உங்களுடன்……..
குவிகம் குறும் புதினம் என்ற புதிய புத்தக இதழைச் சென்ற மாதம் வெளியிட்டோம்.
சொல்லழகும் மயக்கும் மந்திரமும் சேர்த்துக் கதைகளில் கவிதை படைக்கும் லா ச ரா அவர்களின் கொட்டு மேளத்துடன் துவக்கினோம். அத்துடன் முகில் தினகரன் அவர்களின் பத்து பகல் பத்து ராத்திரி என்ற புத்தம் புதுக் குறும் புதினத்தையும் இணைத்து வெளியிட்டோம்.
அதற்கான வெளியீட்டு விழா தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் (14.04.2021) லா ச ரா அவர்களின் புதல்வர் சப்தகிரி, முகில் தினகரன் மற்றும் எண்ணற்ற எழுத்தாள நண்பர்கள் மத்தியில் ஜும் மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இனிப்பும் காரமும் சேர்ந்த சுவையான சிற்றுண்டியாகக் குவிகத்தின் முதல் குறும் புதினம் புத்தகம் அமைந்திருக்கிறது என்று நண்பர்கள் பாராட்டினார்கள்.
இந்தத் திட்டத்தை ஆரம்பித்தபோது மாதம் இரு குறும் புதினங்களை வெளியிடலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் பெரும்பாலான குறும் புதினங்கள் 30-35 பக்கங்களில் முடிந்து விடுவதால் சில மாதங்கள் இரண்டிற்குப் பதிலாக மூன்று குறும் புதினங்களும் வரலாம். மகிழ்ச்சிதானே?
இனிப்பு காரத்துடன் காபியும் கிடைக்கும். அதன்படி இந்தமாதம் உங்களுக்கு மூன்று குறும் புதினங்களைத் தருகிறோம்.
– நாகூர் ரூமியின் “குட்டியாப்பா”
– சுப்ரபாரதி மணியனின் “கட்டைவிரல்”, (புதியது)
– மீனாக்ஷி பால கணேஷின் “கண்கள் உறங்காவோ”
மூன்றும் மூன்றுவிதச் சுவையோடு அமைந்திருக்கின்றன. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்!
நூறு அங்கத்தினர்களை இந்தத் திட்டத்தில் இணைக்கவேண்டும் என்று திட்டமிட்டோம். இதுவரை 85 இலக்கிய நண்பர்கள் இணைந்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் இலக்கைத் தாண்டிவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நம் அங்கத்தினர்களில் பலர் இலக்கியத்துறையில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருப்பவர்கள். அவர்களின் படைப்புக்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை “இலக்கிய நண்பர்“ என்ற தலைப்பில் வெளியிட இருக்கிறோம்.
இலக்கிய நண்பர் வரிசையில் முதலில் வருபவர் அழகியசிங்கர்!
நாங்கள் உங்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்வது இவைதான்:
– குவிகம் குறும் புதினத்தில் வெளியிட நீங்கள் ஏற்கனவே படித்து மகிழ்ந்த குறு நாவல்களை அறிமுகப்படுத்துங்கள்!
– உங்கள் நண்பர்களையும் இத்திட்டத்தில் இணையும்படி செய்யுங்கள்!
– புதிய கதைக்களன்களில் புதிய குறும் புதினங்களைப் படைத்து அனுப்புங்கள்!
– உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அவ்வப்போது சொல்லுங்கள்!
எழுத்து, சொல், பொருள் இவை அனைத்தையும்தாண்டி நல்லதொரு நட்பு வட்டத்தை குவிகம் குறும் புதினம் மூலம் உருவாக்குவோம்!
மே 15, 2021 சுந்தரராஜன் – கிருபானந்தன்