டெஸ்டில் பாஸா பெயிலா
பள்ளி கல்லூரி நாட்களில் டெஸ்ட் ரிசல்டைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. ஆனால் இன்று வரப் போகும் டெஸ்ட் ரிசல்டை நினைத்தால்தான் கவலையாக உள்ளது. காரணம் இருவரும் எழுதிய டெஸ்டில் என மகன் பெயிலென வந்தது. கவலை கூடி விட்டது.
தெனாலி பட கமல் போல கடந்த சில நாட்களாக எங்கும் பயம் எதிலும் பயம். நான் கடந்த ஒரு வாரத்தில் வீட்டை விட்டு வெளி சென்றதே காலை வாக்கிங் மட்டுமே.
அச்சமயம் கூட மாஸ்க் அணிந்து எதிரே வருபவரை கண்டால் பயந்து ஒதுங்கி விடுவேன். பின் இருந்து யாராவது என்னைக் கடந்நு சென்றாலும் பயந்து ஒதுங்கி விடுவேன்.
என மகனுக்கு ஓரிரு நாட்களாக தொண்டையில் கிச் கிச். தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டான். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை. இருந்தும் கொரோனா பாஸிடிவ்.
எனக்கும் நேற்று இரவிலிருந்து தொண்டையில் கிச் கிச் . காலை எனக்கே சற்று பயம் வந்தது.
மூக்கு வாசனை வருகிறதா என பார்க்க ஒரு காரமான தைலத்தை முகர்ந்து பார்த்தேன்.
சற்று அதிகமாக உறிஞ்சி விட்டேன் போல. தலை வரை சுர்ரென்று ஏறி கண்களில் நீர்.
பரவாயில்லை முகர்ச்சியில் பிரச்சனை இல்லை. இருந்தாலும் இரண்டாவது டெஸ்டாக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய பர்பியூம் (perfume) எடுத்து முகர்ந்து பார்த்தேன் . அருமையான வாசனை, ஏன் அதை அப்பொழுது உபயோகிக்க வில்லை என்ற எண்ணம் உறுமலுடன் வந்தது.
பின்னர் வாய்வழியாக வைரஸ் நுழைவதை தடுக்க சுடு நீர் மருந்து. எவ்வளவு சூடாக இருக்க வேண்டுமென தெரியாததால் கொதிக்கும் நீரை கையில் வைத்து குடிக்கும் பக்குவத்தில் எடுத்துக்கொண்டேன்.
குடித்த பின் அடிவயிற்றின் வெளிப்பக்கமே சுட்டது. வைரஸ் சூடு தாங்காமல் ஓடியே போயிருக்கும்.
சரி, நமக்கு கொரானா இல்லை நானாக முடிவு செய்தேன் . ஆனாலும் என மகன் விடவில்லை. டெஸ்ட் எடுக்க வைத்து விட்டான்.
மீறி பிடிவாதம் பிடித்தால் அப்பீல் சுப்ரீம் கோர்ட் செல்லும். சுப்ரீம் கோர்ட் நியூ ஜர்ஸியில் உள்ளது. என் மகள்தான் ஜட்ஜ். அவள் ஏதாவது செய்து வீட்டிற்கு ஆம்புலனஸ் அனுப்பி வைத்து விடுவாள்.
அம்மாவை விட்ட அவர்களுக்கு என்னையும் விட்டுவிடுவோமோ என்ற பயம்.
சோதனைச் சாலையில் மூன்றாவது மாடிக்கு போகச் சொல்லி பின்னர் முதல் மாடிக்கு அனுப்பி பின்னர் மீண்டும் மூன்றாவது மாடியில் எடுத்தார்கள். நான் முறையிட்டது பிடிக்க வில்லை போலும் !
அவர் என் மூக்கில் நுழைத்த குச்சி கண் வரை சென்றது.
ஒருவழியாக அந்த வைபவம் முடிந்து பரிசோதனை முடிவு வருவதற்காக ஒரு நாள் காத்திருப்பு.
மறுநாள் முடிவு தெரிந்தது!
அப்பாடா ! எனக்கு கொரோனா நெகட்டிவ்.
எனக்கோ கொரோனா நெகட்டிவ்.
ஆனால் நேற்று மாலை முதல் எனக்கு கடுமையான இருமல், 102 டிகிரி காய்ச்சல். உடம்பு வலி. டாக்டரின் அறிவுரையின்படி இரவு சி டி ஸ்கேன் எடுத்தார்கள்.
கடைசியில் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனாலும் வீட்டில் என்னையும் தனிமைப் படுத்திக் கொள்ள அனைவரும் ஏகமனதாக அன்புக் கட்டளை இட்டார்கள் !
இப்போது என் வீட்டில் என்னை நானே தனிமைப் படுத்திக்கொண்டிருக்கறேன்.
கொரானாவை பையனுக்கு இறைவன் கொடுத்து அதன் விளைவுகளை எனக்கு கொடுத்து விட்டார் போலும்