“லேகினி” இன்னும் வருகிறதா?
வழக்கம்போல், புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன் (ஒரு மாற்றுக்காக,எப்போதும் செய்யும் ‘புத்தகத் தேடலை’ச் சிறிது மறந்திருந்தேன்!). வழ வழ வென்ற அட்டையில், பல வண்ணத்தில் கண்ணைக் கவரும் கோட்டோவியங்கள் போட்ட இரண்டு சஞ்சிகைகள் – அந்தக் கால அமுதசுரபி, கலைமகள் அளவில் – கிடைத்தன. ‘பிரித்துக்கூடப் பார்க்கவில்லை’ என்பதை அவற்றின் ‘பளபளப்பும்’, கசங்காத பக்கங்களும் வருத்தமுடன் சொல்லிக்கொண்டிருந்ததைப் போலத் தோன்றியது!
மூளையின் மடிப்புகளில் சட் டென்று ஒரு விளக்கு எரிந்தது – ‘டேக்’ செண்டரில், ஒரு செவ்வாய்க்கிழமை மாலை சாருகேசி அவர்கள் என் கையில் கொடுத்தவை இந்த பத்திரிகைகள் – எழுதுகோல் தேவி “லேகினி” தமிழ்ப் பண்பாட்டுப் பத்திரிகை – புதுப் பாதை, புது இலக்கு என்ற முத்திரையுடன் இருந்தன.
{லேக்கின்-எழுதுவோன்; லேகினி-எழுதுகோல்}
(ஜூன் 2016 – அறிமுக வெள்ளோட்ட மடல் மற்றும் தீபாவளி மடல் 2016 ஆகிய இரண்டு இதழ்கள்).
மாத இதழாக அறிமுகப் படுத்தப் பட்டது. தொகுப்பாசிரியர் எஸ்.லக்ஷ்மணன் (லெமன்). அந்தக் கால மஞ்சரியைப் போல பல சுவாரஸ்யமான கட்டுரைகள், கதைகள், தகவல்கள்!
“ஒளவையார் அவதரித்த காலத்திலும் மக்களிடையே துர்க்குணங்கள் இருந்தன. ஆத்திச்சூடி படித்தாலே இதை அறியலாம். அவ்வாறே வள்ளுவர் காலத்திலும் மற்ற பெரியோர்கள் தோன்றிய காலத்திலும் மக்களிடையே துர்குணங்கள் இருந்தன. ஆனபடியால் தற்காலத்திலும் ஒளவையாரைப் போல் மக்களுக்கு அறிவும், தூய உள்ளமும், பாக்கியமும் வளரச் செய்யும் ஓர் அவதார ஸ்திரீ, ஏன் தோன்றக்கூடாது? தோன்றுவாள். (‘உண்மைகள் உறங்குவதில்லை’ நூலில் உள்ல தமிழ்த்தாய் ஒளவை என்ற ராஜாஜியின் கட்டுரை).
‘தமிழ்த் தாத்தா’ – கி.வா.ஜ. வின் கட்டுரை! ஐயர் எழுதிய கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதே அழகாக இருக்கும். திருநெல்வேலியில் நிலா ஒளியில் ஓர் ஏட்டுச் சுவடியைப் பிரித்துப் பார்க்கிறார். அது பத்துப்பாட்டு எழுதியிருந்த சுவடி. அதில் ஒன்று ‘முல்லைப் பாட்டு’. நிலவில் சுவடியைப் பாத்தபோது ‘முல்லைப் பாட்டு’க் கண்ணில் பட்டது. அதைப் பற்றி எழுதும்போது ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்ற பொருத்தமான தலைப்பில் கட்டுரை எழுதினார்!
‘குறிஞ்சிப் பாட்டில் வருகின்ற 99 மலர்களில் சில குறைந்திருப்பதைக் கண்டார். தருமபுர ஆதீனத்தில் கிடைத்த சுவடியில் அந்த மலர்களின் பெயர்கள் கிடைக்க, அதைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு, ‘உதிர்ந்த மலர்கள்’ என்று பெயரிடுகிறார்! (‘தமிழ்த் தாத்தா’ நூலில் வரும் முன்னுரைக் கட்டுரை).
விருட்சம் வெளியீடான சில க.நா.சு. கவிதைகள் நூலிலிருந்து சில கவிதைகள், ஸ்வாமிநாத ஆத்ரேயன் எழுதிய ‘வேதமாநெறி’ (மாணிக்க வீணை நூலிலிருந்து ‘ஸத்ய நெறி’ என்ற கதை), மதனின் ‘தண்ணீர் என்னும் மகாசக்தி!’ கட்டுரை, ‘இன்னமுதம்’ (சுதேசமித்திரன்) நூலிலிருந்து, பல ஸ்தலங்களின் தேவாரம் உரையுடனும், கோபுலுவின் கோட்டோவியங்களுடனும் என அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன!
காஶ்ரீஶ்ரீ மொழிபெயர்ப்பில், ஶ்ரீகாண்டேகரின் மராட்டி வழிக் கதை – ‘வெற்றி-தோல்வி’ – போரில் தோற்ற அரசனின் சிலைக்கு முன் தோற்கும் ஓர் அரசனின் கதை!
பதிப்புத்துறை முன்னோடி வை.கோவிந்தன் பற்றிய கட்டுரை – ‘சக்தி’, ‘மங்கை’, ‘அணில்’ பற்றிய குறிப்புகளுடன் – ஏராளமான தகவல்களுடன் கொடுக்கப் பட்டுள்ளது. கவிமணி அவர்கள் ‘சக்தி’யில்தான் முதலில் சிறுவர்க்காகப் பாடல்கள் எழுதினார்கல் என்பது உபரித் தகவல்!
ஈரோடு தமிழன்பனின் ‘பொம்மைகள்’ (கலையும் கவிதையும் இலக்கியக் கட்டுரைகள்), எஸ்.வைதீஸ்வரனின் ‘நடைப் பயணம்’ (திசைகாட்டி – கட்டுரைகள்) ஆகிய கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.
அஃகேனம் -இ’.’கேனம் – தமிழில் GA, DA, DHA, BA ஆகிய ஒலிகளை வரிவடிவில் எழுத சில வழி முறைகளைச் சொல்லும் கட்டுரை – சிந்திக்க வைக்கிறது. (மஞ்சரி இதழில் வந்தது).
(தீபாவளி மடல் 2016 – நிறைய பக்கங்களுடன், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என சிறப்பாக வெளி வந்துள்ளது).
மஞ்சரி, ரீடர்ஸ் டைஜஸ்ட் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க சிறப்பான பத்திரிகை. கண்கவர் வடிவமைப்பு, சுவாரஸ்யமான தகவல்கள், அறிவார்ந்த கட்டுரைகள், கவிதைகள் என உள்ளடக்கம் கொண்ட பத்திரிகை. ஆனாலும் வாசகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
வாசிக்கும் பழக்கம் குறைவு என்பதை ஏற்பதற்கில்லை – வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், வேறு தளங்களில்!
நல்ல தகவல் களஞ்சியமாக உள்ள ஆரோக்கியமான பத்திரிகைகளை நம் அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யாத குற்ற உணர்வு எதிர்காலத்தில் நம்மை ஆட்கொள்ளும் என்றே தோன்றுகின்றது.
‘லேகினி’ இன்னும் வருகிறதா?’.
ஜெ.பாஸ்கரன்.
Sent from my iPhone