பிற்காலச் சோழச் சரித்திரம் படித்தவர்களுக்கு (அல்லது ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு), ‘இராஜாதித்தன்’ என்ற பெயரைக் கேட்டாலே மனத்தில் என்னமோ சற்று நெருடும். வீரமும், விதியும் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடிய காவியம் அது.
‘இராஜாதித்தன் சபதம்’ – என்ற பெயரில் ‘அமுதசுரபி விக்கிரமன்’ எழுதிய சரித்திரக் காவியத்துக்கு இராஜாதித்தனின் இந்தச் சரித்திரம் வித்தானது. அந்த நாவலிலிருந்து சிலவற்றையும் (நன்றி தெரிவித்து) இடையிடையே தெளித்து, இங்கு நினைவு கூர்கிறோம். மேலும், கிடைத்த பல சரித்திர ஆய்வுகளைக் கொண்டு, ஒரு காலக்கோடு (timeline) புனைந்துள்ளோம்.
900: பராந்தகனின் முதல் மனைவியின் பெயர் ‘கோக்கிழான் அடிகள்’. பின்னாளில் பராந்தகன் பட்டம் சூடும்போது, இவள் பட்டத்தரசியானாள். இவர்களுக்குப் பிறந்த மகனுக்கு இராஜாதித்தன் என்று பெயரிட்டனர்.
901- பராந்தகனுக்கு கண்டராதித்தன் பிறந்தான்.
902-. பராந்தகனின் மற்றொரு அரசி பழுவேட்டரையரின் மகள். அவள் வயிற்றில் அரிஞ்சயன் பிறந்தான்.
907: பராந்தகன் சோழ மன்னனாகப் பட்டமேற்றான். அன்று, இராஜாதித்தன் வயது 8. கண்டராதித்தன் வயது 7. அரிஞ்சயன் வயது 5.
910: பராந்தகன் – பாண்டியன் முதல் போர். (முன்பே பார்த்தோமே)
- பராந்தகன் வாணர் நாட்டுக்குப் படையெடுத்துச் சென்றான். வைதும்ப நாடும், வாணர்களுடன் சேர்ந்து சோழனை எதிர்த்துப் போர் புரிந்தது, பராந்தகன் வாணர்களது நாட்டை வென்றான். வாணர் அரசன் இரண்டாம் விஜயாதித்தன் போரில் கொல்லப்பட்டான். அவன் மகன் இரண்டாம் விக்கிரமாதித்தன், மற்றும் வைதும்ப அரசனும் இராட்டிரகூட இளவரசன் ‘மூன்றாம் கிருஷ்ணதேவனிடம்’ அடைக்கலம் புகுந்து சரியான நேரத்துக்குக் காத்திருந்தனர். இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன் – ஆதித்த சோழனுடைய மாமனார் – பராந்தகனுடன் முதலில் தன் மக்கள் வயிற்றுப் பேரனுக்காகச் சோழ ராஜ்யம் வேண்டும் என்று சண்டைக்கு வந்தாலும், பின்னர் பராந்தகனுடன் நட்புடன் இருந்தான்.
913: இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன் இறந்தான். அவன் பேரன் இந்திரன் அரசனானான். இந்திரனின் தம்பி மூன்றாம் அமோகவர்ஷன். அவன் மகன் மூன்றாம் கிருஷ்ணன். (கொஞ்சம் மெதுவாகப் படியுங்கள்.. சரித்திரத்தில் பலப்பல பாத்திரங்கள்). ‘மூன்றாம் கிருஷ்ணன்’ தான் இனி வரும் கதைகளுக்கு ஒரு ஐம்பது வருடத்திற்கு – வில்லன். அவன் கதைக்கு விரைவில் வருவோம்.
918: இந்திரன் மகன் நான்காம் கோவிந்தன் (இந்த இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று எழுதி எழுதி நமது கை சளைத்து விட்டது. உங்கள் பொறுமை சோதிக்கப்பட்டால் அதற்கு யாரோ பொறுப்பு?). நான்காம் கோவிந்தனுக்கு இளவரசுப்பட்டம் கட்டினான். கோவிந்தன், வனப்பில் மன்மதன் போல அழகுடன் இருந்தான்.
‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே’ என்பார்கள். அது போல, அழகும், அதிகாரமும் சேர, கோவிந்தனிடம் குணம் குன்றியிருந்தது. பல பெண்களிடம் தொடர்பு கொண்டு மன்மதலீலைகள் நடத்தினான். கோபம் அதிகம் கொண்டு – நண்பர்களை விரோதித்துக் கொண்டிருந்தான்.
பராந்தகன் ஒருமுறை கோவிந்தனை தஞ்சைக்கு அழைத்து விருந்தளித்தான். பராந்தகன் மகள் வீரமாதேவி – கோவிந்தனைக் கண்டதும் அவன் அழகில் மயங்கினாள். சோழ இளவரசர்கள், கோவிந்தனின் ஒழுக்கக் குறைவை எண்ணித் தயங்கினார். வீரம், விவேகம் இரண்டும் குறைந்த கோவிந்தனை சகோதரிக்கு மணமுடிப்பது பற்றி யோசித்தனர். பராந்தகனும் சற்று யோசித்தான். இருந்தாலும் இப்படி எண்ணினான்:
“நமக்கே 12 மனைவிகள்.. ஆக, கோவிந்தனின் பெண் மோகம் ஒரு பெரிய பிரச்சினையே அல்ல. மேலும், கோவிந்தன் இராட்டிரக்கூடத்திற்கு விரைவில் அரசனாகி விடுவான். நமது மகள் வீரமா தேவி கோவிந்தனை மணம் செய்து கொண்டால் அவள் தான் பட்டத்தரசியாக வருவாள். இப்படி ஒரு பலமான ராஜ்யத்தை இந்தப் பந்தத்தின் மூலம் ஒரு கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால், வடக்கே நமக்குப் பகை இல்லை. கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி நமது உற்ற நண்பன் – கூட்டாளி. ஆக, இந்த இரு பெரு ராஜ்யங்கள் நமக்கு அமைதியைத் தந்தால் – இந்தகப் பாண்டியர், ஈழர் கொட்டத்தை முழுமையாக அடக்கி, பாண்டிய நாட்டை சோழநாடாக்கி, தந்தை ஆரம்பித்த திருப்பணிகள் செய்து காலத்தைக் கழிக்கலாம். நமது வீர மகன் இராஜாதித்தன், அவன் காலத்தில் சோழ நாட்டைப் பாதுகாத்துப் பெரிதாக்குவான். விஜயாலயன், ஆதித்தன் கண்ட கனவுகள் நனவாகும்” -என்று திட்டமிட்டான்.
திருமணம் நடந்தது. வீரமா தேவி இராட்டிரகூட அரியணையில் அமர்ந்து மகாராணியானாள்.
சுபம் என்று போட்டு படத்தை முடிக்கலாமென்றால் அங்கு தான் இன்னொரு கதை திருப்பங்களுடன் தொடங்குகிறது. பராந்தகன் மேற்படி நினைத்தது எல்லாம் நடந்திருந்தால் – நம் கதை உப்பு-சப்பின்றி போயிருக்கும். இந்தக் கணிப்புகளெல்லாம் புரட்டிப் போடப்பட்டு, தமிழகமே தத்தளிக்கும் நிலை உருவானது. அது என்ன என்பதைப் பார்ப்போம்.
922: திருக்கோவலூர், மலையமான்களின் தலை நகரம். வைதும்பராயன், தன் நாடிழந்து, திருக்கோவலூரில் வந்து சேர்ந்தான். வைதும்பராயனின் அழகு மகள் கல்யாணியை அரிஞ்சயன் திருமணம் செய்திருந்தான். அரிஞ்சயன் வயது 20 தான் இருக்கும். கல்யாணியின் அழகு அன்று தென்னிந்தியாவில் பெரிதும் பேசப்பட்டது. (கல்கியும் அதை எழுதினார்). அந்த வருடமே அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. அந்த மகனுக்கு பராந்தகன் என்றே பெயரிட்டான். தாயைப் போல பிள்ளை. மன்மதன் போல அழகாய் இருந்தது. அந்த அழகின் காரணத்தால் , பின்னாளில் அவனுக்கு சுந்தர சோழன் என்ற பெயர் நிலைத்தது.
இப்படி சோழ இளவரசனுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்த பின்னரும், வைதும்பராயன் சோழனின் பகையைச் சம்பாதித்தது விசித்திரமாகும். வைதும்பராயன், சோழனுக்குப் பல ஆண்டுகளாகச் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தவில்லை. வைதும்பராயன் ராஜ தந்திரம் மிகுந்தவன். இராட்டிர கூட நாட்டு அசோக வர்ஷனும், மூன்றாம் கிருஷ்ணனும் அவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். கங்க நாட்டிற்குச் செல்வதற்கு முன்பு பூதூகன் (கங்க மன்னன் பிரீதிவிபதியின் பங்காளி, எதிரி) வைதும்பனிடம் வந்து அவனுடன் ரகசியமாகக் கலந்தாலோசித்த பிறகே, கங்க நாட்டில் தன் கை வரிசையைக் காட்டச் சென்றான். பூதூகனுக்கு வைதும்பன் உதவினான். திருவலத்தைச் சுற்றியுள்ள நாட்டைக் கொடுப்பதாக பூதூகன் அவனுக்கு வாக்களித்திருந்தான்.
935:
கீழைச்சாளுக்கிய அரசு இரண்டாகப் பிரிந்திருந்தது. வடதிசையை யுத்தமல்லன் ஆண்டான். தென் திசையை இரண்டாம் வீமன் ஆண்டான். இருவருக்கும் போர் மூண்டது. இராட்டிரக்கூட மன்னன் நான்காம் கோவிந்தன் இதில் தலையிட்டான். யுத்தமல்லனுக்கு ஆதரவாக வீமனிடம் போர் தொடுத்தான். கோவிந்தன் கூட்டணி ‘கோவிந்தா’ ஆனது! ஏற்கனவே நான்காம் கோவிந்தன் இராட்டிரக்கூடப் பொதுமக்களிடமும் மதிப்பிழந்திருந்தான். இந்த தோல்வி அவர்களது வெறுப்பை அதிகப்படுத்தியது. அவனது சித்தப்பன் மகன் மூன்றாம் கிருஷ்ணன் அவனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினான். தன் தந்தை அமோகவர்ஷனை மான்ய கேடாவில் மன்னனாக்கி ஆண்டான். நான்காம் கோவிந்தன் மனைவி வீரமாதேவியுடன் மாமனான சோழன் வீட்டில் தஞ்சம் புகுந்தான்.
936: பராந்தகன், இராஜாதித்தனை திருநாவலூருக்கு (திருக்கோவிலூர்) அனுப்பி வட எல்லையைப் பாதுகாத்தான். தளபதி வெள்ளங்குமரன் மற்றும் அரிஞ்சயனும் அருகில் படையுடன் இருந்தனர். இந்தக் கதையைச் சற்று விவரிப்போம்.
மதுரைப் போருக்குப் பிறகு, ஈழத்துப் போர் என்று பராந்தகனுக்குப் போர் மீது கவனம் சென்றது. ஈழத்தை வென்றாலும் பாண்டிய அரசுச்சின்னங்களை அடையமுடியாத தோல்வி பராந்தகனை உறுத்தியது. இந்த நிலையில் நமது கதை ஆரம்பமாகிறது.
சோழன் பராந்தகன், விண் வரையிலும் சோழ நாட்டை உயர வைக்கும் ஆசையில், ராஜ தூரிகை எடுத்து சோழ ஓவியம் வரைந்தவன். பராந்தகனுக்கு நான்கு புதல்வர்கள், இரு பெண்கள். அவர்களுள் தலைப்பிள்ளை, இன்று நமது கதாநாயகன் இராஜாதித்தன். மற்ற இளவல்கள் கண்டராதித்தன், அரிஞ்சயன். வீரமாதேவி, அநுபமா இருவரும் பெண்மக்கள். வீரமாதேவியை இராட்டிரகூட மன்னனான நான்காம் கோவிந்த வல்லவரையனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தான். இராட்டிரகூட நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக கோவிந்த வல்லவரையன் பட்டமிழந்து, தன் மனைவி வீரமாதேவியுடன், ‘மான்ய கேட’ விலிருந்தது சோழ நாட்டிற்கே வந்து சேர்ந்தான். இந்த நிகழ்வுகளைச் சற்று முன்பு பார்த்தோம். இராஷ்டிரகூட நாட்டுத் தலைநகரம் ‘மான்ய கேட’ நகர். இராஜாதித்தன், தன் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்தெறிந்து – சகோதரியையும், சகோதரியின் கணவன் கோவிந்தனையும் எழுச்சியுற வைத்து, மீண்டும் இராட்டிரகூட நாட்டு மன்னராகவும், அரசியாகவும் ஆக்கிக்காட்ட வீர சபதம் எடுக்கிறான்.
அரிஞ்சயனும், அநுபமாவும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள். பராந்தகனின் மற்றொரு அரசியான பழுவேட்டரையர் மகள் வயிற்றில் உதித்தவர்கள். பட்டத்தரசி கோக்கிழான் அடிகளுக்கு, முன்னதாகவே இராஜாதித்தன் பிறந்துவிட்டதால், அவனுக்குத்தான் அடுத்துப் பட்டத்துரிமை என்று முடிவாகியிருந்தது. அது காரணம், பழுவேட்டரையருக்குச் சற்று உற்சாகம் குறைந்தது. எனினும், தன் பேரன் அரிஞ்சயனை, இராஜாதித்தனுக்கு இணையாக வீரமுடையவனாக்க, அவர் தம் சொந்த மேற்பார்வையில் வளர்க்கலானர். பேத்தி அனுபமாவை கொடும்பாளூர் இளவரசனுக்கு மணமுடித்தார்.
களம் தயாரானது.
அரசியல் களம், போர்க்களம் என்று பல களங்கள்.
இரத்தம், கண்ணீர் பல சிந்தப்பட்டது.
தக்கோலம் என்ற ஊர் பயங்கரத்தைக் காண உள்ளது.
இராஜாதித்தன் சரித்திரத்தில் கலந்த நாள் வந்தது.
இந்தக்கதைகள் விரைவில்.