செந்திலுக்கு தன் மேலேயே கோபம் கோபமாக வந்தது. அம்மா நொடிக்கு நூறு முறை சொல்லியும் கூட அவனுடைய சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறான். இதோ, நாளை விடிந்தால் அவனுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ளது.
கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்ததிலிருந்து தான் ஏதோ பெரிய ஒன்றை சாதித்து விட்டது போல் கர்வத்துடன் நடந்து கொள்ளத் தொடங்கினான். புத்தகத்தைத் தொட்டு நீண்ட நாட்களாகி விட்டது, படித்தால்தானே ! நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, வீண் அரட்டை அடிப்பது, தெரு முனையில் நின்று கொண்டு அங்கு வரும் பெண்களை சைட் அடிப்பது என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் அம்மாவோ முன் ஜாக்கிரதை முத்தண்ணா . ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே முழங்க ஆரம்பித்து விடுவாள். காரியத்திலும் மகா கெட்டி. உடனே இறங்கி விடுவாள்.
“செந்தில், இன்னுமா குருட்டு யோசனை ? பாழாய்ப் போன யோசனை! சட்டென்று எழுந்து வேலையப் பார். சமையல் அறையிலிருந்து வெளியே வந்து சத்தம் போட்டு விட்டு திரும்பச் சென்றாள் அவன் அம்மா சாந்தி.
அம்மா இரைவது காதில் சம்மட்டியாக இறங்கியது. அவனுக்கு அம்மாவின் மேல் கோபம் தலைக்கு மேல் ஏறியது. உடனே பஞ்சை எடுத்து இரண்டு காதுகளிலும் அடைத்துக் கொண்டு செல் போனை குடைந்து கொண்டிருந்தான்.
சொல்வது காதில் விழுகிறதா? என்னதான் அப்படி சோம்பேறித்தனமோ? எனக்கு நேர்மாறாக வந்து பிறந்திருக்கு என்று சற்று சத்தமாகவே முணுமுணுத்தாள் சாந்தி.
அவள் கணவர் ரமேஷ் எதற்கும் கவலைப்படாமல் தலை முழுக்க தமிழ்ப் பேப்பரில் அமிழ்த்திக் கொண்டு படிப்பது மாதிரி போக்குக் காட்டிக் கொண்டிருந்தார். “இருக்கறது ஒரு பையன், அவன் என்ன படிக்கிறான்னு கூட தெரியாம இப்படி கல்லு மாதிரி இருக்கீங்களே, அப்படி என்னதான் பேப்பரில் இருக்கோ ?” என்று எரிச்சலுடன் கணவருக்கும் ஒரு டோஸ் விட்டாள் சாந்தி.
செந்தில், நாளைக்குப் பரீட்சைக்கு எல்லாம் தயார் செய்து விட்டாயா ? பாஸ் பண்ணி விடுவாய் அல்லவா ? திரும்பவும் ஆரம்பித்து விட்டாள் அவன் அம்மா.
இந்த முறை செந்திலால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. வேக வேகமாகத் தன் ரூமிலிருந்து வெளியே வந்து, “ அம்மா, ஏன் இப்படிக் கத்திக் கூப்பாடு போடற? நான் என்ன சின்னக் கொழந்தையா ? இனிமே நீ இப்படிக் கழுத்தறுத்தே, நான் வீட்டுக்குத் திரும்பியே வரமாட்டேன், ஆமா சொல்லிட்டேன்,” என்று கோபமாக அம்மாவைப் பார்த்து சத்தம் போட்டு விட்டு விருட்டென்று வெளியேறினான் செந்தில்.
“என்னங்க, எப்போதும் எதிர்த்துப் பேசாத செந்தில் இன்னிக்கு என்னப் பார்த்து இப்பிடி கத்திட்டுப் போறான், நீங்க என்னடான்னா ஒன்றும் தெரியாத மாதிரி இப்பிடி சோபாவில் ஜடம் மாதிரி உக்கார்ந்துகிட்டு வேடிக்கை பார்க்கறீங்க ? ம்ம்… எல்லாம் என் தலை எழுத்து,” என்று ஆயாசத்தில் புலம்பி விட்டு வழக்கம் போல் சமையலறைக்குள் புகுந்தாள் சாந்தி.
செந்தில் வழக்கம் போல் குமார் வீட்டிற்குச் சென்றான். “வாடா, உனக்காகத்தான் நான் வெய்ட் பண்றேன், வா வா, நாம போற வழிலே கார்த்திக்கைப் பிக் அப் பண்ணிட்டு அப்படியே பீச் போலாம், என்ன, ஓகே யா ? என்றான். இல்ல, குமார், எனக்கு மனசே சரியில்ல, நாளை பரீட்சைக்கு ஒண்ணுமே படிக்கல, பாஸ் பண்ணுவேனான்னு தெரில டா….என் அம்மா வேறு தினம் தினம் போரடிக்கறாங்க, படி, படின்னு… எனக்கு எங்க அம்மாவைப் பார்த்தாலே வெறுப்பா இருக்குடா…. என்று குமாரிடம் கொட்டித் தீர்த்தான் செந்தில்.
கவலைப் படாதடா, எல்லா அம்மாக்களும் அப்படித்தான், இந்தா, ஒரு தம் அடி, எல்லாம் சரியாய்ப் போய்டும் என்று ஒரு சிகரெட்டை செந்திலிடம் நீட்டினான். செந்தில் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்தான். மனது லேசான மாதிரி இருந்தது. அதற்குள் கார்த்திக்கும் அங்கு வந்து சேர்ந்து கொண்டான். மூவருமாக, ஒரே பைக்கில் பீச் சென்று விட்டு, இரவு எட்டு மணி வாக்கில் வீடு திரும்பினான் செந்தில்.
அவன் வீட்டை நெருங்கினால், ஒரே கூட்டம். அவன் வீட்டை ஒட்டி உள்ள வீட்டு வாசலிலும், இவன் வீட்டு வாசலிலும் ஒரே ஜனத்திரள். அங்குள்ள ஒரு பெரியவரைப் பார்த்து என்ன என்று விசாரித்தான். அதற்கு அந்தப் பெரியவர் பக்கத்து வீட்டைச் சுட்டிக் காட்டி, தம்பி, உனக்கு விஷயமே தெரியாதா? அந்த வீட்டு அம்மா அரை மணி நேரத்துக்கு முன்புதான் மாரடைப்பால் இறந்து போனாங்க. அவங்க பொண்ணு அவங்களை பயங்கரமாத் திட்டி விட்டு வெளியே போச்சாம். அதிர்ச்சியில அந்த அம்மா மாரடைப்பு வந்து போய்ட்டாங்க…. என்று சொல்லிக் கொண்டே போனார் அந்தப் பெரியவர்.
மேற்கொண்டு அவர் கூறியது எதுவும் செந்தில் காதில் விழவில்லை. அவன் அலறி அடித்துக் கொண்டு தன் வீட்டுக்குள் நுழைந்து ஹால், சமையலறை, பெட்ரூம், கொல்லைப் பக்கம் என்று அம்மாவைத் தேடினான். அம்மா பின் கட்டில் ஒரு ஓரமாக உள்ள துளசிச் செடியில் உள்ள மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தாள். செந்தில் வேகமாகச் சென்று அம்மா என்று அலறிக் கொண்டு அப்படியே அவளைக் கட்டிக் கொண்டான். சாந்திக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், அவள் மகனின் இந்த செய்கை அவளுக்கு பேரானந்தத்தை அளித்ததென்னவோ உண்மைதான்.