குறும் புதினம் போட்டி முடிவுகள்
குவிகம் குறும் புதினம் போட்டிக்கு எழுபத்துமூன்று படைப்புகள் வந்திருந்தன என்பதை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்கள் வெற்றி அல்ல. படைப்பாளிகளின் வெற்றி. கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
போட்டிக்கு வந்த எல்லாப் படைப்புகளும் ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருந்தாலும் தேர்வு என்று வரும்போது விடுபடுதல் தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது.
அதன்படி முதல் கட்டமாக பிரசுரிப்பதற்குத் தகுதியான 20 குறும் புதினங்களைத் தேர்ந்தெடுத்தோம். அதன் விவரங்களை ஜூலை 15 குவிகம் மின்னிதழிலும், வாட்ஸ்அப் குழுவிலும் மின்னஞ்சலிலும் வெளியிட்டிருந்தோம்.
அவற்றுள் நான்கு படைப்புகள் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ‘குவிகம் குறும் புதினம்’ இதழ்களில் ஏற்கனவே வெளிவந்துவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள்! .
இந்த இருபது படைப்புகளில் முதல் – இரண்டாம் – மூன்றாம் பரிசுகளுக்குத் தகுதியான குறும் புதினங்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை திரு பாமா கோபாலன் மற்றும் அவரது துணைவியார் திருமதி வேதா கோபாலன் இருவரிடமும் ஒப்படைத்தோம்.
பாமா கோபாலன் அவர்கள் குமுதம் இதழில் பல ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தவர்.
வேதா கோபாலன் அவர்கள் குமுதத்தில் 800க்கும் மேற்பட்ட சிறு கதைகளை எழுதியவர்.
20 குறும் புதினங்களையும் பதினைந்தே நாட்களில் படித்து அலசி ஆராய்ந்து பரிசுபெறத் தகுதியான 3 குறும் புதினங்களைத் தேர்ந்தெடுத்த இந்த இலக்கியத் தம்பதியருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
முதல் பரிசு ஐயாயிரம் ரூபாய் பெறும் பானுமதி அவர்களையும், இரண்டாம் பரிசு மூன்றாயிரம் ரூபாய் பெறும் ஆன்சிலா பெர்னாண்டோ அவர்களையும், மூன்றாவது பரிசு இரண்டாயிரம் ரூபாய் பெறும் மைதிலி சம்பத் அவர்களையும் குவிகம் மனதாரப் பாராட்டுகிறது
மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 படைப்பாளிகளுக்கும் எங்கள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.
கலந்துகொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
முதல் மூன்று பரிசுதவிர பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற 17 புதிய குறும் புதினங்கள் ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் .
இவைதவிர கிளாசிகல் வரிசையில் குறும் புதினத்தில் பிரசுரமாகும் ஏற்கனவே விருதுபெற்ற குறும் புதினங்களுக்கு 750 ரூபாய் வழங்கப்படும்.
மொத்தத்தில் 35000 ரூபாய் குவிகம் குறும் புதின எழுத்தாளர்களுக்குப் பரிசில்களாக வழங்கப்படுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
குறும் புதினம் பரிசு வழங்கும் விழா விரைவில் ஜூம் மூலம் நடைபெறும்.
அடுத்த ஆண்டிற்கான (2022 – 23) குறும் புதினம் போட்டிபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
இதுவரை பிரசுரமானவை
குறும் புதினம் | படைப்பாளி |
பத்து பகல் பத்து ராத்திரி | முகில் தினகரன் |
கட்டை விரல் | சுப்ரபாரதிமணியன் |
தன்நெஞ்சே | வேணுகோபால் SV |
பெருமாள் | சங்கரநாராயணன் S |
வேட்டை | செய்யாறு தி.தா நாராயணன் |
நினைவழிக்கும் விழிகள் | ந பானுமதி |
இனி பிரசுரிக்கப்படவிருப்பவை செப்டம்பர் மாதம் முதல் மார்ச் 2022 வரை .
(இது அகர வரிசைதான். பிரசுரமாகும் வரிசை அல்ல)
குறும் புதினம் | படைப்பாளி |
எத்தனை உயரம் | மைதிலி சம்பத் |
என்ன கொடுமை | ராமமூர்த்தி S |
கண்டு வர வேணுமடி | ராய செல்லப்பா |
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் | லதா ரகுநாதன் |
கள்வர் கோமான் புல்லி | ஜெயக்குமார் சுந்தரம் |
காற்று வந்து என் காதில் சொன்ன கதை | தாமோதரன் |
சின்னம்மா பெரியம்மா | ஆன்சிலா பெர்னாண்டோ |
சொல்விழுங்கியும் பேசாமடந்தையும் | பகவத்கீதா பெ |
திரை விழுந்தது | எஸ் எல் நாணு |
தெரியாத முகம் | சதுர்புஜன் G B |
நதியிலே புதுப்புனல் | அன்னபூரணி தண்டபாணி |
நதியின் மடியில் | அனந்த் ரவி |
மகன் தந்தைக்கு ஆற்றும்… | கௌரி சங்கர் |
மீனும் நானும் ஒரு ஜாதி | கோரி ஏ ஏ ஹெச் கே |
இனி தேர்வாளர்கள் கருத்து:
போட்டிக்கு வந்திருந்த இருபது நாவல்களையும் சந்தோஷமாகப் படித்தோம். கற்பனை வளம் உள்ள 20 எழுத்தாளர்களையும் மனமாரப் பாராட்டுகிறோம்.
- பொழுதுபோக்கிற்காக மட்டுமே நாவல்கள் எழுதப் படுவதில்லை. படிக்கும் வாசகர்களின் மனதில் பாதிப்பு களையும் பின்விளைவுகளையும் உண்டாக்குகின்றன என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் எழுத வேண்டும்.
- அந்த பாதிப்புகளும் பின்விளைவுகளும் நேர்மறையாக இருக்க வேண்டும்.
- குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் நியதி. அந்தத் தண்டனை சட்டம் மூலமாகவோ கடவுளின் விருப்பப்படியே இருக்கும். மேலும் கிரைம் கதைகளில் எழுத்தாளர் தரும் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்வதாக அமைவது நலம். அதாவது எப்படி எல்லாம் தப்பிக்கலாம் என்று சொல்லிக் கொடுப்பது அவசியமற்றது.
- இயல்பான சமூக வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபட நியாயமான வழிகளை சுட்டிக்காட்டுவது நலம்.
- வர்ணனைகள் ஏராளமாய் இருந்து கதையம்சம் கொஞ்சம் கூட இல்லாதிருந்தால் சுவாரசியம் குறைகிறது என்பது உண்மை.
- நேர்மையான சுவையான சம்பவங்கள் கதையின் விறுவிறுப்பை கூட்டுவது நிஜம்.
- என்ன எழுதுகிறோம் என்பது எழுதுபவர்களுக்கும் புரியாமல் வாசகர்களையும் குழப்புவது நியாயம் அல்ல.
இப்படிப்பட்ட சில வரைமுறைகளை கருத்தில் கொண்டு எல்லா நாவல்களையும் இருவரும் படித்தோம்.
ஒரு நாவலில் கடைசிப் பாராவில் எழுத்தாளர் “இக்கதை உண்மை நிகழ்ச்சிகள். மொழிபெயர்த்திருக்கிறேன்” என்கிற ரீதியில் முடித்திருக்கிறார். அவரது நேர்மையைப் பாராட்டலாம்.
இறுதியில் மிகுந்த விவாதத்துக்கு பிறகு எங்கள் கோணங்களில் தேர்வு செய்யப்பட்ட மூன்று நாவல்கள் பின்வருமாறு:
- நினைவழிக்கும் விழிகள் – ந பானுமதி
- சின்னம்மா பெரியம்மா- ஆன்ஸிலா ஃபெர்னாண்டோ
- எத்தனை உயரம்- மைதிலி சம்பத்
முதல் பரிசு நாவலில் கத்திமேல் நடந்திருக்கிறார் எழுத்தாளர்
இரண்டாம் பரிசு நாவலின் யுக்தி பிரமாதம்
மூன்றாம் பரிசு நாவல் மிகவும் இயல்பான பிரச்சினையை அழகாகச் சொல்கிறது
இக் குறுநாவல்களைப் படிக்கும் வாய்ப்பை தந்த குவிகம் அமைப்புக்கு மனமார்ந்த நன்றி.
பிரியங்களுடன்
பாமா கோபாலன்
வேதா கோபாலன்