சிறுவயதிலேயே எனக்குப் புத்தகம் படிக்க வேண்டுமென்கிற ஆசையுண்டு. ஆனாலும், தொடர் வேலைகள் மற்றும் குடும்பச் சூழல்களால் புத்தகம் படிக்கிற சூழல் வாய்க்காமலேயே காலம் கடந்து போய்க்கொண்டிருந்தது.
ஓராண்டிற்கு முன்னால் நான் கலந்துகொண்ட நிகழ்வில் எனக்கொரு புத்தகத்தை நினைவுப்பரிசாகத் தந்தார்கள். அந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு, எனக்குள்ளிருந்த புத்தக வாசிப்பார்வம் விழித்துக்கொண்டது. இப்போதெல்லாம் எனக்கு சிறிது நேரம் கிடைத்தாலும், புத்தகமெடுத்து வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றேன். சமீபத்தில் தேர்தல் பணிகளுக்குச் சென்றபோது கிடைத்த சொற்ப நேரத்திலும் இரண்டு நூல்களை வாசித்து முடித்தேன். பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’, சு.வெங்கடேசனின் நாவல்கள், நா.முத்துகுமார், பவித்ரா நந்தகுமாரின் கவிதைகள் நூல்கள் என என் வாசிப்புத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில் மு.முருகேஷ்’ என்னும் இந்நூலினை வாங்கி வந்தேன். இந்த நூலினைப் படிக்கும்வரை எனக்கு ஹைக்கூ என்றால் அது ஏதோவொரு கவிதை வடிவம் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த நூலைப் படித்த பிறகு, ஹைக்கூ எனும் ஒற்றைச் சொல்லுக்குள் இவ்வளவு நட்சத்திரங்களா என்று வியந்துதான் போனேன்.
இந்நூலில், மகாகவி பாரதி எழுதிய சிறுகட்டுரை ஒன்றின் வழியே 1916-ஆம் ஆண்டில் தமிழில் முதன்முதலில் அறிமுகமான ஜப்பானிய மரபுக்கவிதையான ஹைக்கூ பற்றிய அறிமுகத்தோடு, தமிழில் அறிமுகமாகி 2016-ஆம் ஆண்டில் நூற்றாண்டினைக் கண்ட ஹைக்கூ கவிதைகள் குறித்து கவிஞர் மு.முருகேஷ் எழுதிய கட்டுரைகள், ஹைக்கூ நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள், மதிப்புரைகள், இதழ்களில் இடம்பெற்ற ஹைக்கூ தொடர்பான அவரது நேர்காணல்களையும் அழகுற தொகுத்துத் தந்துள்ளார் முனைவர் சு.சேகர்.
நீண்டநெடிய மரபுடைய தமிழ்க் கவிதைப் பரப்பில், ஹைக்கூ கவிதை அறிமுகமான காலத்திலேயே பல கவிஞர்கள் ஆர்வத்தோடு ஹைக்கூ கவிதைகளை எழுதியுள்ளனர் என்பதை இந்நூலின் வழி அறிந்துகொண்டேன். கவிக்கோ அப்துல்ரகுமான், கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், ஓவியக்கவிஞர் அமுதபாரதி, அறிவுமதி, கழனியூரன், மித்ரா போன்றவர்கள் வரிசையில் மு.முருகேஷூம் தமிழ் மண்ணில் ஹைக்கூ கவிதைகளைப் பரவலாக விதைத்துள்ளார்.
இன்றைக்கு நாம் எதிலும் விரைவையே விரும்பும் ’ஃபாஸ்ட் ஃபுட்’ காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தின் வழி எல்லா செயலிற்கும் இயந்திரங்களை உருவாக்கி, உழைப்பின் நேரத்தைச் சுருங்கச் செய்துவிட்டோம். அதே போல, 30 பக்க அளவில் சிறுகதைகள் எழுதப்பட்ட காலம் மாறி, இன்றைக்கு ஒரு பக்கக் கதைகளையும், கடுகுக் கதைகளையும் வாசிக்கப் பழகிவிட்டோம். இந்தக் காலத்தின் தேவை கருதிய ஒரு கவிதை வடிவமாகவே ஹைக்கூ கவிதைகளை நான் பார்க்கின்றேன்.
கீழ்த்திசை நாடான ஜப்பானில் இந்த ஹைக்கூ எனும் மூவரி கவிதை வடிவம் தோன்றியிருப்பினும், இன்றைக்கு ஹைக்கூ அறிமுகமாகாத நாடுகளே இல்லை என்கிற அளவுக்கு உலகமெங்கும் பரவியிருப்பதை அறிய முடிகின்றது. ஹைக்கூ நால்வர்களான பாஷோ, பூஸன், இஷா, ஷிகி ஆகியோர், பெளத்த நெறியைச் சார்ந்த ஹைக்கூ கவிதைகளை ஜென் தத்துவத்தின் வழிநின்று படைத்தனர். ஹைக்கூ கவிதை வடிவத்தில் தான் சுருங்கியதாக இருக்கும். ஆனால், அதன் உள்அர்த்தங்களை விரித்துக்கொண்டே போனால் பல பக்கங்கள் நீளும்.
மூன்றே வரிகளில் மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு காட்சியை நம் மனதில் அப்படியே ஓவியம்போல் தீட்டிச் செல்வதே ஹைக்கூவின் சிறப்பாகும். முதலிரு வரிகளில் ஒரு காட்சியும், மூன்றாவது வரியில் ஒரு எதிர்பாரா இன்ப அதிர்வையும் வாசிப்பாளனுக்குள் எழுப்புகிறது நல்ல ஹைக்கூ.
இந்த நூலில், கவிஞர் மு.முருகேஷ், தான் படித்து ரசித்த பல நல்ல ஹைக்கூ கவிதைகளை நமக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றார். அவை நமக்கும் பிடித்துப்போகின்றன.
எடுத்துக்காட்டாக, ஓவியக் கவிஞர் அமுதபாரதி எழுதிய ஹைக்கூ ஒன்று;
‘
மீன் பிடிக்கப் போனான்
திரும்புகையில்
அவன் படகில் அவன்.’
மீனவர்களின் உயிர் பறிக்கப்படும் அவலத்தை வலியோடு வெளிப்படுத்துகிறது இந்தக் கவிதை.
கவிஞர் ராஜசேகர் எழுதியிருக்கும் ஒரு ஹைக்கூ;
‘கயிற்றில் நடப்பவன்
கீழே பார்க்கிறான்
தட்டில் சில்லறை.’
– என்ற வரிகளில் உழைப்பின் பயனைக் கீழ்நோக்கிக் பார்க்க, மனித உழைப்பு மட்டுமே மேலாக மிஞ்சுகிறது என்பதை வெகுஅழகாகப் பதிவு செய்துள்ளார்.
‘
வீட்டுக்கூரைக்குப்
பீர்க்கங்கொடியில் பாலம்
எறும்புகள் போய் வருகின்றன.’
– இது கவிஞர் நா.முத்துக்குமாரின் ஹைக்கூ. வீட்டின்மேல் படர்ந்திருக்கும் கொடியின்மேல் ஊர்ந்துசெல்லும் எறும்புகள் கவிஞருக்குப் பாலமாகத் தெரிகிறது. அட… என்ன கற்பனை என வியந்தேன்.
தமிழில் முதன்முதலாக நேரடியான ஹைக்கூ கவிதைகளை எழுதிய பெருமைக்குரியவர் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை என்பதும் இந்த நூலின் வழிதான் தெரியவந்தது. அவரெழுதிய புகழ்பெற்ற ஹைக்கூ இது;
‘இரவெல்லாம்
உன் நினைவுகள்
கொசுக்கள்.’
ஒருவரின் நினைவு நம்மை எப்போதும் ஏதோ ஒரு வகையில் தொல்லை செய்வதை கொசுக்களோடு கவிஞர் ஒப்பிட்டிருப்பது எவ்வளவு பொருத்தமானது என்பதைப் படித்து ரசித்தேன்.
தமிழ் ஹைக்கூ குறித்த ஒரு நூற்றாண்டின் அத்துனை தகவல்களையும் தேடி, திரட்டி எழுதியுள்ள கவிஞர் மு.முருகேஷ் எழுதியுள்ள ஹைக்கூ ஒன்றும் என் மனசுக்கு மிக நெருக்கமாக இருந்தது.
‘மகன் எட்டி உதைக்கையில்
தாயின் கைகள் அனிச்சையாய் வருடும்
வயிற்றுத் தையலை.’
தான் காயப்பட்டாலும், தான் ஈன்ற உயிருக்கு ஒரு துன்பமும் நேர்ந்து விடக்கூடாது என்று எண்ணுகிற தாய்மையின் உயிர் உன்னதத்தை குறைவான வார்த்தைகளில் செறிவாகப் பதிந்திருக்கிறார் மு.முருகேஷ்.
இந்நூலானது தமிழ்ச் சூழலில் வெறும் மூன்று வரித் துணுக்குகள் என்கிற புரிதலில் ஹைக்கூ எழுதுபவர்களுக்கு எது ஹைக்கூ என்பது பற்றிய தெளிவான புரிதலையும், சரியான திசை நோக்கி ஹைக்கூ பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நூலில் மேற்கோளாகக் காட்டியிருக்கும் ஹைக்கூ கவிதைகள்
அனைத்தையும் படித்து முடிக்கையில், அவை வெளிப்படுத்தும் உண்மையான உணர்வுகளையும் எண்ணங்களையும் அறியும்போது, நமக்குள்ளும் ஹைக்கூ எழுத வேண்டுமென்கிற ஓர் ஆர்வம் இயல்பாகப் பிறக்கிறது. இதுவே இந்த நூல் நமக்குள் ஏற்படுத்தும் மிகச் சிறந்த தாக்கம் என்று சொல்வேன். இந்த நூலை நேர்த்தியாகத் தொகுத்திருக்கும் முனைவர் சு.சேகர் மற்றும் சிறந்த முறையில் அழகுற வெளியிட்டிருக்கும் அகநி வெளியீட்டிற்கும் என் பாராட்டுகள்.
ஹைக்கூ கவிதை என்றால் என்னவென்று அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், இன்றைக்கு தமிழ் ஹைக்கூவின் போக்கு எப்படியுள்ளது என்று தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழில் ஹைக்கூ கவிதை எழுத ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் வழிகாட்டும் ஒரு ஒளிச்சுடராக இருக்கிறது என்பதைச் சொல்லுவதில் ஒரு வாசகியாகப் பெருமிதம் அடைகிறேன்.
தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில் மு.முருகேஷ்
தொகுப்பு : முனைவர் சு.சேகர்
பக்கங்கள் :168 விலை : ரூ.120
அகநி வெளியீடு, அம்மையப்பட்டு, வந்தவாசி – 604 408.