பரிணாமம் -ஜனநேசன்

 

  காலை  நடைப்பயிற்சியின் போது  கைப்பேசி  அதிர்ந்தது.  பார்த்தேன்  ;  சந்திரன் என்ற பெயர் சிமிட்டியது.  நடக்கும்போது  முகக்கவசத்தோடு  பேசமுடியாது. ஐந்தாவது  சுற்று முடிந்து சற்று காலாறும்போது  உட்கார்ந்து பேசலாமே  என்று   தொடர்பைத் துண்டித்தேன் .சிந்தனை துண்டிக்கப்படவில்லை. ‘ சந்திரன் எதுக்காக இந்நேரம் பேசுகிறான்’ எதுவும் புதுகுண்டு  போடப் போகிறானோ… சேச்சே  இப்பவெல்லாம்  அவன் அப்படி ஆளில்லை என்றாலும்  அவனை நினைக்கையில்  அந்த நிகழ்வை  மறக்க முடியவில்லை..

   எனக்குப் பின்னால்  நடந்துவரும்  மனைவி  “கால் வலிக்குதுங்க  கொஞ்சநேரம்  உட்கார்ந்துட்டு வர்றேன் “  என்கவும்  இருவரும் கொஞ்சநேரம் காலாறலாம் என்று வேப்பமரத்தின் கீழே கல்பெஞ்சில்               உட்கார்ந்தோம் .கைப்பேசியை இயக்கினேன் .     “ அது யாருங்க  ; ரொம்பநேரம் செல் அடிச்சிகிட்டே இருந்தது. “

  “சந்திரன்னு என்கூட ஆறாவதிலிருந்து  படிச்சவன் ; எதுக்கு கூப்பிட்டானு இனிதான் கேட்கணும்  “

  “ஐம்பது வருச பழக்கமா  இருக்கிறவரு  நம்வீட்டு விசேஷங்கள் எதுக்கும் வந்தமாதிரி ஞாபகம் இல்லையே.; அப்படியாப்பட்டவரு கிட்ட என்ன  அவ்வளவு  சிநேகம் ? “

 “அவன் மறக்கமுடியாத ஆளு அவனைப்பத்திச் சொல்றேன் கேளு. “

 **********

  காலை இறைவணக்கம்  முடிந்து  வகுப்புக்குள் போகையில்  சந்திரன்   என்னருகில்  வந்து ,” டேய் பக்கத்தில்  வா. ஒரு சுவீட்நியுஸ் . யார்கிட்டயும்  சொல்லிறாதே. . நம்ம பிரம்படி கந்தசாமி இனிமே  வரமாட்டார். அவுரு திருச்சியில் பஸ்ஸில் இறங்குறப்ப   கீழே விழுந்து  செத்துட்டாராம். பிரம்பால நம்மளை  அடிச்ச  அவரது சோத்தாங்கை  பஸ்சக்கரத்தில சிக்கி நைஞ்சு போச்சாம். இன்னிக்கி பேப்பர்ல போட்டிருக்குடா. அவருடம்பை  திருச்சி  பெரியாஸ்பத்திரியில்  வச்சுருக்காங்கலாம்.  அதான்  இன்னைக்கு  அவர் பிரேயருக்கு  வரலை பாத்தியா “

   “ டேய், சும்மா டூப்பு விடாதடா . அப்படின்னா பிரேயரில  சொல்லி மௌனமா ரெண்டு நிமிசம் நிற்கவச்சு , இன்னைக்கு லீவு விட்டுருப்பாங்கள்ள….”

  “டேய், இது நேத்து சாயந்திரம் திருச்சியில நடந்ததுன்னு பேப்பரில் வந்திருக்குடா. ப்ராமிசாடா . நான் காலையில கன்னித்தீவு பார்க்கும்போது படிச்சேன்டா. அவருபேரு கந்தசாமின்னு போட்டுருந்ததுடா.. நான் சொல்றது பொய்யின்னா .. இன்னைக்கு பிரம்பு பிரேயருக்கு  வந்திருக்கணுமில்ல…? அவுங்க வீட்டில இருந்து லேட்டாகூட  எச்செம்முக்கு  சொல்லலாமில்ல. எப்படியும் இன்னைக்கு தெரியாட்டி  திங்கக்கிழமையாவது தெரிஞ்சுரும் பாரு. . அன்னைக்கு நமக்கு லீவுதான் ;ஜாலிதான்’ இனி பிரம்படி  நமக்கு இல்லை..” என்று  குதித்தபடி  தேவதாஸ் சொன்னதை பார்த்து மற்ற பசங்கல்லாம் என்னான்னு கேட்க; ரகசியம்டா யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு  என்கிட்டே சொன்னதையே  அவர்களிடமும்  சொன்னான். கீழே சிந்துன மண்ணெண்ணெய் மாதிரி இந்த ரகசியம் வகுப்பு முழுவதும்  பரவியிருச்சு .

   கந்தசாமி வாத்தியார்  எங்க கிளாஸ் டீச்சர். எங்களுக்கு கணக்கு, சயின்ஸ் ,இங்கிலிஸ் எடுப்பாரு.அவரு சொன்னமாதிரி  வீட்டுப்பாடம் எழுதிட்டு வரலைன்னாவோ , படிக்கலைன்னாவோ  , கையை நீட்டச் சொல்லுவார். சோத்தாங்கையை விறைப்பா  நீட்டணும் ; பிரம்பால்  அடிக்கும் போது , உள்ளங்கை விரல்களைச் சுருக்குனாவோ, மடிச்சாவோ  பிரம்படி உள்ளங்கையிலும் விழும் ;     புறங்கையிலும் விழும்; விரல்மணிக்கட்டில்  விழும் அடி சாக்கடிச்சு  கரண்டு பாய்ந்தது மாதிரி  உடம்பெல்லாம் பதறி நடுக்கும் .அடிக்கப் போறாருன்னு நீட்டின கையை  உள்பக்கமாக  இழுத்துகிட்டா  அடி தொடையிலிருந்து  முழங்கால் முட்டிவரை நெருப்பால் சிகப்புக்கோடு  போட்டதுபோல் பதிந்து எரியும்.

    சோத்தாங்கைக்குப் பதிலா  பீச்சாங்கையை  நீட்டினால் இந்தக் கையிலா சாப்பிடுவே  என்று சொல்லி  ரெண்டுகையிலும்  பிரம்பு தீப்பற்றும்.  இப்படிக் கொடுமைக்கார  வாத்தியார்  செத்தாருன்னா  சந்தோசம்ன்னு வகுப்பில ஒவ்வொரு மனசும் நினைச்சது.!

    அன்னைக்கு  கந்தசாமிசார் வகுப்புகளில்   வெறுவேறு  வாத்தியாருக வந்து கதைகளைச்  சொல்லிட்டுப் போனாக. எந்த வாத்தியாரும் கந்தசாமி சார்  பற்றி ஏதும் சொல்லவுமில்லை. எங்களுக்கு ஆர்வமிருந்தாலும்  அவரைப் பற்றி கேட்க பயமாக இருந்தது. அவரு வரலைங்கிறது  ஜாலியா இருந்தது. நம்மளா  கேட்டு ஏன்  வம்புல  மாட்டிக்கணும் என்று எல்லாரும் ஒரே  நினைப்பா  இருந்தாக ; எல்லார்   மனசுக்குள்ளும் வெளியே சொல்லமுடியாத  பரவசம் !.அன்னைக்கு வகுப்பு ஒவ்வொன்னும் றெக்கை முளைச்சுப் பறந்தது.

   வீட்டுப்பாடம் இல்லாத  சனி , ஞாயிறு கொண்டாட்டமா   பறந்தது  திங்கள்கிழமை  பள்ளிக்குள்   நுழையும்போது  பள்ளி தகவல் பலகையில் திருக்குறள் தவிர்த்து வேறு  எந்தத் தகவலும் இல்லை.  அன்று வானம் தூறிக்கொண்டே இருந்ததால்  மைதானத்தில்  யாரும் விளையாடவில்லை. பிரேயரும் இல்லை.  எங்களுக்கு   சந்திரன்  மீது சந்தேகம் வரவே அவனைக் கேட்டோம்…

   நீங்க நம்பமாட்டீகன்னு  தெரியும் ; நான் அந்த செய்திவந்த பேப்பரைக் கிழிச்சுக் கொண்டாந்திருக்கேன்  என்று காண்பித்தான்’ அதில்- ‘ கந்தசாமி என்பவர்  திருச்சி பஸ்நிலையத்தில்  கரூர் பஸ்சிலிருந்து  இறங்கும்போது கால் தவறி விழுந்தார்; பின்சக்கரம் ஏறியதில் வலதுகை நெஞ்சு எல்லாம் நைந்து போனது. சம்பவ   இடத்திலே இறந்த அவரது உடலை திருச்சி பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.’ இதைப் வாசித்ததும் பலருக்கு சந்தோசமாகவும், சிலருக்கு அழுகை வருவது போலவும்  இருந்தது.

    மணி அடித்ததும்  எல்லாரது  மனசும் திக் திக்குன்னு   துடிப்பது போல் இருந்தது. அடுத்த  நிமிசத்தில்  கந்தசாமி சார்  வகுப்புக்குள் நுழைந்தார். எல்லோரும்  வணக்கம் சார்  சொல்லாமல்  எழுந்து மௌனமாக நின்றார்கள் .

   “ என்னாங்கடா  எதையோ கண்டு பயந்தமாதிரி நிற்கிறீங்க , என்ன விஷயம் “ கந்தசாமி கேட்டார்; எல்லாரும்  மூச்சை அடக்கி நின்றனர். சந்திரன்  கண்களைப் பொத்தி  குமுறி அழுதான் .                           ” ஏன் அவன் அழுகிறான் “ எல்லார் முகத்தையும்  ஊடுருவிப் பார்த்தார். யாரும்  பதில் சொல்லவில்லை.                                        

 “ சந்திரா   இங்க வாடா. ஏன் அழுகிறே. என்ன நடந்தது ? தப்பு ஏதும் பண்ணினியா?. இங்கே வா. சும்மா சொல்லு ; நான்அடிக்கல. “

அவன் “ சார் , என்னை மன்னிச்சுருங்க சார்; இனிமே அப்படி சொல்லமாட்டேன் சார்; என்னை அடிக்காதீங்க சார் “   பெருங்குரலெடுத்து  அழுதபடியே  வந்தான்.

அவரருகில் நெருங்குகையில் முகத்தை மூடிய கைகளை  எடுத்து வயிற்றைக்  குன்னி கவட்டுக்குள் கைகளை வைத்துக் கொண்டு நெளிந்தான் . அவனது செய்கை பிற மாணவர்களுக்கு  சிரிப்பை மூட்டினாலும்  யாரும் சிரிக்கல ; உதட்டை  இறுக்கி மூச்சுவிடாமல் இருந்தனர்.

 கந்தசாமி; “ டேய் மானிட்டர், இவனை  ஒன்னுக்கு இருக்கவிட்டு கூட்டிட்டு வா“ ராஜமாணிக்கமும், சந்திரனும் வெளியே போனார்கள்.

 “ என்னடா நடந்தது. யாராவது  சொல்லுங்க. “ 

எல்லாரும்  மௌனம் காத்தார்கள்.  அந்தக் கூட்டுமௌன அழுத்தம் தாளாமல் அவர் வகுப்புவாசலில் நின்று கவனித்தார்; வேப்பமரத்தில் ஒரு காக்கை பச்சோந்தியை  விரட்டியது; அது இலைகளுக்குள் சென்று பச்சை நிறத்தில் மாறிக்கொண்டது. காகம் பச்சோந்தியைக் கண்டுபிடிக்க முடியாமல் பறந்தது .குருவிகளும், கிளிகளும், அணில்களும் ஏதேதோ  பேசியதை   முகம் விரிய நோக்கினார்.. மாணவர்கள்   தங்களுக்குள்  பார்த்துக் கொண்டனர். வெளியே போனவர்கள் வந்ததும்  கந்தசாமி சேரில்  அமர்ந்தார்.

  “ இங்க வாடா. எனக்கு எல்லாம்  தெரியும். நீ என்ன செய்தேன்னு  ஒளிக்காமச்  சொல்லு. “

  “ சார் என்னை மன்னிச்சிருங்க சார்.அடிக்காதீங்க சார்; இந்த பேப்பர்ல  இருக்கிறதைப் பார்த்து நீங்க செத்துப் போயிட்டீங்கன்னு சொல்லிட்டேன் சார் “ என்றபடி அந்தத் துண்டுத்தாளைத் தந்தான். அந்தத்தாளில் கந்தசாமிக்கு முன் ’ பிரம்படி’என்றும்,வலதுகை நைந்தது என்பதற்கு முன் ‘பிரம்பால் அடிச்ச ‘ என்றும் பேனாவில்  சந்திரன் எழுதியிருந்தான் .

  அவர் அந்தத்தாளை இருமுறை வாசித்தார்.அவனை ஊடுருவினார்.  அவன்   உடல்  நடுங்கித் தேம்பினான்.அவரது முகம் சிவந்து பின் வெளிறியது.

“ அந்தப்  பிரம்பை எடுத்து வாடா “                                       

அவன் தயங்கித் தயங்கிப் போய் மூலையில் சாத்தியிருந்த பிரம்பை  எடுத்து கை நடுங்கத் தந்தான்.

  அவர் எழுந்து நின்று ;  “பக்கத்தில் வாடா “ அவன் தயங்கினான். அவர் நகர்ந்து அவனை  அணைத்து  இருகைகளால்  அந்த பிரம்பை  ஒடித்து எறிந்தார் .

“ டேய், நீ சந்திரன்   இல்ல. சாமிநாதன்டா . அந்த கந்தசாமி  செத்துட்டாண்டா.! இது வேற கந்தசாமி;   இனி யாரையும்  அடிக்கமாட்டேன் “ என்று சன்னதம் வந்தவர் போல் பேசினார்.  ஐந்து நிமிடம் வகுப்பு உறைந்திருந்தது.

   “ இனி யாரையும் அடிக்கமாட்டேன் ; எழுதலை , படிக்கலைன்னா பத்து தடவை , முப்பது தடவைன்னு  இம்போசிசன்தான். அதுக்கும்  ஒழுங்குக்கு  வராதவனுக அம்மா அப்பாவை அழைச்சிட்டு வந்து எட்மாஸ்ட்டரைப் பார்க்கணும். அதுக்கும் ஒழுங்குக்கு வராதவனுக்கு டிசியை கிழிச்சுக் குடுத்து வெளியே அனுப்பீருவோம். அப்புறம் , இந்த ஜென்மத்தில  பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்க முடியாது. டேய் ஒழுங்கா படிக்கப் பாருங்க. நான் இனி யாரையும்  அடிக்க மாட்டேன். சரி, சயின்ஸ்புத்தகத்தை எடுங்க. இன்னிக்கு ‘ உயிர்களின்  தோற்றமும்  வளர்ச்சியும் ’  பார்ப்போம் “

   அனல்காற்றும்  , தென்றலும் மாறி மாறி அடித்ததில் உளைந்த  மரங்கள்  போல் இருந்த  மாணவர்கள் புத்தகத்தை எடுக்கும்  சத்தம் சருகுகள் உதிர்ந்தபின் ஏற்படும் தளிர்ப்பின் சிலிர்ப்பு போல் கேட்டது.

   அன்னைக்கிருந்து  கந்தசாமி சார் யாரையும் அடிப்பதில்லை, பார்வையாலே  மிரட்டுவார். இம்போசிசன் குடுப்பார். அவரது அணுகுமுறையில்  எல்லா பசங்களும் ஒழுங்குக்கு  வந்தாங்க ; .ஒருத்தர்கூட பெயிலாவதில்லை.! கந்தசாமி சார் உதவித் தலைமையாசிரியர் என்கிறதால  எங்க ‘ஆறு-எ வகுப்பு’ நடைமுறை ஸ்கூல் முழுக்க  நடைமுறைக்கு வந்தது. பசுபதீஸ்வரா முனிசிபல் ஸ்கூல் குப்பைதொட்டி ஸ்கூல்ன்னது மாறி திருச்சி மாவட்டதில பெஸ்ட் ஸ்கூலுன்னு பேரு வாங்க ஆரம்பிச்சது. “

              **************

  “ நல்ல பிரண்டுதான் போங்க ! .சரி , ஐம்பது வருசமா உங்களோடு சினேகமா இருக்காருன்னா…  அவுரும் உங்களை மாதிரி  ஊருக்கு மணக்குமாம்  தாழம்பூங்கிற ரகம் தான் போல.!  “

   “ இரு. அவன் எதுக்கு கூப்பிட்டானு கேட்போம் . ஹலோ , சந்திரா  என்னப்பா காலங்காத்தாலே கூப்பிட்டீயே . என்ன விவரம் “

எதிர்முனையில் தழு தழுத்த குரலில்  “ டேய், நம்ம கந்தசாமிசார்   கொரோனாவில இறந்துட்டாரு; .தாங்க முடியலைடா. அருமையான மனுசருடா . எங்க க்ளினிக்கிலதான்  வச்சு ராஜவைத்தியம் பார்த்தோம் ;காப்பாத்த முடியலடா  எண்பத்தாறு வயசாச்சு ;ட்ரீட்மென்ட்க்கு அவரு உடம்பு ஒத்துழைக்கலைடா  நான் என்ன செய்வேன்  “

நானும் விசும்பினேன் ; .மனைவி ஆறுதலாகத் தோளைத் தொட்டார்.

 

One response to “பரிணாமம் -ஜனநேசன்

  1. குவிகம் ஆசிரியருக்கு நன்றி.. கதை நன்றாக வந்திருக்கிறது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.