மலைசூழ்ந்த சிற்றூரின் பாதை ஒன்றில்
மழைக்கால மாலையிலே மெல்லென நடந்தேன்!
குளிர்காற்றுச் சில்லென்றுத் தழுவிச் செல்ல
கொடிகளிலே கொத்துமலர்க் கூட்டம் ஆட
வளமான நெல்வயலில் அலவன் ஓட
வாழைமரத் தோப்பினிலே இலைகள் அசைய
தொலைதூரத் தென்னையெலாம் தலையை ஆட்டும்
தூக்கணாங் குருவிகளோ தூளியில் ஆடும்!
துளிர்க்கின்ற ஆலிலைகள் பசுமை மின்னும்
தூரகன்ற மரக்கிளையில் விழுதுகள் பின்னும்!
ஒளிர்கின்ற மின்னலினை இடியும் தொடரும்
உருக்கொண்டு கருக்கொண்ட மேகம் படரும்!
துளித்துளியாய் மழைத்துளிகள் தூறல் போடும்
தூறல்மழை காற்றினிலே சாரல் ஆகும்!
விழுகின்ற துளிகளினால் மண்ணுடல் சிலிர்க்கும்
எழுகின்ற மண்வாசம் என்னுடல் சிலிர்க்கும்!
நெடுநெடுவென வந்தமழை நொடியில் முடியும்
நீர்மேகம் கலைந்ததுமே நிலவும் தோன்றும்!
தொடுவானில் காட்சியெலாம் துடியாய் மாறும்
தூக்கத்தில் கனவோயென மயக்கம் சேரும்!
படகெனவே முகிலிடையே பிறைமதி செல்லும்
பால்நிலவு ஒளியினிலே பலகதை சொல்லும்!
இடமுண்டோ எமக்குமென ஏங்கித் தயங்கும்
ஏழைகளாய் விண்மீன்கள் எட்டிப் பார்க்கும்!
கருமேக ஆடையிலே முகத்தை மூடி
காதலியின் விளையாட்டை நிலவும் ஆடும்!
இருவிழியைக் காந்தமென ஈர்க்கும் நிலவின்
எழிலினிலே நிலைமறந்து என்மனம் கூடும்!
கார்கால மழையும்ஓர் அழகின் வடிவம்
கண்கவரும் விண்மதியும் அழகின் உருவம்!
தேர்ந்திடுக ஒன்றையெனில் உடனே சொல்வேன்
தேடிவரும் மழைக்கால நிலவே அழகு!
மரபின் சுகமே தனி. இயற்கை எழில் பாடும் எண்சீர் விருத்தம்.
இளவல் ஹரிஹரன்
LikeLike