“டேய் சுப்பிரமணி எந்திரிடா…. பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு போய் குளிச்சிட்டு வாடா… கம்பங்கூழும் கருவாட்டு குழம்பும் செஞ்சுருக்கேன்” என அம்மா மாரியம்மா வீட்டு முத்தத்தில் சாணம் கலந்த தண்ணீர் தளித்தவாறே குரல் எழுப்பினாள்.
அவன் எழுந்து கண்களைக் கசக்கியவாறே வீட்டின்முன் நின்ற வேப்பமரத்திலிருந்து சிறிய குச்சியை ஒடித்து பல்துலக்க ஆரம்பித்தான்.
“அம்மா ரொம்ப கசக்குது. நாகநாதன் அப்பாலாம் அவனுக்கு பிரஷ் வாங்கி கொடுத்து பல்லு விளக்க சொல்றாங்க! என்னைய மட்டும் ஏன் இப்படிப் பண்றே” எனக் கோபமாகக் கேட்டான். “
அடேய் குடிகாரப்பய மவனே உங்கப்பன் என்ன சொத்தாடா சேத்துவச்சிட்டுப் போயிருக்கான். இருந்த சொத்தை எல்லாம் குடிச்சே அழிச்சிட்டு நிம்மதியாய் போய்ட்டான். நீயாவது ஒழுங்காய் படிச்சு நல்ல வேலைக்குப் போயி இந்த ஆத்தாளுக்குக் கஞ்சி ஊத்து” எனக் கூறியவாறே அவன் தலையில் நல்லெண்ணெய் தடவ ஆரம்பித்தாள்.
“அம்மா எண்ணெயத் தடவாதே குளிச்சாலும் போக மாட்டேங்குது பிசுபிசுன்னு இருக்கு” என விலக ஆரம்பித்தவனின் தலைமுடியைப் பிடித்தவாறே “அடேய்…கம்மாக்கரையில இருக்குற கரம்பையை (உலர்ந்த களிமண்) எடுத்து தலையில தேய்ச்சுக்குளிடா! எண்ணெய்ப்பசை காணாமப் போயிடும்” என்றாள்.
அவன் அம்மா சொன்னவாறே கரம்பையைத் தேய்த்து குளித்துவிட்டு வந்து கம்பங்கூழையும் கருவாட்டு குழம்பையும் ருசிக்க ஆரம்பித்தவனிடம் மாரியம்மா பேச ஆரம்பித்தாள்.
“சுப்பிரமணி காலையில கோவமா பேசினதை மனசுல வெச்சுக்காதே நாகநாதன் பிரஷ் வெச்சுப் பல் விலக்குறாங்கிறே, அப்ப ஏன்டா அடிக்கடி பல் டாக்டரைப் போய்ப் பாக்குறாங்க. நீ வேப்பங்குச்சிய வெச்சு விளக்குறதாலதான் எந்தப்பிரச்சனையும் இல்லடா அதனாலதான் அம்மா உனக்கு வாங்கித்தரல சரியா?” என தேற்றியவளிடம் “போமா…. உன்கிட்ட காசு இல்லங்கிறதுக்காக இந்த கதையிலாம் விடாதே” என கூறியவாறே மஞ்சப்பையில் நோட்டுப்புத்தகங்களோடு மதிய உணவு சாப்பிட தட்டையும் மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டு நாகநாதன் வீட்டின் முன் போய் நின்றான்.
“டேய் நாகநாதா சீக்கீரம் வாடா… பள்ளிக்கூடத்துக்;கு நேரமாச்சு” எனச் சத்தம் போட்டு அழைத்தான்.
“இன்னைக்கு என்னடா இவ்வளவு சீக்கீரமா கூப்பிடறே” எனக் கேட்டுக்கொண்டே நாகநாதன் வந்தான். “ஏன்னா இன்னைக்கு நான் தானே ஏரு” எனக் குதூகலமாகக் கூறினான். ஆம் அது ஒருவிதமான குதூகலப் பயணம்!
அவர்களுடைய ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. இரண்டு மைல் தொலைவிலுள்ள பக்கத்து ஊருக்குத்தான் சென்று படிக்க வேண்டும். வயல்காடுகளின் வழியே நடந்து செல்வதுதான் வழக்கம். ஊரில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் ஊரின் எல்லையிலுள்ள தண்ணீர் டேங்கின் அருகே கூடிவிடுவார்கள். எல்லோரும் சேர்ந்தபின்னர் மொத்தமாக அரட்டை அடித்துக் கொண்டே பள்ளிக்குச் செல்வர்.
அவ்வாறு செல்லும்போது ஒருவர் இரண்டு பேர் கழுத்திலே இருகைளையம் போட்டு முழங்காலை மடக்கி அவர்களின் இணைந்த பக்கவாட்டுக்கைகளில் வைத்து இன்னொரு காலை பின்னால் வரும் ஒருவர் தூக்கி வர வேண்டும். இது பார்ப்பதற்கு இரண்டு மாடுகளின் கழுத்திலே பூட்டிய ஏர் போன்றும் அதனை ஒருவர் ஒட்டி வருவது போன்றும் அமைந்திருக்கும். இவ்வாறு ஒவ்வொரு அமைப்புக்கும் நான்கு பேராகக் கூடி பயணிப்பது வழக்கம். ஏராக இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஒருத்தருக்கு வாய்ப்பு உண்டு. அதனால் தான் இன்றைக்கு சுப்பிரமணிக்கு அவ்வளவு குதூகலம். சாத்தையாவும் ஆறுமுகமும் இன்றைக்கு மாடுகள. சுப்பிரமணி ஏர் ! நாகநாதன் விவசாயியாக மாறி அவர்களின் பயணம் பள்ளிக்கூடத்திலே முடிந்தது.
அது ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இங்கு பாடம் நடத்தப்படும். ஓரே ஒரு ஆசிரயர் தான் ஐந்து வகுப்புகளையும் நடத்துவார். அவர் பெயர் சந்தவழியான். அவரே தலைமையாசிரயரும் கூட. தினமும் அவர் மிதிவண்டியில் ஐந்து மைல் பயணம் செய்து பள்ளிக்கு வருவார். தடுப்புச்சுவர் இல்லாத வகுப்பறைகள். தான் அமர்ந்திருக்கும் மேஜையைச் சுற்றி நிற்க வைத்து யாராவது ஒருவரை வாசிக்கவிட்டுப் பாடம் நடத்துவார். இப்படித்தான் ஒவ்வொரு வகுப்பையும் சந்தவழியான் கையாளுவார். இப்பள்ளியில் உச்சபட்ச ஆங்கிலம் ஏபிசிடி மட்டுமே.
இன்றைக்கு பள்ளிக்கூடத்திற்குச் சென்றவர்களுக்கு ஒரே வியப்பு ஏனென்றhல் பள்ளிக்கூடத்திலே இன்னொரு மேஜையும் நாற்காலியும் ஒன்று முதல் மூனறாம் வகுப்பு மாணவர்களுக்கு எதிரே புதிதாகப் போட்டிருந்தார்கள். சந்தவழியான் மாணவர்களைப் பார்த்து “டேய் பசங்களா இன்னைக்கு நம்ம பள்ளிக்கூடத்துக்கு புதுசா ஒரு வாத்தியாரு வாராரு அவருதான் இனிமே ஒன்னாவது, இரண்டாவது, மூனாவது வகுப்புக்கு வாத்தியாரு சரியா?” எனக் கூறினார்.
இவர் சொல்லி முடிப்பதற்குள் புது வாத்தியார் மிதிவண்டியில் வந்து இறங்கினார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். “வாங்க சார் இப்பதான் உங்களைப் பத்தி பசங்களுக்குச் சொல்லிட்டுருந்தேன்” எனக் கூறிய சந்தவழியானிடம் “வணக்கம் சார் பள்ளிகூடத்தைக் கண்டுபிடிச்சு வருறதுக்குள்ள நேரமாயிருச்சு. மன்னிக்கவும் ” என்றார். “பரவாயில்ல சார்” என்ற சந்தவழியான் மாணவர்களைப் பார்த்து” பசங்களா சார் பேரு உதயக்குமார் சேட்டை பண்ணாம ஒழுங்கா நடந்துக்கனும் என்று கூறினார். “சரிங்க சார் ” என ஒட்டுமொத்தமாகக் கூறி அந்தப் பள்ளியையே அதிர வைத்தனர்.
சுப்பிரமணியும் அவனது ஊர்ப்பிள்ளைகளும் மாலையில் பள்ளி முடிந்ததும் சுந்தவழியான் மிதிவண்டியைக் கொஞ்ச தூரம் தள்ளிக்கொண்டு ஒடியபின் ஊருக்குச் செல்வது வழக்கம். சந்தவழியானும் கொஞ்சதூரம் பெடலை மிதிக்காமல் சொகுசாகச் செல்வார். மிக அதிக தூரம் தள்ளிக்கொண்டு வருகின்ற மாணவர் ஒருவரை தனது மிதிவண்டியிலேயே அழைத்துச் சென்று ஊரில் விட்டுச்செல்வார். ஏனென்றால் சுப்பிரமணியின் ஊரைத்தாண்டி தான் அவர் செல்லவேண்டும்.
இன்று இரண்டு பேரின் மிதிவண்டியையும் தள்ளவேண்டும். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உதயகுமாரன் வண்டியையும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சந்தவழியான் வண்டியையும் தள்ளிக்கொண்டு ஒடினர். ஆனால் உதயகுமாரன் ஊர் சுப்பிரமணியன் ஊருக்கு எதிர்த்திசையில் இருப்பதால் உதயகுமாரன் மிதிவண்டியில் பின்னால் உட்காருவதற்கு யாருக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
மறுநாள் பள்ளிக்கு சந்தவழியான் சொந்த விடுப்பின் காரணமாக வரவில்லை. உதயகுமார் மட்டுமே அனைத்து வகுப்பு மானவர்களையும் அழைத்துப் பேச ஆரம்பித்தார். “பசங்களா இன்னையிலிருந்து சில மாற்றங்களைக் கொண்டுவரப்போறேன். நீங்க ஒழுங்கா சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கணும் . யாரும் பரட்டைத்தலையோட வரக்கூடாது. நல்லா முடிவெட்டி தலைக்கு எண்ணெய் தேய்ச்சு சீவி ஒழுங்கா வரணும் . சாயங்காலம் ஒரு மணிநேரம் பள்ளிக்கூடத்திலேயே விளையாடிட்டுப் போகலாம். யாராருக்கு என்னென்ன விளையாட்டுப் பிடிக்கும்னு சொல்லுங்க பாக்கலாம்” என்று கூறினார்.
கால்பந்து, கபடி, நொண்டி என ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்த விளையாட்டைக் கூறினர். சுப்பிரமணி சத்தமாக “ சார் கிளித்தட்டு “ எனக் கூறினான். எல்லோரும் சிரத்தனர். உடனே உதயகுமார் “ஏன் சிரக்கிறீங்க கிளித்தட்டும் நல்ல விளையாட்டுத்தானே. ஆண் – பெண் பேதமில்லாம விளையாடலாம். நல்லா சுவாரசியமா இருக்குமே சுப்பிரமணியோட கிளித்தட்டு விளையாட வருறவங்க வரலாம். நானும் கிளித்தட்டு விளையாட வாரேன். சரியா ” என முடித்தார் உதயகுமார்.
சுப்பிரமணிக்கு கட்டிலடங்கா மகிழ்ச்சி மாலை கிளித்தட்டு விளையாட்டு ஆரம்பமானது. சுப்பிரமணி தலைமையில் ஒரு அணியாகவும் உதயகுமார் தலைமையில் ஒரு அணியாகவும் விளையாடினர். இறுதியில் உதயக்குமார் அணி அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.
சுப்பிரமணியை அழைத்து உதயக்குமார் பேச ஆரம்பித்தார். “சுப்பிரமணி நாளை உன்னோட அணி வெல்ல வேண்டும். நன்றhக பயிற்சி செய்யுங்கள்” என்று கூறி உற்சாக மூட்டினார். தனக்குப் பிடித்த விளையாட்டை தனது வாத்தியாரும் சேர்ந்து விளையாடியது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாக வீட்டிற்கு வரும் வழியில் தனது நண்பர்களோடு பகிர்ந்து கொண்டான். தனது அம்மாவிடமும் இதைப் பற்றி கூறினான். “அடப்போடா போக்கத்தவனே நல்லா படிச்சுப் பெரியாளா ஆகுடானு பள்ளிகூடத்துக்கு அனுப்புனா, ஏதோ கிளித்தட்டு விளையாடுறேன், புளித்தட்டு விளையாடுறேன்கிறே பத்தாததுக்கு ஒன்னோட வாத்தியாரும் வேலை வெட்டி இல்லாம விளையாண்டமுன்னு சொல்ற. போய் படிக்கிற வேலையைப்பாருடா” என்று அதட்டினாள் மாரியம்மா. “போம்மா இதுக்குத்தான் உன்கிட்ட எதுல[ம் சொல்றது இல்ல” என்று தன் அம்மாவைக் கடிந்து கொண்டான் சுப்பிரமணி.
பள்ளிக்கூடம் அமைந்துள்ள உள்ளூர்ப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் வாத்தியார் கிளித்தட்டு விளையாடுவதைச் சொல்லி மறுநாள் மாலையில் நிறையப் பேரை சேர்த்துவிட்டனர். சந்தவழியானும் இன்று பார்வையாளராகப் பங்கேற்று கைதட்டி ரசித்தார். இவ்வாறாக மாலை முழுதும் விளையாட்டு எனும் முண்டாசுக் கவிஞனின் பாடலுக்கேற்ப நாட்கள் கடந்தன .
சுப்பிரமணி ஐந்தாம் வகுப்பு முடிந்து நகர்பிறத்திலே உள்ள ஓர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பைத் தொடங்கினான். கால அட்டவணையில் வாரத்திலே இரண்டு பாடவேளை மட்டுமே விளையாட்டு. மற்ற வேளை முழுவதும் வேறு வேறு பாடங்கள். சுப்பிரமணி எதிர்பார்த்த விளையாட்டுப் பாடவேளை வந்தது. விளையாட்டு சொல்லித் தருகின்ற வாத்தியார் வில்சன் எல்லோரையும் நிற்கவைத்து எந்த விளையாட்டில் சேர விருப்பமென ஒவ்வொருவராகக் கேட்டார். சுப்பிரமணிக்கு உதயகுமார் கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.
புட்பால், வாலிபால், பேஸ்கட்பால், கிரக்கெட் என ஒவ்வொருவரும் சொன்னது சுப்பிரமணியின் மூளைக்கு துளிகூட செல்லவில்லை. எப்போது தன்முறை வரும் என காத்திருந்து ‘கிளித்தட்டு’ என உரக்கச் சொன்னான். எல்லோரும் கைத்தட்டிச் சிரக்க ஆரம்பித்து விட்டனர். அதில் ஒருவன் “சரியான பட்டிக்காட்டான் சார்” எனக் கூறிவிட்டான். ஊடனே வில்சன் “டேய் அந்தப் பட்டிக்காட்டுல விளையிறதைத் தின்னுட்டுத்தான் நீ இப்ப பாடிக்காட்டு முனீஸ்வரன் மாதிர உடம்பை வெச்சுருக்கே அப்படி எல்லாம் பேசக் கூடாது” என அந்த மாணவனைக் கண்டித்தார்.
எல்லோரையும் அனுப்பிவிட்டு சுப்பிரமணியை அழைத்த வில்சன் “ என்ன சுப்பிரமணி உங்க ஊரலே கபடி விளையாடி இருக்கியா? “ எனக் கேட்டார். ஊடனே சுப்பிரமணி” விளையாடி இருக்கேன் சார். இருந்தாலும் கிளித்தட்டு என்னுடைய விருப்பமான விளையாட்டு சார். கபடி மாதிரி இதுவும் நம்ம தமிழ்ப் பாரம்பாரிய விளையாட்டுத் தானே சார். ஏன் கிளித்தட்டு மட்டும் நம்ம பள்ளிக்கூடத்திலே இல்லை?”எனக் கேட்டான்.
உடனே சிரத்தவாறே வில்சன் “சுப்பிரமணி கிளித்தட்டு நம்ம பாரம்பாரிய விளையாட்டு தான். இன்னைக்கு இலங்கையில நம்ம தமிழர்கள் பெரிய பெரிய கிளப்ல டீம் வெச்சு விளைளயாடுறhங்க. ஆனா நம்ம தமிழ்நாட்டுல இல்ல. இங்கதான் நம்ம பாரம்பாரிய விளையாட்டுக்களைத் தொலைச்சு பல நாளாச்சே இப்ப இருக்கிற காலத்துல பேட்ஸ்மேனா? பௌலரா? இல்ல ஆல்ரவுண்டரானு நீதான் முடிவு பண்ணனும்” எனக் கூறி சுப்பிரமணியை அனுப்பி வைத்தார்.
மாலையில் வானொலியில் செய்தி ஒன்றை சரோஜ் நாராயணசுவாமி வாசித்தார் – கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதற்காக இந்தியக் கேப்டன் அசாருதீனும் துணைக் கேப்டன் ஜடேஜாவும் மீண்டும் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இச்செய்திகள் நிறைவடைந்தன
கிளித்தட்டு பழைய. நினைவுகளைக்கிளறுகிறது. ஜடேஜா விளையாடும் காலத்தில் சரோஜ் நாராயண் ஸ்வாமி செய்தி வாசிப்பில் நீடித்திருந்தாரா என்னும் கேள்வி இடிக்கிறது. எனினும் நம் மண்ணின் மரபார்ந்த விளையாட்டிலிருந்த உயிர்ப்பு மேட்ச் பிக்சிங் விளையாட்டுகளில் இல்லை என்பது உண்மை.வாழ்த்துகள் தமிழ் நேயன்.
LikeLike