கில்காமேஷ் மகா ராட்சசனான காட்டரசன் ஹம்பாபாவை வெல்லத் திட்டமிட்டிருக்கிறான் என்பதைக் கேட்டவுடன் எங்கிடு திடுக்கிட்டான்.
“நண்பா! நான் காட்டு மனிதனாக இருந்த போது ஹம்பாபாவைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் . அவன் காட்டுக்கு அதிபதி .அவனிடம் பல பயங்கரங்கள் ஆயுதங்களாக இருக்கின்றன. அவன் கர்ஜித்தால் நீர்வீழ்ச்சியைப் போல இருக்கும். அவன் மூச்சு நெருப்பாக எரிக்கும். அவன் எதையும் விழுங்கிவிடும் ஆற்றல் உடையவன். அவன் செவிகள் மிகவும் கூர்மையானவை. . அவனை வெல்வது என்பது முடியாத காரியம்” என்று அறிவுரை கூறினான்.
ஆனால் கில்காமேஷ் “எங்கிடு! நான் துணிந்துவிட்டேன்! ஒருவேளை நான் அந்தப் போரில் தோற்றுவிட்டால் ‘செய்ய முடியாததைச் செய்யத் துணிந்தவன்’ என்று உலகம் என்னைப் பற்றிக் கருதட்டும்! ” என்று திட்டவட்டமாக உரைத்தான்.
பிறகு எங்கிடுவின் ஆலோசனையின்படி காமேஷ் என்ற சூரியக் கடவுளிடம் ஹம்பாபாவை வெல்லும் சக்தியைத் தனக்குத் தரும்படி மனதார வேண்டிக் கொண்டான். சூரியக் கடவுளையும் எதிர்ப்பவன் ஹம் பாபா.
அதனால் சூரியக் கடவுளும் கில் காமேஷ் மீது கருணைகொண்டு போரில் அவனுக்குத் துணையாயிருக்க சுழற்காற்று, எரிகாற்று , புயல்காற்று , சூறாவளிக் காற்று, குளிர்காற்று போன்ற ஆயுதங்கள் பலவற்றை கில் காமேஷைக காப்பதற்காகத் தந்தான்.
இந்த மாபெரும் போருக்கு வேண்டி கில்காமேஷ் ‘வீரனின் பலம்’ என்ற மாபெரும் கோடாலியையும் , ‘அன்ஷான்’ என்ற சக்தி வாய்ந்த வில்லையும் மேலும் எண்ணற்ற ஆயுதங்களையும் தயார் செய்தான்.
அதன் பின்னர் தனது தலைநகரான ஊருக் நகரத்தின் மந்திரி பிரதானிகளை அழைத்துத் தன் திட்டத்தைக் கூறினான். அவர்களும் கில் காமெஷிடம் ஹம்பாபாவுடன் போரிடும் விபரீத முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
கில் காமேஷ் அவர்களிடம் சூளுரைத்துவிட்டுத் தன் தாயான நிம்சீனிடம் ஆசி பெறச் சென்றான். அவள் முதலில் திடுக்கிட்டாலும் தன் மகனுக்கு உதவியாக கூடியவர் சூரியக் கடவுள் என்பதை உணர்ந்து அவரிடம் தன் மகனைக் காப்பாற்றி வெற்றிபெறச் செய்யும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டாள்.
அதன்பின் அவள் எங்கிடுவை அழைத்து ” எங்கிடு! இன்றுமுதல் உன்னையும் என் புதல்வனாக ஏற்றுக் கொள்கிறேன்.. உனக்கும் ஒரு ரட்சை அளிக்கிறேன். அதை அணிந்து கொண்டு கில் காமேஷைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை உனக்கு அளிக்கிறேன். அவனை உயிருடன் திரும்ப அழைத்து வா” என்று கூறி ஆசி வழங்கி இருவரையும் அனுப்பி வைத்தாள்!
இருவரும் தங்கள் படைகள் உடன்வர மிகுந்த கம்பீரத்துடன் புறப்பட்டார்கள் !
எங்கிடுவிற்கு ஹம்பாபா இருக்குமிடம் தெரிந்ததால் அந்தத் திசை நோக்கி சென்றார்கள். ஒவ்வொரு நாளும் ஐம்பது காதங்கள் நடந்தார்கள். அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொண்டு தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். இப்படி ஐம்பது நாட்கள் நடந்து ஏழு மலைகளைத் தாண்டி செடார் வனத்தின் நுழை வாயிலை அடைந்தார்கள்.
தயங்கிக் கொண்டிருந்த எங்கிடுவிற்குத் தைரியம் கூறி பச்சை மலை என்னும் அடர்ந்த வனத்துக்குள் அவர்கள் படை நுழைந்தது. ஹம் பாபா நடந்த தடங்கள் தெளிவாகத் தெரிந்தன. செடார் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. மலையும் பள்ளத்தாக்கும் நிழலும் மனதுக்கு ரம்மியமாக இருந்தன. அங்கேயே பாசறை அமைத்துத் தங்கினார்கள். ஒரு ஊற்றுக்கிணறு தோண்டி அதன் நீரை காமாஷ் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு நிம்மதியாக உறங்கினார்கள்.
அன்றிரவு கில்காமேஷுக்கு வினோதமான கனவு வந்தது. ஒரு மிகப் பெரிய காட்டு எருது ஒன்றை அவன் பிடித்துக் கொள்வதாகவும், அவன் நாக்கு துண்டித்தது போலவும் பிறகு யாரோ ஒருவர் அவனுக்கு நீர் கொடுத்து தூண்டித்த நாவைச் சரி செய்ததாகவும் கனவு கண்டான்.
அதை கேட்ட எங்கிடு,” நண்பா! அந்த எருது வேறு யாரும் அல்ல. நாம் வணங்கும் சூரியக் கடவுள் காமாஷ் தான். உனக்கு நீர் கொடுத்தவர் உன் தந்தை லுகல் பண்டாதான். இருவர் ஆசியுடன் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று கூறினான்.
வனத்துக்குள் மேலும் ஐம்பது காதம் சென்றார்கள். அவர்கள் இரவில் தூங்குமுன் வழக்கம்போல் கடவுள்களுக்கு தானியத்தையும் நீரையும் படைத்துவிட்டு நல்ல கனவுகளைத் தரும்படி வேண்டிக்கொண்டுப் படுத்தார்கள். ஆனால் பயங்கரமான கனவுகளே இருவருக்கும் வந்தன.
மறுநாள் காலை கில் காமேஷ் ஹம்பாபாவுடன் நடத்தப் போகும் போரின் முதல் கட்டமாக செடார் மரம் ஒன்றை வெட்டி வீழ்த்தினான்.
“யாரடா என் காட்டின் செடார் மரத்தை வெட்டுவது?” என்ற ஹம்பாபாவின் குரல் அதி பயங்கரமாக ஒலித்தது.
“கவலைப்படாதே ! உன்னைக் காப்பாற்ற நான் இருக்கிறேன்” என்ற சூரியக் கடவுளின் குரல் கில்காமேஷின் காதில் கேட்டது. தைரியத்துடன் அடுத்த செடார் மரத்தை வெட்டியவன் அப்படியே மயங்கி ஆழ்ந்த தூக்கத்தில் விழுந்தான்.
எங்கிடுவிற்குக் கவலை பீடித்தது.
(தொடரும்)