எஸ்.டி என்கிற தனியார் கொரியர் அலுவலகம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலைசெய்து வருகிறான் ராமு. பணம் சம்பாதிக்க போராடும் பலகோடி இளைஞர்களுள் அவனும் ஒருவன். அவனுக்கு பேனா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் தனது சூழ்நிலை உணர்ந்து, குறைந்த விலைமதிப்புடைய பேனாக்களையே வாங்கி உபயோகித்து வந்தான். ஒருமுறை பேனா ஒன்றை வாங்க கடைக்குச் சென்றான். அங்கே,
அண்ணா, அந்த கருப்பு கலரு பேனா எவ்வளவுணா?
அதுவா… அஞ்சு ரூபா வரும் தம்பி
அப்போ, அந்த நீல கலரு எவ்வளவுணா?
அதுவும் அஞ்சு ரூபாதான் தம்பி
சரி, எனக்கு அந்த நீல கலரு பேனாவ குடுங்க
இந்தாங்க தம்பி, இந்த பேப்பர்ல கூட எழுதி பாத்துக்கோங்க
சரிங்கண்ணா, ரொம்ப தேங்க்ஸ்… என தனக்கு பிடித்த பேனா ஒன்றை கடைக்காரரிடமிருந்து வாங்கிக் கொண்டு புறப்பட்டான். புதியபேனா அவனது சட்டைப்பையில் ஜம்மென்று அமர்ந்துகொள்ள, வீட்டிற்கு சந்தோச நடைபோட்டான் ராமு.
மறுநாள் காலை,
அம்மா எங்கமா இருக்க…டிபன் ரெடி பண்ணிட்டியா?
கொஞ்சம் பொறுடா, எடுத்து வச்சுட்டு இருக்கேன்ல
சீக்கிரம் வாம்மா… நேரமாகுதுல
இவனொருத்தன் எப்ப பாத்தாலும் சீக்கிரம் சீக்கிரமுனு சொல்லிக்கிட்டு, கொஞ்சம் சாப்டு போனாதான் என்னடா?
நான் அங்க போய் சாப்டுக்குறேன்…நீ டிபன் பாக்ஸ குடு
இந்தா டிபன் பாக்ஸு… கூட இதையும் புடி
என்ன இது?
ஒனக்கு தான், பேனா ஒன்னு வாங்குனேன்
எவ்வளவுமா இது?
அம்பது ரூபாடா…கொஞ்சம் டிசைனாவும் இருக்குல
யம்மா, நேத்து தான நான் ஒரு புதுபேனா வாங்குனேன்
ஆமா, எப்ப பாத்தாலும் மூணு ரூபா, அஞ்சு ரூபா பேனாவயே வாங்கிட்டு இருக்க…ஒரு நல்ல பேனாவ வாங்கி வச்சுருக்கியா நீ?
நீ ஏம்மா இப்டிலாம் பண்ற? அடுத்த மாசத்துல இருந்து சம்பளம் ஜாஸ்தியா கெடைக்கும், நான் அப்போ வாங்கிருப்பேன்ல
மொதல்ல பேனாவ பாக்கெட்டுல வச்சிட்டு, வேலைக்கு கெளம்பு
கெளம்புறேன், கெளம்புறேன்… என அம்மாவிடம் சலித்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்தான். தான் வாங்கிய ஐந்து ரூபாய் பேனாவை காற்சட்டைக்குள் பத்திரப்படுத்திவிட்டு, தன் அம்மா வழங்கிய பேனாவை ஆசை ஆசையாய் கையிலேந்தி, தன் இதயத்தின் அருகே அமர்த்தினான். பேனாவின் ஒற்றைக்கரம் சட்டைப்பையை நன்றாக பற்றிக் கொள்ள, அலுவலகத்தை நோக்கிய அவனது பயணம் ஆனந்தமாக தொடங்கியது.
எலே சௌந்தரு…லயினுக்கு போகயில, அந்த ராசப்பன் டீ கடக்கி அஞ்சு தண்ணி கேனு போட்டுட்டு வந்துருலே
சரிங்க அண்ணாச்சி, பைசா ஒடனே வாங்கனுமா?
அத பெறவு பாத்துக்கலாம்…நமக்கு தெரிஞ்ச ஆளுதானலே
சரி, நான் லயினுக்கு போயிட்டு வார்றேன் அண்ணாச்சி…
மகாலட்சுமி மினரல் வாட்டர் சப்ளை கம்பெனியிலிருந்து 20லிட்டர் கொள்ளளவு கொண்ட, நிறைய தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க புறப்பட்டது, அந்த நான்குச் சக்கர சின்ன யானை.
பயணியர் நிழற்குடையில் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தான் ராமு. அங்கே கூட்டம் சற்று அதிகமாக இருக்க, அச்சமயத்தில் அவனுக்கொரு அலைபேசி அழைப்பு வந்தது.
சார்! கிளம்பிட்டேன் சார்… பஸ் ஸ்டாப்புல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.
ஓகே ராமு, இன்னைக்கு உங்களுக்கு ஆறு டெலிவரி தான். சீக்கிரமா முடிச்சிட்டு வீட்டுக்கு போங்க. சம்பளத்த பத்தி நாளைக்கு நான் ஆஃபீஸ் வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்.
சரிங்க சார், தேங்க்யூ… என சொல்லிவிட்டு அலைபேசி அழைப்பைத் துண்டித்தான்.
சிறிது நேரத்தில் பேருந்து வரப்போகும் சத்தம் அவனது காதில் வந்தடைய, தயார் நிலையில் இருந்தான் ராமு. ஏற்கனவே பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், நிறுத்தத்தில் நில்லாமல் சென்றது அந்த பேருந்து. வேகம் அவ்வளவாக இல்லை என்ற காரணத்தினால் அவன் படிக்கட்டின் உள்ளே தாவிக் குதித்தான். அவன் உள்ளே குதித்த வேளையில், அவனது சட்டைப் பையிலிருந்த பேனா வெளியே குதித்தது. வெளியே குதித்த பேனா உருண்டுகொண்டே தார்சாலையின் ஓரமாக ஐக்கியமானது. பாவம் ராமு! தன் அம்மா வழங்கிய பேனா, கீழே விழுந்தது கூட தெரியாமல் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டான்.
ட்ரிங்…ட்ரிங்…ட்ரிங்…ட்ரிங்…
ஹலோ…ஈ2 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாராயணகுமார் பேசுறேன், சொல்லுங்க…
சார், டிஜிபி ஆபீஸ்ல இருந்து பேசுறோம் சார். இங்க ஃபேக்ஸ் வேல செய்யல, அதனால உங்களோட டிரான்ஸ்ஃபர் ஆர்டர நேத்தே கொரியர்ல அனுப்பிட்டோம். இன்னைக்கு உங்க கைக்கு வந்துரும், நீங்க கேட்ட மாதிரியே மதுரைக்கு உங்கள மாத்தியிருக்கோம் சார், வாழ்த்துகள்!
ஓ தேங்க்யூ சார்! நான் பாத்துக்குறேன், தேங்க்யூ சோ மச்… என்றதும் தொலைபேசி மீண்டும் தன் இருப்பிடத்தை வந்தடைய, காவல் ஆய்வாளர் நாராயணகுமார் தனது பணியிடமாற்ற ஆணை வருவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்.
அலுவலக நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கினான் ராமு. கீழே இறங்கியதும் அவனது சட்டைப் பையை தொட்ட அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஐய்யய்யோ பேனாவ காணோமே! பஸ்ல ஏதும் விழுந்திருக்குமோ…? அம்பது ரூபா ஆச்சே…! அதுவும் அம்மா குடுத்ததாச்சே…! என்று புலம்பிக் கொண்டிருந்தான். பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தன் காற்சட்டையில் இருந்த ஐந்துரூபாய் பேனாவை எடுத்து, தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி நடந்தான். அங்கே அவனுக்கு வழங்கப்பட்ட ஆறு டெலிவரிகளை குறித்து, எடுத்துக்கொண்டு அலுவலக இருசக்கர வாகனத்திலிருந்து புறப்பட்டான் ராமு.
வாடிக்கையாளர்களிடம் மினரல் வாட்டர் கேன்களை இறக்கிக் கொண்டிருந்த சௌந்தர், அடுத்த கடையை நோக்கி சின்ன யானையில் சவாரி செய்ய தொடங்கினான். அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் கேன்களும் புதுயிடம் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தன.
அடுத்தகடை வந்ததும், சின்ன யானையின் வேகத்தை குறைத்தான் சௌந்தர். பேருந்து நிறுத்தம் ஒன்றின் ஓரமாக நின்றது, அந்த வாகனம். அவன் வெளியில் இறங்கி வாகனத்தில் இருந்த கேன்களை ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்க, அப்போது அவனது கால்பட்டு நகர்ந்த பேனா ஒன்றைக் கண்டான். கையிலெடுத்து அதன் அழகை உற்றுப் பார்த்து விட்டு, உடனே தனது வலது காதில் அதனை சொருகிக் கொண்டான். பின் கேன்களை இறக்கிவிட்டு, மீண்டும் சின்ன யானையை அடுத்த இடம் நோக்கி நகர்த்தினான்.
பேனாவை இழந்த வருத்தத்திலேயே தனது கொரியர் டெலிவரிகளை பார்த்துக்கொண்டிருந்தான் ராமு. இன்னும் இரண்டு டெலிவரிகள்தான் மீதமிருந்தது.
ஹலோ, ஈ2 போலீஸ் ஸ்டேஷனா சார்?
ஆமா ஈ2 போலிஸ் ஸ்டேஷன் தான், நான் இன்ஸ்பெக்டர் நாராயணகுமார் பேசறேன்…
சார் என் பேரு ராமு, நான் எஸ்.டி கொரியர்ல இருந்து பேசுறேன். உங்களுக்கு கொரியர் ஒன்னு வந்துருக்கு. ஒரு அரைமணி நேரத்துல வந்துடுறேன் சார்.
ஓகே மிஸ்டர்.ராமு வாங்க…
ராசப்பன் டீக்கடைக்கு அருகில் வந்ததும் சின்ன யானையை நிறுத்தினான், சௌந்தர்.
வணக்கம்ணே! அண்ணாச்சி கேன் போடச் சொன்னாங்க
ஆமா தம்பி, ஒரு அஞ்சு கேன் போடுங்க
சரிங்கண்ணே…
சௌந்தர் கேன்களை இறக்கிக் கொண்டிருக்கையில், அவனது காதில் அமர்ந்திருந்த பேனா கீழே இறங்கிவிட்டது. கேன்களை இறக்கும் கவனத்தில், கீழே விழுந்த அந்த பேனாவை அவன் கவனிக்கவில்லை. பின் கேன்களை இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
டேய் முத்து…!
சொல்லுங்கண்ணே…
இந்தா…ஸ்டேஷனுக்கு போயி இந்த டீய குடுத்துட்டு வா…
சரிங்கண்ணே… என்று சொல்லி தேநீர் கோப்பைகளை தூக்கிக்கொண்டு, அவன் நான்கு எட்டுவைக்க, முன்னே ஓடிய பேனாவைக் கண்டான். அதனை தூக்கியெடுத்து தனது இடுப்பில் சொருகிக்கொண்டு, காவல் நிலையத்தை நோக்கிச் சென்றான்.
வணக்கம் சார்…
வணக்கம், சொல்லுங்க…
சார், நான் எஸ்.டி கொரியர்ல இருந்து வர்றேன், உங்களுக்கு கொரியரொன்னு வந்துருக்கு, இந்தாங்க சார்.
ஓ! நீங்க தான போன்ல பேசுனது…? ரொம்ப நன்றி தம்பி, ரொம்ப நாளா டிரான்ஸ்ஃபர் ஆர்டருக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னைக்குதான் அந்த ஆர்டர் கைக்கு வருது…
ரொம்ப சந்தோஷம் சார், வாழ்த்துக்கள்!
நன்றி தம்பி, டீ குடிச்சிட்டு போலாம். ஒரு நல்ல செய்தியோட வந்துருக்கீங்க, உங்கள சும்மா அனுப்புனா எனக்கு மனசு கேக்காது.
பரவாயில்ல சார்…
அட இருங்க தம்பி… “தம்பி முத்து! இங்க வாப்பா, இவருக்கும் ஒரு டீ குடு…”
சார், இந்த பேப்பருல ஒரு கையெழுத்து போடுங்க சார்…
ம்…குடுங்க என ஆய்வாளர் நாராயணகுமார் கையெழுத்திட பேனாவை எடுத்து எழுத நினைக்கையில், அந்த பேனா எழுதவில்லை. மீண்டும் எழுதிப் பார்த்தார் ஆனால் மறுமுறையும் அது எழுதவில்லை. ச்சே…என்ன இது எழுத மாட்டேங்குது…
அண்ணே, இந்தாங்க டீ… என தனது காதில் பேனாவை வைத்து குடைந்துகொண்டே ராமுவிற்கு தேநீரை வழங்கினான், முத்து.
டேய்…என்னடா அது? காதுல வச்சி கொடஞ்சிட்டு இருக்க…
இது ஒரு பேனா சார்… கீழ கெடந்துச்சு, காது கொடைய சூப்பரா இருக்கு அதான் வச்சிருக்கேன்…
அடேய்! அத குடுறா இங்க…
சார், அப்போ எனக்கு காது கொடைய?
இந்தா இத வச்சுக்கோ… என தனது பழைய பேனாவை கொடுத்துவிட்டு, அந்த பேனாவை வாங்கினார் ஆய்வாளர் நாராயணகுமார்.
ராமு அதை கவனித்துக் கொண்டிருக்கையில், சிறிது உற்றுப் பார்த்தான். “இது நம்ம பேனா மாதிரியே இருக்கே…? அவர்கிட்ட கேக்கலாமா இல்ல வேணாமா? எதுக்கு வம்பு…வேண்டாம்! வேண்டாம்!” என அவனது மனம் முனுமுனுத்தது.
அந்தப் பேனாவை வைத்து ஆனந்தமாக கையெழுத்திட்டார், ஆய்வாளர் நாராயணகுமார்.
இந்தாங்க தம்பி உங்க பேப்பரு, இந்த பேனாவுல எழுதுறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு.
சரிங்க சார், நான் கெளம்பறேன்…
தம்பி ஒரு நிமிஷம், இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்க கையால நல்ல செய்தி வந்திருக்குறதால, உங்களுக்கு ஏதாவது குடுக்கனுமே! இந்தாங்க இந்த 200ரூபாய வச்சுக்கோங்க…
சார், காசுலாம் வேணாம் சார்…
அட சும்மா வாங்கிக்கோங்க தம்பி…
இல்ல, வேண்டாம் சார்…
அப்போ, வேற என்ன குடுக்கலாம்…? என யோசிக்கையில் திடீரென்று, இந்தாங்க பேனா! நீங்க கொரியர் ஆபீஸ்ல வேல செய்யுறதுனால உங்களுக்கு இது அடிக்கடி தேவப்படும். அதனால இத புடிங்க…
பரவாயில்ல சார்…
அட இதயாச்சும் வாங்கிக்கோங்க தம்பி… என அவனிடம் வழங்கினார்.
மனதில் உற்சாகம் பொங்க, தன்னுடைய பேனாவை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சந்தோஷமாக புறப்பட்டான் ராமு. தனது அம்மாவையே இதயமருகில் வைப்பதுபோல், அந்த பேனாவை சட்டைப் பையில் அமர்த்தினான். மீண்டும் அந்தப் பேனா, தனது ஒற்றைக் கரத்தால் அவனது சட்டைப் பையை இறுக பற்றிக்கொண்டது.