“அகம்” காட்டும் சாலமன் பாப்பையா!
(குவிகம் கடைசி பக்கம் – மே 2021.)
‘அகம்’ என்பதற்கு “காதலைப் பற்றிக் கூறும் தமிழ் இலக்கியப் பொருள் பாகுபாடு;” என்றதொரு பொருளைத் தருகிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – மேலும், ‘பழைய தமிழ் இலக்கணங்கள் அகப்பொருளையும், புறப்பொருளையும் விரிவாகக் கூறுகின்றன. நானூறு அகப் பாடல்கள் கொண்டது ‘அகநானூறு’ என்றும் விளக்குகிறது.
‘சங்க இலக்கியம்’ என்பவை பழந்தமிழர் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய பாட்டும் தொகையும் அடங்கிய பழைய நூல்களே. இதையே,
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்துங் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”.
என்னும் பழம்பாடல் சங்க இலக்கியங்களைச் சொல்கிறது!
முகநூலில் திரு மாலன் அவர்கள், தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் தொகுத்துள்ள அகநானூறு புத்தகம் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார்கள். புறம் பேசுகின்ற அளவில், அகம் பேசப்படுவதில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு (நான் புத்தகத்தைச் சொல்கிறேன்!).
பட்டிமன்றங்களைத் தாண்டி, சாலமன் பாப்பையா அவர்களின் தமிழும், அவரது நேர்படப் பேசும் தன்மையும், மொழி, மதங்கள் தாண்டிய மனிதநேயமும், ‘இளைஞர்களுக்கு கல்வி கொடுத்த அளவிற்கு கலாச்சாரமும், பண்பாடும் கொடுக்கவில்லையே’ என்ற சமூக அக்கறையும் என்றுமே என்னை வசீகரித்துள்ளன. அவர் தொகுத்துள்ள அகம், புறம் இரண்டையும் வாங்கினேன் – கொஞ்சம் வாசித்தேன் – அகநானூற்றின் முன்னுரையில், ‘எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் தொகுத்திருக்கிறேன்’ என்ற அவரது அறிமுகம், அது பற்றி சிறிது எழுதலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது! – தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.
முன்னமேயே சாலமன் பாப்பையா அவர்கள் தொகுத்த ‘புறநானூறு’ – புதிய வரிசை வகை என்ற தொகுப்பினை வெளியிட்டுள்ள கவிதா பதிப்பகம், ‘அகநானூறு’ – குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் நெய்தல் திணைகளை மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளது. ”இளையோரும், தொடக்க நிலையில் உள்ளோரும் எளிமையான தமிழ் நடையில் புரிந்து கொள்ளும்படி எழுதியுள்ளார் அறிஞர் சாலமன் பாப்பையா” என்கிறார் ம.பெ.சீனிவாசன் (மேனாள் பேராசிரியர்) தனது அறிமுக உரையில்.
அகநானூறு என்பதற்கு சாலமன் பாப்பையா கூறும் எளிய விளக்கம்:
நானூறு என்றால் நன்றாகவே தெரிகிறது. ‘அகம்’ என்றால் என்ன? பழைய விளக்கத்தை எளிமைப் படுத்தித் தருகிறார் இப்படி:
“என் மனம் இப்போது இவளோடு:
நான், எனது என்பதே இல்லை;
இருமனமும் ஒருமனமே ஆக,
இரண்டு உடலும் ஓர் உடலாய்த்
தனிமையில் இணைந்து பெற்ற
பேரின்ப வெள்ளம் என்மனம் எல்லாம்”
“அவளுக்கும் அப்படியே! ஆனால் அது எப்படி என்று சொல்லச் சொன்னால் சொல்லத்தான் தெரியவில்லை. இந்தப் பேரின்ப வெள்ளமே – உள்ளத்தே உணர்ந்து இன்புறுதல் – ‘அகம்’ எனப்படும் என்று விளக்குகிறார்.
13 அடிகள் முதல் 31 அடிகள் வரை உள்ள 400 பாடல்கள் – 145 புலவர்களால் பாடப் பெற்றவை – அகநானூற்றில் தொகுக்கப் பட்டுள்ளன. சாலமன் பாப்பையா அவர்கள், தனது 220க்கும் மேற்பட்ட பக்கங்களில் இப்பாடல்களைத் தொகுத்துள்ள முறை பற்றிக் குறிப்பிடுகிறார். பொருளுக்கேற்ற பாடலை எளிதில் தேர்ந்தெடுக்கும் வகையில் எளிமையாகத் தொகுத்திருக்கும் சாலமன் பாப்பையா அவர்கள் பாராட்டுக்குரியவர்.
இத்தொகுப்பின் சில சிறப்பு அம்சங்களைப் பருந்துப் பார்வையாகப் பார்க்கலாம்.
காலம் – உறுதியாகத் தெரியவில்லை கி.மு 300க்குப் பின் என்று உறுதியாகக் கூறலாம்.
பிற அகத்திணை நூல்களுக்கில்லாத சிறப்பு அகநானூற்றுக்கு உண்டு. முதல் 120 பாடல்களுக்குக் ‘களிற்றியானை நிரை’ என்றும், அடுத்த180 பாடல்களுக்கு ‘மணிமிடைபவளம்’ என்றும், அடுத்த 100 பாடல்களுக்கு ‘நித்திலக் கோவை’ என்றும் பெயர் சூட்டி மூன்று பிரிவாக வைத்துள்ளனர்.
ஒவ்வொரு பாடலுக்கும் பொருள் சீராக விளங்கும்படி, எண்கள் போட்டிருக்கிறார் சாலமன் பாப்பையா. எந்த அடியில் பொருள் துவங்குகிறதோ அங்கு 1 என்றும், பின்னர் பொருள் விளங்க எந்த அடி உள்ளதோ அங்கு 2 என்றும் இப்படி எண்களை இட்டிருப்பதால், அந்த எண்கள் வரிசையில் படிக்கும்போது, பாடலின் பொருள் துலக்கமாக விளங்கிவிடுகிறது! இந்த உத்தியில் வாசிப்பது, பாடலின் பொருளை உடனே அறிந்துகொள்ள உதவுகிறது.
‘கிரேக்கத் தொன்மக் கதைகள் கணவர்களைக் கோடரியால் கொல்லும், விஷமிட்டுக் கொல்லும் மனைவியர் பற்றியும், அண்ணனைக் கொல்லும் தங்கை, தந்தையைக் கொல்லும் மகள் என நல்ல குடும்பத்தைப் படைக்கும் திசையில் பயணிக்காமல், பாலியல் தேடலில் ஆணும் பெண்ணும் விலங்கு நிலையில் உள்ளதைக் காண்கிறோம்’. இப்படியே இலத்தீன் இலக்கியம், எபிரேயர்களின் இலக்கியம், சமஸ்கிருத இலக்கியம் ஆகியவற்றின் குறை நிறைகளோடு ஒப்பிட்டு அகநானூறு பற்றி எழுதுகிறார்.
காதலும் தமிழ் மக்களும்:
காதல் வாழ்க்கையைத் தமிழ் மக்கள் களவு,கற்பு என இரண்டு பிரிவாகக் கண்டனர். உறவுக்கும் தெரியாமலேயே மணம் செய்துகொள்வது களவு வாழ்க்கை (1086 தொல்). உறவும் ஊரும் அறிய மணம் செய்து வாழ்ந்தால் அது கற்பு வாழ்க்கை (1088). கற்பு வாழ்க்கை வாழ்வதையே தமிழ் மக்கள் சிறப்பாகக் கருதினர். இது இன்றைய இளைஞர்களுக்கான நல்ல செய்தியாகவே நான் பார்க்கிறேன்!
அன்றைய நாடுகளின் சில பெயர்கள் – எருமை நாடு (253), குட நாடு (91, 115), துளு நாடு (15), தொண்டை நாடு (213) – போன்ற இடங்களின் இன்றைய பெயர்கள், பெயர்க் காரணம் என விவரணைகள் சுவாரஸ்யம்.
இப்படியே மலைகள், ஆறுகள் (அயிரி ஆறு, கான்யாறு, காவிரியாறு…), ஊர்கள் (கிட்டத்தட்ட 90 ஊர்கள்), மரங்கள் (அரச மரம், ஆல மரம், இலவ மரம், உகா மரம், கமுகு, கரும்பு….), செடிகள், கொடிகள், பறவைகள் (அன்றில், அன்னம், ஆந்தை, கிளி, குயில், நாரை, பருந்து….), விலங்குகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் சிறு விளக்கத்துடன் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. அடைப்புக் குறியுள் பாடலின் எண் கொடுக்கப் பட்டுள்ளது – எளிதாகப் பாடலை அறிவதற்கு!
நிலம் சார்ந்த மக்களையும், தொழில் சார்ந்த மக்களையும் பற்றிப் பேசுகிறார். விழாக்கள், நம்பிக்கைகள், ஆட்சியாளர், ஆட்சி முறை, மக்கள் செழுமையும் வறுமையும், கடவுள் சிந்தனை என அன்றைய தமிழர் வாழ்வினைக் குறிக்கும் ஓர் ஆவணமாக அகநானூற்றுப் பாடல்களில் செய்திகள் உள்ளன!
மகளிர் அணிகள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன – காதணிகள் ‘குழை’ என அழைக்கப்படுகின்றன. கழுத்தணிகள் (மகளிர் ஆரந்தாங்கும் அலர் முலை – 206), தொடி (ஆண்கள் அணியும் வீரவளை), சங்கில் செய்யப்பட்ட கை வளையல்கள் (இலங்கு வளை – 328, இறை வளை – 200, விளங்கு தொடி முன்கை – 58), சிலம்பு, சதங்கை, பொன்னில் தாலி, கையில் காப்பு எனப் பலவித அணிகலன்கள். முகம் பார்க்கத் தோலில் பதித்த கண்ணாடியும், ஒப்பனைக் கலையும் வழக்கத்தில் இருந்ததாக அகப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன என்பது வியப்பு!
சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடைக்கு சில வரிகள்….
“காலப் புழுதிக்குள் உண்மை ஒளிந்து கிடக்கலாம்”
“வேனில் வெயில் வீறு கொண்டு கொளுத்துகிறது:
அந்த வெயிலிலும் தன் சிறகுகள் கரிந்த் போகப்
பறந்து போகிறதே ஆண் பருந்து…”
“கடல்மேல் கொண்ட நீரைத் தரையின் தலைமேல்
கொட்டி மேகங்கள் ஆரவாரம் செய்தன”
ஐம்பதுக்கும் மேற்பட்ட துணை நூல் பட்டியல் – மிகவும் நுணுக்கமாக தொகுக்கப் பட்டுள்ள நல்ல நூல் என்றால் அது மிகையில்லை. எல்லோரும் வாசிக்கும் வகையில் தொகுத்து, எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் படைத்திருக்கிறார் சாலமன் பாப்பையா அவர்கள்.
வீட்டில் இருக்க வேண்டிய ஒரு தொகுப்பு!
(அகநானூறு – எளிய உரையுடன். பதிப்பாசிரியர்: சாலமன் பாப்பையா. கவிதா பப்ள்கேஷன், சென்னை. 600017. போன்: 044-24364243, +91-7402222787)
பேரா.சாலமன் பாபப்பையா அகநானூறு என்னும் வேரில்பழுத்தபலாக்கனியை உறித்து கோது நீக்கி கொட்டை அகற்றித் தந்துள்ள தந்துள்ளார். பாஸ்கரன் இந்தச் சுளைகளை தேனில் நனைத்து சுவைத்துப் பாரருங்கள் என்று நீட்டுகிறார். வாங்கி இந்தப் பரிமாறலைச் சுவைக்க ஆவல் எழுகிறது. இருவருக்கும் வாழ்த்துகள்.
LikeLike