செடார் வனக் காவல் தலைவன் ஹம்பாபாவையும் சொர்க்கத்திலிருந்து வந்த எருதையும் அனாயாசமாகக் கொன்ற கில் காமேஷ் மற்றும் எங்கிடு இருவரின் புகழ் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பாடப்பட்டன.
கில்காமேஷ் மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தான்.
அப்போது எங்கிடு அவனிடம் வந்து,
“நண்பா, நேற்று நான் ஒரு கனவு கண்டேன். உனக்குத்தான் தெரியுமே நம் கனவுகள் அத்தனையும் நனவாகிக் கொண்டிருக்கின்றன என்று. ஆனால் இது சற்று பயங்கரமான கனவு.
ஹம்பாபாவையும் சொர்க்கத்தின் எருதையும் கொன்ற நாம் இருவரில் ஒருவர் சாகவேண்டும் என்று அணு, காமேஷ் மற்றும் அனைத்து தேவர்களும் முடிவுசெய்துவிட்டார்கள். அதுதான் நியாயமான தண்டனை என்று அவர்கள் ஏகமானதாகக் கூறியதைக் கேட்டேன்.
சூரியதேவன் காமேஷ் நமக்காகப் பரிந்து பேசினாலும் என்வில் மிகவும் தீவிரமாக இருந்தார். முடிவில் சாகவேண்டியது நான்தான் என்பதையும் தீர்மானித்துவிட்டார்கள்” என்று சோகத்துடன் கூறினான் எங்கிடு.
அதைக் கேட்ட கில்காமேஷ் துக்கத்தின் எல்லைக்கே சென்றான். எங்கிடுவிற்கு மரணம் என்பதை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.
“நண்பா! இன்னும் சில நாட்களில் சாவு என்று கொடிய அரக்கன் என்னை உன்னிடமிருந்து பிரித்துவிடுவான்! சாவைப் பற்றிக் கவலை இல்லை! ஆனால் உன்னைவிட்டுப் பிரிவதுதான் எனக்கு மிகவும் துன்பமாக இருக்கிறது ” என்று எங்கிடு கூறினான்.
அவன் கண்ட கனவு நிஜமாவது போல எங்கிடு உடல்நலம் குன்றி படுக்கையில் விழுந்தான். ஜுர ஜன்னியில் சாவுத்தேவனை மனம் கொண்ட வரைக்கும் திட்டித் தீர்த்தான்.
“அடே! சாவுத் தேவா! செடார் காட்டை அழிக்கும்போது உன் இருப்பிடத்தைக் கண்டேன். உன் கோட்டையின் பிரும்மாண்டமான மரக் கதவை கில்காமேஷுக்கும் காட்டினேன். அப்பொழுதே அந்தக் கதவை உடைத்துத் தூள் தூளாக ஆக்கியிருக்கவேண்டும். அதைச் செய்யத் தவறிய காரணத்தால் இப்போது என்னைக் கொல்லத் துணிந்துவிட்டாய். பிற்காலத்தில் எவனாவது ஒருவன் அந்த மரக் கதவை உடைத்து சாவுத் தேவனான உன்னையும் வெற்றி கொள்வான். இப்போது என்னால் ஒன்றும் செய்ய இயலாவில்லையே” என்று அரற்றினான்.
மிருகமாக இருந்த தன்னை மனிதனாக்கிய வேட்டைக்காரர்களையும் அந்த விலை மாதையும் மனம் போனபடி திட்டினான். பின்னர் மனம் மாறி அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரும்படி சூரியக் கடவுள் காமேஷிடம் வேண்டிக்கொண்டான்.
அவன் குரல் ஒடுங்க ஆரம்பித்தது. அவன் கண்ட கனவின் மறுபாகத்தையும் கில் காமெஷிடம் மெல்ல நெஞ்சம் துடிதுடிக்கக் கூறினான்.
” நண்பா! ஒரு அதி பயங்கரமான உருவம் வானத்துக்கும் பூமிக்கும் மத்தியில் இருந்து என்னைப் பார்த்துக் கர்ஜிக்கிறது. ரத்தக் காட்டெறி போன்ற முகம். சிங்கத்தின் பாதங்கள். வல்லூரின் கூறிய நகங்கள் போன்ற கரங்கள். அவற்றைப் பார்த்த என் உடல் நடுங்கியது.அவன் என் தலை முடியைப் பிடித்துக் கொண்டான். என்னை இருட்டுத் தேவியின் அறைக்கு இழுத்துச் சென்றான். உனக்குத் தெரியுமே! அந்தப் பாதைக்குள் சென்றவன் மீண்டு வரமுடியாது என்று.
அந்த இருட்டு மாளிகை ஒரு கொடிய நரகம். அங்கே வெளிச்சம் கிடையாது. அங்கே வசிப்பவர்கள் உணவுக்குப் பதிலாக களிமண்ணைத் தின்கிறார்கள். மன்னர்களாகவும் பிரபுக்களாகவும் இருந்தவர்கள் அங்கே வேலைக்காரர்களைப் போல ஏவல் செய்கிறார்கள். பாதாளதேவியின் ராணி அங்கிருந்தாள். அவளது உதவியாளன் ஒருவன் கையில் இருந்த ஏட்டுப் புத்தகங்களைப் பார்த்து அங்கு அழைத்து வரப் படும் மனிதர்களின் கதியை தீர்மானிக்கிறான். அவன் என்னைப் பார்த்து ஏட்டைப் புரட்டுவதை என் கனவில் கண்டேன் நண்பா! ” என்று எங்கிடு புலம்பினான்.
கில் காமேஷ் மிகவும் துடி துடித்துப் போய்விட்டான். “துக்கமான கனவு கண்ட என் நண்பன் எங்கிடுவைக் காப்பாற்ற கடவுள்களிடம் முறையிடப் போகிறேன்” என்று கண்ணீருக்கிடையே கூறினான்.
இரவும் பகலுமாக எங்கிடுவின் அருகிலேயே இருந்து அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தான் கில்காமேஷ். ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல. பதினொரு நாட்கள். ஆனால் எங்கிடுவின் நிலைமை மிகவும் மோசமடைந்தது .
” நண்பா!போர்க்களத்தில் மடிந்திருந்தால் எனக்கு புகழாவது கிட்டியிருக்கும். இப்படி நோய்ப் படுக்கையில் வீழ்த்தி என்னை அணு அணுவாக சித்தரவதை செய்து கொல்கிறானே! உன்னைப் பிரியும் வெளி வந்துவிட்டதே நண்பா!” என்று கூறிக் கொண்டே கண்களை மூடினான் எங்கிடு.
தன் உடம்பின் பெரும் சக்தி தன்னைவிட்டுப் போனதைப் போல உணர்ந்தான் கில் காமேஷ்.
தன் உயிருக்கு உயிரான நண்பனின் மரணத்தை தன் துக்கத்தை தன் இதயத்தின் தவிப்பை நீண்ட கவிதையாக மக்கள் மத்தியில் கூறினான்.
என ஆருயிருனும் இனிய நண்பன் எங்கிடு!
அவனுக்காக என் குரலை எழுப்பி
நான் அழுகிறேன் துக்கப்படுகிறேன்.
என சகோதரனே எங்கிடு
என்னை ஏன் விட்டுப் போய்விட்டாய்?
என் விதி என்னை வஞ்சித்துவிட்டது
உன் இழப்பால் நான் செய்யலற்றவனாகி விட்டேன்
காட்டில் உன்னை வளர்த்த மிருகங்கள்
உன்னை எண்ணித் துக்கிக்கின்றன.
செடார் வனத்துப் பாதைகள் கூட
உனக்காக வருந்துகின்றன.
துக்கம் துக்கம் இதற்கு இணையாக
எந்தத் துக்கத்தைச் சொல்வது ?
தேசம் பூராவும் அழுகையின் குரல்
உனக்காக எதிரொலிப்பது
உன் காதில் விழுகிறதா?
ஒரு தாய் மகனுக்காக அழுவதைப் போல
ஊரே உனக்காக அழுகிறது
நாம் வேட்டை ஆடிய மிருகங்களும்
உனக்காகக் கண்ணீர் வடிக்கிறது
நம் யூபிரடிஸ் நதியின் தண்ணீரும்
உனக்காக அழுகின்றன.
எருதைக் கொன்ற நம் வீரத்தைப் புகழ்ந்த
வாலிப வீரர்களும் உனக்காக அழுகிறார்கள்
உன்னுடன் காதல் புரிந்த பெண்ணழகி
உனக்காகத் துக்கிக்கிறாள்
உன்னை நேசித்த தேசத்து மக்கள் அனைவரும்
கண்ணீர் வடித்துக் கதறுகிறார்கள்!
நீ அழியாத தூக்கம் தூங்குகிறாயே !
எழுந்திருக்கமாட்டாமல் படுத்துக் கிடக்கிறாயே
என சொல் உன் காதில் விழவில்லையே
என்ன செய்வேன் என் உயிர் போன்ற
என் நண்பனே ! தோழனே எங்கிடு! “
நண்பன் எங்கிடுவிற்காக ஏழு நாட்கள் துக்கம் அனுஷ்டித்தான் கில் காமேஷ். அவனுக்காக , தன் கேசத்தை வெட்டாமல் நீளமமாக வளர்க்க உறுதி கொண்டான். அதுமட்டுமல்லாமல் சிங்கத்தின் தோலையே உடையாக அணிந்துகொண்டு காடுகளில் எல்லாம் சுற்றவும் சபதம் எடுத்துக் கொண்டான்.
அதற்கு முன் தன் தேசத்தில் இருந்த அனைத்து தங்க வேலை இரும்பு வேலை மர வேலை செம்பு வேலை செய்யும் அத்தனை பேரையும் அழைத்து எங்கிடுவிற்காக ஒரு மிகச் சிறந்த உருவச் சிலையைச் செய்யும்படி உத்தரவிட்டான். தங்கத்தினால் ஆன எங்கிடுவின் உருவச் சிலையின் மார்பில் மணிகளை இழைத்தார்கள். ஒரு அரிய மரத்தினால் ஆன மேடை செய்து அருகில் மரகத்தில் செய்த கிண்ணத்தில் மதுவும் நீல மணிக் குப்பியில் வெண்ணையும் வைத்து எங்கிடுவின் உருவாக்க சிலையை சூரியதேவனுக்கு பலியாக அளித்தான் ஊருக் நகரின் மன்னன் கில்காமேஷ் !
எங்கிடுவின் புகழ் 5000 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் நிலைத்து நிற்கிறது
தொடரும்
நன்றி: க நா சு வின் கில்காமேஷ்