கடற்கரையிலுள்ள அந்த மிகப் பெரிய கட்டிடத்தில்,கடலை பார்த்தபடியிருக்கிற சிறிய தடுப்பு அறையில் அவன் ஒரு கைதியாக இருந்தான். எப்பொழுதிலிருந்து, என்று அவனுக்குத் தெரியாது . மிக நீண்ட காலமாக இருக்க வேண்டும். அவனிடம் காலண்டரோ அல்லது பஞ்சாங்கமோ இல்லை. சுவர் கடிகாரமோ அல்லது ஒரு கைக்கடிகாரமோ இல்லை. அவன் அதற்காக சிறிது கூட வருத்தப்படவில்லை.அவனைப் பொறுத்த வரை, காலம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது.
என்ன இலக்கில், எவ்வளவு காலம் போனது என்பதுகுறித்தெல்லாம் அவன் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை.
இது வெறும் சிறை மட்டுமில்லை,மிகப் பெரிய கோட்டை என்று அவன் நினைத்தான். கடற்கரையின் பலமான பாறைகள் மீது கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள கட்டிடத்த வெளிப்புறச் சுவர்கள் மிகவு உறுதியானவை. கடலையொட்டியிருந்த ஜன்னல்களின் கம்பிகளை ஒரு யானையால் கூட அசைக்க முடியாது. சுவர்கள் அரை அடிக்கும் மேலான கனமுடையவை.
அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த மிகச் சிறிய அறையில் ஒருவர் கூட தாராளமாக புழங்க முடியாது. ஆனால் அவனுக்கு மகிழ்ச்சியும், வசதியும் தருவதான அந்த அறை சிறையிலேயே மிகச் சிறந்தது. அறையின் விசேஷ அம்சம் கடலைக் காட்சிப்படுத்துகிற அந்த ஜன்னல். அதன் வழியே பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்தான் தெரியும். தொடுவானம் வரை கடல். இருபத்தி நான்கு மணி நேரமும் அருமையான கடற்காற்று. காற்று மிகக் கடுமையாகும் போதுதான், ஜன்னல் மூடப்படும். தனிமையின் எல்லையிலிருக்கிற ஒரு கைதிக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரம்.
சிறைக்கு வந்த சில நாட்களில் உயரதிகாரிகளுடன் அவன் ஏற்படுத்திக் கொண்ட நல்லுறவு, அவனுக்குப் பல வசதிகளை ஏற்படுத்தித் தந்தது. படிப்பதற்கு அவனுக்குப் புத்தகங்கள் தந்தனர். எழுதுவதற்கு தாள்களும் கூட.
சிறுநீர் , மலம் கழிக்க ஒரு வாளியும் தரப்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்துவது அவனுக்கு வெகுகாலம் வரை கடினமாகவேயிருந்தது. ஆனால் அவன் அதிகாரிகளுக்கு நெருக்கமாகி விட்ட பிறகு, வெளியே போவதற்கு நான்கைந்து முறையாவது கதவைத் திறந்தார்கள்.அந்த வாளி அங்கேயிருந்த போதும், அவன் அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ராத்திரிகளை அவன் ஜன்னல் வழியாகவே சமாளிப்பான். பகல் நேரங்களில் கடலும்,சூரியனும் தன்னைப் பார்ப்பதாக அவன் பயப்படுவான். கொலைகாரக் குற்றவாளிக்கு எங்கே இவ்வளவு வசதிகள் கிடைக்கும்!
அதிகாரிகள் காட்டிய இரக்கத்தால் அவன் அறைக்குள்ளேயே ஒரு கித்தான் நாற்காலியை உபயோகித்துக் கொள்ள முடிந்தது. சொகுசாக அந்த நாற்காலியில் சாய்ந்து கொண்டு புத்தகங்களையும் , பத்திரிக்கைகளையும் அவனால் படிக்க முடியும், எதையாவது கிறுக்க முடியும். கடலை கூர்ந்து கவனிப்பது ,கடல் மற்றும் வாழ்க்கையின் முடிவற்ற தன்மையை சிந்தித்துப் பார்ப்பது.. ஆயிரக் கணக்கான கனவுகளைப் பின்னுவது . எதிர்காலத்தைத் திட்டமிடுவது என அவன் பொழுதுகள் கழியும்.
உண்மையாகவே ஒரு சாவகாசமான தங்குமிடம். வெளிப்புற நிகழ்ச்சிகள் தினமும் இருந்தாலும், வெட்டவெளியில் நேரம் கழிக்கும் வாய்ப்புகள் என்பதேயில்லை. மண்ணைத் தோண்டுவது, செடிகளுக்குத் தண்ணீர் விடுவது, விறகுடைப்பது உள்ளிட்டவை அவனுக்கு மிகவும் பிடித்த வேலைகள். அவை உடல் பயிற்சியாகவும் இருப்பவை .சுருக்கமாகச் சொன்னால்,எல்லாம் அற்புதம்! [ பூரணம்! ] வெளியாட்களுக்குத்தான் சிரமங்கள்.அவர்கள் பகலைக் கண்டு பயப்பட வேண்டும். பலரிடமிருந்து ஒளிய வேண்டும். எதைப் பற்றி யோசிக்க வேண்டுமென்றாலும் இரவில் ஒதுக்குப்புறமான பகுதியில் முகாமிட வேண்டும்.அவர்களோடு ஒப்பிடும் போது தன் நிலை மேலாகவே அவனுக்குத் தெரிந்தது.
ஒரே பிரச்னை ஜன்னலின் வழியாகத்தான் அவன் தொலைவிலுள்ள கண்ணுக்குப் புலப்படும் காட்சிகளைப் பார்த்து திருப்தி அடைய வேண்டும். விரும்பியபடி அவனால் வெளியே சுற்ற முடியாது. ஆனால் எப்போதும் வெளிப்புற காட்சிகள் அற்புதமானவை.
மீனவர்களின் படகுகள்..கடலுக்கு மேல் குவியலாக வட்டமிடும் கடற் பறவைகள், அலைகளுக்கு அருகே குதித்து மேலே வரும் மீனைக் கவ்விக் கொண்டு போவது ; தொலைவில் அபூர்வமாகக் கப்பல்கள் கடப்பது. கடற்கரையின் அந்தப் பகுதி சிறிது வளைவாக இருப்பதால், ஜன்னலின் ஒரு பக்கமாக அவன் நகர்ந்தால் கடற்கரையையும் ,மீனவர்களின் படகுகளையும், மீன் விற்பனையையும் அவனால் பார்க்க முடியும். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவனால் கேட்க முடியாது, ஆனால் அவர்களின் அருகாமையை அந்த நேரத்தில் அவனால் உணரமுடியும். அவர்களின் இடையே இருப்பது போல அவன் உணர்ந்தான்.பொது மக்களோடு இன்னமும் தொடர்பிழந்து விடாத தன் நிலைக்காக மகிழ்ந்தான்.
வெளிப்புறக் காட்சிகள் மட்டுமில்லை, அவன் ஆழமாக தன்னைப் பார்த்துக் கொண்டபோது, அவன் உள்மனமும் அவனுக்குத் தொலைவாகத் தெரிந்தது. அடிப்படை ஞாபகங்களும் வெகு தொலைவில்
இருந்தன. கருத்துக்கள் தொலைவாகவும், மந்தமாகவுமிருந்தன. எனினும், அவன் எல்லாவற்றையும் தினமும் பார்த்துக் கொண்டிருந்தான். கடந்து போன நாளின் உண்மைகளைத்தானே அவன் பார்த்தான் ? அல்லது மாயையான கருத்துப் படிவமா?
அவனுக்குத் தெரியவில்லை. துக்கமும் ,தீயதுமான அந்த அறியாமையை நினைத்த போது அவனுக்குள் சுய இரக்கம் எழுந்தது. அந்த இரக்கம் துக்கமாக வளர்ந்து விட்டது.
அவனுடைய ஞாபகங்களின் தொலைதூரக் காட்சிகளில் ஒன்றாக இருப்பது சரசு என்றழைக்கப்படும் சரஸ்வதியின் முகம்.
வெளுத்த , இரத்த சோகையான கண்கள். பருவத்தில் பூரித்திருக்க வேண்டிய கன்னங்கள் பூரிக்கவில்லை. உதடுகள் எப்போதும் வரண்டிருக்கும். மெலிந்த உடல். ஆனால் ஒரு புனிதமான அழகு,
அது எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டது. சரசு என்றால் காதலின் சுருக்கம் மற்றும் சரணடையும் அன்பு. சோகமாக இருக்கும் போது அவள் கண்கள் தளும்பியிருக்கும். சந்தோஷமாக இருக்கும் போதும், காதல் வயப்படும் போதும் அவள் கண்கள் தளும்பியிருக்கும். சிரிக்கும் போது அவள் கண்கள் ஈரமாக இருக்கும்.
தன்னுடைய பழைய ஞாபக நிலவறைக்குள், அவனுடைய ஞாபகத்தின் சொர்க்கத்திற்குள் ,அவன் அப்பாவியான சரசுவின் இருப்பை உணர்ந்தான்.
“நீ எங்கே போனாலும், நான் உன்னுடனிருப்பேன்”. அவளுடைய வார்த்தைகள் இன்னமும் புதுமலர்ச்சியாக இருந்தன.அவளுடைய இருத்தலை இங்கும் உணரமுடியும். கடலருகேயுள்ள சிறையிலும் கூட.
அவன் மேற்கே பார்த்தான்.அங்கே ,இரண்டு கப்பல்களுக்கு அப்பால் , பலவீனமடைந்த சூரியன் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான். சிவந்த அந்திப் பொழுதின் மேகச் சித்திரப் படத்தில் அவன் சரசுவின் வெளுத்த முகத்தைப் பார்த்தான்.
“என்னுடன் வாழ வேண்டும் என்று கனவு காணாதே சரசு,” வெகு காலத்திற்கு முன்பே அவன் சொல்லியிருக்கிறான்.“ எனக்கான வாழ்க்கை என்பது சாத்தியமில்லாதது. என் வாழ்க்கைப் போக்கு பற்றி உனக்குத் தெரியும். ஒரு கவிஞன் சொன்ன மாதிரி ’எரியும் நெருப்பிற்கு மேலே, எழுபதாயிரம் அடிக்கு மேலே, ஒரு தலைமுடி போலிருக்கும் கயிற்றுப் பாலத்தில் நடந்து பயணிக்கும் ஒரு பயணி நான்.’ என்னுடன் வருவதல்ல உன் விதி.”
“ஆனால், அது என் விதி ”, என்றாள் அவள்.
“சரசு !” அவன் உணர்ச்சி வசப்பட்டான்.அவள் சிரித்தாள்.
வழக்கம் போல் அவள் விழிகள் ஈரமாயின.
“நீ உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியமேயில்லை.”
அழுகை அவள் குரலில் சிரிப்புடன் சேர்ந்து கொண்டது. “நான் என் விதி இப்படியிருக்கிறதே எனக் குறைபட்டுக் கொள்ளவில்லை.
மாறாக நான் மிகத் திருப்தியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த விதிதான் என் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும், சம்பந்தத்தையும் தந்திருக்கிறது.”
“சரசு !” அவன் தோல்வியின் சறுக்கலிலிருந்தான். அதிரும் அலைகளுக்கேற்றதான லயத்தோடு அது மேலும் ,கீழுமாக மிதப்பதை அவனால் உணரமுடிந்தது.
தொலைவில்,மிகத் தொலைவில், கடலுக்கு, தொடுவானத்திற்கு அப்பால், மெழுவர்த்திகளின் ஒளி, பனைக் கூரை, மண் சுவரைக் கொண்ட சிறிய அறை. சிறை அறையை விட அது கொஞ்சம் பெரியது. வெளியே இருட்டில் காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. காட்டு மரங்களுக்கிடையே காற்றின் முழக்கம் கேட்டது. எந்தச் சந்திர ஒளிக்கு முன்னாலும், காட்டு இரவு கருமைதான்.காற்றின் விரல்கள் மெழுகுவர்த்தி ஜூவாலையைப் பிளந்து ,ஊடுருவி அசைத்தன. சில சமயங்களில் அதை அணைக்கவும் செய்தன.
எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகளைச் சுற்றி, சில இளைஞர்கள் புல் விரிப்பில் உட்கார்ந்து அல்லது அரையாகச் சாய்ந்திருந்தனர். அந்த மெழுகுவர்த்திகளின் வெளிச்சம் அவர்களின் கண்களிலும், இதயங்களிலும் பரவிக் கொண்டிருந்தது. அவர்களின் உணவு பீடியும்,தண்ணீரும்தான். பிரெட்டை அவர்கள் முன்பே சாப்பிட்டு முடித்து விட்டனர். அவை செரித்தும் போயிருந்தன. பசி மீண்டும் வயிற்றை எரிக்கத் தொடங்கியது.இன்னமும் இரத்தம் நரம்புகளில் கொதித்துக் கொண்டிருந்தது. உற்சாகம் உள்ளுக்குள் பொங்கியது.
“இனிமேலும் அதைத் தள்ளிப் போடக்கூடாதென்று நான் நினைக்கிறேன்.”
“உண்மைதான். நமக்கு வேண்டிய பெரும்பான்மை விவரங்கள் கிடைத்து விட்டன. நமது செயல் நிகழ்வின் வரைபடமும் பெரும்பாலும் தெளிவாகிவிட்டது. நமக்கு இன்னும் ஒரு சில விவரங்கள் மட்டும் தேவைப்படுகின்றன. சரிதானே? அதற்கு ஒரு வாரம் போதாதா ?”
“நிச்சயமாகப் போதும்.ஆனால் இந்த ஒரு வாரத்தில் நாம் எல்லோரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.உடல் முழுவதும் கண்களும், காதுகளும், மூக்குகளும் இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். ஒரு சின்னச் சத்தமோ அல்லது மணமோ நம்மிடமிருந்து தப்பி விடக்கூடாது.”
“அவ்வாறெனில் நாம் அடுத்த வாரம் மீண்டும் சந்திக்க வேண்டும்.”
“ஆமாம். சரியாக இன்றிலிருந்து ஒரு வாரத்தில், அடுத்த வியாழக் கிழமை நாம் சந்திக்க வேண்டும்.’
“அப்போது நாம் இறுதி முடிவும் எடுத்து விடலாம்.”
“அதைப் பற்றிய சந்தேகம் ஏன்? நாம் இறுதி முடிவை எடுத்து விட்டோம் .நம்முடைய திட்டங்களை அமல்படுத்துவது குறித்த இறுதி முடிவு செய்யத்தான் நாம் கூடுகிறோம்.”
“எங்கே ?”
“இங்கேதான். இதுவரை இந்த மறைவிடத்தைக் யாரும் கண்டுபிடிக்கவில்லை.”
“இப்போது நாம் கலைவோம். எனில் விடிவதற்கு முன்னால். அவரவர்களின் வசதிக்கேற்ப ஒவ்வொருவரும் புறப்படுங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் போக வேண்டும். வழியில் சந்தித்தால் கூட ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கவோ அல்லது பேசவோ வேண்டாம்.எல்லா உரையாடல்களும், புன்னகைகளும் அடுத்த வாரம்தான்.”
நாங்கள் கலைந்தோம்.
அடுத்த வியாழக் கிழமையன்று நடந்த கூட்டத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை ,அவன் அதை நினைத்துப் பார்த்தான்.இதற்கிடையே அவன் பாதை மாறிப் போனது . ஒரு விபத்து அவனைத் திசை திருப்பி விட்டது.
அவன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.இன்னொரு அந்தி கடலுக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அந்தியும் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசமானதுதான்.அஸ்தமிக்கும் சூரியன் வானத்தில் தீட்டுகிற அந்தியொளியின் ஒவ்வொரு படமும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதுதான்.
அந்த வெள்ளியன்று மதியம், மிகக் களைப்பாக காட்டிலிருந்து வீட்டுக்கு வந்தவனுக்கு கேள்விப்பட்ட அந்தச் சம்பவம் மிக அதிர்ச்சி தருவதாக இருந்தது. அந்த கிராமத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அதிகாரம் நிறைந்தவனாக இருந்த செல்லப்பன் பிள்ளை அரிசனப் பெண்ணான தாராவின் வீட்டிற்குள் புகுந்து அவளைக் கற்பழித்து விட்டான். அந்தப் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற போது யாரோ அவளைக் காப்பாற்றி விட்டனர். தாரா தலைவரான ராமனின் மகள். அவன் பலமுறை அவளைப் பார்த்திருக்கிறான். பதினைந்து வயதான அப்பாவிப் பெண், சிறிது கருப்பு, அழகில்லை, ஆனால், பருவ வயதிற்கான கவர்ச்சி ! அவனுடைய அம்மாவிற்கு அவளை மிகவும் பிடிக்கும்.பல விஷயங்களில் தாரா அவன் அம்மாவிற்கு உதவி செய்திருக்கிறாள்.
கற்பழிப்பை விட கொடுமையானதாக வேறெதுவாவது இருக்க வேண்டுமென அவன் நினைத்தான். புகார் கொடுக்கப் போன ராமனையும், நண்பர்களையும் செல்லப்பன் பிள்ளையும் ,ரவுடிகளும் அடித்து நொறுக்கி விட்டனர்.
“இந்தப் பகுதியில், வட்ட பரம்பில் செல்லப்ப பிள்ளையை கேள்வி கேட்க யாருக்கு தைரியமிருக்கிறது?”என்று செல்லப்ப பிள்ளை கர்வத்துடன் மார் தட்டிக் கொண்டு அலைவதாக அவன் கேள்விப்பட்டான்.
“அராஜகம் செய்பவர்களைக் கேள்வி கேட்க இந்தப் பகுதியில் சிலர் இருக்கிறார்கள்,” என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அன்று மாலை அவன் கிராமச் சந்தைக்கு மிகுந்த கவனத்தோடு போனான். கோயிலருகேயுள்ள ஒரு பெரிய பாறையில் உட்கார்ந்து கொண்டு செல்லப்பபிள்ளை தன் குத்துவாளைத் தீட்டிக் கொண்டிருந்தான்.
இரண்டு அல்லது மூன்று கூட்டாளிகள் உடனிருந்தனர்.
“உங்கள் புரட்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது ?” அவன் அருகே போன போது செல்லப்ப பிள்ளை கேட்டான்.
அதற்கு பதில் சொல்லாமல், அவன் தீவிரமாக அந்த விஷயத்தை ஆரம்பித்தான்.
“நீ யார் அதைக் கேட்பதற்கு? அந்த தாழ்ந்த சாதிப் பெண்ணிற்கு தாலி கட்டிய புருஷனா?” செல்லப்பிள்ளை உறுமினான்.அருகிலிருந்த கூட்டாளிகள் ஆரவாரமாகச் சிரித்தனர்.
“அட! கேட்பது யார் பாருங்கடா !”
அவன் பதில் வார்த்தைகளாக இருக்கவில்லை.
ஒரு மூர்க்கமான சண்டை நடந்தது. செல்லப்பன் பிள்ளை, மற்றும் கூட்டாளிகளைத் தனியாகத் தாக்கினான். கடைசியாகத் தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததும், செல்லப்பன் பிள்ளையின் குத்துவாளைப் பிடுங்கி ஆழமாகக் குத்திவிட்டான். ரத்தம் ஆலமரத்தின் உச்சிக்குப் பீச்சியடித்தது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.
அஸ்தமிக்கும் சூரியன் மேற்கு வானத்தில் ரத்தத்தைக் சிதறச் செய்து கொண்டிருந்தான். அவன் தன் முகத்தை தேய்த்துக் கொண்டான். தாடி வளர்ந்து விட்டது. பரவாயில்லை. நாளை, சிறைக்கு முடி திருத்துபவன் வருகிற நாள். .
நன்றி : Dakshina A literary Digest of South Indian Languages 1986—1988
Sahithya Academy
நவீன மலையாளத்திற்கு அடிக்கல் நாட்டியவர் என்று விமர்சகர்களால்
கருத்தப்படும் ஜார்ஜ் வர்க்கீஸ் காக்கநாடன் சிறந்த சிறுகதை
மற்றும் நாவலாசிரியர். ஏழாம் முத்திரை, கோழி, துலா வருஷம்
உள்ளிட்ட நாவல்களும் பதினேழு ,கண்ணாடி வீடு ,மழையுடே
ஜூவாலைகள் உள்ளிட்ட சிறுகதைகளும் இவர் படைப்பில் சிலவாகும்.
விஸ்வபீடம், மலையாள நாடு, சாகித்ய அகாதெமி, கேரள
எழுத்தாளர் சங்க விருது உள்ளிட்ட பலவிருதுகள் பெற்றவர்.