செம்மண் பூமி – மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் – தமிழில் – தி.இரா.மீனா

செம்மண் பூமி

23 Best Tourist Places In Kanyakumari 2021 You Shouldn't Miss!

மதிய நேரச் சூரியனின் உக்கிரத்தில் இன்னமும் கருங்கல்

தளங்கள் தகித்துக் கொண்டிருந்தன.சுற்றுலா வந்திருந்த குழு தம் காலணிகளை மிக அவசரமாக உதறியெறிந்து விட்டு பெரிய கதவிற்கு அப்பாலான தங்குமிடம் நோக்கி ஓடியது.

தன் காலணிகளைக் கழற்ற அவன் அதிக நேரம் எடுத்துக் கொண்டான். அதனால்,மறையும் வசந்த காலத்தின்  பசுமையில், ஒற்றையாய் நின்ற மலர் போல மதிய சூரிய ஒளியில் அவள்  காத்திருந்தாள். தன் வெற்றுப் பாதங்களுக்குள் கருங்கல் தளங்களின்  சூடு ஊடுருவதை உணர்ந்து, நின்றிருந்தாள். குளுமையாக இருந்த தன் வெற்று பாதங்களை அந்தக் கொதிக்கும் கருங்கல் தளத்தின் ஓரம் முதலில் தொட்டபோது ஒருவித சிலிர்ப்பை அவளால் உணர முடிந்தது.அந்தச் சிலிர்ப்பே தாங்க முடியாத வலியைத் தர  தன்னை அமைதியாக கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள். தனக்குள்ளாகவே  மெதுவாகப் பேசிக் கொள்ளும் தன்னுடைய புதிய திறமையை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டாள். பஞ்சாக்னி தவம் செய்தவள் பார்வதி தேவி. மதிய சூரியன் கக்குகிற  தகிப்பை ஒரு பதிவிரதை,  கற்பான பெண்  பொறுத்துக் கொள்ள மாட்டாளா?

ஒருவழியாகத் தன் காலணிகளைக் கழற்றிவிட்டு, முகத்தில் வழிந்த வேர்வையைத்  துடைத்துக் கொண்டு வேகமாக அவளை நோக்கி வந்தான்.ஆனால் அவள் முன்னே போகவில்லை.

“வா,வா, பாதங்கள் எரிகின்றன.” தம் குழுவிலிருந்து தனியாகி விடக்கூடாது என்பதற்காக அவன்  வேகமாகக் கோயிலுக்குள் நடந்தான்,அவள் இன்னமும் பின் தங்கி இருந்தாள்.வழிகாட்டியின் எதிரொலிக்கும் குரலை அவளால் கேட்க முடிந்தது.அவர் தோற்றத்திற்குப் பொருத்தமான ஒரு குரல்.

“தொலைவில் ,அந்த மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில்  தேவி தியானத்தில் அமர்ந்திருந்தாள். இங்கு, சுசீந்திரத்தில் இருந்து கடவுள் தேவியைப் பார்த்துப் பரவசமடைந்தார்.”

அவருடைய நெற்றியிலிருந்த சந்தனம் வியர்வையில்  முழுமையாக அழிந்திருந்தது. கருங்கல் தளத்தில் ஓர் அரக்கனின் சிலையாகத் தூங்கிக் கொண்டிருந்த அவன்  இப்போது உயிரோடு எழுந்து வந்து சுற்றுலாப் பயணிகளோடு சேர்ந்து கொண்டதாக அவள் கற்பனை செய்து கொண்டாள்.அவனுடைய கண்களின்  சிவப்பு நரம்புகள் தெளிவாகத் தெரிய, பார்வை ஒவ்வொரு முகத்திலும் தாவ, நன்றாக தான் மனனம் செய்த வாக்கியங்களை  வாய் ஒப்பித்தது.

அவள் பின்தங்கிய போது துணைவன் அவளைக் குழுவோடு சேர்ந்து கொள்ள வற்புறுத்தினான். பெரிய பலகையில் இருந்த எண்களைப்  படித்து விட்டு குழந்தைக்குச் சொல்வது போல அவளுக்காக அதைத் திருப்பிச் சொன்னான்.

“கன்னிப் பெண்ணான தேவி திருமணம் செய்து கொண்டால் தன் தெய்வீக சக்தியை இழந்து விடுவாள் என்று கடவுளர்கள் நினைத்தனர். அந்தத் திருமணத்தை தடுத்து விடவேண்டுமென  முடிவு செய்தனர்.”

வெற்றுக் கருங்கல் மாதிரியான வழிகாட்டியின் உடல் வியர்வையில் மினுமினுத்தது. குழந்தைப் பருவத்தில் தனது வீட்டுக்குப் பேயோட்ட வந்த மந்திரவாதியின் ஞாபகம் அவளுக்கு  வந்தது.

எப்படி அவள் எதிர்வினையாற்றுகிறாள் என்பதைத் தன் கனமான  கண்ணாடியினூடே அவன் கவனித்துக்  கொண்டிருப்பதை உணர்ந்த  அவள், பலகையிலுள்ள பெயர்களை அடையாளம் காண முயல்வது போல நடித்துக் கொண்டிருந்தாள்.

“திருமண நிகழ்வுகள் விடியற்காலையில் நல்ல நேரத்தில் எப்படி நடைபெற வேண்டும் என்பது பற்றி முடிவு செய்தனர். அந்தக்  கணம்தான் மிக நல்ல நேரம் என்பதில் பண்டிதர்கள் கவனமாக இருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில், மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தை அடைய மாப்பிள்ளை சிவன் புறப்பட்டார். அவர் வரும் வழியில் தேவேந்திரன் ஒரு சேவல் வடிவத்தில் வந்து நின்று கூவ ,மங்கலமான நேரம் முடிந்து விட்டதாக நினைத்து சிவன்  ஏமாற்றத்தோடு திரும்பிப் போய்விட்டார்.”

“பிறகு தேவிக்கு என்ன ஆனது?”

அனைவரும் திரும்பி அவளைப் பார்த்தனர். தான்தான் அந்தக் கேள்வியைக் கேட்டோமா? அவள் ஆச்சர்யப்பட்டாள்.

“இங்கே பார்; இதைப் பார்.”

அவன் எப்போதெல்லாம் பொறுமையற்றுப் பேசுகிறானோ அப்போது அவன் உதட்டில் உமிழ்நீர் கொப்பளிக்கும்.

“பிறகு தேவிக்கு என்ன ஆனது?”

வழிகாட்டியின் சிவப்பு நரம்பு கண்கள் எல்லாரையும்  பார்த்து விட்டு அவள் மேல் நிலைத்தன. ரத்தச் சிவப்புக் கண்கள் சிரித்தன.

“தேவி தன் கழுத்திலிருந்த கல்யாண மாலையை பிய்த்து துண்டுகளாக்கி  எறிந்தாள்.பந்தலைச் சாய்த்து கீழே தள்ளினாள். திருமணத்திற்காகச்  சமைக்கப்பட்ட விருந்துச் சாப்பாடு அவற்றில் கலந்து மூழ்கி மண்ணின் நிறத்தை மாற்றிவிட்டது. அப்போதிலிருந்து கன்னியாகுமரியின் மண் செந்நிறமாகி விட்டது.

“வா ,வா இங்கே.”

கையிலுள்ள கேமராவை திறந்து கொண்டு அவளைத் திரும்பவும் கூப்பிட்டான்.அவனுடைய பருத்த முகத்தில் வெளிப்பட்ட அசட்டுச் சிரிப்பு ரகசியமான ஓரிடத்திற்கு அவளை அழைப்பது போலிருந்தது.

“ இந்தப் பின்னணியில் நாம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் வா. மிக நன்றாக இருக்கும்.அங்கே, அங்கேயே நில். லேசாக இடதுபுறம் நகரவேண்டும்.சரியாக இருக்கிறதா என்று நான் பார்க்கிறேன்.”

கூட்டம் நடன அரங்கத்திற்குள் போனது.வீட்டிலுள்ள அழகான பெண்கள் தாம் விரும்பும் ஒரு நிகழ்ச்சியை யார் கண்ணிலும் படாமல் பார்க்கிற வகையில் ஜன்னல்களின் அமைக்கப்பட்டிருப்பதை  வழிகாட்டி பெரிய குரலில் விளக்கிக் கொண்டிருந்தார்.

“ஒரு முறை சிரி, தயவுசெய்து சிரி.”

சுற்றுலாப் பயணிகளின் தலைகளை மீறித் தெரிந்த சிவந்த கண்களை  உடைய அரக்கனை அச்சத்தோடும், அதிசயமாகவும் பார்த்தாள்.

“ரெடி. ஒரு முறை. தயவுசெய்து சிரி.”

கேமராவின் க்ளிக் சப்தம் கேட்டு அவள் திரும்பினாள்.

அந்தப் பருத்த உதடுகள் நடுங்குவதையும், உதட்டோரத்தில்  உமிழ்நீர்  கொப்பளிப்பதையும் பார்த்தாள்.தன் கோபத்தை அடக்கிக் கொள்ளும் முயற்சியின் போது அவன் எப்போதும் இப்படித்தான் இருப்பான்.

அவள் அடக்கமுடியாமல் சிரித்தாள்.

“நீ அப்போது சிரிக்கவில்லை.எப்போதும் தவறான சந்தர்ப்பத்தில்தான் சிரிப்பாய்.”

அவள் நகர்ந்தாள். வாயில் கருங்கல் பந்தோடிருந்த கல் யானையோடு தானாகப் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். திரும்பவும் அவள் அடக்க முடியாமல் சிரித்தாள்.

பயணிகள் கூடினர்.சிலர் வழிகாட்டிக்குப் பணம் கொடுத்தனர்.

அவள் எதுவும்   சொல்வதற்கு முன்பே “ இதற்காகப் பணம்! இந்த விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்”  என்றான்.

பஸ்சில் ஏறி வேகமாக ஓர் இருக்கையைப் பிடித்தான்.வேர்வையில் ஊறிக் கொண்டிருக்கும் அந்த பிரவுன் சட்டையின் மீது பட்டு விடாமல் காலியான இருக்கையின் பாதிப் பகுதியில் மிக கவனமாக உட்கார்ந்தாள்.

பஸ் நிரம்பியது.அவர்களுடைய முன்னாள் வழிகாட்டி ஏறிக் கொண்டு விசிலை ஊதினான்.இரும்புக் கம்பியைப் கெட்டியாக பிடித்தபடி அவர்களின் முன்னால் நின்றான்.அவளுடைய துணைவன் அவளைச் சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன் போல “நீ நீக்ரோவைப் பற்றி கேள்வி மட்டுமே பட்டிருக்கிறாய்.இப்போது நீ ஒருவனைப் பார்க்கலாம்.”என்றான்.

ரத்தச் சிவப்பு நரம்பு படர்ந்திருந்த கண்களை அவளால் பார்க்க முடியவில்லை.அவன் தூரத்தில் எதையோ வெறித்துக் கொண்டிருந்தான்.

அவர்களின் முன்னாலிருந்த ஓர் இளைஞன் வாசித்துக் கொண்டிருந்த மவுத் ஆர்கனின் ஒலிக்கேற்றபடி அவள் கால்கள் தாளமிடுவதை அவள் துணைவன் கவனித்துக் கொண்டிருந்தான்.

கடலின் ஆரவாரம் ஓரளவு குறைந்த பிறகு “சோர்வாக இருக்கிறயா?” என்று கேட்டான்.

அவள் தலையாட்டினாள். ஆம் அல்லது இல்லை என்பதாக அதன் அர்த்தமிருக்கலாம்.

“எனக்கு எப்போதும் கடல் மிகவும் பிடிக்கும். விடுமுறையில் உன் அண்ணனுடன் நான் முதன்முதலில் உங்கள் வீட்டுக்கு வந்தபோது நாம் கடற்கரைக்குப் போயிருந்தோம்.உனக்கு ஞாபகமிருக்கிறதா?”

அவள் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“உனக்கு எதுவும் ஞாபகமிருக்காது.நான் உன்னை முதன்முதலில் பார்த்தது கூட.”

அவள் புன்னகைக்க முயற்சித்தாள்.

“நாம் எல்லோரும் ஒன்றாகப் போனோம்.அப்போது நீ குழந்தையாக இருந்தாய். உனக்கு ஞாபகமிருக்காது.”

தொலைவில் கடந்து கொண்டிருந்த பனை மரங்களின்  இலைகளைப் பார்த்தபடி மௌனமாக இருந்தாள்.

“நீ தரையில் புரளுமளவுக்கான பெரிய வெள்ளை நிற ஸ்கர்ட்டும், பச்சை நிற மேல்சட்டையும் அணிந்திருந்தாய். அது உனக்கு ஞாபகமிருக்காது. உன் அக்கா புடவை அணிந்திருந்ததும் உனக்கு ஞாபகமிருக்காது.”

எனக்கு ஞாபகமிருக்கிறது. அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு நீ அலைகளில் நடந்தாய். புகைப்படம் எடுத்துக் கொண்டாய். அவள் தலைமேல் தெறித்த அலைகளின் தண்ணீர்த் துளிகளைத் துடைத்தாய்.

“நீ கடலுக்குள் வரவேயில்லை.உனக்கு பயம்.”

நான் தென்னையின் நிழலில்  உட்கார்ந்திருந்தேன்.

“ஸ்ரீராமன் ஒரு திருடன்” என விரல்களால் மண்ணின் மீது எழுதினேன்.அதைத் திரும்பத் திரும்ப எழுதினேன்.ஒரு பெரிய அலை வந்து அதை அழித்து, உங்கள் எல்லோரையும் விழுங்கி விடுமென நினைத்தேன்.

எந்த அலையும் வந்து அழிக்கவில்லை, நான் எழுதியது தங்கிவிட்டது.

தொலைவிலிருந்த கடலைப் பார்த்த அவன்“ஓ! எவ்வளவு அழகு!” என்றான்.

“யார்?என் அக்காவா?”

“என்ன— இல்லை,கடல்.”

சூரியாஸ்தமனம் பார்க்க சிறுசிறு குழுக்களாக வந்து, இங்குமங்கும் நின்றிருந்தவர்கள் அவர்களைக் கடந்து திரும்பிச் சென்றனர். அவர்கள் ஹோட்டலை அடைந்த போது அவனுக்கு மூச்சு வாங்கியது.

பெட்டிகளைத் தூக்க வந்த பையனிடம் அவன் சொன்ன விவரங்களில் அவள் கவனம் காட்டவில்லை. ஜன்னல் திரைச்சீலைகள் காற்றில் படபடத்து ஒதுங்க ,அவள் கடலைப் பார்த்தாள்.செம்பூமி.

“உன் அக்காவைப் பற்றிய தேவையற்ற கருத்துக்கள்..”அவர்கள் தனியாக இருந்தபோது அவன் கேட்டான்.

“நான் எதுவும் சொல்லவில்லை.’

“நீ எதுவும் சொல்ல மாட்டாய்.அதுதான் எனக்குப்  பிரச்னை.”

அவன் முகம் ரத்தச் சிவப்பானது.வியர்வை வழிந்தது. அவள் பெட்டியைத் திறந்து மருந்து பாட்டிலை எடுத்தாள். மனதை அமைதிப்படுத்தும் இரண்டு மாத்திரைகளை நடுங்கும் அவன் கையில் கொடுத்தாள்.அவன் அதை விழுங்கி விட்டுச் சிறிது தண்ணீர் குடித்தான்.மூச்சுச் திணறல், அவன் படுத்துக் கொண்டான்.

புடவையை மாற்றிக் கொண்டு ,முகத்தில் பவுடர் போட்ட போது அவனுடைய களைத்த விழிகள் தன்னைக் கேள்வி கேட்பதை உணர்ந்தாள்.

“நான் சிறிது நடந்துவிட்டு வருகிறேன்.”

“ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.நான் சிறிது உலாவிவிட்டு வருகிறேன்” கதவருகே போய் நின்று கொண்டு திரும்பிப் பார்க்காமல் திரும்பவும் சொன்னாள்.

கடற்கரையை ஒட்டிய பாதையில் போடப்பட்டிருந்த பெஞ்சில் வழிகாட்டி தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். எதிரில் இன்னொரு பாதையிருந்த போதிலும் அவள்  பெஞ்சை ஒட்டிய பாதையில் போனாள்.

நீக்ரோ திடீரென ஓர் அரக்கனைப் போல எழுந்தான், தலை வானத்தைத் தொடுவதாக இருந்தது. தன் கைகளைக் கூப்பி “நமஸ்காரம்’ என்றான்.

மிக ஏற்றமான குரல்; நாட்டுச் சரக்கின் வாசம்; சிவப்பு ஜூவாலையாகக் கண்கள்.அவனைச் சிறிதும் பொருட்படுத்தாமல், தன்னால் இயன்றவரை கவனமற்றவள் போல தலையை நிமிர்த்தி நடந்தாள்.

எதிரே மணல் மேடுகள் இருந்த பாதையின் முனையில் உட்கார்ந்தாள்.மேலே வானத்தில் செங்கீற்றுகள். கடற்கரையில்  யாருமேயில்லை. எப்போதோ அங்கு போடப்பட்ட அந்தப் பந்தலைப் பற்றிக் கனவு கண்டாள்.

அலங்கரிக்கப்பட்டிருந்தவைகள் கிழிக்கப்பட்டு, நொறுக்கப்பட்ட நகைகள் தூக்கி எறியப்பட்டு, விருந்துணவு காலால் உதைத்துத் தள்ளப்பட்டு, தன்னைச் சுற்றி பூமியில் சிதறிக் கிடந்ததைப்  பார்த்தாள்.

திரும்பிப் பார்க்க அவள் பயப்பட்டாள். ஹோட்டல் அறையில் தன் அறையின் ஜன்னலில் விளக்கு வெளிச்சம் இருக்கிறதா என்று அவள் அறிய வேண்டும். சிமிண்ட் பெஞ்சில் தியானத்தில் இருந்த அந்த குடி போதை அரக்கன் எழுந்து விட்டானா என்பது கூடப் பெரிதில்லை.

காலில் நற நறவென மண் மிதியுண்டது.அரக்கன் அருகே வர பீடி மூன்றாவது கண்ணாக ஒளிர்ந்தது. காலியான கடற்கரை அவன் காலடியில் நடுங்கியது.

அவனுக்குப் பின்னால் ,ஹோட்டல் அறையின் விளக்கு  பிரகாசமாய்த் தெரிந்தது.அவள் தன் முழங்கைகளை செம்மண்ணிற்குள்  அழுத்திக் கொண்டு தன் முகத்தை வானத்தை  நோக்கி உயர்த்தினாள்.கனமான பாதங்களின் ஒலி அருகே அருகே வருவதை உன்னிப்பாகக் கவனித்தாள்.தன் சக்தி முழுவதையும் இழந்தவள் போல, கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தாள்,

————————————

நன்றி : :  KUTTIEDATHI  AND OTHER  STORIES, ORIENT  BLACK  SWAN  PVT LTD

மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில்

ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதை,நாவல்,பயண்

இலக்கியம்,இலக்கியத் திறனாய்வு,குழந்தை இலக்கியம்

உள்ளிட்ட பல துறைகளில் பங்களிப்புச் செய்தவர்.திரைப்படத்

துறையிலும் சாதனை நிகழ்த்தியவர்.

மஞ்சு,காலம்,ரண்டாம் மொழம் ஆகியவை சிறந்த நாவல் வரிசையிலும்,

வானப்பிரஸ்தம்,ஓளவும் தீர்வும், பந்தனம்,குட்டியேடத்தி உள்ளிட்டவை

சிறுகதை வரிசையிலும் சிறப்பானவையாக மதிப்பிடப்படுகின்றன.

வயலார்,வள்ளத்தோள்,எழுத்தச்சன் விருதுகள்,மற்றும் சாகித்ய அகாதெமி,

ஞானபீடம் உள்ளிட்ட பல  விருதுகள்  பெற்றவர்.

——————————–

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One response to “  செம்மண் பூமி – மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் – தமிழில் – தி.இரா.மீனா

  1. கன்னியாகுமரியின் தொன்மத்தின் பின்னணியில் நிறைவேறாத ஆசையை, ஏக்கத்தை அருமையாக சொல்கிறது செம்மண்பூமி. வாசுதேவ நாயரின் கதையின் ஆன்மாவை நன்றாக தமிழ்படுத்த. முயன்றுள்ளார் மீனா. பனையோலை என்பதை பனைஇலை என்று தமிழ் ப்படுத்தியுள்ளார்.இது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனினும் நல்ல முயற்சி.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.