எப்போது கடைசியாக நான் இந்த வழியில் வந்தேன்? பல காலங்களுக்குமுன்னாலிருக்கலாம்.
அப்போது அப்பா என்னுடனிருந்தார்.
வானம் வழியாகப் பறந்த போது பூமியின் முழு அழகு இவ்வளவு விஸ்தாரமாகத் தெரியவில்லை. ஆசிரமோ அல்லது ஆறோ வரும் போது என் முகக்குறிப்பை அறிந்து விமானியிடம் வேகத்தைக் குறைக்கும்படி சொல்வார். முனிவர்கள் யாகம்செய்த குழிகளிலிருந்து கிளம்பும் நெய்,நெல் வாசனையை என்னால் சுவாசிக்க முடியும்.
எப்போது இதெல்லாம் நடந்தது ?
ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ? அதற்குப் பிறகு அவள் மாறிவிட்டாள். அவள் வாழ்க்கைப் பாதையே மாறிவிட்டது. காலம் மாறிவிட்டது. ஆனால் அயோத்தி மாறவில்லை. அவள் மேலே நடந்தாள். காடு பூக்களைச் சொரிந்து நின்றது. கிளைகளைச் சுற்றிக் கம்பளம் வளைத்திருப்பது போல பூக்கள் பரவிக் கிடந்தன. பூ மழையின் ஊடே சூரியனின் கதிர்கள் பாய்வது போலிருந்தது.
வால்மீகி ரிஷி தன் தவத்தை முடித்துக் கொள்ளும் வைபவத்தில் கலந்து கொள்ள விரும்புவதாக அவள் கேட்டபோது கணவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. தன் வணக்கத்தை ரிஷியிடம் தெரிவிக்கச் சொன்னார். பழைய நாட்களில் இது போலத் தனியாக அவள் காட்டில் சுற்றித் திரியஅனுமதி கிடைத்திருக்காது. அப்படிச் செய்ய அவளுக்கும் தைரியம்இருந்திருக்காது.
ஆனால் இன்று அவள் கணவர் அவளைச் சந்தேகப்படவில்லை. அவளுக்கும் பயமில்லை. இந்தப் பயணத்திற்காக அவரிடம் அனுமதிகேட்கப் போயிருந்த போது தன் கைகளை அவள் தலையில் வைத்து’அமைதி உன்னுடனிருக்கட்டும்’ என்று ஆசீர்வதித்தார். அவருடைய இந்தமாற்றம் காலம் ஏற்படுத்தியதா ?
ஸ்ரீராமன் வனத்தை அசுரர்களிடமிருந்து மீட்டான்.கரன், தூஷனன், திரிசரன் ஆகியோர் சில நாழிகை அழிந்ததைக் கண்டு அவள் ஆச்சர்யமாகப் பேசிய போது மனிதர்கள் எதைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை. தன் கடமையை ஒழுங்காகச் செய்ய முடியாத போதுதான் பயம் வரும் என்று சொன்னவன்.
உடல் பலத்தை விட மனபலம் ஆழமானது. மனபலமிருந்தால் பதினாயிரம் தீய சக்திகளை ஒரு நிமிடத்தில் கொன்று விடலாம். ஆலயமணியின் ஒலி போல இருக்கும் அந்தக் குரலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.அவனைப் பார்த்த அந்த நொடியில் தன் நீண்ட காலத் தவம் வீணாகவில்லை என்று அவளுக்குப் புரிந்தது.அவனுடைய அந்த மென்மைத் தனிமையில் மூழ்கிப் போனாள்.
“அகல்யா, உன் உண்மையான ஆத்மாவை நான் பார்க்கிறேன். அந்த உலக உறக்கத்திலிருந்து விழித்தெழு.”
ஏன் ஒரு ரிஷி அந்த மாதிரியான சொற்களைச் சொல்லக் கூடாதா? இது, அழிவுக்கான சாபக் கலையை மட்டும் அவர்கள் சிறந்த பயிற்சியாகப் பெற்றிருப்பதாலா?
அகல்யா ஒரு கணம் நடுங்கினாள். அவள் எப்படி ஒழுக்கம் நிறைந்தவர்களைப் பழிக்க முடியும் ? அவள் உடனடியாகத் தன்னைத்திருத்திக் கொண்டாள்.
வால்மீகியும் முனிவர்தானே ? சொல்ல முடியாத ,விவரிக்க முடியாதபரிவால்தான் அவரும் சக்தி வாய்ந்த அந்த சாபத்தைத் தந்தார். அதுஅவருடைய தற்காலிக வெளிப்பாடுதானே ?
அகல்யா அந்த இடத்தில் ஒரு கணம் நின்றாள். உண்மையில் அதுசாபமில்லை. அது முன்யோசனையுள்ள பார்வைதான்.அந்த நேரத்திலும் அவர் சீதையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். உலகத்தின் அவமானங்களில் இருந்தும், வேறுபாடுகளிலிருந்தும் அந்தத் தீயைப் பாதுகாப்பது அவசியமானது. மானுடத்தைப் பாதுகாக்க அந்தத்தீ வேண்டும்…அதனால்தான் அவர்..
அகல்யா தன் இரண்டு கைகளையும் அசைத்துப் பார்த்தாள்.உற்சாகத்தில்கைகள் ஆடின. இது வியப்பளிக்கிறதா? சீதையை நினைத்தால் எந்தப் பெண்ணுக்குத்தான் பெருமையும் ,உற்சாகமும் வராது. அகல்யா மேலே நடந்தாள். காட்டுப் பறவைகளின் அழைப்பு இனிமையாக இருந்தது. அவளுடைய கடந்த கால வாழ்க்கை அவள் மனதைத் திறந்து வெளியே பார்க்க வைத்தது .பருவ மாற்றங்கள், பார்த்தவையும் கேட்டவையுமாக எல்லாவற்றையும் அவள் உணர்ந்திருக்கிறாள். எந்தத் திரையால் மறைக்கப்பட்டாலும்எல்லாப் பிறப்பும், இறப்பும் நிர்வாணமாய் விழிகளில் படுவதுதானே?யார் அதிகமாய்ப் பரிவு காட்டியவர்கள் என்று கடந்த காலங்களில் அவள்யோசித்திருக்கிறாள். தனக்கு அந்த விதமான அனுபவங்களுக்கு வாய்ப்புத் தந்த கணவன் ..அல்லது …?
அகல்யாவின் நினைவில் ஒன்று தெளிவாய் நின்றது. அந்த நேரத்தில் அவள் கௌதமரிஷியின் ஆசிரமத்தில் இயற்கையின் அழகையும்,கொடூரத்தையும் சந்தித்திருக்கிறாள்.
ஒரு நாள் தலையைக் குனிந்த நமஸ்கரித்துக் கொண்டிருந்த போதுஓர் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.அந்தக் குரல்கள் பெண்களுடையவை. பேசும் விதத்திலிருந்து அவர்கள் மிதிலையைச் சேர்ந்தவர்களென்று தெரிந்தது. கௌதம முனிவரின் ஆசிரமத்தில் கிடைக்கும் லவண்யகம் என்ற அபூர்வமான பூக்களைப் பறிக்க வந்தவர்கள்.
“ஏன் நம்முடைய இளவரசிக்கு இந்த பூக்கள் மேலே அத்தனை பிரியம்?”என்று இளம்பெண் கேட்டாள்.
“உனக்குத் தெரியாதா ? இந்தப் பூவை வைத்து பூஜித்தால் கணவனின்அன்பு கிடைக்கும். அகல்யா தேவியால் தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது இந்தச் செடி. ”மற்றொருத்தி பதில் சொன்னாள்.
“இந்த நாட்களில் இளவரசி மிக அதிக நேரம் பூஜை செய்கிறாள்.”“இயற்கைதானே அது ? தசரதனின் மகன் ஸ்ரீராமன் சீதையை மணக்கப்போகிறான் என்று ஒரு ஜோடி கிரௌஞ்சப் பறவைகள் குறி சொல்லியதைநீ கேட்கவில்லையா? “
“ஓ,அப்படியா ? எத்தனை அதிர்ஷ்டம்! இது மிதிலை முழுவதற்குமான் அதிர்ஷ்டம். அவள் மனம் முழுவதும் ஸ்ரீராமன்தான். அவருடைய வருகைக்காக அவள் காத்திருக்கிறாள்,“ சொல்லிவிட்டு அவள் கூடையைக் கீழே வைத்துவிட்டு வணங்கினாள்.
“நீ இன்னமும் பூக்களைச் சேகரிக்கவில்லையா ?”“ வா, நாம் போகலாம். இப்போதும் கூட இங்கே நிற்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.”
“ஏன் ,இந்த அழகான இடத்திலும் நீ வருத்தமாக இருக்கிறாய் ?”
“அகல்யா தேவியில்லாமல் இந்த ஆசிரமம் வெறுமையாக இருக்கிறது.”அதற்குப் பிறகு அவர்கள் எதுவும் பேசவில்லை.
“ஏன் அகல்யாதேவி அப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொண்டாள் ?அவள் மிகவும் ஒழுக்கமானவள் அல்லவா? ” என்று சிறிது நேரத்திற்குப் பிறகுஇளம்பெண் கேட்டாள்.
“வாயை மூடு . நீ என்ன பேசுகிறாய் ?மற்றொரு பெண்ணின் குரல் கோபமாக ஒலித்தது. அகல்யாதேவி கருவிலிருந்து பிறந்தவளில்லை. அவள் இரக்கத்திற்குப் பெயர் போனவள். உண்மையில் யாருடைய தவறு என்று நமக்குத் தெரியுமா ? ”
“வா, இங்கிருந்து போகலாம். நாம் பூஜைக்கு வேண்டிய பூக்களைக்கையில் வைத்திருக்கிறோம். நம்முடைய எண்ணங்களால், வார்த்தைகளால் அவை புனிதம் இழந்து விடக்கூடாது .ஞாபகம் வைத்துக் கொள் .”அவர்கள் போய் விட்டனர் .
அந்த இரண்டு பெண்களும் பேசியது அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.தன் கணவனோடு விரைவில் இணைய வேண்டுமென்பதற்காக அகல்யாவால் வளர்க்கப்பட்ட பூக்களை வைத்து சீதை பூஜை செய்யும்காட்சி மனதில் நிறைந்தது. அதற்குப் பிறகு சீதையின் மூலமாகவே ராமனை வழிபட்டாள். கடைசியாக அந்தக் கணம் வந்தே விட்டது. அவன் ,அந்த அழகான மனிதன், விருப்பு வெறுப்பற்ற அவள் முன்னால் நின்று அந்த கல்லான நிலையிலிருந்து அவளை விடுவித்தான்.அந்த நிலையிலும் அவள் பிராத்தனை “ தேவி,உன் காத்திருப்புக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்பதுதான்.”
அகல்யாவிற்கு புதிய வாழ்க்கை தந்த பிறகு ராமன் சீதையின் முன் நின்றான்
யார் அதிகப் பரிவானவர் ?அகல்யா கேட்டுக் கொண்டாள்.விருப்பு வெறுப்புகளற்ற ,எந்த விதப் பரிவும் இல்லாத முனிவரான கணவர்உள்மனதை உலகிற்குக் காட்டும் வகையில் “அகல்யா ,உனக்கு இந்தப்பொய்யான உலகம் பற்றித் தெரியாது” என்று சொல்லி விட்டார்.அல்லது…
அதற்குள் அவள் காட்டின் எல்லையைக் கடந்து விட்டாள்.அவள் சுற்றுமுற்றும் எல்லாத் திசைகளிலும் பார்த்தாள். இவ்வளவுசீக்கிரம் தமசா ஆற்றின் கரையருகே வந்துவிட்டோமா ?தமசா எவ்வளவு அழகாக இருக்கிறது ! நல்ல மனிதர்களின் மனம் போல.சிறிது நேரம் அவள் அங்கிருக்க விரும்பினாள்.
பயமுறுத்தும் ஒரு சத்தம் ! யாரோ அழுது கொண்டிருந்தார்கள். அவள் அந்த இடத்தை நோக்கிப் போனாள். மரப்பட்டையை ஆடையாக உடுத்தியிருந்த ஓர் ஏழைப் பெண் நின்றிருந்தாள். அவள் வால்மீகியின் ஆசிரமத்தைச் சேர்ந்தவளாக இருக்கவேண்டும். அகல்யா அவளருகே போய் “அம்மா ! “ என்று அழைத்தாள்.
குரலைக் கேட்டதும் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அகல்யாவைப் பார்த்தாள். “ இந்த ஆசிரமத்தில் நீங்கள் இவ்வளவுவருத்தமாக இருப்பதற்குக் காரணம் என்ன ?”
“நான் எப்படிச் சொல்வேன் ?இந்த உலகமே முடிவுக்கு வரப் போகிறதுஎன்று தோன்றுகிறது.” விம்மிக் கொண்டே அவள் சொன்னாள்.“என்ன விஷயம்?” அகலயா அவளருகே உட்கார்ந்து சமாதானம் செய்ய முயன்றாள்.
ஸ்ரீராமன் தன் கர்ப்பமான மனைவியைக் கைவிட்டு விட்டாராம்.”“என்ன?” அகல்யா அதிர்ச்சியில் உறைந்தாள். “நான் கேட்பது உண்மையா ?”அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.
“ஆமாம் .. சிறிது நேரத்திற்கு முன்பு வால்மீகி ரிஷி தமசா ஆற்றிற்கு பூஜை செய்ய வந்தாராம். சீதை ஆற்றின் கரையில் இருந்தாளாம். வால்மீகி சீதையைப் பாதுகாப்பதாகச் சொல்லியிருக்கிறார். நான் அவளுக்கு வேண்டிய பழங்களைத் தேடி வந்தேன்.” அவள் தன் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்பே ,அகல்யாவின் சோகம் அவலக் குரலாக வானத்தைத் துளைத்தது. ’தீ தன் ஜூவாலையையே கைவிட்டு விட்டதே’
தன் பாதுகாப்பாளனாலேயே இயற்கை ஒதுக்கப்பட்டு விட்டது.இந்தக் கொடுமையான அனுபவம்…இந்த அவமானம்…இந்த வெறுப்பு…
அகல்யாவின் அருகில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு அகல்யாவின் குரல் மிக தீனமாகிப் போனது தெரிந்தது. ’ தாயே ’என்று கூப்பிட்டாள்.
எந்த பதிலுமில்லை.
அந்தப் பெண் அகல்யா நின்றிருந்த இடத்திற்குப் போனாள். அவள் தோளில் கையை வைத்தாள். பயத்தில் உறைந்து நின்றாள்.
ஐயோ ! இது என்ன ? வெறும் கல் உருவமா ?”
அந்த வார்த்தைகள் தமசா ஆற்றின் கரையில் எதிரொலித்து, மீண்டும்எதிரொலித்து.. அந்தச் சத்தத்தைக் கேட்டு ஆற்றில் குளித்துக் கொண்டுஇருந்த பெண்கள் ஓடி வந்தனர். அழகான ,அசையாத அந்த உருவத்தைக்கண்ணிமைக்காமல் பார்த்தனர்.
அவன் ஆயிரம் கண்களால் பார்த்தும் ,வேட்கை தணிக்கப்படாத குழப்பம்தந்த பேரழகு…
அந்தக் கல்லின் தலையின் மேல் மின்னலின் ஒளியும் மீனும் பொறித்திருப்பதைப் பார்த்தனர்.பாதங்களைப் பார்த்த போது ராமனின் கை அடையாளமிருப்பதும் தெரிந்தது. கடைசியாக அவர்கள் நிமிர்ந்து பார்த்தனர்.
நீண்ட கால தவத்தால் மெருகு கூடிய இயற்கையான ஒளி முகத்தில்வெளிப்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.“ஓ..இது கௌதமனின் மனைவி ,“ என்று ஒத்த குரலில் சொன்னார்கள்.“ஆமாம். இப்போது அகல்யா வெறும் கல்தான்,” வால்மீகி ரிஷியின்ஆசிரமத்தில் சீதையின் தோழியாக இருந்த பெண் உறுதியான குரலில் சொன்னாள்.
————————————————————————
அம்ரிதா கீர்த்தி ,சாகித்ய அகாதெமி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற கே.பி. ஸ்ரீதேவி சிறந்த நாவல் மற்றும் சிறுகதை ஆசிரியர். யக்ஞம், ,அக்னி ஹோத்ரம், மூன்றாம் தலைமுறை உள்ளிட்ட நாவல்களும், வல்லோன், கதைகள் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் இவர் படைப்புகளில் சிலவாகும்.