வங்கமொழிக்கதையும் அதன் ஆங்கில மூலமும்: கவியரசர் தாகூர்;
தமிழ் மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்
முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். இளவரசன் அஜாதசத்ரு கேட்டுக்கொண்டபடி அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் அரசன் வசித்துவந்தான். பல காரணங்களால் அரசி லோகேஸ்வரிக்கு புத்தமதத்தில் நம்பிக்கை தளருகின்றது; நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. வழிபாட்டுமேடை உடைத்தெறியப் படுகிறது. பிட்சுணி உத்பலா கொலை செய்யப்படுகிறாள். அரசன் பிம்பிசாரனையும் படுகொலை செய்ததாகப் பேசிக் கொள்கிறர்கள். புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்து புத்தமதத்தை அவமதிக்க இளவரசிகள் முனைகின்றனர். நகரெங்கும் கலவரம் தலைவிரித்தாடுகின்றது. ஸ்ரீமதியின் பொருட்டு இளவரசிகள் தமக்குள் சண்டையிடுகிறார்கள்.
இனித் தொடர்ந்து படிக்கவும்:
————————————
ரத்னாவளி: இந்த நாட்டியப்பெண்ணிடமுள்ள தொற்றுநோய் உன்னிடமும் ஒட்டிக்கொண்டு உன்னை வதைக்கிறது.
முதல் காவலாளி: (முதலாவது தாதியிடம்) வசுமதி! நாம் அனைவரும் ஸ்ரீமதியிடம் பெருமதிப்பு வைத்திருந்தோம்- ஆனால் அது தவறு என்று தோன்றுகிறது, ஏனெனில் அவள் இங்கு நடனமாட ஒப்புக்கொண்டிருக்கிறாளே.
ரத்னாவளி: எப்படி அவள் மறுக்க முடியும்? அரசரின் ஆணைக்குக் கீழ்ப்படியாமல் அவளால் இருக்க முடியுமா?
2வது காவலாளி: அரசரிடம் பயம் என்பது நம்மைப் போன்றவர்களுக்கு, ஆனால்–
ரத்னாவளி: அவளுடைய இடம் உன்னுடையதைவிட எவ்வாறு உயர்ந்தது?
முதல் தாதி: எங்களைப் பொறுத்தவரை அவள் வெறும் நாட்டியப் பெண்ணல்ல. அவள் முகத்தில் தெய்வீகக் களை வீசுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.
ரத்னாவளி: சுவர்க்கத்திலானாலும் கூட, ஒரு நாட்டியப்பெண் என்பவள் நடனமாடியே தீர வேண்டும்.
முதல் காவலாளி: அரச ஆணையால் ஸ்ரீமதிக்குத் தீங்கு விளைவிப்பேன் எனப் பயந்தேன்; ஆனால் இப்போது அதற்காகக் காத்திருக்கப் போவதில்லை.
முதல் தாதி: அந்தப் பரிதாபத்துக்குரியவளைப் பற்றி மறந்துவிடு; ஆனால் அந்தக் கொடுங்குற்றம் இழைக்கப்படும் சமயம் நாம் இங்கிருந்தால் நமது கண்கள் அதனைக் கண்டு களங்கப்பட்டால் நமக்கு என்ன ஆகும் என்று சிந்தித்துப்பார்!
ரத்னாவளி: அந்த நாட்டியப்பெண் தன்னைச் சிங்காரித்து முடித்துக்கொள்ள நாம் இன்னும் எத்தனை நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டும்? பாருங்கள் பெண்களே! உங்கள் குற்றமற்ற தோழி அலங்காரம் செய்துகொள்ள எத்தகைய புண்ணியமான மகிழ்ச்சியைக் கொண்டிருக்கிறாள் எனப் பார்த்துக் கொள்ளுங்கள்!
முதலாவது தாதி: இதோ அவள் வருகிறாள்! ஆபரணங்களை அணிந்துகொண்டு எப்படி ஜ்வலிக்கிறாள் அவள்!
இரண்டாம் தாதி: அவளுடைய பாவம்நிறைந்த உடலை அலங்கரிக்க நூற்றுக்கணக்கான மெழுகுவத்திகளை ஏற்றியிருக்கிறாள்.
(ஸ்ரீமதி நுழைகிறாள்).
முதலாவது தாதி: பாவம் நிறைந்த ஸ்ரீமதி, நீ இத்தனைதூரம் மானங்கெட்டு நமது கடவுளின் வழிபாட்டுமேடை முன்பு நடனமாடத் துணிந்துவிட்டாயா? உனது கால்கள் இன்னும் காய்ந்துபோன கட்டைகளாக ஏன் மாறவில்லை என நான் ஆச்சரியப்படுகிறேன்.
ஸ்ரீமதி: நான் இதைச்செய்ய வேண்டும் என்பதற்கான ஆணை எனக்குப் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இரண்டாம் தாதி: அப்படியானால் கோடிக்கணக்கான ஆண்டுகள் இரவும் பகலும் நீ நரகத்தில் எரியும் தீக்கங்குகளின்மீது ஆடுவாய்! – இதை நான் உன்னிடம் கூறியே தீர வேண்டும்.
மூன்றாம் தாதி: நீ அணிந்துள்ள ஒவ்வொரு மோதிரமும் வளையலும் உனது சதைக்குள் தீவளையம் போலப் புகுந்து அழுத்தி, ஒவ்வொரு நரம்பிலும் தாங்கமுடியாத எரிச்சலை உண்டாக்கும்- அதனை நன்றாக நினைத்துப்பார்.
(மல்லிகா அவசரமாக உள்ளே நுழைந்து ரத்னாவளியை ஒருபுறமாக அழைத்துச் செல்கிறாள்).
மல்லிகா: (ரகசியமாக) அரசர் தனது ஆணையை ரத்து செய்துவிட்டார். அந்த விஷயம் விரைவில் இங்கு அறியப்படும் என எச்சரிக்கை செய்யவே நான் வந்தேன். இன்னும் மற்ற சமாச்சாரங்களும் உண்டு. மகாராஜா அஜாதசத்ரு தானே இங்குவந்து வழிபாடு நடத்த இருக்கிறார்.
ரத்னாவளி: அப்படியானால், மல்லிகா, உடனே சென்று மகாராணி லோகேஸ்வரியை இங்கு அழைத்து வா!
மல்லிகா: அவளே வந்து கொண்டிருக்கிறாள்!
அரசி லோகேஸ்வரி நுழைகிறாள்; அனைவரும் பணிந்து வணங்குகின்றனர்.
ரத்னாவளி: இதோ உங்கள் ஆசனம், மகாராணி.
அரசி: நான் ஸ்ரீமதியிடம் தனிமையில் பேச வேண்டும் (அவர்கள் தனிமையில் பேசுகிறார்கள்)
ஸ்ரீமதி!
ஸ்ரீமதி: என்ன, மகாராணி!
அரசி: இந்தா, நான் இதனை உனக்காகக் கொண்டுவந்துள்ளேன்.
ஸ்ரீமதி: என்னது அது?
அரசி: சுவர்க்கத்தின் அமுதம்.
ஸ்ரீமதி: எனக்குப் புரியவில்லை.
அரசி: விஷம்! அதனைக் குடித்து உன்னைக் காப்பாற்றிக்கொள்.
ஸ்ரீமதி: முக்தியடைய வேறுவழி இல்லையென்று எண்ணுகிறீர்களா?
அரசி: இல்லவே இல்லை! நீ இந்த வழிபாட்டு மேடைமுன்பு நடனமாட வேண்டுமென்று ரத்னா ஏற்கெனவே அனுமதி வாங்கி விட்டாள். அந்த ஆணையை நீ நிறைவேற்ற வேண்டுமென்று அவர்கள் உன்னை வற்புறுத்துவார்கள்.
ரத்னாவளி: நேரமாகிவிட்டது மகாராணி! நடனம் தொடங்கட்டும்.
அரசி: குடித்துவிடு! இப்போது நீ இறந்தால் சுவர்க்கத்திற்குச் செல்வாய். இங்கு நீ நடனமாடினால், நரகத்திற்கான கீழ்த்தரமான பாதையில் செல்வாய்.
ஸ்ரீமதி: ஆனால் முதலில் நான் அரச கட்டளையை நிறைவேற்ற வேண்டாமா?
அரசி: அப்படியானால் நீ நடனமாடப் போகிறாயா?
ஸ்ரீமதி: ஆமாம்.
அரசி: உனக்கு பயமே இல்லையா?
ஸ்ரீமதி: இல்லவே இல்லை.
அரசி: அப்படியானால் யாருமே உன்னைக் காப்பாற்ற முடியாது.
ஸ்ரீமதி: ஆம்; ரட்சிப்பவரைத் தவிர யாராலுமே என்னைக் காப்பாற்ற முடியாது.
ரத்னாவளி: இனியும் காலந்தாழ்த்த முடியாது, மகாராணி. வெளியே எழும் கூச்சல்களைக் கேட்டீர்களா? கலகக்காரர்கள் அரண்மனைத் தோட்டத்தை உடைத்தெறிந்து உள்ளே நுழையப் போகிறார்கள். நாட்டியப்பெண்ணே, ஆரம்பி!
(ஸ்ரீமதி பாடியவாறே ஆடத் தொடங்குகிறாள்)
ஸ்ரீமதி: என்னை மன்னிப்பீர், மன்னிப்பீர்!
எனது வணக்கங்களை ஏற்றுக்கொள்வீர்:
ஏனெனில் ஓ ஈடிணையற்றவரே, நான் தங்களை நினைக்கும்போது,
எனது ஆத்மா, நடன அசைவுகளில் பொங்கிப் பெருகி
எனது உடலில் நிரம்பி வழிகின்றது.
எனது கைகால்களின் அழுகையே ஒரு சீராகப் பாடலாகித் தங்களின் புகழைப் பாடுகின்றது.
தங்கள் மீதான எனது அன்பு எனது அசைவுகளில் எழும் இசையில் பிரவகிக்கின்றது.
ரத்னாவளி: (குறுக்கிட்டு) என்ன இது? நடனமாடுவதாகப் பாவனையா? இந்தப் பாடலின் பொருள் என்ன?
அரசி: ஓ! அவளைத் தொந்தரவு செய்யாதே!
(ஸ்ரீமதி தொடர்கிறாள்).
(தொடரும்)