செஷன் முடிந்து என்னுடைய க்ளையன்ட் வெளியே வருவதற்குள் எங்களுக்கு உதவும் சுஜா படக்கென்று உள்ளே நுழைந்தாள். நான் திகைத்துப் போனேன். அவள் இப்படிச் செய்பவள் இல்லை. அவள் படபடக்க “மேடம், நீங்க குமரன் சாரை கொஞ்சம் பார்க்கிறீர்களா? அவர் டாக்டரைப் பார்க்கத் தான் வந்திருக்கிறார். ஆனால், ஒரு மணி நேரத்தில் பத்து கிளாஸ் தண்ணீர் குடித்து, இப்படி அப்படி நடந்து கொண்டு இருக்கிறார். மேடம், அவர் இப்படி எல்லாம் இருந்ததில்லை. டாக்டர் ஒரு எமர்ஜென்சி பேஷன்ட் பார்த்துக் கொண்டு இருக்கிறார்” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். சரியென்று, குமரனை அழைத்து வரச் சொன்னேன்.
அடுத்து பார்க்க வேண்டிய க்ளையன்ட்டை நான் கைப்பேசியில் அழைத்து விளக்கிய போது அவரும், “புரிகிறது, அவர் பதட்டமாக இருக்கிறார்”, என்றார்.
தயங்கித் தயங்கி குமரன் வந்தார். என்னைப் பார்க்க வரவில்லை என்றார். அவருடைய நிலைமையைப் பற்றி நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை. மாறாக, எப்போதும் அவர் குறுக்கெழுத்து (crossword) செய்வதைப் பார்த்து இருக்கிறேன். அதற்கென்று ஒரு சிறிய பென்சில் வைத்திருப்பார். அவை எதுவும் இல்லாததை அவர் கவனத்திற்கு நான் கொண்டு வந்ததும் மிக மிக மெல்லிய புன்னகை ஒடி மறைந்தது. உடனே, தனக்கு அவசரம், மனைவி வான்மதி தேடுவதற்குள் வீடு திரும்ப வேண்டும் என்றார். காரணம் கேட்பதற்குள் டாக்டர் அவரை அழைப்பதாக சுஜா வந்து சொன்னதும் அவர் ஓட்டமும் நடையுமாய் போனார்.
ஏறத்தாழ பத்து நிமிடத்தில் டாக்டர் என்னை அழைப்பதாக சுஜா சொல்ல, சென்றேன். இதுவும் வழக்கத்திற்கு மாறானது. நான் உள்ளே நுழைந்ததும் டாக்டர் குமரனைப் பார்த்து, என்னுடன் ஆலோசிக்கப் பரிந்துரை செய்தார். உடனே குமரன், “டாக்டர், அப்படி எல்லாம் எனக்கு மனநலப் பிரச்சினை ஒன்றும் இல்லை” என்றதும், டாக்டர் விளக்கினார். “நீங்கப் புரிந்து கொள்ள வேண்டும், நீங்க விவரித்த சம்பவங்கள் உங்களைத் தடுமாறச் செய்து இருக்கிறது. உங்களுடைய மனநலத்தைத் திடப் படுத்த மாலதி உதவுவாள். மருந்து எதுவும் இல்லாமல். உங்களுடைய இன்னலை ஆழமாகப் புரிந்து கொண்டு, உங்களுடைய வளங்களை வைத்தே ட்ரீட் செய்வார்கள், மன நலத் துறையில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்பவர்கள். ஒரு நாலு ஐந்து செஷன்ஸ் வந்ததும் உங்களுக்கே புரியும். கரெக்ட் தானே மாலதி” என்றார். ஒப்புதல் தெரிவித்தேன்.
இப்படித் தான் குமரன் தயக்கம் கலந்த அச்சத்துடன் வர ஆரம்பித்தார். ஐம்பது வயதுடையவர், சொந்த நிறுவனம், குழிப்பந்தாட்டம் (கோல்ஃப்) விளையாடுவது, பல தொண்டு நிறுவனங்களின் சேவை செய்வது, சனி-ஞாயிறு க்ளப் போவது என்று வாழ்க்கை ஓடியது.
சமீபகாலமாக வெவ்வேறு விதமான மாற்றங்களாம். எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், வேலையில் பல இன்னல்களைச் சந்திக்க ஆரம்பித்தாகக் கூறினார். குறுக்கெழுத்து போடக் கஷ்டமாக இருக்கிறதாம், இதனால் குறுக்கெழுத்துத் தாளின் மேலே கண் பட்டாலே பல்லைக் கடித்து, அதைத் தட்டித் தள்ளி விடுவாராம். அதைப் பார்த்தாலே கோபம் உருவாகிறது என விவரிக்க ஆரம்பித்தார்.
குழிப்பந்தாட்டத்தின் போது, எங்கே வான்மதி அழைத்து விட்டுத் தான் கவனிக்காமல் போனோமோ என்று கைப்பேசியை அவ்வப்போது செக் செய்து கொண்டு இருப்பாராம். அவளுடைய அழைப்பை உடனடியாக எடுக்காவிட்டால் அவளைச் சமாதானம் செய்வது சாமானியமானது அல்ல என்றார்.
சாப்பிடப் பொறுமை இழந்தது என்றார். இதெல்லாம் ஏன் இப்படி? எதற்காக? ஒன்றும் புரியவில்லை என்றார்.
குடும்பத்தைப் பற்றி ஒரு வரியில் அவசரமாகச் சொல்லி முடித்தார். மனைவி வான்மதி, மகள் தனுஜா. முதல் மகள் வனஜா, கணவனுடன் வட இந்தியாவில் இருக்கிறாள்.
மேற்கொண்டு சொல்லத் தயங்கினார். அவரை ஆசுவாசப் படுத்தி, இங்குப் பகிருவதைப் பகிரங்கமாக யாரிடமும் சொல்ல மாட்டேன் என உறுதி கொடுத்தேன். அவசரமும் இல்லை என்றேன். தனக்கு நடப்பதைக் கவனித்து, குறித்துக் கொண்டு, எப்போது தயாராக இருக்கிறோம் எனத் தோன்றுகிறதோ அப்போது வரச் சொன்னேன்.
இரண்டு வாரத்திற்குப் பிறகு குமரன் வந்தார். ஆரம்பத்தில் கவனிக்க எதுவும் இல்லை என்ற நிலையிலிருந்ததாகக் கூறினார். ஆனால் பல முறை தொண்டு நிறுவனத்தினர் அவரிடம் மிகத் தயக்கத்துடன் “நீங்க இதைக் கொண்டு வருவதாக / செய்வதாகச் சொன்னீர்களே?” என்ற வாக்கியம் திரும்பத் திரும்பக் கேட்க, குமரன் திகைத்தார். அதே மாதிரி நண்பர்கள், நிர்வாகிகள், “……மறந்து போய்விட்டீர்களா”? குழிப்பந்தாட்டத்திலும் நேர்ந்தது. நண்பர்கள் ஜாடையாகக் கேலி செய்தார்கள். வீட்டில் தோட்டக்காரன் “ஐயா, பூ பறிக்க சொல்லல!” என்று அவரையே பார்த்து நின்றான். ஆனால் ஏனென்றும், எதற்காக இப்படி ஆகிறது என்றும் தெரியவில்லை என்றார்.
ஸ்ட்ரெஸ் மன உளைச்சல், அல்லது மன அழுத்தம் நிலைகளில் இவ்வாறு ஆகலாம்.
வீடு, வேலை, உறவினர்களைப் பற்றி விளக்கினார். இவற்றை விவரிக்கும் போது அவருடைய உடல் மொழி பல விஷயங்களைத் தெரிவித்தது. தான் விவரிப்பதையும் தன்னை பாதிக்கும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் குமரன் இல்லை. நமது மனம் அறிந்து, ஏற்றுக்கொள்ளும் வரை இப்படி ஒரு நிலை நீடிக்கும். அதனால் தான் ஏன்- எதற்காக என்றது அவருக்குக் கேள்வியாக நிலவியது.
உடல் மனம் ஒன்றை ஒன்று தாக்குவதை அவராகப் புரிந்து கொள்ள, இந்த முறை தடுமாற்றம், சஞ்சலம், மறதி ஏற்படும் சமயத்தில், சிந்தனை- உணர்வு- உடலின் நிலை இவை மூன்றையும் தாளில், நேரம் தேதியுடன் எழுதிக் கொண்டு ஒரு வாரத்திற்குப் பிறகு வரச்சொன்னேன்.
மூன்று நாட்களிலேயே குமரன் அவசரமாகப் பார்க்க வந்துவிட்டார். ஏதோ ஒரு தவிப்பு, சஞ்சலம், நாள் முழுவதும் தன்னை சூழ்ந்து கொள்வது போல இருப்பதாகப் பகிர்ந்தார். குறிப்பாகக் கைப்பேசியில் அழைப்பு மணி அடித்தாலே உடனே பதட்டமாக ஆவதும், வேர்வை ஊற்றுவதையும் கவனித்தாராம்.
இதனுடன் வான்மதி மேல் ஆத்திரம், எரிச்சல் இருக்கிறதோ என்ற அச்சம், கேள்வி அவர் மனதில் எழுந்துள்ளது. அதனாலேயே வந்ததாகக் கூறினார். இதுவரையில் இருந்த உற்சாகம் படிப்படியாக நழுவியது என்றார். இப்போதெல்லாம் க்ளப் போவதோ, தொண்டு நிறுவனங்களில் சேவை செய்வதோ, விளையாடுவதிலோ மனம் போகாததை, இந்த ஹோம் வர்க் செய்யும் போது கவனித்ததாகக் கூறினார்.
அதைப் பல ஸெஷன்களில் ஆராய்ந்தோம். வான்மதி பொழுது போக்காகப் பத்திரிகையில் எழுதுவதும், லேடீஸ் க்ளப் தலைவி என்றும், வீட்டைக் கவனிப்பதுமாக இருந்தாள். நல்ல வசதியான குடும்பத்தில் வளர்ந்தவள். வாழ்க்கைப் பட்டதும் அவ்வாறே. மகள் தனுஜா கல்லூரி படிப்பு, தன் தேவைகளைத் தானே பார்த்துக் கொள்வாள். இது வான்மதிக்குப் பிடித்திருந்தது.
கல்யாணமான மூத்த மகள் வனஜாவின் வாழ்க்கை அழகாக இருந்தது. அவள் மிகக் கலகலப்பான பெண். கல்யாணம் ஆகிப் போன இடமும், கலகலப்பாக, அக்கம்பக்கத்தினருடன் ஒரு குடும்பத்தைப் போல இருந்தார்கள். அங்குள்ள கலாச்சாரம். “அபியும் நானும்” படத்தின் வடக்கு இந்தியக் குடும்பம் போல.
நட்பு, தோழிகள் இருந்தாலும், அம்மா அப்பாவை வனஜா அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்துப் பேசுவாள். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் அவ்வளவு நெருக்கமாகப் பழகி வருவதால் அவர்களும் இதில் சேர்த்தி உண்டு, பேசுவார்கள். வான்மதிக்கு வியப்பாக இருந்தது. அவர்களோடு பேசுவது ஏறத்தாழ ஒரு மணி நேரமாகி விடும். சந்தோஷம் தான். ஆனால் ஓய்ந்து போய்விடுவாள். குமரன் ஆச்சரியப் பட்டார்.
வனஜாவின் கல்யாணம் ஆன முதல் ஆண்டு என்பதால் அவர்கள் கலாச்சார பழக்கத்தின்படி வான்மதியும் குமரனும் தம்பதியாகப் பண்டிகைகளுக்குச் சீர் பட்சணம் தரப் போய் வந்தார்கள்.
அந்த இடத்தில் ஒவ்வொருவர் வீட்டுக்குப் போக வருவதில், அவர்களுக்குப் பிடித்த பலகாரத்தைச் செய்து கொடுப்பதை உண்டு கொண்டு பேசுவதில், ஒன்று கூடி கும்மாளம் போடுவதில் நாட்கள் ஓடிவிட்டன. வனஜா அந்த கலாச்சாரத்தில் ஒன்று கலந்து விட்டிருந்தாள். மனதிற்குள் குமரன் பெருமைப் பட்டார். வான்மதிக்கு இன்னும் ஆச்சரியம், ஆடிப்போய் விட்டாள். நம்பமுடியவில்லை.
அங்கேயும் சரி, திரும்பி வந்த பின்பும் வான்மதி மிகச் சோர்வாக இருந்தாள். பண்டிகை காலம் ஆகையால் வான்மதியின் தந்தையும் அவர்களைப் பார்க்க வருவது வழக்கம்.
பல வருடங்களாகவே, இன்று வரை, மாமனார் குமரனிடம், “தைரியமா ஆம்பளையா இருங்க” என்று சொல்வதுண்டு. குமரனின் தந்தை முதலில் இதை ஆரம்பித்து வைத்தார். குமரன் தலைக்கனம் இல்லாமல் எல்லோருக்கும் உதவுவார், மிகப் பணிவாகப் பேசி நடப்பார், உடலும் அதே போல். அவர் தந்தை, மாமனார் இருவருக்கும் ஆண்பிள்ளை இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்ற மனப்பான்மையால் இந்த ஒருவரியை எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அதைக் கேட்டதும் குமரனுக்கு அவமானமாகத் தோன்றும். தன் கல்யாணத்தின் போது தந்தை வழக்கம் போல எல்லோர் மத்தியிலும் சொன்ன பிறகு மாமனாரும் சேர்ந்து கொண்டார்.
மாமனார் சொல்வதைக் குமரனின் அக்கா கேட்கும் போதெல்லாம் குமரனைப் பரிதாபமாகப் பார்த்தவாறு, வான்மதியிடம் “கணவன் பக்கம் பேசாத மனைவி நீ” என நிந்தனை செய்வாள். வான்மதி பொருட்படுத்தாமல் இருப்பாள். தன் ஆண்மையைக் கொச்சை செய்வதாக நினைத்து, இந்த நடத்தை குமரனைக் கோபம் மூட்ட ஆரம்பித்தது. மொளனமாக குமரன் இருந்தாலும் மனத்திற்குள் புழுங்கிக் கொண்டு இருந்ததாகப் பகிர்ந்து கொண்டார். புதைக்கப் பட்ட இவை தலையைக் காட்ட, விரக்தியாக துவங்கி விட்டது.
பல வருடங்களாக ஓடிக் கொண்டிருந்த இந்த பிரச்சினைகள் திடீரென்று ஏன் இப்போது தலை காட்ட வேண்டும் என்பதைக் குமரன் அடுத்த சில ஸெஷன்களில் புரிந்து கொண்டார். இன்று வரை வேலை, தொண்டு, விளையாட்டு, பொழுது போக்கு எனப் பல விதமான வகையில் நேரம் போனது. வாழ்க்கை பல நோக்கங்களுடன் சென்றன. இப்போது படிப்படியாக ஒவ்வொன்றாக நின்றிருந்தது, கூடவே இந்த வெறிச்சோடி உணர்ச்சி சூழ்ந்தது.
இப்போது குமரன் தன் உணர்ச்சிகளின் தாண்டவத்தை அடையாளம் காண ஆரம்பித்தார். வான்மதி மேல் வரும் உணர்வு, எதிர்மறை எண்ணங்களைக் கவனிக்கச் சொன்னேன். திரும்பவும் இல்லை என்று துவங்கி, பின் ஒவ்வொன்றாக எண்ணிப் பார்க்க, அவருக்கு இப்போது புரிந்தது – அவருடைய மனக்குமுறல் இந்த ரூபத்தில் வெளிப்படுகிறது என்று.
வேதனைப் பட்டார் இது தன் சுபாவம் அல்ல என்று. இதை மையமாக வைத்து உரையாற்றிய பின்பே தெளிவு பிறந்தது. அதாவது தன் அக்காவின் சொல்லை அப்படியே ஏற்று, மனைவியை அந்த சமயங்களில் துஷ்டனாக நினைத்ததால் வான்மதி தன் மேல் ஆசை, அன்பு வைக்கவில்லை என்று நினைத்து, போகப் போக இதை உண்மை என்று எடுத்துக் கொண்டார். சில வாரங்களுக்கு இவ்வாறு உணர்ந்த சம்பவங்களை எழுதி, அவைகளை ஸெஷனில் பரிசீலனை செய்த பிறகே தான் எவ்வாறு தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளோம் என்ற நிலையைப் பார்க்க, அதைச் சுதாரிக்கப் பல வழிகளைச் செயல்படுத்த, இந்த நிலைமை, உணர்வு ஏற்படும் விதத்திலிருந்து வெளியில் வந்தார்.
இந்த புரிதலின் விளைவாக வேலையில் கவனத்தைச் சீர் செய்யத்தொடங்கினார். குழிப்பந்தாட்டம், தொண்டு நிறுவனங்களில் சேவை, சனி-ஞாயிறு க்ளப் போவது எல்லாவற்றிலும் ஈடுபாடு மறுபடி கூடியது. அது மட்டும் அல்லாமல், வான்மதியிடம் சமீபத்தில் நேர்ந்த மாற்றத்தைக் கவனித்து வந்தார்.
மகள் வனஜா தொலைப்பேசி / கைப்பேசி மூலம் அழைத்தாலே வான்மதி ஓரிரு நிமிடம் பேசி நிறுத்தி விடுவாளாம். போகப் போக அவளிடம் பேசும் போது வான்மதிக்கு உடல் முழுவதும் நடுங்கின.
வான்மதியின் இந்த தவிப்பைப் பார்த்த குமரன் மனதில் ஒரு பக்கம் “பாவம்” எனத் தோன்றியது. மற்றொரு பக்கம் ஏனோ சந்தோஷம் ஏற்பட்டது. குமரனால் இதை நம்பமுடியவில்லை. ஆழமாகப் பகிரப் பகிர, தெளிவு பிறந்தது. அதாவது தன்னை உதாசீனம் செய்தாள் என எண்ணி இந்த தவிப்பைப் பார்த்து இவ்வாறு தோன்றியது. பழி உணர்வு எழுந்தது. இதுவெல்லாம் தான் குமரன் மனதை வாட்டியது. உடல் மொழியாகத் தெரிந்தது இப்படி அப்படி நடப்பது என, மறதி, கோபமும். சஞ்சலமும் எழுந்தது.
இப்போது இதெல்லாம் புரிய, அடையாளம் கண்டு கையாளுவது என முடிவானதுமே வான்மதியின் நிலையைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. மனைவிக்கு ஆதரவாக இருக்க முடிவு செய்ததும் மனம் லேசாக ஆனதாகச் சொன்னார்.
அடுத்த படியாக வான்மதியின் மனநிலை திடப்படுத்த, அவளுடைய கவனத்திற்குக் கொண்டு வர வழிகளை அமைக்க ஆரம்பித்தோம். வான்மதியின் வருகை, முன்னேற்றத்தைப் பற்றி இன்னொரு சமயம் பேசலாம்.