சின்னஞ் சிறு மழைத்துளிகள் ஒன்று ஓடுகின்றன நதியைத் தேடி.
வளைந்தோடும் நதி, அதன் நுரைந்தோடும் ஆற்றல்
அதில் வழிந்தோடும் நீர், அது தழுவிய குன்றுகள்.
அதனால் தோன்றிய சுழிவுகள்
போகும் வழித் துணையாய் இணைந்த சிற்றாறுகள்.
நதியோடு கலந்த கரையோர மண்ணினால்
பூசப்பட்ட செந்நிற அரிதாரம்.,
பூக்களின் சேர்க்கையால் அதன் தனி அழகு
அதோடு கூடிய கட்டுக்கடங்கா இயக்கம்
சக்தியின் வெளிக்காட்டு.
அதன் வேகத்தில் ஒரு கம்பீர ஓட்டம்
பெரும் மழையில் பெருக்கெடுத்தது நதி.
மரங்கள் விழுந்தன கிராமங்கள் அழிந்தன.
வயல்கள் குளமாயின மக்கள் அழுதனர்
நதி தன் சக்தியை நினைத்து பெருமைப்பட்டது.
.
அதன் ஓட்டத்தின் சந்திப்பில் மிக ஆழமான பள்ளம.;
அதன் சக்திக்கு, அகங்காரத்திற்கு பெருமைக்கு ஒரு சவால்.
தடுக்கி கீழே விழுந்தது நதி., ஓ வென்று கதறியது.
என்னை காப்பாற்று என்றது இயற்கை அன்னையிடம்.
உன் தோற்றத்தை போக்கை மாற்றுகிறாய்
உன் சக்தியையும் பிறருக்காக உதவுகிறாய.;
அதன் முடிவைப் பார் என்றாள் இயற்கையன்னை
வெண்ணிற ஆடையாய் மாறி அமைதியானது நதி.
ஆடைக்குப் பின்னால், குன்றின் கரு மேனி.
சிதறிய நீர் துளிகளின் பிண்ணனியில்
வானவில்லின் தோற்றம். நதி அருவியானது.
அருவியின் அழகை இரசித்தன ஆயிரம் கண்கள்.
அதனை அரவணைத்து தங்களைத் துய்மையாக்கினார்கள் பலர்.
அருவியின் சக்தி மின்சாரமாகி நதி அருவியாகி ஒளியாகியது
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழக் கற்றுக்கொண்டது