ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ (999)
கங்கைக் கரையின் காவலனாகிய குகன், பரதனது பரந்த சேனையைக் கண்டபோது, அவன் இராமனை வெல்லக் கருதி வந்தான் என்று எண்ணித் தன்னுயிரையும் ஒரு பொருளாகக் கருதாது போர்க் கோலம் புனைந்து கூறுவதாகப் படைத்த பாடல்.
அவனுடைய சினம் எல்லை மீறுகின்றது.
“இந்த ஆழமான கங்கையாற்றினை இவர்கள் கடந்துசெல்ல என் துணை வேண்டுமல்லவா? எப்படிச் செல்கிறார்கள் எனப் பார்த்துவிடுகிறேன்.
“இவர்களுடைய பெரிய யானைப்படையைக் கண்டு அஞ்சி ஓடுபவனோ நான்? இல்லை இல்லை!
“நீ என் தோழன் என்று ராமன் சொல்லியது ஒரு அரிய உயர்வான சொல் அல்லவா? அதற்கு நான் எவ்வளவு மதிப்புக் கொடுக்கிறேன் தெரியுமா? அதனை மிஞ்சிய சொல் கிடையாது.
“அந்த நட்பின் காரணத்தால் நான் ராமனுக்குத்துணை போகாவிட்டால் இவ்வுலகம் இந்த அற்பவேடன் இன்னும் எதற்காக உயிரை வைத்துக்கொண்டு இருக்கிறான் என்று என்மீது பழிதூற்றாதா?” இவ்வாறெல்லாம் தானே உரத்த சிந்தனையில் கூறிக்கொள்கிறான் குகன்.
குகனோடு ஐவரானோம் என்று ராமன் எண்ணிய எண்ணத்திற்கு ஏற்ப செயல்படும் குகனின் பெருமை கூறும் பாடல் இது.
அதே குகன் பரதனைக் கண்ட பின் ஆயிரம் ராமர் உனக்கு சமமாவார்களா என்று கேட்கிறான் என்றால் அதற்குசி சரியான காரணம் இருக்க வேண்டுமல்லவா?
இவனையும் இவன் படைகளையும் இப்போதே கொல்வேன்”என்று மனம் கொண்ட மட்டும் பரதனை இகழ்ந்து, போருக்குத் தயாரான குகன் தன் படைகளைத் தயாராக இருக்கச்சொல்லி விட்டு, தனி ஆளாகப் படகில் ஏறிப் பரதனைக் காண வருகிறான்.
வந்த குகனிடம், “ராமரை அழைத்துப்போய், அவரிடம் அரசை ஒப்படைப்பதற்காகவே வந்தேன் நான்” எனக் கூறுகிறார் பரதன். பரதனுடைய தோற்றத்தைக் கண்டும், வார்த்தைகளையும் கேட்ட குகன் அந்த ஒரு கணத்தில் , பரதனின் மனதைப் புரிந்து கொண்டான்.
இப்படிப்பட்ட பரதனை சந்தேகித்த பாவியாகி விட்டேனே என்று மனத்துள் குமுறி அவன் கூறிய வாரத்தைதான் ‘ஆயிரம் ராமர் உனக்கு இணையாக மாட்டார் ” என்ற சொல்.
அதனால் அவன் கூறுகிறான்.
தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி, போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மைகண்டால் ஆயிரம் ராமர் நின்கேழ் ஆவரோ? தெரியின் அம்மா! (1019)
பரதனின் அன்பில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்ட குகனின் வார்த்தைகள் இவை.
“தாய் சொல் கேட்டு, தந்தை கொடுத்த அரச பதவியைத் ‘தீயது இது’ என்று விட்டுவிட்டு வந்து விட்டாய். வருத்தத்துடன் இருக்கும் உன் முகத்தைப் பார்த்தால்,பரதா! புகழ் படைத்தவனே! உன் தன்மைக்கு ஆயிரம் ராமர் சமமாவார்களா ? தெரிய வில்லையே!” என்று புகழ்கிறான் குகன்.
இதைப் படிக்கும் போதும் எழுதும் போதும் என் கண்கள் பரதனையும் குகனையும் நினைத்துக் குளமானதைத் தவிர்க்க முடியவில்லை.