‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ – அழகியசிங்கர்

 

‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ 

என்ற டயான் ப்ரோக்கோவன் என்ற நாவலை முன் வைத்து…

              டாக்டர் பாஸ்கரன், இந்தப் புத்தகத்தை –  ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்   – என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார். கிட்டத்தட்டப் பல மாதங்கள் நான் படிக்காமலே இந்தப் புத்தகத்தை வைத்திருந்தேன்.  

            திரும்பவும் அவர் ஞாபகப்படுத்தியபோது, இன்று (27.10.2020) இந்தப் புத்தகம் முழுவதும் படித்து முடித்தேன்.

            இதை ஒரு நாவல் என்று சொல்லலாமா? குறுநாவல் என்று சொல்லலாமா? ஒரு நாவல் என்றால் குறைந்த பட்சம் 80 பக்கங்களாவது இருக்க வேண்டும்.  இந்தப் புத்தகம் 71 பக்கங்களில் முடிந்து விடுகிறது.

            காலச்சுவடு பதிப்பகம் நவீன உலக கிளாசிக் நாவல் வரிசையில் இந்தப் புத்தகத்தைச் சேர்த்துள்ளது.

            டயான் ப்ரோகோவன் (பிறந்த வருடம் 1976) ஃப்ளெமிஷ் மொழியில் எழுதிய இந்த நாவல், ஜெர்மன் மொழியில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.

          ஜூல்ஸுன் மரணம் இயல்பாக இந்த நாவலில்   விவரிக்கப்படுகிறது.  ஜூல்ஸு மரணத்தோடு நாமும் பயணம் செய்கிறோம்.

   ஜூல்ஸ் இறந்து போயிருந்தார்.  ஆனால் முதலில் அவர் தன் கடமையைச் செய்து முடித்திருந்தார். மேஜையைச் சீர்செய்து காபி கலந்து வைத்திருந்தார்.  

            ‘உயிரோடு இருப்பவர்கள் நிலைமைதான் மோசமானது’ என்று ஆலிஸ் நினைக்கிறாள்.

            மௌனமாக ஒரு உரையாடல் நடக்கிறது ஜூல்ஸுடன்.   ஆலிஸ் அந்த உரையாடலை நடத்துகிறாள்.  அவர் இறந்து விட்டார் என்று அவளுக்கு வருத்தமும் துக்கமும் இருந்தாலும் அவருடன் ஒரு மென்மையான உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள். இந்த நாவல் முழுவதும் அவளுடைய அவரைப் பற்றிய நினைவுகள்தான்.  அதைச் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது.

            அவள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறாள்?  உண்மையில் மருத்துவரை அழைக்க வேண்டும்.  ஹெர்மன் என்ற அவள் பையனிடம் தெரிவிக்க வேண்டும்.  அப்படியில்லாவிட்டால் அவன் மனைவி எய்மியை கூப்பிட வேண்டும்.  அவள் இதையெல்லாம் செய்யவில்லை.  இயல்புக்கு மாறாக அவள் இருப்பதால் அவளுக்குப் பீதி ஏற்படுகிறது.  பீதியைத் தடுக்க இன்னொரு கோப்பை தேநீரைக் குடிக்கிறாள்.

அவள் எப்போதும் குளித்துவிட்டு வரும்போது செய்தித்தாள்களைப் படிப்பாள்.  இன்றும் ஜூல்ஸ்  உயிரோடு இல்லை என்று தெரிந்தும், ‘கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ஜூல்ஸ் , ஒரு நிமிடத்தில் செய்தித்தாளைக் கொண்டு வருகிறேன்,’ என்கிறாள்.

            அது அவருடைய காலைநேரச் சடங்கு வெளியே தக்காளி வாங்கச் சென்றால் எல்லோரும் ஜூல்ஸ்  பற்றிக் கேட்பார்கள் என்று அவளுக்குத் தோன்றுகிறது.  அதற்கு என்ன பதில் சொல்வது? அவள் யாரிடமும் சொல்லாதவரை அவர் இன்னும் இறந்து போகவில்லை.  

            ஜூல்ஸுடன்  சதுரங்கம் ஆட டேவிட் வந்து விடுவான் என்பதை நினைத்துத் திகைத்து விட்டாள்.   டேவிட்டுக்கு ஆட்டிஸம்.  டேவிட் தாய் பியா அவன் பள்ளிக்கூடத்தில் சதுரங்கம் ஆடக் கற்றுக் கொள்கிறாள்.  அவர்களை  லிப்ட்டில்   ஒருநாள் ஜூல்ஸிம் ஆலிஸிம் சந்திக்கிறார்கள்.  இப்படியே தொடங்கியது நட்பு.  தினமும் டேவிட் ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வருவான். சரியாக பத்து மணிக்குத் தினமும் டேவிட் சதுரங்கம் விளையாட வந்துவிடுவான்.

            போன் செய்து பியா சொன்னாள்.  அவள் தாய் இன்று காலை பனியில் சறுக்கி விழுந்துவிட்டாள்.  அவளை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.  அவள் வீட்டில் தனியாக விட்டுவிட்டுச் சென்றால் டேவிட் குலைந்து போவதாகச் சொல்கிறாள்.  அவனை ஆலிஸ் பொறுப்பில் விட்டுவிட்டுப் போக நினைக்கிறாள்.

            டேவிட் வந்து விடுகிறான்.  அவள் சதுரங்கப்பெட்டியைத் தேடி எடுத்து வருகிறாள். 

            அவன் கோபத்துடன் ஆலிஸ் உடன் செஸ் விளையாட விரும்பவில்லை.  

            “எனக்குப் பத்து மணிக்கு மிஸ்டர்  ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வேண்டு” மென்கிறான் டேவிட்.

            “மிஸ்டர் ஜூல்ஸ் சற்று உடல்நலம் இல்லாமல் இருக்கிறார்,” என்கிறாள் ஆலிஸ்.  

            அவனை ஜூல்ஸ் இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.  அவன் ஜூல்சைத் தொட்டுப் பார்க்கிறான். பிறகு சொல்கிறான்.   “மிஸ்டர் ஜூல்ஸ் இறந்து விட்டார்” என்கிறான்.

            டேவிட் சதுரங்கம் விளையாடுகிறான்.  இரண்டுபேர் ஆட்டங்களையும் அவன் ஒருவனே ஆடுகிறான். ஆட்டம் முடிவில் “மிஸ்டர் ஜூல்ஸ் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்,”  என்கிறான் டேவிட்.

            ஒயின் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து டேவிட்டை திறக்கச் சொல்கிறாள்.  தக்கைத் திருகியை அவனிடம் கொடுக்கிறாள். 

            “தக்கைத் திருகி ஒரு நெம்புகோல்”  என்கிறான்  டேவிட்.   ஆட்டிஸம் இருந்தாலும் டேவிட் ஒவ்வொரு முறையும் எதாவது குறிப்பாகச் சொல்வான்.

            “சொர்க்கத்திலிருந்து வந்த அமிர்தம்”  என்றான் டேவிட் திறந்த ஒயின் பாட்டிலை அவள் பக்கமாகத் தள்ளி வைத்தபடி.

            இதுதான் முதல் முறையாக அவன் தேவையின் பாற்படாத ஒன்றைச் சொன்னது என்கிறார் நாவலாசிரியர்.

            பியா வந்து டேவிட் அழைத்துச் சொல்வதற்கு முன்,’பிற்பகல் என் அம்மாவிற்கு அறுவை சிகிச்சை.  நான் திரும்பவும் போக வேண்டும்’ என்கிறாள்.

            டேவிட் தன் தாயைப் பார்த்தவுடன் ஒரே ஒரு வார்த்தைதான்  சொன்னான். ” மிஸ்டர்  ஜூல்ஸ் ஜெயித்துவிட்டார்,” என்று.

            ஒரு புதையல் போல் மிஸ்டர் ஜூல்ஸ் காதலியான  ஓல்காவிற்கு எழுதிய கடிதத்தை, கண்டுபிடித்து விட்டேன் என்கிறாள் ஆலிஸ்.  

            அந்தக் கடிதத்தில் மிஸ்டர் ஜூல்ஸ் விடுமுறை தினத்தில் ஓல்காவை அழைத்துப் போவதாக எழுதியிருந்தார்.  

            ஆனால் ஏனோ அது நிறைவேறவில்லை.  அவருடன் வாழ்ந்த பழைய நினைவுகளை அசை போடுகிறாள்.  மிஸ்டர் ஜூல்ஸ் ஓல்காவுடன் விடுமுறைக்குச் செல்லவில்லை.  அதைத் தடுத்து விட்டாள் ஆலிஸ்.  

       ‘உங்களை வாழ்க்கைக்கு அர்பணிப்பதைவிட மரணத்திற்கு அர்ப்பணிப்பது எளிதாக இருக்கிறது’ என்று நினைக்கிறாள் ஆலிஸ்.   தன் நினைவுகள் மூலம் அவருடன் ஆலீஸ் வாழ நினைக்கிறாள்.

            ஓல்காவுடன் ஏற்பட்ட கள்ள உறவு முறிந்ததற்குக் காரணமாக ஆலிஸ் இருக்கிறாள்.  அவள் அதை அவர் முன் அவர் இறந்தபின் வெளிப்படுத்துகிறாள்.  

            அவள் நினைத்துப் பார்க்கிறாள் தன் மகன்  ஹெர்மனிடம் எப்போது சொல்வது என்று.  முன் மாலையில்தான்  ஹெர்மனை அழைக்க நினைக்கிறாள்.  

            ஆனால் அவள் மகன் ஹெர்மனை அழைக்கவில்லை. ‘ ஹெர்மனை அழைப்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது’  என்று அவள்  இறந்து போன கணவருடன் பேசுகிறாள்.

            தந்தை இறந்து விட்டதை ஒரு மகனிடம் சொல்வதை விட ஒரு மகளிடம் சொல்வது எளிதாக இருக்குமென்று நினைத்தாள்.  இப்போது அவள் ஏற்கனவே பிறக்க இருந்த தன் முதல் குழந்தை அரைகுறைப் பிரசவமாகப் போனதை நினைத்துப் பார்த்தாள்.

            திரும்பவும் பியா போன் செய்தாள்.  அவள் அம்மா உடல்நிலை மோசமாகி விட்டதாகவும், அவள் கட்டாயம் போகும்படி இருக்கும் என்றும், ஆனால் அவள் பையன் டேவிட் அழைத்துக்கொண்டு போக முடியாது என்றும் சொல்கிறாள்.

            எப்படியும் டேவிட்டை அவள் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன் என்று அழாதகுறையாகச் சொல்கிறாள்.  ஆலிஸ்.   அந்த வேண்டுகோளைத்  தட்ட முடியவில்லை.

            டேவிட்டை பியா அழைத்துக்கொண்டு அவளிடம் விடும்போது, ”மிஸ்டர் ஜூல்ஸ் எப்படி இருக்கிறார்,” என்று கேட்கிறாள்.  

            “அவர் அப்படியே இருக்கிறார்,” என்று ஆலிஸ் பதில் அளிக்கும்போது டேவிட்டைப் பார்க்கிறாள்.  அவன் முகத்தில் ஒருமாற்றம் நிகழ்கிறது.  அவன் அவள் அம்மாவிடம் மிஸ்டர்  ஜூல்ஸ் இறந்து போய்விட்டார் என்று சொல்லவில்லை .  எப்படி அவனைப் பாதுகாப்பது என்று அவளுக்குப் பெரிய நிர்ப்பந்தமாக இருக்கிறது.  மிஸ்டர் மிஸ்டர் ஜூல்ஸ் இருந்த அறையில் அவனை அழைத்துக்கொண்டு போக விரும்பவில்லை. ஏன்னென்றால்  மிஸ்டர் ஜூல்ஸ் விரும்பாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரும்பவில்லை.

            டேவிட் எப்போதும் பத்துமணிக்குத்தான் சதுரங்க ஆட்டம் ஆடுவான்.  அதனால் தற்சமயம் பத்து மணியைக் கடந்து விட்டதால் அவன் ஆட மறுக்கிறான்.

            “வா நாம் ஜூல்ஸ் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளலாம்” என்று அவனை அழைத்துக்கொண்டு போகிறாள்.

            “மிஸ்டர் ஜூல்ஸ் இறந்து விட்டார்” என்றாள் டேவிட்டைப்  பார்த்து.

            டேவிட் ஜூல்ஸ் இறந்த உடலைத் தொட்டுப் பார்க்கிறான். அவருடைய முகத்தின் மீது அவனுடைய கையை ஓட்ட விட்டான்.

            அப்போது ஒன்று சொல்கிறான்.  அது முக்கியமாக இந்த  நாவலில் தோன்றுகிறது.

“மிஸ்டர் ஜூல்ஸ் போய்விட்டார். 

இது மிஸ்டர் ஜூல்ஸின் வெளிப்புறம்தான்” என்கிறான்.  இங்கே அவன் சொல்வது முக்கியமாகத் தோன்றுகிறது. 

            அவன் சொன்னதை விட்டு கதாசிரியர் சொல்வதுபோல் ஒரு வரி வருகிறது.  கல்லாகிப்போய் சோஃபாவில் அமர்ந்திருந்த ஜூல்ஸின் உடல் அவருடைய வெளிப்புறம்தான் உலகத்திற்கான அவரது ஆடை அது. இப்போது அதை அவர் கழற்றிப் போட்டுவிட்டார்.  

            சாப்பிடக் கூப்பிடுகிறாள் டேவிட்டை.  ‘சமையல் அறையில் நுழைந்த அலங்கோலம்..அலங்கோலம்..அலங்கோலம்’ என்று தன்னிச்சையாக ஒரு கருத்தைக் குறிப்பிடுகிறான்.

            சிறிது நேரத்தில் டேவிட் சொல்கிறான், ‘ஜூல்ஸின் வெளிப்புறம் தனியாக இருக்கிறது’ என்று.

            டேவிட் அம்மா போன் செய்து தான் அங்கு வர முடியாது  என்று தெரிவிக்கிறாள்.  டேவிட் சோபாவில் ஜூல்ஸின் பக்கத்தில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்து விட்டு விழித்துக் கொள்கிறான்.   அவன்  ஆலிஸ்  பார்த்துக் கேட்கிறான்.  நான் சோஃபாவின் தலையணி, போர்வையுடன் படுத்துக்கொண்டால் மிஸ்டர் ஜூல்ஸின் வெளிப்புறம் எங்கே போகும் என்று கேட்கிறான். ஆலிஸ் 

            அவனைத் தனியாகப் படுக்கை அறையில் படுத்துக் கொள்கிறான். அப்போது அவன் சொல்கிறான் “பனி வெளி யே பெய்கிறது.  வெம்மை உள்ளே இருக்கிறது” என்கிறான். அது ஒரு கவிதைபோல் ஒலித்தது என்கிறார் கதாசிரியர்.

            அவளும் தூங்கி விடுகிறாள்.  காலையில் எழுந்தபோது ஒரு புதிய நறுமணத்தை நோக்கி அவள் சென்றாள் என்று முடிவுக்கு வருகிறது நாவல்.

            டேவிட் ஆட்டிஸம் என்ற நோயிக்கு ஆளாகப்பட்ட சிறுவன் அவருடைய மரணத்தைப் புறம் என்று விவரிக்கிறான். அவன் அவர் உயிரோடு இருப்பதாகத்தான் நினைக்கிறான்.

‘மிஸ்டர் ஜூல்ஸுடன்  ஒரு நாள்’ – நாவல் – ஆசிரியர் : டயான் ப்ரோகோவன் – தமிழில் ஆனந்த் – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) ஙூட், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.