விஷயம் கேள்விப் பட்டதிலிருந்து மஹாதேவனுக்கு எதுவுமே ஓடவில்லை. கடந்த பதினைந்து வருடங்களாக எதிலிருந்து விலகியிருந்தாரோ.. எது நடக்கக் கூடாது என்று நினைத்திருந்தாரோ.. அது நடக்கப் போகிறது..
சிற்றம்பலேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா ஆவுடையப்பன் சொன்ன தகவல் தான் மஹாதேவனின் இந்த நிலமைக்குக் காரணம்.
“சாமி.. ஒரு நல்ல சேதி.. ஆச்சார்யர் யாத்திரை போயிட்டிருக்காருல.. வர இருபத்தஞ்சாம் தேதி நம்ம கிராமத்துக்கு வராரு.. பத்து நா இங்கிட்டுத் தான் கேம்ப்.. இப்பத் தான் அவுங்க ஆளுங்க போன்ல சொன்னாங்க”
வழக்கமாக உருகி உருகி ருத்ரம் ஜெபித்துக் கொண்டே சிற்றம்பலேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யும் மஹாதேவன் இன்று சுரத்தில்லாமல் ஏதோ சிந்தனையில் இயந்திரமாக செயல்பட்டதைக் கண்டு ஆவுடையப்பனுக்கு எதுவும் புரியவில்லை..
“கடவுளே.. ஏன் இந்த சோதனை?”
மஹாதேவனின் மனம் மட்டும் புலம்பிக் கொண்டே இருந்தது.
பிரசாதம் வாங்கிக் கொண்டு தர்மகர்த்தாவும் அவருடன் வந்த இருவரும் கிளம்பிய பிறகு ஈஸ்வரனைப் பார்த்தபடியே கோவில் தூணில் சாய்ந்து உட்கார்ந்தார் மஹாதேவன்.. கண்கள் ஈஸ்வரனை வெறித்தாலும் மனம் பின் நோக்கிப் பயணித்தது.
தாமிரபரணி கரை ஓரத்தில் அது ஒரு சின்ன கிராமம்.. மொத்தமே ஐம்பது குடும்பங்கள் தான்.. விவசாயம் தான் பிரதானம் என்பதற்கு செழுமையாக விரிந்துக் கிடந்த பச்சை வயல்களே சாட்சி..
கிராமத்துக்கு நடு நாயகமாக சிற்றம்பலேஸ்வரர் கோவில். தாயார் மரகதாம்பிகை. கோவிலின் சரித்திரம் புலப்படா விட்டாலும் அது ரொம்பவே புராதானம் வாய்ந்தது என்பது மட்டும் நிதர்சன உண்மை. மஹாதேவனின் கொள்ளுத் தாத்தா சுந்தரேச கனபாடிகளின் காலத்திலிருந்து இவர்கள் குடும்பம் தான் பகவத் கைங்கர்யம் செய்து வருகிறது..
மஹாதேவனின் அப்பா சங்கர கனபாடிகள் ஆச்சார்யரின் பரம பக்தர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு நடை போய் தரிசனம் செய்து விட்டு வருவார். இப்படித் தான் ஒரு தரிசனத்தின் போது ஆச்சார்யர் அவரைப் பார்த்து..
“வேதவித்து நிறைஞ்ச பரம்பரை.. சுந்தரேச கனபாடிகள் வாரிசு.. இந்த வேத சம்ரக்ஷணத்தைத் தொடரணும்.. சிற்றம்பலேஸ்வரர் கைங்கர்யத்தையும் தொடரணும்..”
“தெய்வத்தோட உத்தரவு”
சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணினார் சங்கர கனபாடிகள். இது கடவுளுக்கே கொடுத்த வாக்காக அவருக்குப் பட்டது..
கொடுத்த வாக்குப் படி ஒரே வாரிசான மஹாதேவனை கனபாடிகளாகத் தேர்ச்சி பெற வைத்தார் .. சிற்றம்பலேஸ்வரர் கைங்கர்யமும் தொடர்ந்தது..
தன் காலம் முடிவதற்குள் ஆச்சார்யாரின் உத்தரவை மகனுக்கு நினைவூட்டினார் சங்கர கனபாடிகள்.
“மறந்துராதேடா.. தெய்வத்தோட உத்தரவு.. தட்டிராதே.. அப்புறம் அது தெய்வ குத்தம் ஆயிரும்”
மஹாதேவனுக்கு இரண்டு மகன்கள்.. மூத்தவன் சங்கரநாராயணன்.. சின்னவன் ராமலிங்கம். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம் தான்.. இரண்டு பேருக்கும் இள வயதிலேயே பிரம்மோபதேசம் செய்து வைத்து வேத அப்யாசத்தை ஆரம்பித்தார் மஹாதேவ கனபாடிகள்..
”சாமி”
குரல் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்ட மஹாதேவன் திரும்பி கோவில் வாசலை எட்டிப் பார்த்தார்..
“யாரு?”
“முனியனுங்க.. யாரோ பெரிய சாமி வாராங்களாமே.. கீத்துக் கொட்டா போடணும்.. மத்த ஏற்பாடுலாம் செய்யணும்.. கோவில் சாமியைக் கேட்டுக்கன்னு தர்மகர்த்தா ஐயா சொன்னாரு”
மஹாதேவன் கண்களை மூடிக் கொண்டார்..
“ஈஸ்வரா.. இதுலேர்ந்து தப்பிக்க முடியாதா?”
அவர் மனம் ஏங்கியது..
“சாமி”
முனியன் மறுபடியும் குரல் கொடுத்ததும் மஹாதேவன் நிதர்சனமானார்.
“சொல்லுங்க சாமி.. எங்க.. எவ்ளோ பெரிய கொட்டா போடணும்.. வேற என்ன ஏற்பாடுகள் செய்யணும்.. முன்னமே சொன்னாத் தான் பக்கத்தூருலேர்ந்து ஆளுங்க சொல்ல தோதா இருக்கும்”
மஹாதேவன் மெதுவாக எழுந்து வந்தார்..
ஆச்சார்யர் கோவிலில் தான் தங்குவார். அவருக்குக் கைங்கர்யம் பண்ணுகிறவர்கள் ஓய்வெடுக்க கோவிலைச் சுற்றி கொட்டகை போட்டுத் தர வேண்டும். அவர்களின் மடப் பள்ளிக்குத் தனி இடம் ஒதுக்க வேண்டும்.. கொட்டகையில் விளக்கு ஏற்பாடு பண்ண வேண்டும்.. கோவிலிலும் பிரகாச விளக்குகள் ஏற்பாடு பண்ண வேண்டும்.. நித்ய பூஜைக்கு இரண்டு வேளையும் ஏராளமான புஷ்பங்கள் தேவைப் படும்.. இதைத் தவிற பூஜாத் திரவங்கள்.. ஆச்சார்யரை தரிசிக்க பக்கத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள்.. அவர்களுக்கு நித்ய அன்னதானத்திற்கான ஏற்பாடு..
மஹாதேவன் மனதில் வரிசையாக எழுந்தாலும் அவர் உடனே முனியனிடம் எதுவும் சொல்லவில்லை..
“தர்மகர்த்தா கிட்ட பேசிட்டு சொல்றேன் முனியா.. அவர் உத்தரவு இல்லாம எதுவும் கூடாது.. நீ கிளம்பு”
முனியன் நகர்ந்ததும் மஹாதேவனும் நடையை சாத்தி விட்டு கோவிலைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்.
கோவிலை விட்டு இறங்கியதும் சன்னதித் தெரு.. மூன்றே மூன்று வீடுகள்.. அதில் முதல் வீடு மஹாதேவனுடையது. வீடு என்று சொல்வதை விட ஓட்டுக் கொட்டகை என்று தான் சொல்ல வேண்டும்.. தலை குனிந்து போக வேண்டிய நிலை வாசல்.. குறுகலான ரேழி.. அதைத் தாண்டி சிறிய கூடம்.. பக்கத்தில் சிக்கனமாக ஒரு அறை. தீப்பெட்டி அளவு சமையலறை..
ஈஸ்வர கைங்கர்யம் முடிந்து வழக்கமாக சந்தோஷமாக வரும் கணவர் இன்று முகம் வாடி வந்திருப்பதை அவருடைய சகதர்மணி விசாலம் கவனிக்கத் தவறவில்லை.. ஏதோ பிரச்சனை என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் உடனே எதுவும் கேட்கவில்லை. கணவர் தானாகச் சொல்லட்டும் என்று காத்திருந்-தாள்.
கூடத்துச் சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்த மஹாதேவன் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். பிறகு மெதுவாக விசாலத்தைப் பார்த்து..
“ஆச்சார்யர் நம்ம கிராமத்துக்கு வரப் போறார்” என்று மெதுவாகச் சொல்ல.. விசாலம் முகத்திலும் இப்போது கவலை தொற்றிக் கொண்டது.. அவளும் இடிந்து போய் தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள்..
வேத அப்யாசம் பிரமாதமாகத் தான் ஆரம்பித்தது. ஆனால் மஹாதேவனின் இரண்டு மகன்களுக்குமே அதில் நாட்டம் ஏற்படவில்லை.. மஹாதேவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.. கெஞ்சிப் பார்த்தார்.. தன் தகப்பனாரிடம் ஆச்சார்யர் போட்ட உத்தரவை நினைவுப் படுத்திப் பார்த்தார்.. ஆனால் அவர்களுக்கு அதில் லயிப்பு ஏற்படவில்லை.. இளையவன் ராமலிங்கம் பள்ளிப் படிப்பில் அதிக கவனம் செலுத்தினான்.. மூத்தவன் சங்கரநாராயணன் சுமாராகப் படித்து வந்தான்..
மஹாதேவன் மனதில் கவலை பிறந்தது. தன் தகப்பனார் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத பாவியாகி விட்டோமே என்று குற்ற உணர்வு பிறந்தது.. அவர்கள் குடும்பத்திலிருந்து சிற்றம்பலேஸ்வரர் கைங்கர்யமும் தன் காலத்தோடு முடிந்து விடப் போகிறதே என்று மனம் பதபதைத்தது..
அதிலிருந்து மகன்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார் மஹாதேவன். தன் தகப்பனாரைப் போலவே அடிக்கடி போய் ஆச்சார்யரை தரிசித்து வந்தவர்.. தொடர்ந்து அவரை தரிசிக்க தைரியமில்லாமல் அங்கு போவதையும் நிறுத்திக் கொண்டார்.. இனி ஆச்சார்யரின் முன் நிற்க தனக்குத் தகுதி இல்லை என்று பரிபூர்ணமாக நம்பினார்.. ஆச்சு.. இப்படியே பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன.. நித்தமும் ஆச்சார்யரை மனதார நினைத்து அவரிடம் மன்னிப்புக் கேட்பதோடு சரி..
ஒரு கட்டத்துக்கு மேல் மஹாதேவனின் மகன்கள் சுதந்திரப் பறவையாக பறந்து விட்டனர். ராமலிங்கம் எங்கோ எப்படியோ மேலே படித்து கம்ப்யூட்டரில் நல்ல தேர்ச்சி பெற்று சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறான். மூத்தவன் சங்கரநாராயணன் மும்பை மாதுங்கா பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்துகிறான்.. அவனுடைய மஹாதேவன் சௌத் இண்டியன் தாபாவுக்கு அந்தப் பகுதி வாசிகள் மத்தியில் ஏக மவுசு.. பிஸ்னஸும் பிரமாதமாக நடக்கிறது..
இது எல்லாமே மற்றவர்கள் சொல்லிக் கேள்வி தான்.. மஹாதேவனாக எதையும் தெரிந்துக் கொள்ள விரும்பவில்லை.. கேள்விப் பட்ட விவரங்களும் அவர் மனதில் எந்த வித சலனத்தையும் ஏற்படுத்த வில்லை.. பெற்றவர்களைப் பார்க்க எப்பவாவது மகன்கள் ஊருக்கு வந்தாலும் அவர் அவர்களைக் கண்டுக் கொள்ளவதில்லை..
வழக்கமாக தாயின் மனம் வாரிசுகளை நினைத்துப் பித்தாக அலையும் என்பார்கள்.. ஆனால் ஆச்சர்யமாக விசாலம் இந்த விஷயத்தில் கணவன் பக்கம் நின்றாள்.. மகன்கள் வந்தால் அவர்களுக்குத் தேவையானதெல்லாம் செய்தாள்.. ஆனால் அவர்களிடம் முகம் கொடுத்து ஒரு வார்த்தைக் கூடப் பேச மாட்டாள்..
அப்பாவும் அம்மாவும் பாராமுகமாக இருப்பது குறித்து மகன்கள் இரண்டு பேருக்கும் பெரிய குறை..
மறுநாள் மஹாதேவன் பக்கத்து ஊர் சுவாமிநாத குருக்களை ஆவுடையப்பன் போனிலிருந்து அழைத்தார்..
“ஆச்சார்யர் வரும்போது நீங்க தான் பூர்ண கும்பத்தோட வரவேற்கணும்”
சுவாமிநாத குருக்கள் ஆச்சர்யப் பட்டார்.
“ஏன் சுவாமி.. நீங்க இருக்கும் போது நான் எப்படி?”
”தயவு செய்து எதுவும் கேட்காதேங்கோ.. இந்த ஒத்தாசையை மட்டும் பண்ணுங்கோ”
அதோடு பேச்சை முடித்தார் மஹாதேவன்.
ஆச்சார்யர் பரிவாரங்களுடன் வந்து பூரண கும்பம் சுவீகரித்து கோவிலுக்குச் சென்றார்.
ஊரே கூடியிருந்தது.
எல்லா ஏற்பாடுகளையும் முன் நின்று கவனித்த மஹாதேவன்.. ஆச்சார்யர் வந்தவுடன் பின்னுக்குச் சென்று விசாலத்துடன் கூட்டத்துக்குப் பின்னால் ஆச்சார்யர் கண்ணில் படாமல் தூணின் மறைவில் நின்று நடப்பதை கவனித்து வந்தார்..
ஆச்சார்யர் ஸ்நானம் முடித்து வருவதற்குள் சிஷ்யர்கள் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தனர்.. அதில் ஒரு குட்டிப் பையன்.. சுமார் பத்து வயது இருக்கலாம்.. துரு துருவென்று அங்கும் இங்கும் ஓடி ஒத்தாசை செய்துக் கொண்டிருந்தான்.. ஆச்சார்யர் வந்து பூஜையை ஆரம்பித்தவுடன் வேத கோஷம் துவங்கியது.. அந்தக் குட்டிப் பையனும் கணீரென்று வேதம் உச்சரித்துக் கொண்டிருந்தான்..
அவனைப் பார்க்கும் போது மஹாதேவனுக்கு பொறாமையாக இருந்தது .. தன் மகன்களை இது போல் வளர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவர் மனதை ரொம்பவே வருத்தியது..
பூஜை முடிந்து ஆச்சார்யரின் அனுக்ரக பாஷணத்துடன் அன்றைய நிகழ்வுகள் நடந்து முடிந்தன..
எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.. ஆவுடையப்பன் முன் நின்று எல்லாம் கவனித்தார். எதற்கும் தன்னை முன்னிலைப் படுத்த வேண்டாம் என்று மஹாதேவன் அவரிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். காரணம் மட்டும் சொல்லவில்லை..
மஹாதேவனும் விசாலமும் சாப்பிடாமல் வீடு திரும்பினர். மனதில் குற்ற உணர்வு விஸ்வரூபம் எடுக்கும்போது சாப்பாடு இறங்காது தான்.. துவண்டு போய் உட்கார்ந்திருந்தவர்கள் சற்றைக்கெல்லாம் அப்படியே தரையில் படுத்துக் கொண்டார்கள். ஆனால் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லை.. மனம் எங்கெங்கோ அலைபாய்ந்தது.. .
திடீரென்று வாசல் கதவு தட்டும் சத்தம்..
”யார் இந்த நேரத்தில்”
மனதில் இந்தக் கேள்வியுடன் எழுந்து போய் கதவைத் திறந்தார் மஹாதேவன். இடுப்பில் நாலு முழம் வேஷ்டியுடன்.. குடுமித் தலையுடன் மாலையில் பூஜையில் பார்த்த சிறுவன் நின்றிருந்தான்.
“வாங்கோ”
மஹாதேவனுக்கு எதுவும் புரியவில்லை. எங்கே அழைக்கிறான்?..
“வாங்கோ”
அவன் மறுபடியும் அழைத்தான்.
மஹாதேவனுக்கு ஏனோ எதுவும் கேட்கத் தோன்றவில்லை.. அவனைத் தொடர்ந்து சென்றார்.
கோவிலுக்குள் சென்ற சிறுவன் வலது கோடியில் இருந்த தூணுக்கு அருகில் போய் நின்றான். மஹாதேவனும் அவனைத் தொடர்ந்து சென்றார்..
தூணுக்குப் பின்னால்..
மஹாதேவன் சாஷ்டாங்கமாக விழுந்தார். அவர் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்..
“என்ன.. தரிசனம் கொடுக்க மாட்டியா?”
ஆச்சார்யரின் குரல் உரிமையோடு ஒலித்தது.
எழுந்து கூனிக் குறுகி நின்ற மஹாதேவனுக்கு வார்த்தை வரவில்லை. அழுகை தான் வந்தது.
“பதினஞ்சு வருஷம் நாலு மாசம் இருபத்தி அஞ்சு நாளாச்சு.. நீ என்னை வந்து பார்த்து.. அதனால தான் நானே வந்துட்டேன்”
மஹாதேவனால் எதுவும் பேச முடியவில்லை..
“என்ன.. என்னைப் பிடிக்கலையா? இல்லை.. நான் ஏதாவது தப்புப் பண்ணிட்டேனா?”
இதைக் கேட்டவுடன் “ஐயோ.. அபசாரம்.. அபசாரம்” என்று மறுபடியும் சாஷ்டாங்கமாக விழுந்தார் மஹாதேவன்..
“நான் தான் தப்புப் பண்ணிட்டேன்.. கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாத.. பாவியா.. உங்களை தரிசிக்கக் கூடத் தகுதி இல்லாதவனா நிக்கறேன்.. என்னை மன்னிச்சுருங்கோ.. இந்தப் பாவியை மன்னிச்சிருங்கோ.. நான்..”
மேலே பேச முடியாமல் குரல் கம்மியது ..
பின் சுதாரித்துக் கொண்டு தன் மகன்களைப் பற்றி சொல்லி முடித்தார்.
இதைக் கேட்டதும் அந்தப் பரம்பொருள் தலையாட்டியபடி புன்னகைத்தார்.
“இதுக்கா இந்த வனவாசம்? நான் என் விருப்பத்தைச் சொன்னேன்.. நடக்கறது அந்தப் பரம்பொருள் சித்தம்.. விதிச்சிருக்கறதுக்கு மாறா நாம போகவும் முடியாது.. அதுக்கு நமக்கு அதிகாரமும் கிடையாது..”
என்று மஹாதேவனை அழைத்து வந்த அந்தச் சிறுவனை சுட்டிக் காட்டினார்.
“இவன் யாரு தெரியுமா? நம்ம மடத்துல காவலுக்கு இருக்கிற மாரிமுத்-துவோட புள்ளை.. தவழற வயசுலேர்ந்தே வேதங்கள் மேல இவனுக்கு ஒரு ஈர்ப்பு.. அதனால தான் இவனை வேத பாட சாலைல அனுமதிச்சேன்.. ஆர்வமாக் கத்துண்டு இப்ப மஹா வித்வான்களுக்குப் போட்டியா வேதம் சொல்றான்.. இது இவனுக்கு விதிச்சிருக்கிறது.. அது என் மூலமா இல்லைன்னாலும் வேற யாரு மூலமாவாவது ஆண்டவன் நடத்தி வெச்சிருப்பார்.. அதே மாதிரி உன் புள்ளைகளுக்கு விதிச்சிருக்கிறது வேற.. அதை நினைச்சு நீ வருத்தப் பட வேண்டிய அவசியமே இல்லை”
மஹாதேவன் எதுவும் பேசாமல் அந்த ஞானகுருவையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“எதையுமே திணிக்கக் கூடாது.. திணிச்சா அது சோபிக்காது.. அது மதமாகட்டும், கல்வியாகட்டும், கல்யாணமாகட்டும்.. அவா அவா விருப்பப் படி விட்டுரணும்.. ஏன்னா.. அது தான் இந்த ஜென்மாவுல அவாளுக்கு எழுதப் பட்டக் கணக்கு.. உன் புள்ளைகள் வேற வேற உத்யோகத்துல இருந்தாலும்.. பொய் சொல்லாம, அதர்மம் பண்ணாம நியாயமான முறைல நடந்துக்கறா.. அதுவும் பெரியவன் அன்னதாத்தா.. வேற என்ன வேணும் உனக்கு? நடக்கறதெல்லாம் நீ தினம் ஆராதனை பண்ணற இந்த சிற்றம்பலேஸ்வரர் சித்தம்னு பரி பூர்ணமா நம்பியிருந்தா.. உன் மனசுல இந்த சஞ்சலமே வந்திருக்காது”
இதைக் கேட்டதும் மஹாதேவன் வாயடைத்துப் போனார்.
“நீ தான் என்னை இத்தனை வருஷமாப் பார்க்க வரலை.. ஆனா உன் புள்ளைகள் ரெண்டு பேரும் வருஷா வருஷம் என்னைப் பார்க்க வந்துடறா தெரியுமா?”
இதைக் கேட்டதும் மஹாதேவன் அதிர்ந்து போனார்.
“மந்திரம் உச்சரிக்கறது மட்டும் பக்தி இல்லை.. மனசு ஐக்கியமாயிரணும்.. எல்லாமே நீ தான்.. நடக்கறது உன் சித்தம்.. அப்படிங்கற சரணாகதி தத்துவம் மனசுல வரணும்.. அது உன் புள்ளைகள் கிட்ட இருக்கு.. நான் சொன்ன மாதிரி உன் மூத்த புள்ளை லாபமும் சம்பாதிக்கறான்.. ஏழைகளுக்கு அன்ன தானமும் பண்ணறான்.. சின்னவனும் நான் சொன்னேன்னு நிறைய தர்மங்கள் பண்ணறான்.. இதுவும் அந்தப் பரம்பொருளுக்குப் பண்ணற ஆராதனை மாதிரித் தான்.. அதனால இனிமேலாவது உன் புள்ளைகளை ஒதுக்காம.. அவாளை அரவணைச்சு ஏத்துக்கோ.. என்ன செய்வியா?”
”உத்தரவு.. உத்தரவு..”
என்று மறுபடியும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் மஹாதேவன்.. மனதிலிருந்து இமயமலை இறங்கியது போன்ற உணர்வு.
மறுநாள் தெளிவான முகத்துடன் தானே முன் நின்று எல்லா வேலைகளையும் கவனித்த மஹாதேவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார் ஆவுடையப்பன்.