கவிச்சக்ரவர்த்தியிடம் இல்லாத உவமைகளா? அவன் எண்ணிய உவமைகளும், அதற்கேற்ற சொற்களும் அவனையே நாடி வரும். இதைக் கம்பன் காதையைப் புரட்டுவோருக்கு நிதர்சனம். இந்தவித ஒப்பற்ற நிலையில் இக்கவிஞனின் சொற்சக்தியிருக்க, அவனும் ஓரு பரவச நிலை எய்தியதால், உவமைகளை எல்லாம் மீறிய, உவமைகளால் உணர்த்த இயலாத வேறு ஏதோ ஒன்று அவனுக்கும் தேவைப் பட்டு விடுகிறது.
பாடல் இதோ:
வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியன் மறைய,
பொய்யோ எனும் இடையாளொடும்
இளையானொடும் போனான் –
மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்
அழியா அழகு உடையான்
முதல் நான்கு வரிகளில் மூவராகிய ராமர், சீதை மற்றும் இலக்குவனும் சென்று கொண்டிருப்பதைக் கூறுகிறான் கவி.
அடுத்து இராமனை வர்ணிக்க முற்படும் கம்பன், கரிய மையையே ஒரு புறம் உவமையாக எண்ணுகிறான். அல்லவே. இது பிசின் போல ஒட்டும் தன்மை பெற்றதன்றோ. கரிய நிற உவமை சரிதான். ஆனால் ராமன் அதையும் மீறிய ஒன்றாக அல்லவா திகழ்கிறான். இல்லை மேதகு மரகதமா? இதுவும் அல்லவே! ஏனெனில் இது கல்லாய் இறுகிப் போயிருக்கும் தன்மையுடையதல்லாவா! ராமன் இளகிய கருணையின் வடிவாயிற்றே. மடங்கி மடங்கி திரும்பத் திரும்ப சதா எழுந்து கொண்டிருக்கும் அலையைப் போன்றவனா? இந்த ஒப்பீடும் கம்பனின் உள்மனதிற்கு ஒரு நிறைவைத் தருவதாக இல்லை போலும். அடுத்து மழை முகில். இது சரியாக இருப்பினும் கம்பனுக்குத் திருப்தியளிக்கவில்லை. கிட்டத்தட்ட “சீத்தலை சாத்தனாரின்” நிலைதான்!
இவ்வளவு பெரிய, அரிதினும் அரிதான காப்பியத்தையே படைத்த கம்பனுக்கே இந்த நிலை! ஆம் “உவமையற்ற” நிலை! இறுதியில் அவனது இயலாமையை, ஆற்றாமையை கம்பன் கீழுள்ள இருவரிகளில் நம்முன் வைக்கிறான்:
“ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்
அழியா அழகு உடையான்”
கம்பன் இவ்வாறே இந்தப் பாடலை நிறைவு செய்ய வேண்டியதாய் போகிறது. வேறு வழியில்லையோ? இதில் மற்றொன்று– வழக்கமாகத் தேர்ந்த செவ்விலக்கியங்களில், “ஐயோ” என்று பொதுவாக நாம் அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் சொல் தவிர்க்கப்படுவது இயல்பு. பண்டுதொட்டு “இன்று” வரை அதுவே அனுசரிக்கப்பட்டு வரும் முறையும் கூட. ஆனால் கவிச்சக்ரவர்த்தியோ ராமனின் வடிவை, அழியா அழகுடையவனை வர்ணிக்க தன்னிடம் வார்த்தைகளே இல்லாத பட்சத்தில், “ஐயோ” இப்படியாகி விட்டதே! யான் சொல்வன்மை அற்றவனாகி விட்டேனே எனும்படி, பாடி முடிக்கிறான் இப்பாடலை.
அடுத்த நாம் எடுத்துக் கொள்வது இரண்டு பாடல்களை:
அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்:
அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்;
கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள் மின்போல்; உயிர் கரப்பச்
சோர்ந்தாள்; சுழன்றாள்; துள்ளினாள்;
குடித்தாள் துயரை, உயிரோடும்
குழைத்தாள்; உழைத்தாள், — குயில் அன்னாள்.
விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும்
வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை
நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
“கொழுந்தா” என்றாள்; “அயோத்தியர்தம்
கோவே” என்றாள்; “எவ் வுலகும்
தொழும் தாள் அரசேயோ!” என்றாள்;
சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்.
என்ன இது! மூச்சு விடாமல் நம்மைப் படிக்கச் சொல்கிறது! அது தான் கம்பனின் மகிமை! எங்கோ படித்த வண்ணதாசனின் வரிகள் “அடிச்சா வெயில் இல்லைன்னா மழை” என்பது தான் சட்டென்று நினைவிற்கு வந்தது.
முன் சொன்ன உதாரணத்தில் கம்பன் சொற்களுக்காக ஏங்கித் தவித்த காட்சி. ஆனால் இங்கு வந்திருக்கும் இரண்டு பாடல்களிலோ, சரஸ்வதி அவர் நாவில் அமர்ந்திருந்து, அதனை இயக்கியதைப் போன்ற உணர்வை நம்முள் ஏற்படச் செய்கிறது!
முதல் பாடலில் அதாவது “அடித்தாள் முலைமேல்……” என்பதில் சில இடங்களில் சந்தேகம் வரலாம். “அடித்தாள் முலைமேல்” எனுங்கால் மார்பில் அடித்துக் கொண்டாள் என்று அர்த்தம் செய்து கொள்ளலாம். “வயிறு அலைத்தாள்” இதுவும் வயிற்றில் அடித்துக் கொண்டாள் என்று பொருள் கொள்க. “அனல் வீழ்ந்த….” — நெருப்பில் வீழ்ந்த கொடி ஒன்றைப் போல் சுருண்டாள். “உயிர் கரப்பச் சோர்ந்தாள்” என்றால் மின்வெட்டுப்போல ஒரு நிமிடம் வந்த உயிர் மறுபடி எங்கோ போய் ஒளிந்து கொண்ட நிலமை உடையதைப் போல் சோர்ந்தாள். (கரப்ப- ஒளிந்து கொள்ள). அதற்கடுத்து வரும் சொற்களைப் பற்றிய விவரணை ஏதும் தேவை இருக்காது.
பிரம்மாத்திரத்தின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மயக்கமான நிலையில் இருக்கும் இராமன் இலக்குவன் ஆகிய இருவருமே, மாண்டே விட்டார்களென்ற ஒரு புனைவை சீதைக்கு உண்டாக்குகிறான் இராவணன். சீதையும் அதை மெய்யென நம்பியவளாய்த் துன்புற்று ஏங்குகிறாள். அவளது இந்நிலையை, அவளுள்ளும், (ஏன் நம்முள்ளும்!) எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைத் தனியாக சொற்களின் மூலம் “சொல்லிச் செல்லும்” ஆற்றல் மட்டுமேயன்றி, ஒன்றுக்கொன்று தொடர்புடைய இயைபான சொற்களையும், ஒரு சொல்மாலை போல நமக்களிப்பதிலும் வல்லவனே கம்பன், என்பதை நிரூபிப்பதே இப்பாடலின் வல்லமை.
ஏற்ற இரக்கங்களோடு தக்க இடைவெளிகளுடன் இப்பாடலை உரக்கப் படிக்கக் கேட்டால் (யார் படிப்பது – சிவாஜி கணேசனைத் தவிர யாருமே இல்லையோ?) அந்த “வாசகத்துக்கு” உருகியதைப் போல் இங்கேயும் உருகிவிடக்கூடும்.
இப்பாடலின் பாடுபொருள் சோகம். இதனையும் எவ்வாறு அதன் உச்சகட்டத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறார் கம்பன். கம்பனின் இந்த வார்த்தைகளில் சலிப்பிருக்கிறது, கசப்பிருக்கிறது, கையறு நிலை தென்படுகிறது, துயர நினைவுகள் நிரம்பி வழிகின்றன, துக்கம் கரை புரண்டு வெளிப்படுகிறது, நினைந்து நினைந்து நையக்கூடிய நிலையில் சீதை (கம்பன்)
பேரிழவு (என்று சீதை கருதியது) ஒன்று நேர்ந்திருக்கிறது. இவ்வேளையில் மனம் எப்படி இருக்கும். அறிவுதான் செயலாற்றுமா? ஐம்பொறியும், ஐம்புலனும் முடங்கிப் போய் இருக்காதா? இது தன் வாழ்வில் ஒரு கொடிய தருணமல்லவா? அண்ணலும் நோக்கினான் அதே நோக்கிலல்லவா அவளும் பார்த்தது. இத்தகைய உற்ற துணை இல்லை என்றாகிவிட்டது, என்ற இராவணனின் கூற்றை நம்பிய சீதையின் அளவற்ற சோகத்தை, மொழியின், சொற்களின் பரந்த கடலெனக் கொள்ளக்கூடிய ஒன்றில் பயணித்து, அதில் இருக்கும் வரம்பு நிலையை எட்டி, நமக்கு அருட்கொடையை கொடுத்திருக்கிறான் கம்பன். சோக கீதம் தான்! ஆனால் எத்தகைய சோக கீதம் இது!
நன்றி: முனைவர் சுசீலா