யார் தந்த விளக்கு ?
ஆசை நெய்யிட்டு வேட்கைத் திரியிட்டு
காமத்தீ இட்ட செம்பொன் விளக்கே!
தீயவை பயக்காது பாயினில் தீவைக்கும்
பெண் பாவை விளக்கல்லவோ நீ
முகத்தில் மலர்ந்து நெய்யில் தோய்ந்து
திரியால் ஒளிரும் புதுவிளக்கம் நீ
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் நீ தந்த சுடு முத்தம்
விழித்தீயில் மடியும் விட்டிலல்ல நான்
தீக்குள் விரல் வைக்கும் நந்தலாலா!
யார் தந்த விளக்கடி நீ ?
இமவான் பெற்றெடுத்த குன்றிலிட்ட ஒளிவிளக்கா?
காமதேனு சுரந்திட்ட குடத்திலிட்ட குலவிளக்கா?
பாற்கடலில் அமிழ்ந்துவந்த அலைமகளின் அகவிளக்கா?
பெரியவர் பெற்றெடுத்த சுடர்ப்பாவைத் திருவிளக்கா?
ஜனகமுனி கண்டெடுத்த ஸ்ரீதேவி விடிவிளக்கா?
யமுனைத்துறை அருகினிலே கோபித்த சரவிளக்கா?
கலைமகள் நாவுதித்த காப்பியக் கலைவிளக்கா?
காஞ்சியிலே கொஞ்சிவரும் காமாட்சிக் கைவிளக்கா
சபரியில் கண்சிமிட்டும் மகரஜோதி திருவிளக்கா?
அண்ணாமலை உச்சியில் கார்த்திகைத் திரு விளக்கா?
அம்மனுக்குப் படைத்துவிட்ட பச்சை மாவிளக்கா?
விளக்கோ திருவிளக்கோ ஜோதி மணி விளக்கோ
அந்தியிலே ஏந்திழையாள் ஏந்திவரும் அகல்விளக்கோ
முக்கூடல் சங்கமத்தில் முன்வந்த சிறுவிளக்கோ?
குங்குமத்தில் குழைந்திட்ட செஞ்சுடரின் பொன்விளக்கோ ?
ஓமத்தீ நீயென்றால் பெய்யும்நெய் நான் உனக்கு
காட்டுத்தீ நீயென்றால் தேவதாரு நான் உனக்கு
எரிமலை நீயென்றால் செங்குழம்பு நான் உனக்கு
எரிவாயு நீயென்றால் ஜ்வாலையடி நான் உனக்கு
யார் தந்த விளக்கடி நீ ?
மோகத்தீ பொங்கிவரும் தீபாவளித் திருநாளில்
கொள்ளிக்கண் தீபட்டு பட்டாடை பற்றியதே
தீயே தீக்குளிக்கும் கொடுமையினைக் கண்டேனே!
அனலே அனலாக கண்முன்னே கண்டேனே
உன்னுடன் எரிந்துவிட ஓடிவந்த உன்உயிரை
கொஞ்சமும் கருணையின்றி உதறிவிட்டுச் சென்றாயே
புதையலைப் புகையாய் சிதைத்த பாவிமுன்
சிதையிலே வரைந்த ஓவியமாய் மறைந்தாயோ?
எங்கே என் பூம்பாவை விளக்கு?
அகண்ட குங்குமத்தில் அமைதி கொண்டு
ஓவியச் சுடராய் பூஜையில் எரிகின்றாய்!
அன்பே தகழியாய் அமைதியே நெய்யாய்
காவியத் திரியாய் எரியும்சுடர் விளக்கே!
என் நெஞ்சின் அழல் நீயம்மா!
உன் நெஞ்சின் நிழல் நானம்மா!