
இளவயதில் இருந்தே திரைப்படங்கள் மீது எப்படி ஈர்ப்பு வந்தது என்பதைத் தனியே எழுத வேண்டும். குழந்தைகளை சினிமாவிற்கு அழைத்துச் செல்லும் அன்பு உறவுகள் இருந்த ஒரு காலம் இருக்கவே செய்தது. அப்பா அழைத்துச் செல்வது போல் வராது, என்ன இருந்தாலும் !
கொஞ்சம் கண்டிப்பும், அன்பும் இடையறாது சமன் செய்து பேணி வளர்க்கும் ஒரு தந்தை, தம் குழந்தைகளைத் திரைப்படத்திற்கு, சர்க்கஸ் காட்சிகளுக்கு, இசை நடன நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வது ஒரு திருவிழாவுக்குப் போவது போலவே இருக்கும். அப்படியான அன்புத் தகப்பனை அண்மையில் இழந்த போது, அவருடன் ‘எனக்கே எனக்கான‘ தருணங்களாக வாய்த்த பொழுதுகள் ஓர் ஒளிப்படம் போல் மனக்கண் மூலம் வந்து போனதில், திரைப்படங்கள் சிலது தட்டுப்பட்டது. குடும்பம் மொத்தத்தையும்தான் அழைத்துப் போவார் அப்பா. தேர்வு செய்து தான் அதுவும். ஆனால், சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு அவர்தான் அழைத்துப் போனார் என்பது இன்னமும் எனக்கு விளங்காத புதிரானது. பதின்ம வயதுகளில் இருந்த நான், படம் முடிந்தபின் அவரை நேரே பார்க்க சிறிது சங்கடப்பட்டது இன்னமும் பளிச்சென்று நினைவில் நிற்கிறது – அப்பாவுக்கு வயது 50 அப்போது. படம், வேலூர் நேஷனல் தியேட்டரில் பார்த்தது.
அதற்குப் பிறகு ஒரு முறை கூட வேறு எங்கும், தொலைக்காட்சியிலோ, யூ டியூபிலோ கூடப் பார்க்காத அந்த அருமையான கருப்பு வெள்ளைப் படத்தின் பல முக்கிய காட்சிகள், சாட்டையடி வசனங்கள், பாடல்களுக்கான காட்சிகள், உறைந்து போய் நின்ற இடங்கள், குமுறிக் குமுறி அழத் தூண்டிய தருணங்கள், அதிர்ந்து போய் வெளியேறிய கடைசிக் காட்சி என எப்படி இந்தப் படம் இன்னமும் நினைவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை. இப்போது மீண்டும் பார்த்தேன்.
‘ப‘ வரிசை படங்களின் மூலம் அறிந்து வைத்திருந்த பீம்சிங் அவர்கள் இயக்கியதா என்ற கேள்வி முதல் அதிர்ச்சி எதிர்வினை. அசாத்திய காட்சி தொகுப்பில், அசாதாரணமான கருப்பொருளை ரசிகர்களுக்கு இப்படி கடத்தி விட எப்படி முடிந்தது என்பது அடுத்த அதிர்ச்சிக் கேள்வி. கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களும் அத்தனை தன்னியல்பாக நடிக்க வைத்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது, இது மூன்றாவது வியப்பு. கதையின் போக்கில் கதாசிரியரும் கதைக்குள்ளேயே கலந்தும் விலகியும் உடன் வந்தும், ஒரு கட்டத்தில் வர இயலாமல் தவிப்பதும், அவரது பாத்திரத்தால் அவரே கவிழ்க்கப்படுவதும் நான்காவது வியப்பு. இரண்டே பாடல்கள், என்றென்றும் பேசப்படும் கேட்கப்படும் பாடல்கள். படத்தில் பின்னணி இசைக்கு மிக முக்கிய பங்கு, இன்னொரு பாத்திரமாகவே ! முக்கியமான பெரு வியப்பு, ஒரு சிறுகதையின் முதல் வரியை, அப்படியே படத்தின் முதல் காட்சியாகப் படைத்தளித்தது. ஜெயகாந்தன் எனும் எழுத்துச் சிற்பியை எண்ணியெண்ணி அசந்து போய் நிற்க வைக்கும் திரைக்கதை.
படத்தின் நாயகி பாத்திரத்திற்கு லட்சுமியை, இயக்குநர் கே பாலச்சந்தர் தான் பரிந்துரைத்தார் என்று விக்கிபீடியாவில் ஒரு குறிப்பு இருக்கிறது. மரத்தை மறைக்காமல், மரத்தில் மறையாமல் வரும் மாமத யானை நடிகை லட்சுமி! லட்சுமி அல்ல அவர், ஜெயகாந்தனின் கங்கா தான். உணர்ச்சிகளின் எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனையும் ஒரே கதாபாத்திரத்தில் அவருக்கு இப்படி வாய்த்திருக்குமா தெரியவில்லை, சொற்கள் போதாது, பிச்சி உதறி இருப்பார் லட்சுமி. விருதுகள் கிடைத்ததில் வியப்பு இல்லை.
ஆனால், படத்தின் நடிப்புக்காக சுந்தரிபாய்க்கு உள்ளபடியே மிகப் பெரிய மரியாதை செய்யப்பட்டிருக்க வேண்டும். நடுத்தர வயது கடக்கும் பருவத்தில், எல்லோருக்கும் சேவை செய்யவும், தனக்குள் மட்டுமே கதறி அழுது கொள்ளவும், யாரையும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாது தான் மட்டும் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய ஒரு கைம்பெண் பாத்திரம். அந்தப் பேசும் கண்கள், வெறிக்கும் பார்வை, துடித்தது துடித்தபடி இருந்தாலும் எப்போதாவது மட்டும் பேச அனுமதி பெற்றுக் கொள்ளும் உதடுகள்……கனகம், ஓர் அற்புதப் பாத்திரப்படைப்பு, சுந்தரி பாய், கனகமாகவே வாழ்ந்திருப்பார். அப்புறம், ஒய் ஜி பார்த்தசாரதி, கதைக்காகச் செதுக்கிச் செய்த உடல் மொழியும், முக பாவங்களும், அசட்டு சிரிப்பும், சாதுரியமான அத்து மீறலும், அடிவாங்கியதும் அடக்க ஒடுக்கமாக வெளியேறுதலும் சிறப்பாகக் கொண்டு வந்திருப்பார்.
அதிரடியாக மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு மாலை நேரத்தில் வீடு திரும்ப பேருந்து நிறுத்தம் ஒன்றில் காத்திருக்கிறாள் கங்கா. குடை கூட இல்லை. ஒதுங்க இடமில்லை. மற்றவர்கள் அவரவர் பேருந்து வர வர புறப்பட்டுப் போய்விட ஒற்றை ஆளாக உடலைக் குறுக்கிப் பாட புத்தகங்களை அணைத்துக் கொண்டு செய்வதறியாது அவள் நிற்கையில் கடந்து போகும் கார், ஒரு வளைவு எடுத்துக் கொண்டு அவளருகே வந்து நிற்கிறது. சன்னமாக மறுக்கும் அவளை சமாதானம் செய்து காரில் ஏற வைத்துவிடுகிறது வெளியே விடாது அடிக்கும் மழையும், வராது போகும் பேருந்தும். எதிர் முனை பேருந்து நிறுத்தத்தில் குடையோடு பேருந்துக்குக் காத்திருக்கும் அதே கல்லூரியின் நூலகர் – எழுத்தாளர் ஆர் கே வி எனும் விஸ்வநாதன் பார்க்கிறார், பரிதவித்துப் போகிறார். கார் கங்கா எதிர்பார்க்கும் வழியில் செல்வதில்லை, அதை இயக்குபவனுக்கு வசதியான ஒதுக்குப்புறம் போய் நிற்கிறது. அவள் மீண்டும் சன்னமாக மறுக்கிறாள். அந்த அபலைப் பெண் தன்னைத் தொலைத்து விடுகிறாள்.
எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு வீடு திரும்பிவிடும் அவளுக்கு, லாந்தர் விளக்கோடு மல்லுக்கட்டிக் கொஞ்சநஞ்ச வெளிச்சத்திற்குப் போராடி இருளில் உழலும் விதவைத் தாயைப் பார்த்ததும் தாங்க மாட்டாமல் உடைந்து கொட்டி விடுகிறாள். அய்யோ அய்யோ என்று அவள் தலையிலும், தனது தலையிலும் அடித்துக் கொள்ளும் தாயின் கதறல், அவள் மகன், மருமகள் எல்லோருக்கும் கேட்டு, அதன்வழி தெருவுக்கே எல்லா செய்திகளையும் எடுத்துக் கொடுத்துவிடுகிறது. வீட்டை விட்டு வெளியேறியாக வேண்டி இருக்கிறது கங்கா.
நேரில் காரில் போவதை மட்டும் பார்க்கும்ஆர் கே வி, கங்கா பின்னர் கல்லூரிக்கு வருவதில்லை என்றும், காரணம் என்ன என்பதையும் அறிந்தபின், தான் வேறு ஒரு கற்பனை செய்து பார்ப்பது, அக்கினி பிரவேசம் என்ற கதையாகப் பின்னர் சில ஆண்டுகள் கழித்து எழுதி வெளியாகி விடுகிறது. கதையில் வரும் தாய், பிறிது ஒருவர் அறியாத வண்ணம், தேவையற்ற களங்கம் படியாமல் மகளின் எதிர்காலத்தைக் காத்துவிடுகிறார். மகள் இறக்கி வைக்கும் இடியை அவள் விழுங்கி விட்டு, ‘ஒண்ணுமில்ல, மழையில நனைஞ்சுண்டு வந்திருக்கா‘ என்று சொல்லிவிடும் அவளது ஒற்றை வாக்கியம் ஊர் வாயை மூடி விடுகிறது. கதையைக் கனகம் வாசித்துக் கொண்டிருக்கும்போது உலை வாய் மட்டும் தான் பொங்கிக் கொண்டிருக்கிறது சமையலறையில்!
‘உன் பொண்ணுக்கு சமத்து இருந்தா அவனையே தேடிப் பிடிச்சு இழுத்துண்டு வந்து இவன் தான் என் ஆம்படையான், இவனோடத் தான் வாழப் போறேன்னு சொல்லட்டுமே‘ என்று தாய் மாமன் சொல்வது, கதியற்று நின்ற நேரத்தில் அவரது உதவியால் படிப்பை முடித்து நல்ல பதவியில் அமர்ந்த நிலையிலும் உள் நின்று வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது கங்காவை. ஆர் கே வி மூலம் அந்த பிரபாகரைக் கண்டு பிடித்து விடுகிறாள். ஆனால், அவன் ஏற்கெனவே திருமணம் ஆகி, கல்லூரியில் படிக்கும் வயதில் ஒரு மகள் உள்பட மூன்று குழந்தைகளின் தந்தை. அவனது குற்ற உணர்ச்சியைத் தணித்துப் பழகத் தொடங்கும் கங்காவின் போக்கு, அவள் அம்மாவை நிலை குலைய வைக்கிறது.
எழுத்தாளர் ஆர் கே வி, மனைவியை இழந்த தமது உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு கங்காவை மணமுடிக்க ஆலோசனை சொல்கிறார். கங்கா, பிரபாகரனோடு தான் வாழ்க்கை என்று சொல்லி விடுகிறாள். கங்காவின் சகோதரன், பிரபாகரனையே நேரில் பார்த்துப் பேசவும், பிரபாகரன், அவள் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக வெளியேறி விடுகிறான். கொட்டுகிற மழையில் காரிலிருந்து இறக்கி விடப்பட்ட போது இருந்ததை விடவும் வேறு கொதிப்பில் நிற்கிறாள் கங்கா. முன்னது உடலில் மட்டும் ஏற்பட்டிருந்த காயம்.
கதையை ஏற்பதோ, மறுப்பதோ, வாதிடுவதோ இன்னும் பல ஆண்டுகள் நிகழக் கூடும். கதை சொல்லல் பற்றித் தான் இங்கே பேசுவது.
நடுத்தர பிராம்மணக் குடும்பம், அதன் ஆச்சார அனுஷ்டானங்கள் மட்டுமல்ல அதன் பேச்சு மொழி இத்தனை பாந்தமாக, செயற்கையற்றுத் திரையில் அதிகம் பார்த்த நினைவில்லை. லட்சுமி காலில் விழுந்து வணங்கும்போது, ஒய் ஜி பார்த்தசாரதி ஆசி கூறும் பாங்கு, முதல் முறைக்கும் இரண்டாம் முறைக்கும் இடையே எதிரெதிர் உணர்ச்சிச் சூழல் என்றாலும் அத்தனை இயல்பாக இருக்கும்.
‘அந்தக் கட்டால போறவன் ஏன் இங்கே வந்துட்டுப் போறான்‘ என்று ஊர் பேசும் பேச்சுக்குத் தன்னிடம் நியாயம் கேட்கும் அம்மாவைக் கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விடுகிறாள் கங்கா. நீ மட்டுமென்ன சாஸ்திரப்படி தான் வாழறியா என்பது கேள்வி, ஆனால் அந்தச் சொற்கள் நெருப்பில் தெறிப்பவை. மறுநாள் அதிகாலை தலைமுடியை மழித்துக் கொண்டு குளத்தில் குளித்துவிட்டு தலையைச் சுற்றிய ஈரப்புடவையோடு வீட்டுக்குள் நுழையும் தாயைக் கண்டு பதற மட்டுமே முடிகிறது கங்காவுக்கு.
காஞ்சிபுரத்தில் இளவயதில் கைம்பெண் ஆகி, பூவும் பொட்டும் மட்டுமல்ல, நகைகள் துறந்து ரவிக்கை இன்றி, கழுத்தைச் சுற்றிய நார்மடிப் புடவை மழித்திருக்கும் தலையைச் சுற்றியபடி இருக்கும் நெருங்கிய உறவினர் எங்கள் வீட்டுக்கு வருவதைப் பார்த்துப் பழகி இருந்த இளவயதில், எங்கள் பாட்டனார் மறைந்த போது எங்கே எங்கள் பாட்டியும் அப்படி செய்துகொண்டு விடுவாளோ என்று சித்திகளோடு சேர்ந்து நாங்களும் கத்திக் கதறிக் கூடாது என்று போராடித் தடுத்தது எப்போதும் மறக்காது. கருத்த நிறத்தினள் ஆன எங்கள் பாட்டி, தனக்கு மிகவும் பிடித்தமான மஜெந்தா நிறக் குங்குமம் இலேசாக வைத்துக் கண்ணாடியில் பார்த்துவிட்டு அழுதவாறே அழித்துக் கொள்ளும் காட்சியும்தான்!
எழுத்தாளர் ஆர் கே வி, கல்லூரியில் மாணவியரின் கேள்விகளுக்கு எடுத்தியம்பும் பதில்கள் படம் வந்த காலத்தில் மிகவும் பேசப்பட்டவை. நாகேஷ் பின்னி எடுத்திருப்பார். அவரது வீட்டுச் சூழல், அவரது கதையை மெனக்கெட்டு நகல் எடுக்கும் அவருடைய மனைவி, அவரது கதைகளைக் கரித்துக் கொட்டும் தாய் (‘இவா வயிற்றெரிச்சல் கொட்டிக்கத்தானே நான் கதை எழுதறேன்‘) எல்லாம் தமிழ்த் திரைக்குப் புதிது. சிறிது நேரமே வந்தாலும் நீலகண்டன் (அண்ணன்), சுகுமாரி (மன்னி) அருமையாகச் செய்திருப்பார்கள்.
கங்காவின் வாழ்வில் இரண்டு முறை குறுக்கிடும் வித்தியாசமான பாத்திரத்தில் ஸ்ரீ காந்த் சிறப்பாக செய்திருப்பார், ஆனால், வலிய திணிக்கப்பட்ட பேச்சு மொழி போல உறுத்தலாகத் தெரியும்.
கண்டதைச் சொல்கிறேன், ‘போலச் செய்தல்‘ வாய்ப்பற்ற ஓர் அருமையான இசைப்பாடல், ஜெயகாந்தன் பாடலுக்கான உயிர்ப்பான முறையில் எம் எஸ் விஸ்வநாதன் இசைக்கும் அந்தப் பாடல், உலுக்கிப் போடுவது. ஜெயகாந்தனின் மற்றொரு பாடலான ‘வேறு இடம் தேடிப் போவாளோ‘ வாணி ஜெயராம் இசைத்திருக்கும் அபாரமான ஒன்று.
படிப்பும், வேலையும், பொருளாதார வலுவும் கங்காவை நிமிர்ந்து நின்று துணிந்து பேச வைக்கிறது. இத்தனையும் இருந்தபோதிலும் அவள் பெண் என்பதை சமூகம் அவளுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பின்னணியற்ற பெண்களின் கதியையும் சேர்த்து சிந்திக்கத் தூண்டுகிறது படம்.
அந்த மழை பெய்து கொண்டே இருக்கிறது, படம் முடிந்த பிறகும்….உள்ளே அமர்ந்திருப்பவர் குடையோடு இருக்கத் தான் நனைந்தபடி மிதித்துப் போகும் ரிக்ஷாகாரர், காளைகள் இழுத்துப் போகும் பெரிய பார வண்டி, கடந்து போய்விட்டு மீண்டும் ஒரு வளைவு எடுத்து வந்து கதவு திறந்து நிற்கும் அந்தக் கார்……
Dear Mr. Venu…
Your ability to recollect and summarize the award winning novel ‘Sila Nerangalil Sila Manithargal’ by Sahitya Akaademi Award winner Jeyakanthan is very impressive and fantastic.
My best wishes to you.
LikeLike
நானும் முன்பு பார்த்திருக்கிறேன்.. மவுனமாக அழவைத்த படம்.. வேணுகோபாலனுக்கு பாராட்டுக்கள்..
கே.ராஜு
LikeLike
இரண்டு முறை விரும்பி பார்த்த படம். மூன்றாம் முறை தங்கள் எழுத்துக்களின் வழியே. எழுத்துக்கள் கேமிராவாக மாறி படப்பிடிப்பே நடத்தியுள்ளன. ரசனைக்கும் அதைப் திரும்ப பகிரும் திறமைக்கும் வணக்கம்.
LikeLike
அருமையான விவரிப்பு படத்தை மீண்டும் பார்க்கும் ஆவலை தூண்டுவதாக இருக்கிறது.
LikeLike