
ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர்…ஒரு அதிகாலைப் பொழுது..
புகார் நகரில்…
மாசாத்துவான் எனும் வணிகரின் மகன் கோவலனுக்கும் ,மாநாயகன் மகள் கண்ணகிக்கும் இரு வீட்டு பெற்றோர்களாலும் நிச்சயக்கப்பட்டு அனைத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக அன்று நடந்தேறியது. அப்போது கோவலனின் வயது பதினாறு. கண்ணகியின் வயதோ பன்னிரெண்டு.பெற்றோருடன் சேர்ந்து சில ஆண்டுகள் வாழ்ந்த அவர்களைப் பின் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர்.
அவர்கள் மகிழ்ச்சியுடன் இல்லறமே நல்லறமாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர்.
இப்படி சில ஆண்டுகள் கழிந்து ஒரு நாள்..
கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி என்ற பெண் மயிலாளின் நடனம், சோழ மன்னன் முன்னிலையில் அரங்கேற்றம் ஆனது. நடனத்தைக் கண்டு ரசித்த மன்னன், மன்னர்குல வழக்கப்படி மரகதமாலை ஒன்றினையும், அவளுக்கு “தலைக்கோலி” என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்தான்.
ஒருநாள் மன்னர் கொடுத்த மாலையை, மாதவியின் வேலைக்காரி கூனி என்பவள் விற்பனை செய்வதற்காக பெரிய தெருவினுக்குச் சென்றாள்.
அம்மாலையைப் பார்த்த கோவலன்,அதை ஆயிரம் பொன்களைத் தந்து வாங்கியதுடன்,அவளுடனேயே மாதவியின் இல்லத்திற்கும் சென்றான். மாதவியைக் கண்டவன் அவளது பேரழகில் மயங்கி , தன் மனையாள் கண்ணகியை மறந்து , அவள் இல்லத்திலேயே தங்கினான்.
கோவலனின் அருகாமை மாதவிக்கு மகிழ்வையும்..அவனின் விலகல் கண்ணகிக்குத் துயரையும் தந்தது.
இந்நிலையில்…புகாரில் இந்திரவிழா துவங்கியது..
விழா அன்று காலை
புகார்நகர்..
மிகவும் அழகுடன் திகழ்ந்தது.காலை கதிரவனின் ஒளிக் கிரணங்களால் அதன் மாடங்களும்,கோபுரங்களும்,கோயில் தலங்களும் மற்றும் உள்ள மன்றங்களும் அழகுப் பெற்று பிரகாசமாகத் திகழ்ந்தன.
..
மாடி வீடுகளும், மாளிகைகளும்,பொய்கைக் கரையில் யவனர்கள் இல்லங்களும், நீர் நிலையில் கட்டியிருந்த வீடுகளும்..அந்நகரை வளப்படுத்தி அழகுடன் வைத்திருந்தன.
நறுமணப் பொருள்கள் விற்போர் ஒரு தெரு,நூல் நெய்வோர் ஒரு தெரு,பட்டும் பொன்னும் அணிகலன்களும் விற்போர் ஒரு தெரு,அப்பம் விற்போர்கள் விற்போர், மீன் விலை பேசுவோர், இறைச்சி,எண்ணெய்,பொன் வெள்ளி செம்புப் பாத்திரங்கள் விற்போர், பொம்மை விற்போர், தச்சர்,கம்மாளர்,இசை
வல்லுநர்கள், சிறு தொழில் செய்வோர் ஆகியோர் நிறைந்த பகுதி
மருவூர்ப்பாக்கம் எனப்பட்டது.
அடுத்து, பட்டினப்பாக்கம்.
அரச வீதி,தேர் வீதி,கடைத்தெரு,மருத்துவர்,ஜோதிடர், மணி கோத்து
விற்பவர்கள் என தனித்தனியே வசித்துவரும் உயர்நிலை மக்கள் வாழும் பகுதியாகும்.
அரசன்,அரண்மனை சுற்றி படைவீரர் குடி இருக்குகள், யானை..குதிரை..தேர்..காலாள் படை வீரர்கள் எனப் பலர் குடி
இருப்புப் பகுதி. கடற்கரையை ஒட்டியப் பகுதி என்பதால் பட்டினப்பாக்கம் எனப்படுகிறது.
இதை வைத்துதான், புகார் நகருக்கு,பூம்பட்டினம், பூம்புகார் என்றெல்லாம் பெயர் வழங்கப்பட்டு வருகிறது
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் இரண்டிற்கும் இடைப்பட்டப்
பகுதிகளில்தான் கடைகள் சூழ்ந்த பகுதியாகும்.அங்கு எப்போதும் விற்பவர் குரல்களும், வாங்குவோர் குரல்களும் பலத்த சப்தத்துடன் ஒலித்துக்கொண்டிருக்கும்.
இந்த இடத்தில் காவல் பூதத்திற்கு ஒரு பீடிகை அமைந்திருந்தது. சித்திரைத் திங்கள் சித்திரை முழுநிலவு அன்று இந்திர விழா புகாரில் கொண்டாடப்படும்.மக்கள் குறிப்பாக இந்த பலிப்பூடத்திற்கு பூவும், பொங்கலும்,விலங்குகளையும் பலி இடுவர். பின் “சோழ அரசன் வெற்றி பெறுக” எனக் கூவி மன்னனுக்கு வாழ்த்தினைக் கூறுவர்.
வச்சிரக் கோட்டம் எனும் இந்திரன் கோயிலில் இருக்கும் முரசத்தை எடுத்து யானை ஒன்றின் பிடரியில் ஏற்றி அதன் மீது இருந்து விழாச் செய்தினை அறிவிப்பார்கள்.
நகரத்து மாளிகைமுன் எங்கும் தோரணங்கள்.பூரண குடத்தில் பொலிந்த முளைப்பாலிகையை எடுத்துச் சென்றனர் பாவை விளக்கும், கொடிச்சீலையும்,வெண்சாமரமும் ,சுண்ணமும் ஏந்தி மக்கள் வீதியில் பொலிவு ஊட்டினர்.
ஊரே கூடி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து, வேண்டுமோ… வேண்டாமோ அனைத்துப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பர். வீதிகளில் ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகளும், பட்டி மன்றங்களும் நடக்கும்.
கண்ணகியிடம் இருந்து பிரிந்து நடன மங்கை மாதவியை நாடி வந்த கோவலன், மாதவியுடன் சேற்ந்து இந்த இந்திரவிழா காட்சிகளை மகிழ்வுடன் சுற்றிப் பார்த்தான்.மாதவிக்கு பொன்னும், பொருளும் வாங்கிக் கொடுத்தான்.
அவர்கள் வரும் வழியில் தெருக்களில் பல விலைமகளிரைக் கண்டனர்.பல ஆடவர்கள் அவர்களை நாடிச் சென்று உடற்பசியைத் தீர்த்துக் கொண்டதையும் கண்டனர். அவர்களைப் பார்த்த கோவலன், மாதவியையும் குறிப்பாகப் பார்த்தான்.அதில் சற்றே எள்ளல் இருந்தது போல இருந்தது. மாதவி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
இந்திரவிழாவில் மாதவியின் நடனமும் இடை பெற்றிருந்தது.அந்த இடத்திற்கு வந்தனர் இருவரும்.மாதவியைக் காண மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர்.அவர்களை மாதவி தனது பதினோரு வகை நடனங்களால் பரவசப்படுத்தினாள்.
அன்று இரவு மாதவியும், கோவலனும் இணைந்தனர். இரவு கழிகிறதே! இன்னமும் சற்று நேரம் இருக்கக் கூடாதா? என எண்ணினர்.
விடியலில்..காவிரி கடலில் கலக்கும் சங்கமத்துறைக்குச் சென்று நீராடி, புத்தம் புது ஆடைகளை அணிந்தனர். தங்கியிருந்த இடம் வந்த போது மாதவியின் தோழி யாழ் ஒன்றினை மாதவியிடம் தர..அவள் அதை மீட்டி கோவலனிடம் கொடுத்தாள்.அதை வாங்கிக் கொண்ட தலைவன் அந்த யாழினை வாங்கி இசையினைக்
கூட்டிப் பாட ஆரம்பித்தான்.
“சோழ அரசனின் ஆட்சி கங்கை வரை பரவியுள்ளது.சோழன் கங்கையை அடைந்து உறவு கொண்டாலும் வெறுப்பதில்லை. அடுத்து அவன் குமரியை அடைந்தாலும் காவிரி
பிணக்குக் கொள்ள வில்லை. இவை பெண்ணின் கற்புக்கு எடுத்துக்காட்டு.மகளிர் ஆண்களின் தவறுகளை பொறுத்துக் கொள்வது அவர்களது கடமையாகும்” எனப் பாடுகிறான்.
உடன் யாழினைத் தன் கைகளில் வாங்கிக் கொண்ட மாதவி..” பெண்கள் பெருமை அடைய வேண்டுமானால் அதற்கு ஆண்களின் செயல்கள் தூய்மையாய் இருக்க வேண்டும். ஆண்கள் செம்மையாகவும், மகளிரிடம் நேயம் மிக்கவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும்” என்று பொருள்பட பாடினாள்.
அடுத்து கோவலன் பாடுகிறான், “என் கண்கள் செய்த பாவம் இவளைக் கண்டது. இவள் பெண்ணல்ல எமன். வானத்து நிலவல்ல..அரவம்.அது தெரியாது பெண் எனப்
பழகிவிட்டேன். கண்டவர்களைப் படுத்துபவள். இவளது
மொழி,மார்பகம்,முகம்,புருவம்,மின்னல் இடை ஆகியவை என்னை
வருத்தியதுடன்,இவளது கண்களாகிய வலையில் புகுந்து மாட்டிக்
கொண்டுவிட்டேன்” என பொதுவாகப் பாடுவது போல மாதவியை மறைமுகமாகச் சாடுகிறான்.
இதை உணர்ந்து மாதவி யாழினை தன் கைகளில் வாங்கிக் கொண்டு, அவனுக்கு பதிலுரைப்பது போலப் பாடுகிறாள்…
“ஆண்கள் சீரோடு இருந்தால், அவர்களைச் சார்ந்த பெண்களுக்கு மதிப்பு.ஆனால், அவர்கள் இரக்கமற்றவர்கள்.பெண்களின் உணர்வினையும்,துன்பத்தினையும் அறியாதவர்கள்.பெண்களை விட்டு ஆண்கள் பிரிந்து செல்கின்றனர்.ஆனாலும், அவர்கள் சொன்னவற்றை உண்மை என நம்பி பெண்கள் உயிர் வாழ்கின்றனர்”என்று பொருள்படும்படி பாடினாள்.
“உன் பவள வாயில் முத்துப் பற்கள் இல்லை.கண்கள் குவளை மலர்கள் அல்ல..கொடியவை”என்கிறான்.”அன்ன நடை என்பார்கள்..ஆனால் அன்னமே! இவளது பின்னே செல்லாதே! இவளது நடை உலகை மிதித்து துவட்டும் நடை”
இப்படிப் பாடும் கோவலனின் பாடலைக் கேட்ட மாதவி,இவன் பாடலில் ஏதோ குறிப்பு இருப்பதாக உணர்ந்து,அதனால் இவன் நிலை மயங்கிப் பாடுவதாக எண்ணி, அவன் கைகளில் இருந்த யாழினை வாங்கி..
“பூ ஆடை உடுத்தி பெருமிதமாக காவிரி நடப்பதற்கு எங்கள் சோழமன்னனின் செங்கோல் வளையாமையேக் காரணம்” என்றும்,”கோவலன் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும்” எனவும் உணர்த்துகிறாள் .
கோவலன் பாடிய பாடல்கள் பெண்கள் கொடியவர்கள் என்பது போல மாதவிக்கும், மாதவிப் பாடியவை , ஆண்கள் இரக்கமற்றவர்கள்… ஒழுக்கம் தவறியவர்கள் என்பது போல கோவலனுக்கும் பட்டது ஊழ்வினை என்றே எண்ண வேண்டும்.
மாதவி..மறைமுகமாக தன்னை நிந்திப்பதாய் எண்ணிக் கொண்டு, கோபத்துடன் வெளியேறினான் கோவலன்.
“பொழுது ஆகிறது..புறப்படுவோம்” என்று கூறி அவளை அழைக்க வேண்டியவன் அவ்வாறு கூறாது ,அவளை தனியே விட்டு இவன் மட்டும் ஏவலாளர்கள் உடன்வர அவளை விட்டு நீங்கினான்.
தோழியர் பேச வாய் எடுத்தனர்..அவர்களைத் தடுத்த மாதவி..
ஓசைப்படாமல் எழுந்து தன் வண்டியினுள் புகுந்து வீடு வந்து சேர்ந்தாள்.
நடந்த நிகழ்வுகளைக் கண்டு யாழ் வருத்தத்துடன் மூலையில் தஞ்சம் அடைந்தது.
கீழ்வானில் கதிரவன் மறைந்தான்.மெல்ல இருள் பரந்தது.மீண்டும் …கோவலன் வருவான் என எண்ணியவள் ஏமாந்தாள். “அவன் என்னைப் பிரியலாம்..என்னை மறக்கலாம்.ஆனால் என்னால் அவனை மறக்கமுடியவில்லையே1” என கண்ணீர் உகுத்தாள்.
பிரிவுத் துயரால் உயிர் வாழ முடியாது தவித்தாள் மாதவி..கோவலன் தன்னை பிரிந்தாலும், அதனால் அவன் மீது ஏதேனும் தவறு இருந்தால் அவனை மன்னித்துவிடு என இறைவனை வேண்டினாள்.
கணிகையர் குலத்தாள் ஆனாலும் அவள் இறுதி வரை அவனையே எண்ணி வாழ்ந்தது போற்றத்தக்கது.பின்னாளில் தன் தாயின் காதல் கதையைக் கேட்ட மகள் மணீமேகலை…தன் வாழ்நாட்களை துறவியாகவே கழித்தாள்.
கோவலனும், மாதவியும் பிரிந்தது அவர்களுக்குள் இருந்த “தான்” எனும் அகந்தை.
தலைவன் தன்னைப் பிரிந்து செல்லமாட்டார் என எண்ணி மாதவி அலட்சியமாக இருந்து விட்டாள்.கோவலனும் பிரிவை சொல்லாமல் சென்று விட்டான். அச்சமயம், இருவரிடம் விட்டுக் கொடுத்தல் இல்லா அகந்தை.
மாதவி கணிகைதானே! என கோவலன் எண்ணி விட்டான் போலும்.. ஆனால்.. மாதவி தானும் கற்புடைவள் என்பதை நிரூபித்தாள்.
இவர்களால் நமக்குக் கிடைத்தது சிலப்பதிகாரமும்..பின் மாதவிப்
பெற்றெடுத்த மணிமேகலைப் பற்றிய மணிமேகலை காப்பியமும்.