சித்(தி)ரம் பேசிக் கொண்டே இருக்குமடி !
மலையாளப் படங்கள் ஒன்றும் அத்தனை பார்த்துவிடவில்லை. ஆனாலும், மோகன்லால் மீது அத்தனை ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணமாகி விட்டது அந்தக் குறிப்பிட்ட படம். மூன்று முக்கிய காரணங்கள், படத்தின் முதல் பாதியில் கலம் கொள்ளாமல் பெருகும் பால் போல் இடையறாத ஓட்டமாகக் கதையோட்டத்தோடு பொருந்தி அமைந்திருந்த நகைச்சுவை காட்சிகள். இரண்டாவது, பாடல்கள். மூன்றாவது தான் முதலில் சொல்லி இருக்க வேண்டியது, மோகன்லால், ரஞ்சனி, நெடுமுடி வேணு, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோரது அபார நடிப்பு. ஹாஸ்யத்திற்கு மனித உரு கொடுத்தாற்போல் கலக்கிய மோகன்லால்.
முன் பாதியில் மிகவும் எளிதாக நகரும் ஒரு திரைப்படம், பின்பாதியில் சிக்கலான க்ளைமாக்ஸ் கொண்டிருக்கும் என்பது ஒரு திரை ரசிகருக்குத் தெரிந்தது தான். ஆனால், சித்ரம் எதிர்பாராத திருப்பத்தில் ரசிகரை ஓர் அதிர்ச்சி நிலைக்கு எடுத்துச் சென்ற திரைக்கதை கொண்டிருந்தது. சுவாரசியமாக வளர்த்தெடுத்துக் கொண்டு போய் வசீகரமான நிகழ்வுகளில் துள்ளல் நடைபோட்டுப் போகும் படம், சடாரென்று ஒரு புள்ளியில் வேறு அனுபவத்தை வழங்கக் காத்திருக்கும். கதையை விட, அந்தக் கதை சொல்லப்பட்ட விதமும், ரசமான காட்சிக் கோவைகளும், தூய்மையான காதலின் சித்தரிப்புகளும் தான் சித்ரம் படத்தைப் பெரிதும் பேசவைத்தன.
ராமச்சந்திர மேனன் அமெரிக்காவில் இருக்கிறார், மனைவியை இழந்தவர், மகளைக் குடும்ப நண்பர் புருஷோத்தம கைமள் பொறுப்பில் சென்னையில் விட்டிருக்கிறார். அவளோ காதல் திருமணத்திற்கு முடிவெடுத்திருக்கிற நிலையில், அங்கிருந்து பேசும் தந்தை, அவளுக்கு சொத்தில் ஒற்றை நயா பைசா கொடுக்க முடியாது என்று கோபத்தில் சொல்லிவிடுகிறார். அதைப்பற்றியென்ன, காதல் தான் முக்கியம் என்று கைமள் அவர்களோடு திருமணப் பதிவு அலுவலகத்தின் வாசலில் மாலையோடு காத்திருக்கும்போது, சொத்தில்லாத அநாதையை மணமுடிக்கத் தான் தயாரில்லை என்று கடிதம் கொடுத்து அனுப்பிவிடுகிறான் காதலன். அந்தக் கொடுமையும் கண்ணீருமாக வீடு திரும்பினால், இருதய நோயாளியாகிய தந்தை, அமெரிக்காவில் இருந்து அழைத்து, ‘அவசர ஆத்திரத்தில் மறுத்துவிட்டேன், நேரில் வந்து காதல் திருமணத்தை ஆசீர்வதிக்கிறேன்’ என்று அழைத்துச் சொல்லும்போது ஏற்படும் தர்ம சங்கடத்தில் தொடங்குகிறது கதை.
தந்தை வந்து தங்கி விட்டுப் போகும் மிகச் சிறு கால இடைவெளிக்காக, ஒரு தற்காலிகக் கணவனை, அவனது அவசரக் காசுத் தேவையைப் பயன்படுத்தி வாடகைக்குப் பிடிக்கிறார் கைமள். அவளுக்கோ அவனது சேஷ்டைகள், அதிக பிரசங்கித் தனங்கள், சீண்டல்கள் வெறுப்பாக இருக்கின்றன. அவனுக்கும் இந்த ஏற்பாட்டில் பெரிய சுவாரசியம் இல்லை. தந்தை அமெரிக்காவில் இருந்து வந்து இறங்கிவிடுகிறார், ‘மருமகனை’ மிகவும் பிடித்து விடுகிறது அவருக்கு. எல்லோரும் அற்புதமான கேரள கிராமத்தில் இருக்கும் பாரம்பரிய மாளிகைக்குப் போய் இறங்குகிறார்கள். அவனோ, கிடைக்கிற வாய்ப்பில் ஒரு தொகையோடு இடத்தைக் காலி செய்வதிலேயே குறியாக இருக்கிறான்.
எதிரெதிர் பண்பாக்கங்களின் உரசலில் அவளுக்கும், அவனுக்கும் பற்றி விடுகிறது காதல் தீ, ஒரு கட்டத்தில் ! ஒரு தூய்மையான, உள்ளார்ந்த காதல் தீபமாகச் சுடர்விட்டு எரிகிறது அந்தத் தீ. இடையே ஒரு தமாஷ் வில்லன் வேறு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார், பெரியவரின் சகோதரி மகன், சொத்து தனக்கே வந்துவிட வேண்டுமென்ற கனவு அவருக்கு. காதல் திருமணம் பற்றி அறிந்த அவர், கிராமத்திற்கு வந்திறங்கும் கணவன் வேறு ஆள் என்று பிடிபட்டு விடவே, அதை அம்பலப்படுத்தும் அசகாய சூர வேலைகளில் கற்பனையோடு இறங்கும் ஒவ்வொரு முறையும், கைமள் குறுக்கே வந்து மூக்கை உடைத்துக் கொண்டே இருக்கிறார்.
ஆனால், தற்காலிகக் கணவனுக்கு உண்மையான வில்லன் இறுதியில் அந்த கிராமத்திற்கு வந்து நின்றுவிடுகிறார், ஒரு காவல் அதிகாரி அவர். சிறையிலிருந்து தப்பி வந்த ஒரு தூக்குத் தண்டனை கைதி அவன் என்ற உண்மை, முதலில் அதிர்ச்சியுற வைப்பது கைமளை, அப்புறம் அலைபாய வைத்து விடுகிறது அந்தக் காதல் தீபத்தை.
அந்த சோகமான ஃபிளாஷ் பேக், எப்படி அவன் கொலைக்குற்றம் சாட்டப்பட்டான் என்று வேகமாகப் பேசுகிறது. வாய் பேச இயலாத ஓர் அழகான நாட்டிய நங்கையை, புகைப்படக் கலைஞரான நாயகன் காதல் திருமணம் செய்துகொள்கிறான், சில போது யாருமற்ற இரவு நேரங்களில் தனது மனைவியை வந்து சந்தித்துப் போகும் இளைஞன் மீது சந்தேகம் கொண்டு அவனைத் தாக்கப் போகையில் ஏற்படும் தள்ளுமுள்ளு மோதலில் மனைவியின் மீது பாய்ந்துவிடும் ஆயுதம் அவள் உயிரைப் பறித்துவிட, சேச்சீ (அக்கா) என்று வந்தவன் அலறும்போது தான் தெரிகிறது, அவன் மனைவியின் தம்பி என்பதும், காவல் துறையால் தேடப்படும் நக்சலைட் என்பதால் ரகசியமாக வந்து ஓடிக்கொண்டிருந்தான் என்பதும்.
விசாரணை முடிவில் கொலைக்கான மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கையில் தனது குழந்தைக்காகவே சிறையிலிருந்து தப்பி வெளியே வந்து, காசு தேவைக்காகத் திருட்டில் ஈடுபட்டிருக்கையில் தான் தற்செயலாக கைமள் பார்வையில் பட்டு, இங்கே நடிக்க வந்தது. கைமள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், இந்தப் பெண் கெஞ்சியும் கூடத் தன்னால் ஏதும் செய்ய முடியாது, அவனைத் திரும்ப அழைத்துச் செல்லவே தேடி இங்கே வந்தேன் என்று சொல்லிவிடுகிறார் காவல் அதிகாரி.
இது யாதொன்றும் அறியாத பேரானந்தத்தோடு பெரியவர் ராமச்சந்திர மேனன் அயல்நாடு திரும்பும் இடத்தில், மரண தண்டனைக்காக சிறை நோக்கி நாயகன் நடக்கும் வேதனையான இடத்தின் கவித்துவ துயரக் காட்சியில் நிறைவு பெறுகிறது சித்ரம்.
ஆனால், சித்ரம் படம் இந்தக் கதையின் தளத்தில் நின்றதைவிட அதன் காட்சிப்படுத்தலில் தான் ரசிகரை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.
மோகன்லால், ரஞ்சனி சந்திப்பு தொடங்கிய நேரத்தில் இருந்து, ‘கணம் தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும்’ என்று மகாகவி வருணித்தது மாதிரி, அதிரடி வேடிக்கை விளையாட்டு அதகளம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இடையே நெடுமுடி படும்பாடு தனி ரசனையின் பாற்பட்டது. தமக்கு இல்லாத அதிகாரத்தால் மோகன்லாலை அவர் அரட்டியுருட்டி மிரட்டிப் பணிய வைக்கவும், இந்தப் பக்கம் ரஞ்சனியை அவள் தந்தைக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுபோகும்படி கெஞ்சிக் கொண்டிருக்கவுமாக அசத்தி இருப்பார் மனிதர். பூர்ணம், பரிபூரணமாகத் தமது கலையை, பாத்திரத்திற்கு வழங்குபவர், இந்தப் படத்தில் நிறைந்திருக்கும் அவரது நேயமிக்க கண்களும், கரிசனமும், இசைக்கான துடிப்பும்! இரக்கமற்ற அதிகாரியாகச் சிறிது நேரம் வருவார் சோமன்.
கதைக்கருவிற்கேற்ப அமைந்திருக்கும் வசீகர அம்சங்களில் ஒன்று வசனம். தன்னை மிரட்டப் பார்க்கும் நகைச்சுவை பாத்திரமான பாஸ்கரனை (சீனிவாசன்), மோகன்லால், நான் ஏற்கெனவே கொலை தண்டனை கைதி, ஒரு கொலை செய்தாலும் ஒரு தூக்கு , அடுத்து எத்தனை கொலை செய்தாலும் ஒரே தூக்கு தான் என்று பதிலுக்கு மிரட்டுமிடம், வேணுவுக்கும் மோகன்லாலுக்குமான உரையாடல்கள், ரஞ்சனியோடு மோதலும், காதலுமான நேரங்களில் வசனங்கள் சிறப்பாக அமைந்திருக்கும். மரித்துப் போனாலும், நாளை முதல் வான்வெளியில் நட்சத்திரமாக உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பேன் மேலே இருந்து.. என்று மோகன்லால் கடைசி கட்டத்தில் சொல்லுமிடம் கண்ணீர் துளிர்க்கவைக்கும்.
இசை இந்தப் படத்தின் முக்கியமான கூறு. இன்னொன்று ஒளிப்பதிவு.
இயற்கையின் பசுமை விரிப்பை, பூ வனத்தை, காலை இளங்கதிர்ப் பூங்கொத்தை, நண்பகல் வெம்மையை, அந்திப் பொழுதின் சாரலை, இரவு அமுதத்தை ரசிகர்கள் அள்ளியள்ளிப் பருக வழங்கி இருப்பார் எஸ் குமார். கண்ணூர் ராஜன் (பாடல்கள்), ஜான்சன் (பின்னணி) இசை படத்தின் வெற்றிக்கு முக்கியமான அம்சம். ஸ்ரீ குமார் குரலில் நகுமோமு, சுவாமிநாத…பாடலை எத்தனை ஆயிரம் முறை கேட்டுக்கொண்டும், தானாகப் பாடிக் கொண்டும் திரிந்திருப்பேன் என்று கணக்கு இல்லை என்னிடம்.
தியாகய்யர் கீர்த்தனையான நகுமோமு பாடல் படத்தில் பிறக்குமிடம், மோகன்லால் பால் ரஞ்சனிக்குக் காதல் மொக்கு இதழ் விரிக்குமிடம். அந்தக் காட்சி, ஓர் உருது கவி சம்மேளன் போல் அரங்கேறும். இசையார்வம் கொண்டிருக்கும் பூர்ணம் தம்பூரில் சுருதி கூட்டி, மெல்ல ராக ஆலாபனை தொடங்கவும், ஒரு கம்பத்தில் சாய்ந்தவாறு, கரங்களைப் பின்னால் கட்டிக்கொண்டு அதை மோகன்லால் வளர்த்தெடுக்கவும், நெடுமுடி வேணு இதற்குப் பதிலை மிருதங்கத்தில் கொடுக்கவும், பூர்ணம் கண்களால் ஆசீர்வதிக்க, மோகன்லால் சம்மணம் போட்டு உட்கார்ந்து பல்லவியை எடுக்கவும், இசையின் ஈர்ப்பில் அங்கே வந்து பார்க்கும் ரஞ்சனி, கள்வனின் காதலியாக உருமாறுவதும், பாடல் நிறைவில் கைதட்டிவிட்டு, சமாளிக்க, படிக்கட்டு கைப்பிடி விளிம்பில் தூசியைத் தொட்டுத் தட்டியதுபோல் காட்டிக்கொண்டு போவதும் தூள் கிளப்பும் காட்சி.
இதற்கு நேர்மாறான இன்னொரு இசை சங்கமம், சோகமார்ந்த நேரத்தில் படத்தின் இறுதிப்பகுதியில் நிகழ்வது. ‘நம்மள் கூடணும் கைம்மளே’ என்று பாட்டுப் பாட பூர்ணம் அழைக்கையில், அந்த ‘சுவாமிநாத பரிபாலயா’ பாடலின் அழகு, துயர நீர்ப்பெருக்கில் அரங்கேறும். அந்த இசைக்கோவையின் நுட்பங்களை பூர்ணம் ரசிக்கும் முக பாவம் அபாரமாக இருக்கும்.
படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், எழுத்தாளர் – மொழி பெயர்ப்பாளர் கே வி ஜெயஸ்ரீ, ஏன் தோழர், ‘பாடம் பூத்த காலம்’ பற்றிச் சொல்ல மாட்டீர்களா, அதன் அழகில் மயங்குவீர்கள், கேளுங்கள் என்று சொல்வார். வயலின்களும், மற்ற இசைக்கருவிகளும், தாளக்கட்டுகளும் சேர்த்துப் பூத்த அருமையான மெல்லிசைப் பாடல் அது. படத்தின் பாடல்கள் எல்லாமே இனிமையாக ஒலிப்பவை.
எப்போதோ பார்த்திருந்தாலும், எப்போதும் நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் சித்ரம்.
“சித்ரம்” கண்ணெதிரே காட்டிவிட்டார்.
“நகுமோமோ” கச்சேரி அமர்க்களம்.
இசை ஒளிப்பதிவு என்று ஒன்றையும் விட்டு வைக்காமல் அலசியது சூப்பர்
சுரேஷ் ராஜகோபால்
LikeLike