ஞாபகமும் மறதியும் – ஹெச்.என்.ஹரிஹரன்

அப்பா ………………….. ஒரு சரித்திரம் – chinnuadhithya

கொஞ்சம்கூட முன்னறிவிப்பு இல்லாமல் நண்பன் சுந்தர் வீட்டுக்குப் போய்விட்டோமோ என்று அழைப்பு மணி அடித்த நொடி குமாருக்குத் தோன்றியது.

சுந்தர் சிறுவயதிலிருந்து சினேகிதன். அவனுடைய அப்பாவையும் அப்போதிலிருந்தே தெரியுமென்றாலும்,  அவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அழையா விருந்தாளியாக வாசலில் நிற்கிறோமே என்று நினைத்தான்.

அவருக்கு டிமென்ஷியா வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகிவிட்டன. மூளையின் மடிப்புக்களில் தேங்கி நிற்கும் நினைவுகளில் பெரும்பாலானவை கால வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போக அதுவே அவருக்கும், அதனால் அவனுக்கும் பிரச்சினை ஆகிவிட்டது. நினைவுகள் மட்டுமின்றி, கசடறக் கற்றவைகளும், நிற்பவைகளும் அல்லவா அதில் போய்விட்டன?

அவரைப் பீடித்திருப்பது டிமென்ஷியா என்று ஆரம்பத்தில் தெரியாமல், சுந்தர் வெறுப்புடன் புலம்பிக் கொண்டிருப்பான். “என்னாச்சுடா எங்கப்பனுக்கு? அறிவே இல்லாமல், வேட்டி இடுப்புல இருக்கான்னு கூடப் பார்க்காம கட்டிலில் இருந்து இறங்கி நடக்கிறார்டா..” என்றான் ஒரு நாள்.

“டேய். படுக்கையிலேயே பாத்ரூம் போய்த் தொலைக்கிறார்டா.. அப்படி என்னடா தூக்கம்..” என்றான் மற்றொரு நாள். அது அடிக்கடித் தொடரவே , ராத்திரி நேரத்திற்கு அடல்ட் டயபர் போட்டு இன்றுவரை சமாளிக்கிறான்.

“சாப்பிடவே தெரியலைடா அதுக்கு.. நாங்க யாராவது ஊட்டி விடணும்… எங்களோட கவனம் எல்லாம் தன்மேல இருக்கணும்னு சுயநலம்..”

‘அது என்பது எது? யாரைச் சொல்கிறான் இவன்” என்ற கேள்விக்குறியுடன் குமார் நிமிர்ந்து பார்க்க,

“எல்லாம் எங்கப்பனைத்தான் சொல்கிறேன்” – அவனது அப்பா சுய அறிவை இழந்ததினால் அவனுக்கு அவர் ‘அது’வாகிப் போனார். தான் யாரென்று அறியாதநிலையில் அவர் தனது வயதான காலத்தில் அவனுக்குச் சுமையாகிப் போனார். சுந்தரின் அக்கா பெங்களூரில்தான் செட்டில் ஆகி இருக்கிறாள். எப்போதாவது வந்து பார்த்து விட்டுப் போகலாம்தான். பசங்க படிப்பு, அவர் ஆபீசில் பிசி என்று காரணங்கள் சொல்லித் தட்டிக் கழிக்கிறாள். அதிகம் போனால் வீடியோ அழைப்பில் தனது அப்பாவைப் பார்த்துவிட்டுத்  தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறாள்.

தினமும் வங்கி அலுவல்நேரம் முடிந்த மறுநொடியில், பையையும், ஹெல்மெட்டையும் தூக்கிக் கொண்டு வெளியில் இறங்குகிறவன், இப்போதெல்லாம் மானேஜருக்கு உதவி செய்கிறேன் என்று இரவு எட்டு மணி வரை அலுவலகத்திலேயே பழியாய்க் கிடக்கிறான். வங்கி அதிகாரிகளைப் போல ஒரு குமாஸ்தாவிற்கு அப்படி நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

கேட்டால், “வீட்டுக்குப் போகவே புடிக்கலைடா.. ஏதாவது பேசிக்கிட்டே இருக்காரு.. அதுவும் என்னைப் பார்த்தால் போதும்.. சம்பந்தமேயில்லாமல் பழைய கதையெல்லாம் இப்ப நடக்கிற  மாதிரி  திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டிருக்காரு.. அதான் இங்கயே கிடக்கிறேன்.” என்றான்.

குமார் கேட்கவே செய்தான். “ஏண்டா .. சொந்த அப்பனை நீ பாத்துக்காமல் உன் பொண்டாட்டிகிட்ட விட்டுட்டு வந்திருக்கே.. மாமனாருக்கு எல்லாம் செய்யணும்னு அவங்களுக்கு என்ன தலையெழுத்தா..?”

“நாந்தான் அவரோட புள்ளன்னு மட்டும் ஞாபகமிருக்கு போல.. என்னப் பார்த்தா மட்டும் எல்லா ஆர்ப்பாட்டமும் பண்ணுவாரு.. என் மனைவி கிட்ட ஒண்ணும் பண்ணமாட்டாரு..அதனாலதான் இப்படி.” என்றபடி உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

கடந்த ஆறுமாதங்களில் நிகழ்ந்த இவையெல்லாம் அறிந்தும் ஏன் சுந்தர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை.

அதனால் என்ன..?  சத்தமில்லாமல் திரும்பிப் போய்விடலாம் என்று கூட யோசித்தான். அந்த நினைப்பு சற்று தாமதமாகிவிட்டது போல.

சுந்தர் வந்து கதவைத் திறந்தான். எப்போதும் முகம் மலர்ந்து வரவேற்பவன் , அவனைப் பார்த்து “வாடா” என்ற போதும் வழக்கமான உற்சாகமின்றி இருந்தான்.

வீட்டினுள் நுழைந்ததுமே சுந்தர் அவனைத் தன்னுடைய அப்பாவின் அறைக்குக் கூட்டிக் கொண்டு போனான். எந்நேரமும் சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுகிறார் என்பதனால் அவர் கீழே இறங்கமுடியாதபடி, கட்டிலைச் சுற்றி இரண்டடி உயரத்திற்கு  கம்பியில் வேலி அமைத்து அதை ஒரு தொட்டில் போல் செய்து வைத்திருந்தான்.

ஆஜானுபாகுவான மனிதர், உடலில் கிள்ளக்கூட முடியாதஅளவு  சதை ஏதுமின்றி எலும்பு மூடிய தோலனாய் இருந்தார். ஆழ்குழிக்குள் விழுந்தவை போல் கண்கள் இரண்டும் உள்ளிருந்து மிரண்டபடி காட்சி அளித்தன. அவரது வாய்  தன்னிச்சையாக அசைந்து கொண்டிருந்தது. மேலே சுற்றும் விசிறியின் உபயத்தில் அவரது மூத்திர, மலநாற்றங்கள் டெட்டால் நெடியோடு சேர்ந்து கொண்டு அறையில் சுழற்றியடித்தபடி இருந்தன.

“அவரு பேசற மூடில் இருக்காரு போலத் தோணுது … எஞ்ஜாய் பண்ணிக்கிட்டு இரு. நான் ஒய்ப்கிட்ட சொல்லி ஏதாவது சாப்பிடக் கொண்டு வருகிறேன்..” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். ‘எதுவும் வேண்டாம்’ என்று அவன் சைகையில் காட்டியதை சுந்தர் கவனித்தமாதிரியே தெரியவில்லை. அவனுக்கு அங்கிருந்து போகவேண்டும் போல.. அவ்வளவுதான்.

இப்போது குமாரும் அவரும் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.அவன், ஒரு டிமென்ஷியா நோயாளியைப் பார்ப்பது இதுவே முதன்முறை.

சுந்தரின் அப்பா அவனை நேர்கொண்டு பார்த்தார். சாதாரண நாட்களில் அவர் பார்க்கும் பார்வையின் கூர்மை இப்போது இல்லை. அவனுக்குச் சிறுவயதிலிருந்தே அவரிடம் கொஞ்சம் பயம்தான். சுந்தரிடம் கூட அதைப் பற்றிச் சொன்னதுண்டு. “உங்கப்பா என்னைப் பார்க்கும் போது செஞ்ச தப்பு எல்லாத்தையும்  திறந்து விட்ட குழாய் மாதிரி வெளியே கொட்டிடுவோம்னு பயமா இருக்குடா “ என்று சொல்லியிருக்கிறான்.

அதற்கு சுந்தர் “மவனே.. நீ பண்ணின தப்பை மட்டும் சொல்லு.. என்னோடதையும் சேர்த்துச் சொன்ன .. கொன்னே புடுவேன்.” என்று சொல்வான்.

தற்போது அவர் பார்வையில் அவனைப் பார்க்கிறாரா அல்லது அவனுக்குப் பின்னால் மின்விசிறியின் காற்றில் சுவற்றில் ஆடும் மாதக் காலண்டரைப் பார்க்கின்றாரா என்று புரியவில்லை. ஆனால், முன்பு மாதிரி ஊடுருவும் பார்வை இப்போது அவரிடம் இல்லை என்றுதான் தோன்றியது.

ஒன்று அவனால்  நிச்சயமாகச் சொல்லமுடியும். அவருக்கு டிமென்ஷியா வந்த பிறகு, வெளிநபர்கள் யாருமே வராதபட்சத்தில் அவனது முகம் அவருக்கு வித்தியாசமாகவும் அதே சமயம் பரிச்சயமானதாகவும் தோன்றியிருக்கக்கூடும். அது அவர் முகத்தில் ஒரு மின்னல் கீற்றாய்ப் பளீரிட்டது.

மறுவிநாடியே யாரென்று புரியவில்லை என்பது போல், இரு கைகளாலும் தன்னுடைய தலைமுடியை இறுகப் பற்றிக் கொண்டார்.

குமார் எழுந்து நின்று அவர் அருகில் குனிந்தான்.

“நான்தான் அங்கிள்.. குமார் வந்திருக்கேன்..சுந்தர் ப்ரெண்டு.. தெரியுதா?” என்றான் சத்தமாக.

தலையை நிமிர்ந்து பார்த்தார். ஏதோ புரிந்தும் புரியாத மாதிரி தலையை ஆட்டினார்.”தெரியுது.. தெரியுது.தெரியுது” என்று ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் அவரது வாயிலிருந்து உருண்டு வந்தன. ஆனால் அதற்கு நேர்மாறாக முகபாவம் புரியவில்லை என்று காட்டியது.

குமார் அவரது கைகளைப் பற்றிக் கொண்டான்.

ஆறடி உயர மனிதர். அந்தக்கால பாஸ்கெட் பால் ப்ளேயர். அவரது உரம் பாய்ந்த கைகள், வலுவிழந்து நடுங்கிக் கொண்டிருந்ததை தனது கைகளில் உணர்ந்தான்.

சட்டென்று மடை திறந்த வெள்ளம் போல் அவர் பேச ஆரம்பித்தார். வாய் குழறியபடி இருந்தாலும் அவனால் அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“ஈஸ்வரி.. நீ சொன்னது ஓண்ணுவிடாம வாங்கிண்டு  வந்துட்டேன் .. நீ லிஸ்ட் குடுக்க மறந்துட்டே.. அதனால என்ன.. சத்தமாச் சொல்லிக்கிட்டுத்தானே நீ லிஸ்ட் எழுதுவ.. அதை ஞாபகப்படுத்திக்கிட்டு சாமான்கள் வாங்கிட்டேன். நீ எழுத விட்டுப் போனதும் இதுல இருக்கு…’

அவரது மனைவி ஈஸ்வரி இறந்து போய் பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ‘பழையதையெல்லாம் பேசுகிறார் என்று சுந்தர் சொல்வது இதைத்தானா?’

சில நிமிடங்கள் மௌனம்.

“ஏண்டா அறிவு. ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்னு சொல்லுவன்னு பார்த்தா..உனக்குத் தோணவேயில்லையா? கடைசி நாள் இன்னிக்குத்தானே.. சட்டுனு ஞாபகம் வந்திடுத்து… இந்தா பணம் .. கொண்டு போய்க் கட்டுவியா.. இல்லேன்னா அப்பவும் பணத்தோடத் திரும்பி வருவியா..”

பலவருடங்களுக்கு முன் நிகழ்ந்த அந்தச் சம்பவம் அவனுக்கே ஞாபகத்தில் இருந்தது. மனிதர் அலுவலக வேலைகளின் நடுவே பள்ளிக்கூடத்திற்கு வந்து அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கட்டிவிட்டுத்தான்  போனார்.

“சம்பந்தி.. நாங்க சொன்னதுல ஒண்ணுகூட பாக்கி வைக்காமல் எங்க பொண்ணுக்குச் செஞ்சிடுவேன்னு சொன்னபடி பண்ணிட்டேன்.. ஒருதடவை சொன்னாப் போதும் எனக்கு..”

இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனவர், களைத்துப் போய் அப்படியே  உறங்கத் தொடங்கினார்.

அவர் சொன்னதென்னவோ உண்மைதான். பிசியான அலுவல்களுக்கு இடையேயும் அவர் குடும்பத் தலைவருக்குரியத் தன் கடமைகளைச் செய்ய மறந்ததே இல்லை.

சுந்தர் சில பிஸ்கெட்டுகளும், காப்பியும் கொண்டு வந்தான். “என்னடா… ஒரு ஆளு கிடைச்சிட்டான்னு  பேசிக்கிட்டே இருப்பாரே.. அதனாலதான் நான் இங்க வரதே இல்லை.. “ என்றான்.

குமார் ஓரிரு பிஸ்கெட்டுக்களைச் சாப்பிட்டுப் பின்னர் காப்பியைக் குடித்தான்.

குமாருக்கு  இப்போதும் ஞாபகத்திற்கு வந்தது. அவர்  பணி ஓய்வு பெற்றதும் பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை முழுமையாக எடுத்துக் கொண்டதாக சுந்தர் கூறியிருக்கிறான். அதுவும் பேத்தி அனு மீது அவருக்கு அலாதிப் பிரியம். தன்னுடைய மாதாந்திர பென்ஷன் பணத்தைச்  செலவழித்து அவள் பள்ளி செல்ல ஆட்டோ ஏற்பாடு செய்து அவரே பள்ளியில் கொண்டு விடுவதும் கூட்டி வருவதுமாக இருந்தார். ஒரு தடவை கேட்டபோது , “ஊரில் என்னவெல்லாமோ நடக்கிறதைப் படிக்கிறோம்.. அது நம்ம புள்ளக்கி நடந்துறக்கூடாது சுந்தர்..”என்று சொல்வாராம். அதையும் அவனே  பெருமையுடன் சொல்லியிருக்கிறான்.

அவர் தன்னையுமறியாமால் அனைத்தையும்  ஞாபகம் வைத்திருப்பது போல , ‘உங்களுக்காக இவ்வளவு செய்திருக்கிறேன்’ என்று  சொல்கிறார். ஆனால் சுந்தர்தான்  தன்னுடைய அப்பா அவனுக்காக, அவனது குழந்தைகளுக்காகக்கூட   செய்ததையெல்லாம் மறந்துவிட்டான் என்று தோன்றியது.

கனத்த இதயத்தோடு சுந்தரின் வீட்டை விட்டு இறங்கும் போது , அவர்கள் இருவரில்  யாருக்கு ஞாபகமறதி எனும்  வியாதி என்று அவனுக்குப் புரியவே இல்லை.

 

 

5 responses to “ஞாபகமும் மறதியும் – ஹெச்.என்.ஹரிஹரன்

  1. பல குடும்பங்களில் பெரியவர்களுக்கு கிடைக்கும் மரியாதை இப்படித்தான் இருக்கும்.

    Like

  2. டிமென்ஷியா ஒரு கொடுமையான நோய்தான்.இன்றைய சந்தைப் பொருளாதார உலகில் நல்லா இருக்குற முதியவர்களின் நிலையே கவலைக்கிடமானது தான் அதுவும் டிமென்ஷியா என்றால் அந்தோ பரிதாபம் தான்

    Like

  3. பெரும்பாலான குடும்பங்களில் தற்போது உள்ள நிலைமைகளை யதார்த்தமாக படம் பிடித்தது போல எழுத்தில். அருமை யோ அருமை. அடுத்த தலைமுறை இன்னும் எந்த அளவுக்கு போகுமோ என்பது தான் கவலை. Big gaaaaap.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.