அவனைப் பற்றிய ஆச்சரியம் அடங்கு முன்னே அதிர்ச்சியான செய்தி வந்தது. அவன் என்னோடு கட்டுமானப் பொறியல் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்தான் . நான் எனது தந்தைக்கு தெரிந்த கட்டுமான ஒப்பந்ததாரரிடம் வேலையில் தொற்றிக் கொண்டேன் . நானும் அவனும் அரசுத்தேர்வுக்கு விண்ணப்பித்து இருவரும் இரவுகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். அவன் பல நாட்கள் என்னோடு படிக்கச் செல்வதாகச் சொல்லி விட்டு தெரு நண்பர்களோடு சினிமா , குடி ,சீட்டாட்டம் என்று திரிந்து விட்டு போதை இறங்கிய நேரம் வீட்டுக்குள் போவான்.
அவனது நடத்தையைக் கண்டு அவனது அம்மாவும் அப்பாவும் முகஞ்சுளித்து முனங்கினர். அவன் அக்கறையோடு படித்து வாழ்க்கையில் தனக்கான இடத்தை அமைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையை இழந்தனர். ஊர் சுற்றி மாட்டுக்கு கால்கட்டை போட்டால் அடங்குவான். வீடு தங்கி ஒழுங்காவான் என்ற நம்பிக்கை தான் அவர்களிடம் எஞ்சி நின்றது.
அவன் ஆள் வாட்ட சாட்டமா ஓங்கு தாங்காய் இருப்பான். பிரபல அரசு கட்டிட ஒப்பந்ததாரர் கவனத்திலும் வலையிலும் விழுந்தான். யார் வலையில் யார் என்று தீர்மானமாகாத நிலையில் திருமணம் நடந்தது. பொண்ணும் லட்சணமான பெண்தான். கல்யாண ஜோர் கலையாத நிலையில் நடந்த அரசு போட்டித் தேர்வில் அவன் தேர்வாகி விட்டான்! .படிக்கையில் கூடவே இருந்து சிக்கலான வினாக்களை எளிதாக விளக்கிய நான் விளிம்பில் தேர்ச்சி பெற்றேன். அவன் எப்படி எழுபது சதம் மதிப்பெண் பெற்று தேர்வானான் என்ற புதிர் விடுபடு முன்னே அவனுக்கு இளநிலை பொறியாளர் பணி பக்கத்து மாவட்டத்திலியே மாமனார் வாங்கிக் கொடுத்தார். அவன் குடும்பத்தோடு அரசுகுடியிருப்பில் குடியேறினான். அரசுகுடியிருப்பு மகளுக்கும் மருமகனுக்கும் வசதியாக இல்லை என்று மாமனார் அவ்வூரில் ஓர் அழகான வீடும் வாங்கிக் கொடுத்தார்.
அவன் இரண்டு மாதங்கள் வரை அவ்வப்போது என்னிடம் கைப்பேசியில் நன்றி தொனிக்கப் பேசினான். அப்புறம் நான்தான் ஓய்விருக்கும் போது பேசுவேன். அவன் வேலை மும்முரம் என்று பேச்சைக் குறைத்தான். ஒருநாள் அவனது அம்மாவையும் அப்பாவையும் மாரியம்மன் கோயில் அருகே பார்த்தேன். ஆட்டோவில் ஏறப் போன அவனது அம்மா முகமெல்லாம் பூரிப்பாக எனது வேலை விவரங்களை விசாரித்தாள். “தனக்கு இன்னும் பணியமர்வு ஆணை வர வில்லை . இந்த மாதக் கடைசியில் வந்துரும் . வந்ததும் பணியில் சேரும் போது சொல்கிறேன்.. அவன் எப்படி இருக்கிறான், போனில் பேசினால் இரண்டொரு வார்த்தையில் முடித்துக் கொள்கிறான்; நல்லா இருக்கான்ல்ல? “ என்று கேட்டேன்.”
“ரொம்ப நல்லா இருக்கான்ப்பா! அவனுண்டு வேலை உண்டு; ஆபிஸ் விட்டா வீடு! வீடு விட்டா ஆபிஸுன்னு இருக்கான்! மருமகக்கூட மூனுமாசம்! இப்பத்தான் மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் முடிச்சிட்டு வாறோம். இந்தா திருநீறு எடுத்துக்கோ. அவனை போன் போட்டு தொந்தரவு பண்ணாதேப்பா! இப்பத்தான் பிள்ளை திருந்தி இருக்கான்!“ என்று சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள். அப்பா தலையசைத்து ஆமோதித்து ஆட்டோவில் ஏறினார். அவன் நல்லா இருக்கிறது எனக்கும் பெருமை தான் என்ற எனது பதிலை ஆட்டோவின் உறுமல் விழுங்கிக் கிளம்பியது.
‘குடிகாரன் ,ஊதாரி ,பொறுப்பில்லாதவன், சாமக்கோடாங்கி ’ இப்படியான பட்டங்களை வாங்கியவன் நிஜமாகவே திருந்திட்டானா ,எப்படி இருக்கிறான் என்றறிய அவனிருக்கும் ஊருக்கு நான் போக வாய்த்தபோது அவனது வீட்டுக்குப் போனேன. மாலை நேரம் .அவனுமிருந்தான். மனைவி உற்சாகமாக வரவேற்றாள். நான் துணை மாப்பிள்ளை போலிருந்து மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த அவனை நான் கலாய்த்தை மணப்பெண்ணாக இருந்த அவள் ரசித்தாள். இவர்களது நட்பின் நெருக்கத்தை அங்கீகரித்தாள்.
நான் உரிமையோடு எப்படிம்மா பார்த்துக்கிறான் என்று கேட்டதுக்கு நல்லாவே பார்த்துக்கிறார் அண்ணே என்று வெட்கம் பூசிய வார்த்தைகளைப் பொழிந்தாள். அவனும் கண்ரெப்பைகளில் இருந்த சுருக்கம் நீங்கி முகத்தில் பொலிவும் உடம்பு ஒரு சுற்று பெருத்தும் காணப்பட்டான் .இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு தான் போகணும்! என்று என்னைக் கட்டாயப்படுத்தினர் .இரவுணவு தடபுடலாக செய்திருந்தாள். நான் மனம் மகிழ்ந்து விடைபெற்றேன் .காலாகாலத்தில் கல்யாணச் சாப்பாடு போடுங்கண்ணே என்று என்னிடம் அவள் சொன்னதை அவனும் ஆமோதித்தான்..
ஆறு மாதம் தான் கடந்திருக்கும். அவன் தூக்க மாத்திரைகள் நிறைய விழுங்கி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. நான் விடுப்பு எடுத்துக் கொண்டு பறந்தேன். அவன் தற்கொலை செய்து கொள்ளக் காரணமில்லை. நல்ல மரியாதையான வேலை ; அன்பான அழகான மனைவி; அமைதியான குடும்பம்; அனுசரணையான அம்மா அப்பா ; தலையில் வைத்துக் கொண்டாடும் மாமனார், மாமியார். உத்தியோகத்திலும் எவர் தொல்லை ,நெருக்கடி இல்லை! பழைய கெட்ட பழக்கங்களுக்கும் வாய்ப்பில்லை ! ஆனால் ஏன் தற்கொலைக்கு முயன்றான் என்பது தான் புதிராக இருந்தது!. எனது சிந்தனை எல்லைக்கு , காரணம் ஏதும் எட்டவில்லை.!
அவன் தீவிர சிகிச்சை கண்காணிப்புபிரிவில் கிடத்தப்பட்டு இருந்தான் .அறைக்கு வெளியே நிறைமாதக் கர்ப்பிணி மனைவி, மாமனார் , மாமியார் ஒருபுறம் .அம்மா அப்பா இன்னொருபுறம் சோகம் கவிந்த முகங்களுடன் நின்றிருந்தனர் .எதிர்ப்புறம் சிலர் இழப்பை எதிர்நோக்கிய சோர்வுடன் இருந்தனர். என்னைப் பார்த்ததும் அவனது அம்மா கைகளைப் பற்றிக்கொண்டு “யார் கண்ணு பட்டதோ எம்பிள்ளைக்கு இப்படியானதே… தளதளன்னு உலை கொதிச்சு. வரும் போது அடுப்பை அமர்த்தினது மாதிரி அவன் பொழப்பை அணைச்சுட்டாகளே…அவன். வேகமா முன்னேறி வளர்ந்தது இப்படி வழுக்கி விழுகிறதுக்கா…“ அம்மா அரற்றி விம்மினாள்!
. என்னைப். பார்த்ததும் அவனது மனைவி: ”அண்ணே , உங்க ஃபிரண்டு இப்படி என்னை நட்டாத்தில் விட்டுட்டுப் போவாருன்னு கனவுல கூட நினைக்கலையே… “ என்று இவனது கைகளைப் பற்றிக் கொண்டு குமுறினாள். அவளது அம்மா நனைந்த மணல் போல் பொதுபொதுத்து வீங்கிய.முகத்தோடு,
“ தம்பி பிள்ளைத்தாய்ச்சி காலையிலிருந்து பச்சைத் தண்ணிகூட குடிக்காம வெறும் வயித்தோடு அழுதுகிட்டு நிற்கிறாளே , இவளை சமாதானப்படுத்தி கேண்டீனுக்கு கூட்டிட்டுப். போயி சாப்பிடவை தம்பி. வயித்துப் பிள்ளைக்காரிக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா என்ன செய்யிறது….!“
அவனது குடும்பத்தாரை கேண்டீனுக்கு அழைத்தேன்; அவர்கள் வர மறுத்தார்கள். அவனது மனைவியை அழைத்து போகச் சொன்னார்கள். அவளை அழைத்தேன். அவளும் மறுத்தாள். வயிற்றில் சுமக்கும் சிசுக்காவது. எதாவது சாப்பிட வேண்டும் என்று கெஞ்சினேன் ; அவள் கண்ணீர் பொங்க நத்தை போல மெல்ல ஊர்ந்தாள். ரெண்டு இட்டலியும் காபியும் மட்டும் போதும் என்றாள். அழுது வீங்கிய முகத்தினள் இட்டலியை சிரமப்பட்டு விழுங்குவது பார்க்க பரிதாபமாக இருந்தது . காபியின் சூடு வயிற்று சிசுவுவை சுட்டு விடுமோ என்றஞ்சி நன்றாக ஆற்றி சிறுசிறு மிடறுகளில் விழுங்கினாள். அவளது ஒவ்வொரு அசைவிலும் தாய்மை மிளிர்ந்தது.
சாப்பிட்டபின் கைகழுவி வந்தவளை ஒர் ஓரமாக காற்றாடிக்கு கீழ் உட்கார வைத்து சற்று ஆசுவாசப்பட்ட பின் இவன் ஆதங்கம் தொனிக்கக் கேட்டேன் ;
“தங்கச்சி என்ன நடந்தது? அவன் இந்த முடிவுக்கு போகிற ஆளில்லையே…!”
மென்மையான குரலில் அவள் சொன்னாள்; “அவருக்கு என்ன பிரச்சினைனு தெரியலைண்ணே. ஆனால் இந்த மூனுநாளா அவரு சோர்ந்து போய் இருந்தார் .உடம்புக்கு முடியலையாங்க , ஏன் சோர்ந்திருக்கீங்கன்னு ரெண்டுமூனு தடவை கேட்டேன். ஒன்னுமில்லை .நான் நல்லாத்தான் இருக்கேன். கட்டட. வேலை நடக்கிற ரெண்டு மூனு இடங்களுக்கு போய் வர்ற அலைச்சல் என்றார். ஆனால் சாப்பிடும் போது பார்வை சாப்பாட்டில் இல்லாமல் வடக்கும் தெற்குமாய் கண்கள் உருண்டுருண்டு நிலைகொள்ளாமல் உழன்றன. அதேசமயம் அவரது இடதுகை ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வடக்கும் தெற்குமாய் அசைந்து ஆகாயத்தில் எழுதி கணக்கு போடுவது போலிருந்தது! என்னங்க விவரம்னு கேட்டதுக்கு அவர் பதில் பேசவில்லை .கட்டட பிளான் குறித்து யோசிக்கிறாருன்னு இருந்துட்டேன். சரியாக சாப்பிடுவதுமில்லை ! கட்டட இடத்தில் எதுவும் பிரச்சினையான்னு அப்பா மூலம் தெரிஞ்சுக்கலாமுன்னு யோசிச்சேன். அவர் தப்பா நினைச்சுட்டா பெரும் பிரச்சினை ஆயிருமேன்னு பயம் . உங்க ஃப்ரண்டுகிட்டேயே கேட்டேன்.
ஒன்னுமில்லை. தானும் சில நண்பர்களோடு சேர்ந்து உன் பேர்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு ஒரு யோசனை! அதுக்கு நாற்பது லட்சம் பணம் தேவைப்படுது என்றார். அவர் எங்கப்பாவிடம் பணம் கேட்கத்தான் நாடகம் ஆடுகிறார் என்றுணர்ந்து சும்மா இருந்து விட்டேன். அப்பா, இவரு வேலைக்கும் எங்க. புது வீட்டுக்குமாக ஒருகோடி வரை செலவு செஞ்சிருக்கார். அவருகிட்ட எப்படி கேட்கமுடியும்னு பேசாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்படி செய்வாருன்னு நினைச்சு கூட பார்க்கலை!
இன்னிக்கு பக்கத்து வீட்டுக்காரங்க மூனு பேரு வந்து அரசு வேலை வாங்கித் தர்றேன்னு மூனு பேரு கிட்ட பவ்வத்து லட்சம் வாங்கி இருக்காராம். கொடுத்தவங்களும் ஐசியு வார்டு முன்னால்தான் காத்துகிட்டு இருக்காங்க. அந்தப் பணத்தை என்ன செஞ்சாரு? யாரு கிட்ட கொடுத்தாருன்னு தெரியலை“ என்று விம்மினள். எனக்குள் கேள்விகளாக மின்னல் வெட்டியது. பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட பணத்தை வாங்கி அரசியல் புரோக்கர்கள் கிட்ட கொடுத்து ஏமாந்துட்டானா ,இல்லை பழையபடி சீட்டு விளையாடுறதில இறங்கிட்டானா…?இருக்கிற போலீஸ் கெடுபிடியில் சீட்டுவிளையாடும் நண்பர்களோடு சேர நேரமும் காலமும் ஒத்துவராதே! அதுவுமில்லாமல் அவனோட மாமனாரு அவன் யாராருகிட்ட பழகுறான் .எப்படி பழகுறான். என்னென்ன செய்கிறான் என்று கண்காணிக்க அங்கங்கே ஆளுக வச்சிருக்காரே! அவன் எந்த தப்பும் பண்ண முடியாதே! அவனை பொறுத்தவரை அவன் இருபத்துநாலுமணி நேரமும் மாமனாரின் கண்காணிப்பு வலைப் பின்னலில் இருக்கிறான் என்பது அவனும் உணர்ந்து இருக்கலாம்!
ஆனால் அவன் முப்பது லட்சத்தை என்ன செய்தான்.? இந்தப் பணம் தான் அவனது தற்கொலை முயற்சிக்கு காரணமோ…? என் நெற்றியில் சிந்தனை நீர்க்குமிழ்களாக திரண்டன . அவளை மெல்ல நடத்தி, தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு முன்னே இருந்த இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தேன் .
தலைமை மருத்துவரைப் பார்த்து அவனது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முயன்றேன் . மருத்துவர் பொதுவார்டில் நோயாளிகளை பார்வையிட சென்றுள்ளார் அவர் வர அரை மணிக்கு மேலாகும் என்றனர்.
நான் அவனது மனைவியிடம் அவனது கைப்பேசியை வாங்கி, எதாவது தகவல் தெரியுமானு பார்ப்போம் என்று முயன்றேன் ; கைப்பேசியைக் கொடுக்கும் போது, “வீட்டில் இருக்கும் போது என்கிட்ட பேசுறது கூட இல்லண்னே ! எந்தநேரமும் செல்லை நோண்டிகிட்டே இருப்பாருண்ணே ,இந்த செல்லைப். பார்த்தாலே எரிச்சலாக இருக்கும்“ என்றாள்.
அந்தக் கைப்பேசியை வாங்கிக் கொண்டு ஒர் ஓரமாக உட்கார்ந்து அவனது கைபேசியின் கடவுச்சொல் அவனது பிறந்ததேதி என்பதை நினைவில் கொண்டு திறந்தேன் . குறுஞ்செய்திகளைப் பார்த்தேன.ஒன்னும் புலப்படவில்லை. புழக்கத்தில் இருக்கும் செயலிகளை நோட்டம் விட்டேன் . ரம்மி எனும் செயலி இருந்தது. அதைத் திறந்தேன்.
‘வாங்க ரம்மி விளையாடலாம். உங்களுக்காக இரண்டாயிரம் ரூபாய் போனஸ் காத்திருக்கிறது’ என்ற அறிவிப்பு கண்ணைச் சிமிட்டியது. ரம்மி செயலியை திறந்தேன் ; ப வெவ்வேறு தரத்தில் பணம் கட்டி விளையாடும் ரம்மி குழுக்கள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்தது ! அதிர்ச்சியாக இருந்தது.
‘ சிரங்கு வந்தவன் கையும் , சீட்டு விளையாடியவன் கையும் சும்மா இருக்காது! கட்டிப் போட்டாலும் தடுக்க முடியாது ’ என்ற சொலவடை நினைவுக்கு வந்தது. மூலை முடுக்குகளில் ஒளிந்து சீட்டு விளையாடுபவர்களை தேடிப்பிடித்து கைது செய்யும் காவல்துறை இப்படி வெளிப்படையாக இணையதளம் மூலமாக சூதாட்டம் நடத்துபவர்களையும், சூதாடுபவர்களையும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை என்ற சிந்தனை இவனைக் கடைந்தது.
இந்த சமயத்தில் தலைமை மருத்துவர் வரும் பரபரப்புகள் தென்படவே , கைப்பேசியை அணைத்து விட்டு தலைமை மருத்துவர் அறைக்குப் போனேன்; .தலைமை மருத்துவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு அவனது பெயரைச் சொல்லி உடல்நிலை குறித்து கேட்டேன் .
தலைமை மருத்துவர் அவனது மருத்துவக். குறிப்புகளைக் கொண்டு வரச்சொல்லி பார்த்துவிட்டு சொன்னார் :”அந்நோயாளி ஐந்துக்கு மேற்பட்ட தூக்கமாத்திரைகளை விழுங்கி இருக்கிறார். ஆல்கஹாலிக். குடல்புண் இருக்கிறது .செயின் ஸ்மோக்கர் போல .நுரையீரல் முழுக்க புகையால் கருத்திருக்கிறது .சளிப்படலத்தால் மூச்சுத்திணறல் இருக்கிறது. இதயத் துடிப்பு நிலை இல்லாமல் இருக்கிறது. இந்த மாதிரி இடர்பாடுகளால் அவரது நிலையை இன்னும் இருபத்துநாலு மணிநேரத்திற்கு பின்தான் சொல்ல இயலும்! நோயாளியை காப்பாத்த எல்லா முயற்சிகளையும் செய்துகிட்டு இருக்கிறோம் …“
அவன் இணையத்தில் சூதாடி தோற்றதால் தற்கொலைக்கு முயன்றதையும், அவனது உடல்நிலை பற்றி மருத்துவரின் மதிப்பீட்டையும் எப்படி அவனது குடும்பத்தாரிடம் சொல்வது?
குவிகம் சுந்தரராஜன் அவர்களுக்கு நன்றி.கதைக்கேற்ற. படத்தோடு கதைநன்றாக வந்துள்ளது.
LikeLike