சென்னைக்கு அருகில் பனையூரில் ஒரு சிறிய இட்லி கடையில் மக்கள் வந்த வண்ணமாக இருந்தனர். முனுசாமியும், குப்பமாளும் கஸ்டமர்களுக்குச் சுடச் சுட மெத்தென்ற இட்லியை காரசாரமான தேங்காய் சட்னி, மணமணக்கும் வெங்காய சாம்பாருடன் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
டீயும் பன்னும் சாப்பிட வந்தவர்கள் கூட ஆவி பறக்கும் இட்லியைப் பார்த்து மனசு மாறி இட்லியை ருசிக்க ஆரம்பித்தனர். அதோடு ஸ்ட்ராங் காப்பியும், ஏலக்காய் டீயும் அவர்களை ஸ்வர்க்கத்திற்கே அழைத்துச் சென்றன.
சுடச் சுட இட்லியுடன் அன்றைய செய்தித்தாள், முனுசாமி குப்பமாள் சொல்லும் விவரங்கள் இது போதாதா காலை மலர! அதோடு அவர்கள் உபசரிக்கும் பாங்கே தனி அழகு.
‘வாப்பா சந்துரு, நேற்று தலைவலி என்று சொன்னாயே, இப்ப எப்படி இருக்கு. சுடச் சுட இட்லியும், சூடான சுக்குக் காபியும் குடி. வயிறு ரொம்பினால் எல்லாம் சரியாகப் போகும். ஜப்பானில் இந்த சுக்குக் காப்பி மிகவும் பிரசித்தம்’ என்று அம்மாவைப் போல வயிற்றைக் கவனிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
எல்லோரையும் உறவுகளாகச் சொல்லி அவர்கள் வயறும் மனமும் குளிர வைப்பதில் அவர்களுக்கு ஈடு இல்லை. கல்யாணமாகாத கல்யாணராமனுக்கு அந்தக் கடைதான் சோறு போடும் சொர்க்கம். காலை ஆபீசுக்கு போவதற்கு முன் ஏழிலிருந்து எட்டு மணி வரை அங்கேதான் வாசம். டிஃபன், நியூஸ் பேப்பர், அவர்களுடன் உரையாடல் எல்லாம் முடித்து பின் அவசரமாக ரூமிற்கு வருவான். அதனால் அங்கு வந்து போகும் எல்லோரும் அவனுக்குப் பரிச்சயம்.
எப்போதும் வரும் ஒரு பத்து வயது பையன் அன்றும் கையில் தூக்கு வாளியுடன் அந்தக் கடைக்குத் தயங்கித் தயங்கி வந்து ‘அண்ணா, அம்மா பத்து இட்லி வாங்கி வரச் சொன்னாங்க, காசு நாளைக்குத் தருவாங்களாம்’ என்றான்.
முனுசாமி உடனே ‘தம்பி, ஏற்கனவே கணக்கில் நிறைய பாக்கி இருக்கு. அம்மாகிட்டே சொல்லு. சரி சரி இப்போ வாங்கிட்டுப் போ. தூக்கு வாளியைத் தா, சாம்பார் ஊத்தித் தரேன். பத்திரமாக எடுத்துச் செல்’ என்று சின்னப் பையனிடம் எப்படி பேச வேண்டுமோ அப்படி இதமாகச் சொல்லி இட்லி பார்சலையும், சாம்பார் நிறைந்த தூக்கு வாளியையும் அவனிடம் தந்தார்.
அவனும் ‘சரி அம்மாகிட்ட சொல்றேன். போய்ட்டு வரேன் அண்ணே’ என்றபடி இன்று நிரம்பப் போகும் வயிறையும், இட்லியைப் பார்த்தவுடன் மலரப் போகும் தன் சின்னத் தங்கையின் சந்தோஷத்தையும் அசைப் போட்டுக்கொண்டே வாளியை ஆட்டிக்கொண்டே உற்சாக நடை போட்டான்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கல்யாணராமன் அந்தக் கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவதால் உரிமையுடன் ‘நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் கொடுக்கிறீங்க?’ என்று கேட்டான்
அதற்கு முனுசாமி சொன்ன பதில் அவனுக்கு வாழ்க்கைத் தத்துவத்தையே சொல்லித் தந்தது அடேங்கப்பா இதில் இவ்வளவு சூழ்ச்சமமா!
அவர் சொன்னார் ‘அட சாப்பாடுதானே சார். நான் முதல் போட்டுதான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரலை. அதெல்லாம் குடுத்துடுவாங்க. என்ன கொஞ்சம் லேட் ஆகும். எல்லோருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? குழந்தை பசியால் கேட்டிருக்கும். அதான் அந்தப் பையனை அனுப்பி இருக்காங்க. நான் கொடுத்து அனுப்புவேன் அப்படிங்கற அவங்க நம்பிக்கையை நான் பொய்யாக்க விரும்பலை.
நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு வந்துடும். ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல அதான் முக்கியம். நான் உணவு தரவில்லை என்றால் அந்தப் பையன் தன் தாய்க்காக திருடப் போகும் அல்லது அந்தத் தாய் தன் குழந்தையின் பசிக்காக தவறான பாதைக்குச் செல்வாள். ஆனால் நான் நஷ்டப்பட்டாலும் என்னால் சமூகத்தில் நடக்க இருந்த இந்த இரண்டு தவறுகளைத் தடுக்க முடிந்திருக்கிறது.
மேலும் எனக்கும் இந்த அனுபவம் உண்டு. கும்பகோணத்தில் என்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. புட்டு விற்கும் பாட்டியிடம் இதேப் போல கடன் சொல்லி அவ்வப்போது என பசியை ஆற்றிக் கொள்வேன்.
அப்போது அந்தப் பாட்டியிடம் ‘ஏன் பாட்டி நான் கடனைத் திருப்பித் தராமல் ஓடி விட்டால் என்ன செய்வாய்’ என்று கேட்டேன்.
அதற்கு அந்தப் பாட்டியும் ‘அட போப்பா, நீ பணம் தந்தால் அது எனக்கு இலாபக் கணக்கு. பணம் தராமல் ஓடிப் போய் விட்டால் அது என் புண்யக் கணக்கில் வரவு வைக்கப் படும்’ என்றாள்.
ஆம் இது ஒரு செயின். அவள் செய்ததை இப்போது நான் செய்கிறேன். இதை அறுந்து விடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.”
வாழ்வது ஒரு முறை.
வாழ்த்தட்டும் தலைமுறை.
செய்த தர்மம் தலை காக்கும்.