அம்மா… யம்மோ… எங்கே மா… இருக்கே! அம்மா நான் பாஸ் ஆகிட்டேன். துள்ளிக் குதித்தோடி வந்தவன் சற்றே சந்தமடைந்து நின்றான்.
அவனது கண்களில் நீர் தேங்கி, கன்னத்தில் வழிந்தோடியது. ஆம்! அவன் கண்ட காட்சி அப்படி.
அம்மா தனியார் மில் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அப்பாவும் தனியார் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். தினமும் இவனைப் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விட்டுவிட்டு அதன் பிறகு தான் வேலைக்குப் போவது அவரது வழக்கம். அம்மா தினமும் ஷேர் ஆட்டோவில் மில்லுக்கு வேலைக்குச் செல்வாள். இப்படிப்பட்ட நடுத்தர குடும்பத்தில் பிறந்த கார்த்திக் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதைச் சொல்வதற்காக வேகமாக ஓடி வந்தவன்; அப்பாவுக்கு வேலை செய்யும் போது கையில் அடிபட்டதில் ஒரு விரல் துண்டாக்கிப் போனதை பார்த்தவுடன் அமைதியாக வந்து அருகில் உக்கார்ந்தான். அவனைப் பார்த்தவுடனே மல்லிகா அழுது புலம்பினாள். இங்கே வாடா கார்த்தி, என்று அப்பா அழைத்ததும் அருகில் சென்றான்.
என்னடா தம்பி பண்றது. கடவுள் இப்படி செஞ்சுட்டாரு என வருந்திக் கொண்டார்.
அந்த சம்பவத்திற்குப் பின்னர்; அவர் வேலைக்குச் செல்லவில்லை. சுமையான எந்த பொருளையும் கையில் தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அதனால் வீட்டிலேயே முடங்கும் நிலை உருவானது.
கம்பெனி முதலாளி விபத்து நடந்த அன்று மட்டும் மருத்துவமனைச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார். பின்னர் கையில் கட்டுப் போட்டு வீட்டிற்கு வந்த பிறகு மல்லிகாவின் உழைப்பில் கிடைத்த பணத்தை வைத்து அரசு மருத்துவ மனையில் வைத்தியம் பார்த்து வந்தனர்.
இதற்கிடையில் கார்த்தியின் மருத்துவ படிப்புக் கனவும் தகர்ந்தது. மகன் இன்ஜினியர் ஆகவேண்டும் என்ற அப்பாவின் கனவும் காற்றோடு கலந்தது.
மல்லிகா ஆங்காங்கே கடனை ஒடனே வாங்கி ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கார்த்திக்கை சேர்த்துவிட்டாள். அதற்கே அவள் எத்தனை நாள் இரவு பகல் வேலைக்குப் போகனுமோ!.
அவன் ஆசை பட்டதுதான் கிடைக்கல கிடச்சதையாவது நல்லா படிக்கணும் என்று சுந்தரத்திடம் சொல்லி நொந்து கொண்டாள் மல்லிகா.
முதல் நாள் கல்லூரிக்கு கிளம்பிப் போனான். அங்கு பிற மாணவர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. இவன் படித்த பி.காம்., வகுப்பில் பெரிய பெரிய தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களும் படித்துக் கொண்டிருந்தனர். இவனோ அரசுப் பள்ளியில் படித்தவன். மற்ற மாணவர்களுக்கு ஈடாக படிக்க முடியவில்லை என்றாலும் சிறிது கவனம் செலுத்த முடிந்தது.
கார்த்திகுடன் படிக்கும் மாணவர்கள் பலர் விலை உயர்ந்த செல்போன்களை வைத்திருந்தனர். இவனிடம் செல்போனே இல்லை.
உடன் படிக்கும் நண்பன் ஒருவன். டே…! கார்த்திக் உங்க அம்மாட்ட செல்போன் வாங்கித்தா; அப்பதான் காலேஜ்க்கு போவேன்னு சொல்லுடா, அப்பதான் உனக்கு மொபைல் கிடைக்கும் நானெல்லாம் அப்டிதான் பொய் சொல்லி வாங்கினேன் என்று சொன்னான்.
அவனோ வீட்டின் பொருளாதார நிலையை சற்று நினைவு கூர்ந்தான். பின்னர் கல்லூரியில் மாணவர்கள் பாடத்திற்கான அனைத்துக் குறிப்புகளையும் வாட்ஸாப், இ-மெயில் மூலம் பரிமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இவனிடம் செல்போன் இல்லாததால் சற்றே வருத்தமடைந்தான்.
பாடத்தின் அனைத்துக் குறிப்புகளையும் நூலகத்திலுள்ள புத்தகத்தில் இருந்தோ அல்லது அதனை நகலெடுத்தோ படிக்கும் பழக்கம் இன்றைய மாணவர்களுக்கு இல்லாமல் போனது நவீன அறிவியல் யுகத்தின் உச்சம்.
ஒருநாள் அம்மாவிடம் அதிகாரமாகவே கேட்டான். அம்மாவும் படிப்புக்குத் தானே என்று லோன் போட்டு (இ.எம்.ஐ யில்) மாதத் தவனையில் செல்போன் வாங்கிக் கொடுத்தாள்.
கார்த்திக் இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்லை. நண்பர்களோடு புகை பிடிப்பது, விடுமுறை நாட்களில் மது அருந்துவது என தன்னிலை மறந்து நடைபோடத் தொடங்கிவிட்டான். அவன் சேர்த்துக்கொண்ட நண்பர்கள் அதுமாதிரி.
முதலாமாண்டு நிறைவு பெற்றது. நான்கு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அப்படியே இரண்டாம் ஆண்டு தொடர்ந்ததால்; மகன் பெயில் ஆகியிருப்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாது. அவன்தான் இரண்டாம் ஆண்டு படிக்கத் தொடங்கிவிட்டானே என்ற மகிழ்ச்சி மட்டும் அவர்கள் முகத்தில் தெரிந்தது.
ஒரு நாள் போதை அதிகமானதால் ஒயின் ஷாப் அருகிலேயே விழுந்து கிடந்தான். அவனது நண்பர்கள் அப்படியே போட்டுவிடுக் கிளம்பிவிட்டனர். கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் இவனைக் காணவில்லையே என்று சுந்தரம் தன் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
மல்லிகாவோ!… அவன் எங்கே போப்போறான் எங்காவது நூலகத்தில் புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம்னு போயிருப்பான். இப்பத்தான் ஒவ்வொரு பஞ்சாயத்துலயும் ஒரு நூலகம் இருக்கே; என்று தன் மகன் மீது கொண்ட பாசத்தாலும் நம்பிக்கையாலும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பாவம்! மல்லிகாவுக்கு எப்படித் தெரியும்?
அந்த நூலகம் படிப்பதற்கு யாரும் வராமல் எப்போதாவதுதான் திறப்பார்கள் என்று. அவளோ! வீடு, மகன், மில்லு இதைத் தவிர வேறெதுவும் தெரியாது.
அவனுக்குப் போதை தெளிவதற்கு வெகு நேரமானது. இரவு ஏழு மணி இருக்கும். சட்டை முழுவதும் சேரும் சகதியுமாக வீடு வந்து சேர்ந்தான். கார்த்திக்கைப் பார்த்த மல்லிகா ஒரு நிமிடம் பயந்து போனாள்.
என்னடா ஆச்சு. இப்புடி வந்து நிக்குற?
ஒண்ணும் இல்லம்மா. நான் குளிக்கணும்.
சொல்லுடா? லாரி, பஸ் ஏதாச்சும் சேத்தை வாரி இறைச்சிருச்சா?.
இல்லம்மா… போ! போ.. சோத்தைப் போட்டு வையி, நான் குளிச்சிட்டு வர்றேன்.
சரிடா என்னமோ சொல்லுற… என்று முணகியவாறு சமையல் அறைக்குள் சென்றாள்.
சுந்தரம் மட்டும் அவன் முகத்தைக் கவனித்தார். ஆனால் ஒன்னும் பேசல. அவனும் அவரைப் பார்த்ததும் வாயைத் துடைத்தபடி சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு குளிக்கச் சென்றான்.
மறுநாள் காலையில் சற்று நேராமாகவேத் தூங்கிவிட்டான். மல்லிகா வந்து எழுப்பினாள். ஏண்டா! காலேஜ்க்குப் போகலையா? இவ்வளவு நேரமாகியும் தூங்கிட்டே இருக்கியே… என்று சத்தமாகவே பேசினாள்.
அவன் எதையுமே காதில் வாங்காதவனாய் பாம்பைப் போல நெளிந்தபடி கிடந்தான்.
யாண்டா … ஒடம்புக்கு ஏதாச்சும் சரியில்லையாட? என்றவாறே அவனது நெற்றியில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அதிகமாகவே இருந்தது கண்டு பதறிப்போனாள். உடனே! என்னங்க… இங்கே வாங்க. இவனுக்கு ஒடம்பெல்லாம் காயுது. டாக்டருகிட்டே கூட்டிக்குப் போகலாம் வங்க; என்றபடியே வெளியில் வந்தாள்.
வீட்டு வாசலின் கட்டிலில் உக்காந்திருந்த சுந்தரம்; அதெல்லாம் ஒண்ணுமில்லை. சரியாகிவிடும் என்பதைப் போன்ற பாவனையில் பாத்துக்கலாம் என்றார்.
அவனை எழுந்திருச்சி மூஞ்சைக் கழுவி சாப்புட சொல்லு எல்லாம் சரியகிரும் என்று எதார்த்தமாகக் கூறினார்.
சுந்தரத்திற்குப் புரிந்துவிட்டது. அவன் மது குடிச்சிருந்தது. அவனிடம் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.
அன்று ஒருநாள் மட்டும் கல்லூரிக்குப் போகவில்லை. அடுத்த நாள் கல்லூரிக்குப் போனான். அவனது நண்பர்கள் என்னடா? கார்த்தி நேத்து காலேஜ்க்கு வரல. முந்தானேத்து அடிச்ச சரக்கு எரங்களையா? என்றவாறு அருகில் இருந்த மற்றொரு நண்பனிடம் சொல்லிச் சிரித்தான். அங்கிருந்த மற்ற மாணவர்களும் கேலி செய்து சிரித்தார்கள். அன்று மதியமே வீட்டுக்கு வந்துவிட்டான்.
சுந்தரம் வீட்டிலுள்ள திண்ணையில் உக்கார்ந்திருந்தார். மல்லிகா மில்வேலைக்குப் போயிருந்தாள். அவளுக்கு மாலை ஐந்து மணிக்குத்தான் வேலை முடியும். கார்த்திக் வருவதைப் பார்த்த சுந்தரம்; கண்டு கொள்ளாதபடி இருந்தார். அருகில் வந்த கார்த்திக் அப்பா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, அதான் காலேஜ்ல இருந்து வந்துட்டேன் என்றான்.
ஏண்டா! உன் நண்பர்கள்தானே உன்னோட உலகம். அவங்க கிட்டே இருந்தாதானே உனக்கு சந்தோசம். அதவிட்டுட்டு இங்கே வந்திருக்க.
இல்லப்பா… அவங்களப் பத்தி இப்பதான் தெருஞ்சிக்கிட்டேன்.
என்னடா பண்ணுனானுக? அவங்களோடு சவகாசம் வச்சித்தானே இப்புடி வளந்து நிக்குற என்று பல்லைக் கடித்துக்கொண்டார்.
அப்பாவின் பேச்சில் இருந்த சூசகம் அவனுக்குப் புரிந்தது. தப்பு செய்தவன் தன்னுடைய நிலையை உணர்ந்து கொண்டான் என்றால் அப்போதுதான் எவை உண்மை என்பது புரியவரும். அதனால்தானே ‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று சொல்லி வைத்தனர்.
சுந்தரத்தின் முன்னே நின்று கொண்டு அழுதான் தேம்பினான். அப்பா… இனிமேல் நான் எந்தத் தப்பும் பண்ணமாட்டேன் அப்பா… என்று புலம்பினான்.
டேய்…! ஏண்டா அழுவுற இனிமேயவது ஊர் ஒலகத்த புரிஞ்சி நடந்துக்கோ. கண்டவனை எல்லாம் நம்பி ஏமாந்து போகாதே. ஒனக்குன்னு ஒரு இடத்த இலக்கா நிர்ணயிச்சிக்கோ அதை மட்டும் நம்பி உன் பயணத்தத் தொடங்கு ஒருநாள் நிச்சயம் ஒண்ணப் பாத்து சிரிச்ச பயலுக நிமிந்து பொறாமையோடப் பாப்பானுங்க என்று நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லிப்; போ… போயிட்டு சாப்புட்டுத் தூங்கு எல்லாம் சரியாகிவிடும் என்றார்.
அவனுக்கு இப்போதுதான் புரிந்தது. பள்ளிப் பருவத்தில் படித்த திருக்குறள் ஒன்று நினைவில் வந்தது. ‘உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு’.
பொருளைத்தேடி அலைகின்ற இந்த உலகத்தில் உண்மையான நட்பினை காண்பது அவ்வளவு எளிதான காரியமில்லை;
தாய், தந்தை இவர்கள்தான் உலகம். அவர்களின் கண்களில் கண்ணீர் வந்தால்; தாம் நிம்மதியாக வாழமுடியாது என்பதை உணர்ந்தான். தொடர்ந்து கல்லூரிக்குப் போனான். மூன்றாண்டு படிப்பு நிறைவு பெற்றது. அனைத்துப் பாடங்களிலும் நல்ல தேர்ச்சி அடைந்தான். பணியை நோக்கிய பயணத்திலும் பெற்றோரைப் பேணிக் காப்பதிலும் நாட்கள் நகர்கின்றன.
நட்பாராய்தல் நாளைய தலைமுறைக்கு தலையாய கடமை.