குற்றவாளிக் கூண்டில் கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தார் குமரேசன். தலை எல்லாம் கலைந்து, அலங்கோலமாக, உறக்கமின்றி சிவந்த கண்களோட, அவமானத்தில் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார். இருந்தும் அவரது பணக்காரத்தன்மை அவரது செழிப்பான உடல் வாகில் தெரிந்தது.
சின்ன வயதில் சாப்பாட்டிற்கேக் கஷ்டப்பட்ட குடும்பம். ஆதலால் நன்கு படித்து, கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி இப்போது ஒரு மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். கார், பங்களா, வேலை செய்ய ஆட்கள் என்று பந்தாவாக வாழ்க்கையை நடத்துகிறார். பணம் சேரச் சேர அதன் மீது மோகம் அதிகமாக, ஆரம்பித்த கையாடல் இப்போது நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக நீதிபதி சிவராமன் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். சிவராமனுக்கு அவரது அலங்கோலமான நிலையைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால் அவருக்கு உண்மை நிலையைப் புரிய வைக்க எண்ணினார். சின்னச் சின்ன உதாரணங்களால் வாழ்க்கையின் அறிய நிலையைப் புரிய வைப்பதில் சமர்த்தர் சிவராமன்.
சிவராமன் குமரேசனிடம் மெதுவாக ‘காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா’ என்று வினவினார். குனிந்த தலை நிமிராமல், பசியின் உத்வேகத்தால் ‘இல்லை’ என்று மெதுவேத் தலை அசைத்தார் குமரேசன். எண் சாண் உடம்பிற்கு வயிரே பிரதானம். சிவராமன் ஓர் ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார். அவரும் கொஞ்சம் தூரம் போய் சின்ன கடையாய் இருந்தாலும் மிருதுவாக இருக்கும் நான்கு இட்லியும் சட்னியும் வாங்கி வந்தார். குமரேசனின் கையில் இட்லி பொட்டலம் கொடுக்கப்பட்டது. பசிக்கொடுமையினால் அவமானப்பட்டுக்கொண்டே அதை வாங்கிக் கொண்டார் குமரேசன். சிறிது தள்ளி நின்று சாப்பிடுவதற்காக திரும்பும் போது சிவராமன் குமரேசனைத் தடுத்து ‘பரவாயில்லை. நீங்கள் இங்கேயே அமர்ந்து நிதானமாக சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன்’ என்று மனிதாபிமானம் பாதி, மனசுக்குள் ஒரு யோசனை பாதியுமாகக் கூறினார்.
கவலையினால் இரண்டு நாட்கள் சாப்பிடாத குமரேசன் பசி பொறுக்க முடியாமல் இட்லியை சாப்பிட ஆரம்பித்தார். ஆனால் அவரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை. பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார். ‘என்ன ஓர் இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிடுங்கள்’ என்று பரிவோடும், ஓர் அர்த்தத்தோடும் சொன்னார் சிவராமன். ‘என்னால் சாப்பிட முடியவில்லை. போறும்’ என்றார் குமரேசன். போறும் என்ற வார்த்தையைத் தான் எதிர்ப்பார்த்தார் சிவராமன்.
சிரித்துக்கொண்டே ‘அவ்வளவுதான் வாழ்க்கை. பார்த்தீர்களா? உங்களால் மூன்று இட்லி தான் சாப்பிட முடிந்தது. அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்? மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பரத் தேவைகள் தான் அதிகம். உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது. அதற்கு நான்கு இட்லியே அதிகம். ஆனால் உங்கள் ஆடம்பரத் தேவைகளுக்கு நான்காயிரம் கோடி என்ன, நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது’ என்று சொல்லி அவரையேப் பார்த்தார். குமரேசன் பெரிதாகக் குலுங்கி ஆழ ஆரம்பித்தார். அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல, நமக்கும்தான்.
கல்யாணமாகாமல், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையாமல் மனவேதனையிலிருக்கும் நம் குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்யத் தடையாயிருப்பது இந்த ஆடம்பரத்தினால்தான். வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளை ஒதுக்குவது, வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் சொந்தம் கொண்டாடுவது போன்ற பல வழிகளில் பாவங்களைச் செய்து விட்டு புண்ய ஷேத்திரங்களுக்குச் சென்று பரிகாரம் செய்ய முயற்சிப்பது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கஷாயம் குடிக்கிற மாதிரி.
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான். நாம் யாரும் இந்த உலகத்தில் நிரந்தரம் இல்லை. அடுத்த நொடி நமக்குச் சொந்தமில்லை. இங்கிருந்து ஒரு பைசா கூட நம்மோடு எடுத்து செல்ல முடியாது. எதையும் இங்கு கொண்டு வரவில்லை, எதையும் எடுத்துப் போக முடியாது. பின் ஏன் இந்த பேராசை! காக்கையைப் போல பகிர்ந்து உண்போம்.
இப்படி மூன்று இட்லி முன்னூறு தத்துவங்களை முத்தாகத் தந்தது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா!
மூணு இட்டிலி கதை அருமைதான். ஆனால் நாம் எந்த யுகத்துக்குள் தள்ளி விடப்பட்டுள்ளோம்?
LikeLike