்கத் தொடங்கியவராக இருக்கிறார். அசர வைக்கும் பறையோசை, ஆதிக்க உணர்வுகளின் செவிப்பறை  அதிர ஒலித்துக் கொண்டே இருக்கிறது

அவரவர் வீட்டினுள் அவரவர் நுழைந்து வெளியேறுவதும், அவரவர் ஊரில் அவரவர் நடப்பதும், வசிப்பதுமாக எத்தனை தன்னியல்பாக ஒரு திரைப்படம். ஒவ்வொரு காட்சியும் நகர்த்திக் கொண்டே செல்வதில், பார்வையாளர்கள் காமிராவின் கண்ணுக்குப் படாத அருகமர்வில் அதே சிற்றூரில் உடன் வாழவே செய்து, மகிழ்வுற்று, துயருற்று, அரற்றவும் கூடவே ஆடிப் பாடவும் செய்து தியேட்டர் ஊழியர்கள் நினைவுபடுத்தி வந்து நிற்கும்போதே மீள்கின்றனர் என்பதைப் பார்க்க முடிந்தது. 
‘ஏமராஜா’ லால் நிச்சயம் விருதுகள் குவிப்பார் எனில், மஞ்சனத்தி புருஷா என்று அவரை விளித்து யுகாந்திரக் காதலைக் குழிந்தே போய்விட்ட கண்களிலும், கன்னங்களிலும் வெளிப்படுத்தும் அந்த மூதாட்டி பெற்றுக் கொள்ளும் ஆசை முத்தம் பெருவாழ்வு வாழும்.  தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி பிரியா சந்திர மௌலி பன்முக உணர்ச்சிகளை அனாயாசமாக உயிர்ப்போடு முகத்தில், உடல் மொழியில் கொண்டு வந்துவிடுகிறார்.  காதலியாக வரும் ரஜீஷா விஜயன் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  குதிரைக்கார சிறுவன் காளீஸ்வரன், பஸ் மீது கல்லெறியும் சிறுவன், காவல் நிலையத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு சாட்சியாகிப்போன தேநீர்க் கடை சிறுவன், தொடக்கத்தில் ஊரையும் ஆட்களையும் விவரிக்கும் காவல் துறை அதிகாரி  எல்லார் கண்களிலும் நடிப்பை வருவிக்கிறார் மாரி செல்வராஜ்.  நடராஜ் எனும் நட்டி, கண்ணபிரான் பாத்திரமாகவே பார்க்கப்பட்டுக் கடுமையான வசவுகளுக்கு சமூக ஊடகங்களில் ஆட்பட்டிருப்பதை விடவும் வேறென்ன வேண்டும், வெகுமானம் !  பூ ராமுவுக்கு அளவான பாத்திரம். 
யுக பாரதி, இரண்டு சிறப்பான பாடல்கள் வழங்கி இருக்கிறார், ‘மஞ்சனத்தி புராணம்’ (தேவா என்னமாகப் பாடி இருக்கிறார்) அசர வைக்கும் அனுபவம் எனில், ‘தட்டான் தட்டான்’ பாடல் (தனுஷ் லயித்துப் பாடி இருக்கிறார்) சமூகத்தின் காதல் கொண்டாட்டம். ‘கண்டா வரச்சொல்லுங்க’ (மாரியம்மாள் என்ன குரல்), ‘உட்றாதீங்கப்போவ்’ (தீதி, என்ன வித்தியாசமான இழைப்பு ) இரண்டும் உள்ளத்தில் எப்போது எழுதி வைத்திருந்தார் மாரி என்று கேட்க வேண்டும். 
பரியேறும் பெருமாள் படத்தில் எதிரெதிராக உணரப்படும் சமூகத்து மனிதர்களை அருகருகே ஒரு ரோஜாப் பூ நடுவே அமர்ந்து உரையாட வைத்திருந்தார் மாரி. இந்தப் படத்தின் வரையறையை, அதன் அழகியல் தன்மை, கலையின் சிறப்பான வெளிப்பாடு இவற்றின் உள்ளடக்கம் குறைவுபடாமலே கூட சற்று விரித்து  சமூக எதார்த்தத்தின் இன்னொரு முகத்தையும் காட்டி இருக்க முடியும் மாரி. மாற்றங்களுக்கான குரலை அங்கீகரிக்க மட்டுமல்ல, சாத்தியப்படுத்த வேண்டிய பங்களிப்பும் செய்வோரையும் உள்ளடக்கியதே ஒடுக்குமுறைக்கு எதிரான களங்கள். கர்ணன், பார்க்க விடுபடக் கூடாத ஒரு காட்சி மொழிப் படங்களில் ஒன்று. 
ங்கனூரின் செவண்டன் இப்போது எங்கே எப்படி இருக்கிறார் தெரியாது, கர்ணன் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நெஞ்சில் நிறைந்திருந்தது அவரது முகமும், அவர் எழுப்பி இருந்த கேள்விகளும்.

9 responses to “திரை ரசனை வாழ்க்கை -6 – கர்ணன் (2021) எஸ் வி வேணுகோபாலன்

 1. கர்ணன் என்றதும் என் நினைவில் வந்தது கம்பீரமான சிவாஜி , பள்ளி யை எரித்த சிறுவனை துரத்தி ய கும்பல் ஆனால் தனுஷின் கர்ணன் விமர்சனம் என்ன இருந்தாலும் இன்னும் இந்த ஜாதி பேதம் ஒழிய வில்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது

  Like

 2. கொஞ்சம் நீளமான ஆனால் படத்துக்குள் அமிழ்ந்து தொலைந்துபோன கவிதா வரிகள். ஒரு எழுத்தாளனின் விமர்சனம் இப்படித்தான் பொங்கிவழியுமோ? வாழ்த்துகள் வேணு. வங்கனூர் செவண்டனைக் கண்டா வரச் சொல்லுங்க

  Like

 3. Super sir. U have enjoyed frame by frame. There is a realism in the film. All are living. Our mother Earth is for all livings. In India everybody are minority in one place and majority in another place. Poor’s or dalits uprising happens in India. They want to enjoy power. It will be in their hand. Super movie.

  Like

 4. Karnan entrale veeramana poorali vimarsanam sinthanaiyai thoondu kirathu Nanum perumai kolkiren Vanganur branch sendru vanthathil from pallipet on inspection

  Like

 5. நெல்லை சீமையின் மண்ணியல் வாசனையின் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் படம்.

  இதில் கதாபாத்திரங்களை மிக நுட்பமாக உள்வாங்கி அழகாக நடையில் வார்த்தைகளாய் பதிவு செய்து உள்ளேர்கள். இயக்குனரையும், இசையையும், பாடலையும் ஒரே நேர்கோட்டில் கணித்து கனமான விமர்சனத்தை தந்து உள்ளேர்கள்.

  சிறப்பு ஐயா👏👏👏💐💐💐

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.