சில நாட்கள் முன்பு முகநூலில் பிரபல பாடகர் எம்.டி. ராமநாதனின் நினைவஞ்சலிக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. தலைப்பு இசையில் ஒரு கற்பு நிலை. எந்தச் சூழலிலும் தாம் கொண்டுள்ள பாணியைக் கைவிடமாட்டார் என்கிற அர்த்தத்தில் ஆனந்தி (கல்கியின் மகள்) எழுதியிருக்கிறார். ராமநாதனுடைய சவுக்கு கால பாணி (அதாவது கீழ் ஸ்தாயில் பாடுவது) வெகு பிரசித்தம்.
விஷயத்துக்கு வருகிறேன், ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் “”நான் பிற பாடகர்களின் கச்சேரிகளுக்குச் செல்வதில்லை, ஏனென்றால், மோசமாக பாடுவதைக் கேட்டால் “இதற்காகவா வந்தோம்’ என்ற நினைப்பு ஏற்படும். நன்றாகப் பாடுகிற வித்வானின் கச்சேரியைக் கேட்டால் “நம்மால் இதுபோல் பாட முடியாதே’ என்ற ஏக்கம் தோன்றும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதில் சரியா? தவறா? என்று தெரியாது. ஆனால் ஒரு பிரபல விமர்சகரிடம் கேட்டுப் பார்த்தேன், “”சக பாடகர்களின் கச்சேரிக்கு வருகிற வித்வான்கள் கம்மி, ஏனென்றால் அவர்களுக்கும் வேற வேலை இருக்கிறதே” என்றார்.
என் உறவினர் ஒருவரிடம் கேட்டபோது, “”அதுபோல் ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. சுதா ரகுநாதனின் கச்சேரிக்கு வந்த பாடகிகளைப் பார்த்திருக்கிறேன். ஏன், சஞ்சய் கச்சேரிக்கு அபிஷேக் ரகுராம் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.
அபிஷேக் ரகுராம் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர். தன்னுடைய பாடுந்தரத்தை மேம்படுத்துவதற்காக, பல கச்சேரிகளுக்குப் போகலாம். ஆனால் சஞ்சயின் சமகாலத்தவர் விஜய் சிவா, அவர் ஒரு முறை சஞ்சயின் கச்சேரியை பின் வரிசையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.
ஆக பிற பாடகர்களின் கச்சேரிகளை மதிப்பவர்கள் இருக்கத் தானிருக்கிறார்கள். சரி எழுத்திலகில் எப்படி? எழுத்தாளர்கள் மற்றவர்கள் படைப்புகளைப் படிக்கிறார்களா? இரண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களைக் கவனிக்கலாம்.
ஒருவர் ஜெயகாந்தன். “”தான் எழுத வந்த காலத்தில் தமிழில் படிப்பதற்கு எதுவுமே இல்லை!” என்று பத்திரிகை பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் “”ஆனாலும் தமிழில் படிப்பதற்கு கதைகள் வேண்டுமல்லவா? அதனால்தான் நான் எழுதத் துவங்கினேன்!” என்று அசாத்தியத் துணிச்சலுடன் தெரிவித்தார்.
உண்மை, ஜெகா.வின் ஆரம்ப காலச் சிறுகதைகள் ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்ததென்றால், நவீனங்கள் முற்றிலும் வித்தியாசமானவை.
ஜெ.கா.வுக்கு மாறுபட்டவர் அசோகமித்திரன். தான் எளிமையான நடையில் எழுதத் தூண்டுகோலாக இருந்தவர்களாக, இரண்டு பேரை குறிப்பிட்டுள்ளார். ஒருவர் உ.வே.சா. (என் சரித்திரம்) மற்றவர் கல்கி (தியாக பூமி). அவர்களுடைய நடையின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தன. அதுமட்டுமின்றி பல்வேறு எழுத்தாளர்களைப் படித்துச் சிறு குறிப்பு எழுதியிருக்கிறார் (நடைவெளிப் பயணம்). இப்போதைய பிரபலங்களான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகளை வாசித்துப் பாராட்டியிருக்கிறார்.
நெல்லை மாவட்ட எழுத்தாளர்கள் பலருமே நிறைய படிப்பவர்கள். “எல்லோருக்கும் அன்புடன்’ என்ற கடிதத் தொகுப்பை (வண்ணதாசன்) படிக்க நேர்ந்தது, பல சமகால எழுத்தாளர்களை, மனமுவந்து பாராட்டியிருக்கிறார். இதே போலத்தான் வண்ணநிலவனும்.
நாஞ்சில் நாடனும் இவர்கள் போலத்தான். ஆனாலும் இவருக்கு அனுபவம் கூட, பணி நிமித்தமாக மும்பையில் தங்கியிருக்கிறார். பல்வேறு மாறுபட்ட மனிதர்களிடம் பழகியதால், புதுமையான பகைப் புலனில் நாவல் எழுதியுள்ளார். ஆனால் இங்கு சொல்ல வந்த விஷயம் வேறு:- “”எல்லோரா, அஜந்தா மற்றும் மகராஷ்டிராவின் உள்பகுதிகளைப் பார்த்திருக்கிறேன். சாண்டில்யனை பொதுவாக விரசமான விறுவிறுப்பாக எழுதுகிறார் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவருடைய நாவல் ஒன்றை (யவன ராணி) படித்ததும், அவருடைய ஆராய்ச்சியின் தீவிரம் தெரிந்தது.”
வலியுறுத்தப்பட வேண்டிய அம்சம் என்னவெனில், விருது வாங்கின நா.ரா. பத்திரிகை எழுத்தாளரான சாண்டில்யனை படித்திருக்கிறார்.
ஆக, பிற எழுத்துக்களைப் படிப்பதால் ரசித்து மகிழ்வதால் ஒரு படைப்பாளியின் நடை மாறிவிடாது என்பதே. இலக்கியத்துக்கு பொருந்துவது, இசைக்கும் பொருந்தும்தானே?
நாஞ்சில் நாடன் போல வேறொரு எழுத்தாளர் சிறிலங்காவைச் சார்ந்த அ. முத்துலிங்கம், அற்புதமான எழுத்தாளர், கட்டுரையாகட்டும், கதையாகட்டும் மேம்போக்காக எழுதினதே இல்லை. தம் நூலின் முன்னுரையில் பாலகுமாரன், சுஜாதா போன்றோரைக் குறிப்பிட்டிருக்கிறார். கல்கியின் “பொன்னியின் செல்வன்’ முத்துலிங்கத்தை ஈர்த்த நவீனம். (தம் கதைகளில் பல உபமான – உபமேயங்களில், கல்கியின் பாத்திரங்களை மேற்கோளிட்டிருக்கிறார்.
இந்த இடத்தில் நவீன விருட்சம் என்ற காலாண்டு இலக்கிய இதழை விடாப்பிடியாகக் கொண்டு வரும் அழகிய சிங்கரைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லத்தான் வேண்டும். நல்ல படிப்பாளி, பலருடைய கதைகளையும், நவீனங்களையும் (அயல் நாட்டு இலக்கியம் உள்பட) படித்து அவ்வப்போது, தமது ஏட்டில் எழுதி வருகிறார். தாம் வாங்கிப் படித்த நூல்களுக்காக தனி இடமே ஒதுக்கியிருக்கிறார் என்று அறிந்தேன். (புரவலர்கள் இல்லாது போனாலும், நல்ல வித்வான்களை ஊக்குவிக்கும் சபா காரியதரிசிதான் ஞாபகம் வந்தது!)
எழுத்தாளர், பத்திரிகையாளர், ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் என்று பல முகங்களைக் கொண்ட மாலன் நிறைய படித்தவர். மணிக்கொடி எழுத்தாளர்களிலிருந்து கலாப்ரியா வரை — ஏன் பிரபல இதழ்களில் வரும் கதைகள் உட்பட — பல்வேறு படைப்புகளைப் படித்து ரசித்தவர். கொஞ்ச மாதம் முன்பு கூட சாலமான் பாப்பையாவின் “புறநானுறு – புதுப்பார்வை’ (தலைப்பில் தவறு இருக்கலாம்) பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதனால் அவர் எழுத்துநடை பாதிப்பு அடைந்ததா? நிச்சயமாக இல்லை, சற்றே ஜானகிராமனின் சாயல் நடையில் அங்கங்கே தட்டுப்படும் – அவ்வளவே.
எஸ்.ஏ.பி.யின் வாசிப்புலகம் மிக விரிவானது. மணிக்கொடி எழுத்தாளர்களில் தொடங்கி – கல்கி, தேவன், எஸ்.வி.வி. போன்றோரில் நின்று, பின்னர் நீல. பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன் என்று பலருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறார். அரசு பதிலில் அவர் குறிப்பிடாத எழுத்தாளர்கள் கம்மி. கணையாழியில் ஜெயந்தனின் நாடகங்களை படித்துத் தம் பத்திரிகையில் சிறப்பிதழில் பிரசுரித்தார். கௌரிஷங்கரின் சிறுகதைத் தொகுப்பு பற்றி (ஆயிரம் யானைகள்) அரசு பதிலில் இரண்டு வரி குறிப்பிட்டுள்ளார். கல்லூரி நாளிலிருந்து இலக்கியத்தைப் படித்து ரசிக்கும் தன்மை அவர் ரத்தத்தில் ஊறியிருக்கிறது.
எஸ்.ஏ.பி. போல இசையுலகில் டாக்டர் எஸ். ராமநாதனைக் குறிப்பிட்டாக வேண்டும். சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவர். “”மியூசிக் அகாடமியில் முன் வரிசையில் அமர்ந்து கச்சேரிகளை ரசிப்பார். பாடகர்களை உற்சாகப்படுத்தவும் செய்வார்” என்று பல கலைஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சில ஆண்டுகள் முன் சங்கீத கலாநிதி விருது பெற்ற சௌம்யா இவரது முதன்மை சீடர்.
தம்மிடம் உள்ள ஞானத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த இவர், தன்னுடைய 71 வயதில் காலமானார். எழுத்தாளரும், வீணை வித்வானுமான கீதா பென்னட் ராமநாதனின் பெண். (பென்னட்டிடம் மேற்கத்திய இசையைக்கூட பயின்றிருக்கிறார்.)
தற்போது எழுதி வருகிற எழுத்தாளர்கள் நிறையவே படிக்கிறார்கள். மனம் திறந்து முகநூலில் பாராட்டுகிறார்கள். ஜெ. பாஸ்கரன், சிந்துஜா, உஷா தீபன் என்று பட்டியல் நீளும்.
கடைசியாக, மனத்திலுள்ள ஒரு குறையை கொட்டித் தீர்க்க வேண்டும் போலத் தோன்றுகிறது. கலை உலகில் போட்டியும், பொறாமையும் சகஜம்தான் என்றாலும் அதையும் மீறி பழைய இசைக் கலைஞர்கள் நினைவு தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அவ்வளவாகக் கேள்விப்பட்டே இராத மணக்கால் ரங்கராஜனைப் பற்றின (100வது ஆண்டு அஞ்சலி) கட்டுரை பிரபல இதழில் வெளியாகியது. ஓர் ஆவணப் படம்கூட இவரைப் பற்றி எடுத்திருப்பதாக ஞாபகம்.
ஆனால், பத்திரிகை உலகம்? இலக்கிய வட்டம்? பிரபலமான பத்திரிகைகளில் எழுதிப் புகழ் பெற்றிருந்தால் – அவரை ஒதுக்கியே விடுகிறார்கள். ஓர் உதாரணம்: லக்ஷ்மி, பிரபலமான எழுத்தாளர். சாகித்ய அகாடமி பரிசும் பெற்றவர். ஒரு பிரபல வார ஏட்டுக்கு அவராலேயே தொடர்கதைகளுக்கு அந்தஸ்து கிடைத்தது. “கலப்பு மணம்’ தீய செயல்களில் ஈடுபட்ட கணவனை ஒரு உத்வேகத்தில் கொலை புரிவது, இளையாளாக வாழ்க்கைப்பட்டவளின் மனச் சபலங்கள் – போன்றவற்றை 1950களிலேயே எழுதியிருக்கிறார். ஆனால் (அவருடைய நூற்றாண்டில் (2020) குறிப்பிட்ட பத்திரிகைகூட கண்டு கொள்ளவேயில்லை! ஒரு வரிகூட லக்ஷ்மியை பற்றி வரவில்லை!
இனிவரும் காலங்களிலாவது இலக்கிய உலகில் இந்த ஓரம் சார்ந்த மனப்பான்மை மாறும் என்று நம்புவோமாக.
நல்ல பதிவு. எழுத்தாளர்கள் குறித்தானது. வாசிப்புக்கானது. இலக்கிய உலகம் எழுத்தாளர் லட்சுமியை கவனங் கொள்ளாதது துரதிர்ஷ்டமே.
இளவல் ஹரிஹரன்
LikeLike