இராவணன் தனது அமைச்சனான மகோதரனிடம் சீதையை நான் எப்படியும் அடைவதற்கு ஒரு நல்ல உபாயம் சொல் என்று கேட்கிறான். “சொல்கிறேன்” என்று மகோதரன் ஓர் சூழ்ச்சியைக் கூறுகிறான். “மருத்தன் என்றொரு அரக்கன், மாயையும், வஞ்சனையும் உடையவன். அவனை ஜனக மன்னன் போல உருவத்தை எடுத்துக் கொண்டு, சீதையிடம் கொண்டு செல்வோம். தன் தந்தை துன்பப் படுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள்” என்றான் மாயையில் வல்ல மகோதரன். இப்படியொரு ஆலோசனை வழங்கிய மகோதரனை, இராவணன் மார்போடு தழுவிக் கொண்டு, “அவனை இங்கே கொணர்ந்து அவ்விதமே செய்” என்றான்.
ஜனகன் வேடமிட்ட மாய அரக்கன் சீதையிடம், “தந்தை உன் முன்னால் இறக்கும்படி நீ பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயோ? உன்னால், பிற உயிர்கள் அழிவது நல்ல செயலோ? நீ இலங்கை வேந்தர்க்கு உடன்பட்டு அவனை ஏற்றுக் கொள்வது உனக்கு ஒரு தீங்காகுமோ?” என்றான். மாயா ஜனகனின் சொற்களைக் கேட்ட சீதை அடைந்த நிலையை என்னவென்று சொல்வது? “அவ்வுரை கேட்ட நங்கை,
செவிகளை அமையப் பொத்தி வெவ்வுயிர்த்து, ஆவிதள்ளி, வீங்கினள் வெகுளி பொங்க ‘இவ்வுரை எந்தை கூறான், இன் உயிர் வாழ்க்கை பேணி செவ்வுரை அன்று இது’ என்னாச் சீறினாள், உளையச் செப்பும்”.
என் தந்தை இப்படிப்பட்ட பேச்சை பேசவே மாட்டார். பழியை ஏற்றுக் கொண்டு எப்படியாவது உயிர் வாழ வேண்டுமென்று என் தந்தை எண்ணவே மாட்டார். இவ்வார்த்தைகள் அறமும் அன்று, நேர்மையும் அன்று, என்று மனம் நைந்து வருந்தினாள். “அறம் உணர்ந்தவர் சொல்லும் சொல்லா இது? நற்குடிப் பிறந்தார் கூறும் செயலா இது? வேத நூல் கற்றவர் கூறும் நெறியா இது? உயிரினும் மேலாக பண்பு பாராட்டுவோர் நினைக்கக் கூடிய செயலா இது? நீ நற்குடி பிறந்த ஜனகன் அல்ல! நீ என் தந்தையே அல்ல!” என்று அலறினாள் சீதை.
கும்பகருணன் மரணச் செய்தியைக் கேட்ட ராவணன் துடிதுடித்துக் கூறுகிறான்.
தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத்தான் மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத்தான் பின்னைக் கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய் என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே”.
என் பொருட்டுப் போர்க்களத்தில் ஆவி துறந்த என் அருமைத் தம்பி! அந்த வில்வீரன் இராமனையோ, அல்லது அவன் தம்பியாகிய இலக்குவனையோ, அல்லது படைத்தலைவன் நீலனையோ, அல்லது வானர மன்னன் சுக்ரீவனையோ, அல்லது வாலி மைந்தன் அங்கதனையோ, அல்லது வாயுபுத்திரன் அனுமனையோ, அல்லது கரடிகளுக்கு அரசன் ஜாம்பவானையோ, கொன்று ஒழித்தாய் என்று உலகத்தார் சொல்லக் கேட்டு மகிழவேண்டிய நான் இன்று உனக்கே மரணம் வந்தது என்று கேட்கும்படி நேர்ந்து விட்டதே!.
கண்ணதாசனின் “அத்தான் என்னத்தான்’ பாடல் ஞாபகம் வருகிறதல்லவா? மரணச் செய்தியைப் பாடிய கம்பனின் அடியை வருடி காதலில் கொஞ்ச வைத்த கண்ணதாசன் கம்பதாசனும் கூட!
நன்றி: http://kambaramayanam-thanjavooraan.blogspot.com/2010/05/3.html