ஆற்காட்டில் ஒரு ’டெல்லி கேட்’ !
சென்னை பங்களூரு நெடுஞ்சாலையில், பாலாறு மேம்பாபாலம் தாண்டியவுடன், நேராக ஆற்காடு செல்லாமல், இடது பக்கம் திரும்பி திருவண்ணாமலை செல்லும் சாலையில் கொஞ்ச தூரம் சென்றால், ஒரு கிராமத்து பேருந்து நிறுத்தம் வரும். தென்னங்கீத்து வேய்ந்த கூரையடியில் டீக் கடை, சின்ன பெட்டிக்கடை, குத்துக்காலிட்டு அமர்ந்து, வெற்றிலை மென்றபடி காத்திருக்கும் பெண், பீடி வலித்தபடி, லுங்கியில் நிற்கும் ஆண், நரை முடியுடன், வெற்றுத் தோளில் துண்டுடன் காந்தி வேட்டி கட்டியிருக்கும் முதியவர் என ஒரு கிராமத்து ஓவியமாய்த் தெரியும் அந்த இடம் – சாலைக்கு எதிரில், தங்க முலாம் பூசிய அம்பேத்கார், கையில் சட்டப் புத்தகங்களுடன் ஓரமாய் நீல வண்ணக் கம்பிகளாலான கூண்டுக்குள் நின்று கொண்டிருந்தார். அவரைக் கடந்து வலது புற சாலையில் இரண்டு கி.மீ சென்றால் வரும் இடம் ‘கலவை’ – அங்கிருக்கும் ‘கமலக்கண்ணி அம்மன்’ திருக்கோயிலுக்குச் சென்றதையும், தவத்திரு சச்சிதானந்த மெளன சுவாமிகளை சந்தித்ததையும் இன்னொரு வியாசத்தில் சொல்கிறேன்! இப்போது சொல்ல வந்தது அதுவல்ல….
திருவண்ணாமலை போகின்ற சாலையில், இடது பக்கத்தில் அந்தக் கால கட்டிடம் ஒன்று – ட்ரபீசியத்தின் பீடத்தை வெட்டி உட்கார வைத்தாற்போல – வித்தியாசமான ‘லுக்’குடன் நின்றுகொண்டிருக்கும். ‘ஆற்காடு நவாபுகளின் மனைவிகள் குளிக்கும் இடத்தின் முக வாயில் இது’ என்கிற தொனியில் யாரோ சொல்லி வைக்க, ஒவ்வொரு முறையும் வாசனாதித் திரவியங்களில் குளித்து, ஜிகினா உடைகளுடன், தலையில் வெள்ளை டர்க்கி டவலுடன் ‘கை’ ஆட்டும் ஈஸ்ட்மென் கலர் நாயகிகள் அங்கு நிற்பதாக நினைத்தவாறு கடந்து சென்றிருக்கிறேன். எப்படி ஆற்காட்டிலிருந்து இவ்வளவு தூரம் வந்து குளிப்பார்கள் – குதிரை வண்டியில்…, பல்லக்கில்…, அந்தக் கால மோட்டாரில் ….
இந்த முறை இறங்கிப் பார்த்து விடுவோம் – எதோ ’தொல்பொருள் ஆராய்ச்சி’ சாயலில் ஒரு போர்டு வேறு இருக்கிறதே என்று எதிர்ப் பக்கம் காரை நிறுத்தி விட்டு, அதி வேகமாக வந்த கார்கள், டூ வீலர்களுக்கு வழி விட்டு, கட்டிடத்துக்கு அருகில் வந்தேன். சந்தேகமே இல்லை, ’இந்திய தொல்லியல் துறை’ போர்டுதான் – நீலக் கலரில் வெள்ளை எழுத்துக்கள்! முதலில் தமிழில், பின்னர் இந்தியில், அதன் பின்னர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தது –
இந்த இடம் ’1958 (?53) ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் சட்டத்தின்’ கீழ் தேசீய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது – இதை சிதைப்பவர்கள், அகற்றுபவர்கள், தோற்றப் பொலிவை மாற்றுகிறவர்கள் ……. தண்டிக்கப் படுவர். (இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப் படுவர்) என்பதாக எழுதப்பட்டிருந்தது. மற்றபடி வேறு விபரம் ஒன்றும் கொடுக்கப் படவில்லை – பெயர், கட்டியவர், எதற்காக, ஏன் என்ற விபரங்கள் அந்த அறிவிப்பிலோ, அருகில் வேறு இடத்திலோ இல்லை.
கோபி நிறப் பூச்சுடன், சுற்றிலும் புல்லும் செடிகளும் மண்டியிருக்க, இரண்டு பக்கமும் பத்து அல்லது பதினைந்து அதிக உயரமில்லாத படிகளுடன் நின்று கொண்டிருந்தது அந்தக் கட்டிடம். படிகளில் எல்லாம் சிறு செடிகள்! ஒரு ஆர்ச் வளைவுடன் வாயில் – உள்ளே செல்ல முடியாதபடி, கருங்கற் குட்டைத் தூண்கள். மேல் தளம் அந்தக் கால மூன்று ஜன்னல்கள் கொண்ட அறை போல இருந்தது. நான்கு மூலைகளிலும் சிறு மண்டபங்கள் கொண்ட கல் தளம். கட்டிடத்தைச் சுற்றி இரும்புக் கம்பிகளாலான தடுப்பு வேலி. அதை ஒட்டி, மர நிழலில் காலி பாட்டில்களும், பிளாஸ்டிக் கவர்களும் முந்தைய இரவுகளின் கதை சொல்லின!
இது நிச்சயமாகக் குளிப்பதற்கான இடம் அல்ல – வேறு என்ன? சிறிது கூகிள் சாமியிடம் வேண்டியதில் கிடைத்த தகவல்கள் சுவாரஸ்யமானவை:
ஆற்காட் கோட்டை – ஆற்காட் ‘டெல்லி கேட்’ எனப்படும் இந்தக் கட்டிடம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஆற்காட் நவாப் பதவிக்குப் போட்டி – சண்டையிட்ட இருவர் சந்தாசாஹிப், மொஹமத் அலி
ஒரு தட்டச்சராக கிழக்கிந்தியக் கம்பெனியில் சேர்ந்த ராபர்ட் கிளைவ், சென்னை வந்து, பின்னர் ரானுவப் பயிற்சியோ, அனுபவமோ இல்லாத படையுடன் தனது தந்திரத்தால் மட்டுமே, உள்ளே புகுந்து, சந்தாசாஹிப்பை விரட்டியடித்ததாக (1751) வரலாறு! இந்த வெற்றியைக் கொண்டாடக் கட்டப்பட்டதுதான் இந்த ‘டெல்லி கேட்’ . இந்த முதல் வெற்றியே இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் ஏற்பட முதல் படியானது.
தரைதளம் – இராணுவ தளவாடங்களைப் பாதுகாத்து வைப்பதற்கும், முதல் தளம் (மாடி) வீரர்கள் தங்குவதற்கும், ஆற்காடு எல்லையிலிருந்து எதிரிகளைக் கண்காணிக்கவும், பீரங்கித் தாக்குதல் நடத்தவும் கட்டப்பட்டன. மிக உறுதியான கட்டிடம். இதில் கிளைவ் தங்குவதற்கான அறையும் இருந்ததாம். ‘Hero of Arcot’ என்று கொண்டாடப் பட்டவன் கிளைவ். (கல்கத்தாவில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அவன் மீது பிரிட்டிஷ் அரசு வழக்கு தொடுக்க, மன உளைச்சலில் தன் 49 ஆவது வயதில் லண்டனில் தற்கொலை செய்துகொண்டான்!).
பிரிட்டிஷாரின் தென்னிந்திய நுழைவாயில்தான் இந்த ஆற்காடு ‘டெல்லி கேட்’. சரித்திரத்தின் மிக முக்கியமான நிகழ்வின் சின்னமான இந்தக் கட்டிடம் கேட்பாரற்று, சாலையோரமாக நின்றுகொண்டிருக்கிறது.
பார்த்தபடியே திரும்பினேன் – பிரித்தாளும் சூழ்ச்சியின் முதல் பீரங்கி வானை நோக்கி வெடித்ததைப் போன்ற பிரமை. கேளிக்கைகளுக்கும், கும்மாளங்களுக்கும், பொறாமைக்கும், பகையுணர்ச்சிக்கும் இடையே புகுந்த பீரங்கியின் வெற்றிச் சின்னம் – நாம் இதிலிருந்து ஏதாவது கற்றுக்கொண்டோமா?
ஈஸ்ட்மென் கலர் பொம்மைகள் மேல் தளத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுவதைப் போலத் தோன்றியது!