கம்ப ராமாயணம் – சுந்தர காண்டம்
காட்சி படலம்
அசோகவனத்துள் அனுமன் புகுதல்:
மாடு நின்ற அம் மணி மலர்ச் சோலையை மருவி,
‘தேடி, இவ் வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;
வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி.’
ஹனுமான் சூளுரைத்தல் :
தாய்க்கு ஒப்பான தன் தலைவரின் மனையாள், எப்படி இருப்பார் என்பது தெரியாத போதும் துணிந்து, முனைந்து இலக்கை வந்தடைந்தார். இலங்கையை வந்தடைந்தார். இலங்கையிலுள்ள . அசோக வனத்திலிருக்கிறார் என்ற செய்தி மட்டுமே அவர் மனதில் கொண்டு அங்குப் புயலெனப் புகுந்தார், இலங்கையை அடைந்தவுடன் தன் இலக்கு இதுதானென்று உணர்ந்து பயணப்பட்டார் ஸ்ரீ ராம தூதன், பக்கத்திலுள்ள அழகிய மலர்ச் சோலையைக் கடந்து, தேடி இவ்வழியில் சீதாபிராட்டியைக் கண்டுவிட்டால் என் சிறுமை தீரும், என் குறை நீங்கும் (ஊடு கண்டிலென்என்னின்) . அப்படி இல்லாவிட்டால் இலங்கை நகரத்தை, இங்குள்ள மலை கொண்டு அழித்து, பின்னே யானும் இறப்பேன். என்று சூளுரைக்கிறார் ஹனுமான்.
இந்தப் பாடல், செய்யுள், சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தில் முதல் பாடல். இராவணன் சிறையில் இருக்கும் சீதாபிராட்டியைக் கண்டு அவர் நலம், நிலை பற்றிய செய்திதனை பெறவும், தன் தலைவன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி நலம், நிலை பற்றிக் கூறவும், அவர் கொடுத்த கணையாழிதனை கொடுக்கவும் ஹனுமான் பயணம் ஏற்பாடு செய்யப் பட்டது.
அன்று சர்வ வல்லமை பொருந்தியநிலையில் இருந்த இராவணன் வைத்துள்ள சிறைக்குச் சென்று இச்செயல்தனை செய்ய முன் வந்த போது இத்தனை துயர்கள் இருக்குமென்று எண்ணவில்லை, இருந்தாலும் வந்த துயர்களை வென்று அசோகவனம் வந்த போது, மனதில் ஒரு சஞ்சலம் ஒன்று வந்த போது , (இச்செயல் நம்மால் முடியுமா, எனவும் முடியாதெனில் உயிர் துறக்கவும் தயார் நிலைக்கு தள்ளப்பட்டார்.) அந்த நிலையை விளக்குகிறார் கம்பர்.
அடுத்தது அயோத்திக் காண்டம் – கங்கை படலம்
வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்
சூரியனின் சுட்டெரிக்கும் ஒளி, ஸ்ரீ ராமபிரானின் மேனியிலிருந்து வரும், கதிர் வீச்சு போல விரிகின்ற சோதியில் மங்கிப் போய்விட, அவர் கூட வரும் சீதாபிராட்டிக்கு இடுப்பு என்று ஒன்றிருக்கிறதா (பொய்யோ எனும் இடையாளோடும்) இல்லையா… அது பொய்யா இல்லை உண்மையா என்று தோன்றும் அளவுக்கு உள்ள இடையாளோடும்.. அவள் அழகை வியந்து வர்ணிக்கிறார் கம்பர்.
மூத்தவர் பின்னே, இளைய பெருமாளான லக்ஷ்மணன் உடன் போகிறார் .
ஸ்ரீ ராமன் நிறம் மை போன்ற கருமையோ, மழை மேகம் போல் கருப்போ, மரகத மணி போன்ற பச்சை நிறமோ, கடல் போல நீலமோ, ஐயோ எப்படிச் சொல்லுவது… (ஸ்ரீ ராமனை வர்ணிக்கையில் ஆகா கம்பரின் தடுமாற்றம் தெரிகிறது ), இப்படிப்பட்ட நிறத்தவன் என்று நிர்ணயிக்க முடியாமல் இருப்பதே இவன் வடிவழகு என்பது என்றும் , எப்போதும் அழியாத அழகு உடையவன் என்றும் தன் தடுமாற்றத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார் இங்கே.
“ஐயோ” என்ற பதம் தமிழ் இலக்கியத்தில் அதன் சொல்லாட்சி மிகவும் சொற்பமாகவே பெற்றது குறிப்பிடத்தக்கது