ஹேமா இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள். மாதர் சங்க கலா வந்து விஷயத்தைச் சொன்னதிலிருந்து அவளுக்கு எதுவுமே ஓடவில்லை. ஏன்.. எதற்காக.. என்ற கேள்விகளே அவள் மனதில் திரும்பத் திரும்ப விஸ்வரூபம் எடுத்து குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன
மாலையில் ஆபீஸிலிருந்து திரும்பிய விக்னேஷ் அம்மாவின் முகம் வாடியிருப்பதை கவனித்தான். ஆனால் எதுவும் கேட்கவில்லை. அம்மா கொடுத்த காப்பியை உறிஞ்சியபடி செல்லை மேய்ந்தபடி ஓரக் கண்ணால் அம்மாவைப் பார்த்தான்..
ஹேமா அதிகபட்சமான டென்ஷனுடன் சோபாவில் தவித்துக் கொண்டிருந்தாள்.. வழக்கமாக இது அவள் டிவியில் சீரியல் பார்க்கும் நேரம். ஆனால் இன்று டி.வி. அதிசயமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. நிச்சயமாக ஏதோ முக்கியமான விஷயம் தான் அம்மாவின் மனதைக் குடைந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான் விக்னேஷ்.
காப்பியைக் குடித்து முடித்தவன் எழுந்து சென்று அம்மாவின் அருகில் அமர்ந்தான்.
“என்னம்மா?”
யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்துக் கொண்டிருந்த ஹேமா படபடவென்று ஆரம்பித்தாள்.
“விக்னேஷ்.. இத்தனை வருஷமா நான் ஏமாந்து மோசம் போயிட்டேனோன்னு எனக்கு பயமா இருக்குடா..”
விக்னேஷுக்குப் புரியவில்லை. அம்மா என்ன சொலிறாள்?
”உங்கப்பா எங்க?”
”என்னம்மா தெரியாத மாதிரி கேட்கறே? அதான் மூணு மாசத்துக்கு ஒரு தடவை சேவாலயா குரூப்போட அப்பா ஊர் ஊராப் போய் மூணு நாள் சோஷியல் சர்வீஸ் பண்ணிட்டு வரார்.. இந்தத் தடவை ஜெய்பூர் மேளாவுல ஹெல்ப் பண்ணப் போயிருக்கார்”
“அப்படின்னு தான் நானும் நம்பிண்டிருந்தேன். ஆனா உங்கப்பா ஜெய்பூர் போகலை.. மதுரைல ஒரு பொம்பளையோட சுத்திண்டிருக்கார்”
விக்னேஷ் அதிர்ந்து போனான்.
“என்னம்மா சொல்றே?..”
”கலா வந்து உங்கப்பாவை ஒரு பொம்பளையோட மதுரைல பார்த்தேன்னு சொன்ன போது தலைல இடி விழுந்த மாதிரி இருந்தது..”
விக்னேஷால் இதை ஏற்க முடியவில்லை.
”அம்மா.. அபத்தமாப் பேசாதே.. அப்பா அப்படி..”
என்று அவன் முடிப்பதற்குள் ஹேமா ஆரம்பித்தாள்.
“அப்படியெல்லாம் இல்லைன்னு தான் நானும் நம்பினேன்.. அதனால தான் போன தடவை உங்கப்பாவை குருவாயூர்ல ஒரு பொம்பளையோட பார்த்தேன்னு ரமா சொன்ன போது.. அதெல்லாம் இருக்காது. அவர் மும்பை போயிருக்கார்.. நீ வேற யாரையாவது பார்த்திருப்பேன்னு சொல்லிட்டேன்.. ஆனா இந்தத் தடவை உங்கப்பாவை மதுரைல பார்த்தேன்னு கலா அடிச்சு சொன்னா.. அவ போய் பேசறதுகுள்ள உங்கப்பாவும் அந்தப் பொம்பளையும் ஆட்டோவுல ஏறிப் போயிட்டாங்களாம்.. என்னால நம்பாம இருக்க முடியலை.. டேய் நிஜமாவே நான் மோசம் போயிட்டேன்.. உங்கப்பா எனக்கு துரோகம் பண்ணிட்டார்”
ஹேமா தீர்மானமாகப் புலம்பினாள். ஆனால் விக்னேஷால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
“அம்மா.. பதட்டப் படாதே.. அப்பா ஊருலேர்ந்து வரட்டும்.. விசாரிப்போம்.. ஆ.. அப்பா வந்த உடனேயே அவசரப்பட்டு விஷயத்தை ஆரம்பிக்காதே.. பக்குவமா நான் கேட்கறேன்”
அன்றிரவு ஹேமாவுக்கு தூக்கம் வரவில்லை. எப்படிப் புரண்டு படுத்தாலும் கலாவின் குரல் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.. தலையைப் பிய்த்துக் கொண்டு அலறி அழ வேண்டும் போலிருந்தது.
மறு நாள் காலையில் ராஜன் ஊரிலிருந்து வந்தார். வழக்கமாக சந்தோஷமாக அவரை வரவேற்கும் ஹேமா இன்று கனத்த முகத்துடன் சமயலறைக்குள் போனது ஏன் என்று புரியாமல் குழம்பினார். எதுவும் கேட்காமல் பல் துலக்கி முகம் அலம்பி துடைத்துக் கொண்டே வந்தவரை
“ஹாய் பா.. எப்ப வந்தீங்க?”
என்று வரவேற்றான் விக்னேஷ்.
“இப்பத் தாண்டா” என்று டைனிங் டேபிள் நாற்காலியில் உட்கார்ந்தவர்..
”என்ன இன்னிக்கு சீக்கீரம் எழுந்துட்டே?”
”ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு.. சீக்கிரம் போகணும்.. அது சரி.. ட்ரிப் எப்படி இருந்தது” என்று மெதுவாக ஆரம்பித்தான் விக்னேஷ்.
“அதுக்கென்ன.. வழக்கம் போல மனசுக்குத் திருப்தியா இருந்தது”
என்று அவர் முடிப்பதற்குள் காப்பி டம்ளரை அவர் முன் வைத்து விட்டுப் போனாள் ஹேமா. அவள் காப்பி டம்ளரை வைத்த விதமே அவள் கோபத்தின் தீவிரத்தைக் காட்டியது. ராஜன் மகனைப் பார்த்தார். விக்னேஷ் அவர் பார்வையை தவிர்த்தான்.
“ஜெய்பூர்ல இப்ப நல்ல குளிர் இருக்குமே?”
இதைக் கேட்டு அப்பா பதில் சொல்லத் தயங்குவார் என்று விக்னேஷ் எதிர்பார்த்தான். ஆனால் ராஜன் பதட்டப் படாமல் சொன்னார்.
”குளிர் இன்னும் செட் ஆகலை.. சொல்லப் போனா நல்ல வெயில்.. கிட்டத் தட்ட முப்பது டிகிரி..”
சமயலறை வாசலில் சுட்டெறிக்கும் பார்வையுடன் ஹேமா நின்றிருப்பதை விக்னேஷ் கவனித்தான்.
“மேளாவுல நல்ல கூட்டமா?”
“கூட்டமா? கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர். சமாளிக்கறது குள்ள ரொம்பக் கஷ்டமாப் போச்சு.. அதுவும்..”
பேசிக் கொண்டே போனார் ராஜன். அதற்கு மேல் ஹேமாவால் பொறுக்க முடியவில்லை.
“போதும் நிறுத்துங்க.. இதுக்கு மேல பொய் பேச வேண்டாம்” என்று கர்ஜித்தாள்.
ராஜன் எதுவும் புரியாமல் அவளைப் பார்த்தார்.
“நீங்க ஜெய்பூர் போகலை.. எவளோ ஒருத்தியோட மதுரைல கூத்தடிச்சிட்டிருந்தீங்க”
இதைக் கேட்டதும் முதல் முறையாக ராஜனின் முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி தெரிந்தது.
”வந்து.. என்ன சொல்றே?.. நான்..”
“நீங்க மதுரைல எவளோ ஒருத்தியோட கூத்தடிச்சதை கலா பார்த்திட்டா.. அது மட்டுமில்லை.. போன தடவை மும்பை போறேன்னு பொய் சொல்லிட்டு குருவாயூர்ல சுத்தினதும் எனக்குத் தெரியும்”
இதைக் கேட்டு ராஜன் எதுவும் பேசாமல் மௌனமானார்.
ஹேமா தொடர்ந்து புலம்பினாள்.
“பார்த்தியா விக்னேஷ்.. குட்டு வெளிப்பட்ட உடனே வாயடைச்சுப் போயிட்டார்.. நான் மோசம் போயிட்டேண்டா..”
விக்னேஷ் அப்பாவைப் பார்த்தான்.
“என்னப்பா.. அம்மா சொல்றது நிஜமா?”
ராஜன் தலை குனிந்து கொஞ்ச நேரம் யோசித்தார். பின் மெதுவாக நிமிர்ந்து பார்த்தார்.
“ஆமாம்.. உங்கம்மா சொல்றது நிஜம். நான் ஜெய்பூர் போகலை.. மதுரை தான் போயிருந்தேன்.. இது மட்டுமில்லை.. இது வரை நான் சேவாலயாவோட போய் சமூக சேவை பண்ணினேன்னு சொன்னதும் பொய் தான்”
“ஐயோ.. ஐயோ.. எப்படிக் கூசாம சொல்றார் பாரு” என்று கத்திய ஹேமாவை அடக்கினான் விக்னேஷ்.
”அம்மா.. கொஞ்சம் சும்மா இரு.. அப்பா என்ன இதெல்லாம்? சேவாலயாவோட போகலைன்னா அப்ப வேற எதுக்கு..”
”எவளோ ஒருத்தியோட கூத்தடிக்கத் தான்”
“அம்மா.. ப்ளீஸ்..”
இப்போது ராஜன் மகனை அடக்கினார்.
“விக்னேஷ்.. அவளை அடக்காதே.. உங்கம்மா கோபப் படறது நியாயம் தானே? அவளுக்கு உண்மை தெரியாதுலியா?”
விக்னேஷ் அப்பாவை புதிராகப் பார்த்தான்.
“உண்மையா?.. என்ன?..”
ராஜன் நிதானமாகச் சொன்னார்.
“விக்னேஷ்.. நான், எங்கண்ணா.. அதான் உன் பெரியப்பா, உன் அத்தை.. நாங்க மூணுபேருமே சின்ன வயசுலேர்ந்து ஒத்துமையா பாசமா இருப்போம். ஆனா எங்களுக்குக் கல்யாணமானதுக்கு அப்புறம் உன் பெரியம்மாவுக்கும் உங்கம்மாவுக்கும் நடுவுல முளைச்ச தேவையில்லாத பிரச்சனைனால எங்க மூணு குடும்பமுமே முகப் பார்வை கூட இல்லாம பிரிஞ்சு போச்சு.. ஆனா இது எங்க மூணு பேர் மனசுலயும் உருத்திக் கிட்டே இருந்தது.”
பேசிக் கொண்டே வந்தவர் சற்று நிறுத்தினார். ஹேமாவின் முகத்தில் சின்ன குழப்பம். ராஜன் தொடர்ந்தார்.
“ஒருநாள் திடீர்னு எங்கண்னா கிட்டேர்ந்து கால் வந்தது. அவன் சொன்ன இடத்துக்குப் போனேன். அங்க என் தங்கை உமாவும் வந்திருந்தா.. அண்ணாவையையும் தங்கையையும் ரொம்ப வருஷம் கழிச்சுப் பார்த்த உடனே ரொம்ப உணர்ச்சி வசப் பட்டேன்.. அப்ப எங்க அண்ணா சொன்னான்.. பொம்பளைங்க பிரச்சனைனால நாம பிளவு பட்டு நிக்கறோம்.. இதுல யாரு சரி யாரு தப்புன்னு விவாதிக்க நாம இங்க வரலை.. இவங்களுக்காக நாம ஏன் நம்ம பாசத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிக்காம இருக்கணும்?.. அண்ணா அப்படிக் கேட்ட உடனே எங்களுக்கு ஒண்ணும் புரியலை.. அப்ப அவன் சஜஸ்ட் பண்ணினான்.. மூணு மாசத்துக்கு ஒரு தடவை மூணு நாள்.. நாம கிளம்பி ஏதாவது ஊருக்குப் போவோம்.. கோயில் குளம்னு சுத்துவோம்.. ஆசை தீர பேசுவோம்.. சின்ன வயசுலேர்ந்து நாம வளர்ந்த மாதிரியே சந்தோஷமா பொழுதைக் கழிப்போம்.. வீட்டுல ஏதாவது சொல்லி சமாளிப்போம்னு சொன்னான்.. எனக்கும் மீனாவுக்கும் அது சரியாப் பட்டது.. அதுலேர்ந்து சேவாலயா கூட சமூக சேவை பண்ணப் போறதா உங்ககிட்டச் சொல்லிட்டு குருவாயூர், கோயம்பத்தூர், மதுரை, திருச்சின்னு ஒவ்வொரு தடவை ஒவ்வொரு இடத்துக்கு பிளான் பண்ணி போயிட்டிருக்கோம்.. ஹேமா.. மதுரைல கலா எங்கூட பார்த்தது என் தங்கை மீனாவை..”
இதைக் கேட்டு ஹேமா உண்மைலயே வாயடைத்துப் போயிருந்தாள்.
“விக்னேஷ்.. உப்புச் சப்பில்லாத பொம்பளைங்க பிரச்சனைகளுக்காக உறவுகளை அவ்வளவு சுலபமா வெட்டி விட்டுர முடியாது.. அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல சொந்த அண்ணா தம்பியையே அறிமுகப் படுத்தித் தான் தெரிஞ்சுக்கணுங்கற நிலமை வந்துரும். அதனால தான் இந்தத் தடவை நாங்க பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.. இனிமே நாங்க சந்திக்கறது மட்டுமில்லை.. எங்க வாரிசுகளையும் அடிக்கடி சந்திக்க வெச்சு அவங்களுக்குள்ள ஒரு அந்யோன்யத்தை ஏற்படுத்தறதுன்னு.. விக்னேஷ்.. இதுக்கு நீ ஒத்துப்பியா? இல்லை உங்கம்மாவுக்குப் பிடிக்காதுன்னு நீயும்..”
ராஜன் முடிப்பதற்குள் விக்னேஷ் சொன்னான்.
“Why not? இதைக் கேட்கவே ரொம்ப த்ரிலிங்கா இருக்கு.. அப்பா.. நாங்க சந்திக்கறது மட்டுமில்லை.. கூடிய சீக்கிரம் அம்மாவையும் பெரியம்மாவையும் சந்திக்க வெச்சு அவங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையையும் சரி பண்ணி.. நீங்க ஆசைப் படர மாதிரியே எல்லாரையும் ஒரே குடும்பமாக்கறோம்.. என்ன ஓகே தானே?”
ராஜன் உண்மையிலேயே உணர்ச்சி வசப்பட்டு விக்னேஷைக் கட்டிக் கொண்டார். எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ஹேமா தர்ம சங்கடத்துடன் நின்றாள்.