நம் மகாகவி பாரதி, ஒரு “பா”வ(ல்)லன், மற்றும் ஒரு பாமரன்…!
முண்டாசுக் கவிஞனை
கொண்டாடாதார் யாருளர்
இப்பாரில்?
ஒப்பார் யார்க்கும்
குறைந்தபட்சம்
ஒரு காததூரமேனும்
தம் கவித்திறத்தால்
அப்பால் நிற்பார் பார்
நம் பாரதி.!
நம் பாரதி
தமிழன்னை
கம்பீரப் பவனிவரும்
மொழித்தேரின் சாரதி!
எமக்குத் தொழில் கவிதை
நாட்டுக்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
என கவிதை ஒளிபடைத்த கண்ணன்.
“பண்”பாட்டுடை படைத்தலைவன்.
துழாவத் துழாவ
கவிதை தொட்டனைத்தூறும்
பாரதிக்கு தரணியெலாம்
விழா விழாவாய் எடுத்தாலும்
இன்னும் இன்னுமென
விழாவெடுக்க
சிவசக்தி சொல்லிடும்
அந்தச் சுடர்மிகும் அறிஞனைச்
சுட்டிக் காட்டி!
அப்படித்தான் அக்கவிக்கு
அக்கறையாய் ஒரு
விழா என்ற இரண்டெழுத்திற்கு
முனைப்பெடுத்த
குவிகம் என்ற நான்கெழுத்து
தேர்ந்தெடுத்து
முன்னிறுத்திய
முனைவர் வ வே சு மூன்றெழுத்து.
பொன் கிடைத்தாலும் கிடைக்காத
புதன் மூன்றெழுத்து.
வாரம் மூன்றெழுத்து.
நேரம் மூன்றெழுத்து
ஆறரை மூன்றெழுத்து
அட!
பாரதியை கவிதையை
ரசனையுற திளைத்து சுவைத்த
வவேசு
அவருக்கும்
மூன்றெழுத்து.
எடுத்தது கண்டனர்
இற்றது கேட்டனர்
அது ராமாயண சுயம்வரம்.
வவேசு வந்தார் ஆறரைக்கு.
பாஞ்சாலி சபத பாரதியை
எடுத்தார் தொடுத்தார் உரையை.
மூச்சுவிட மறந்து
பேச்சில் மயங்கியது
ஒரு ஜூம் கூட்டம்.
கவிஒளி, பொருள் உன்னதம், மொழியழகு
மூன்றும் கூட்டி அற்புதமாய்
ஒரு முத்துமாலை கட்டிவைத்தார்
பத்து வார பயணத்தில்.
சகுனி சதிக்கு ஒரு குரல்
தர்மனின் கையறுநிலைக்கு
ஒரு”பா”வம்.
துரியனுக்கு ஒரு சாடல்
பாஞ்சாலி நிலைக்கு ஒரு மனக்கலக்கம்.
கவிதை சொன்ன விதம்
கனன்று பொழிந்த நடை
நமக்குள் கடத்திய கவியுணர்வு
வவேசு நிகழ்த்திக்காட்டியது
பாரதிக்கு,
அந்த பாஞ்சாலி சபதத்திற்கு
ஒரு சரியான ஜதிபல்லக்கு.
மகுடி கேட்ட நாகம்போல
மழலை கேட்ட தாலாட்டுபோல
மதுவுண்ட மந்திபோல
மயங்கி கிறங்கி கிடந்தார்
சனமெல்லாம்.
அத்தனை செவிகளிலும்
இன்பத்தேன் வந்து
பாய்ந்தது.
அத்தனை சொட்டுமே
மனதுக்கு இனிமை சேர்த்தது.
எத்தனைகோடி இன்பம்
இதில் வைத்தாய் எம் இறைவா!
கண்டவர் கேட்டவர் பாக்கியர்கள்.
பாக்கி நான் என உணர்கிறீர்களா
என் போல் பாமரனாய் நீங்கள்?
பாரதியின் பாட்டுரைத்து
பரிவுடன் எம்கரம்பிடித்து
பாஞ்சாலி சபத அவைக்கு
கரம்பிடித்தழைத்துச் சென்ற
“பா”வல்லன் வவேசு
அடுத்த வார புதன்
“அவர்” பாட்டுக்கு
கண்ணன் பாட்டெடுத்து வருகிறார் .
யாவரும் “கேளீர்”!
அவசியம் வாரீர்.!!
அறிவிப்பு வரும் பாரீர்…!
=========================================
டாக்டர் பாஸ்கரன் அவர்கள் முகநூலில்:
இப்போதெல்லாம் இலக்கியத் தொடர் சொற்பொழிவுகள் அரிதாகவே நடைபெறுகின்றன – திருமுருக கிருபானந்த வாரியார், புலவர் கீரன் போன்றவர்களின் ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவுகள், அந்தப் பணியினைப் புதிய பாணியில் அமைத்து எல்லோரையும் கவர்ந்திழுத்தார்கள். சமீபத்தில், குவிகம் இலக்கிய வாசல் சார்பில் மகாகவி பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’, தொடர் நிகழ்வாக பத்து வாரங்கள் நடைபெற்றது. சொற்பொழிவாற்றி, பாரதியின் உணர்வுகளோடு கேட்பபவர்களைக் கட்டிப்போட்டு, பாஞ்சாலி சபதத்தை மிகச் சிறப்பாக நடத்திச் சென்றவர் முனைவர் வ.வே.சு. அவர்கள்!
பிரம ஸ்துதியில் தொடங்கி (நொண்டிச் சிந்து), அழைப்புச் சருக்கம், சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதற் சருக்கம், சபதச் சருக்கம் என முக்கியமான பாடல்களைக் கோர்வையாக, வாசித்து, பொருள் கூறி அருமையான விளக்கங்களுடன் பேசிய வ.வே.சு. அவர்கள், பாத்திரங்கள் பேசுவதை ஏற்ற இறக்கங்களுடன் வாசித்தது சிறப்பு. மகாகவி கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை – திரிதராட்டிரன், விதுரன், சகுனி, தருமன், அருச்சுனன், வீமன், கர்ணன், துரியோதனன், திரெளபதி, துச்சாதனன், விகர்ணன் பாத்திரங்களாகவே மாறி எழுதுகின்ற வித்தையை – வ.வே.சு. அவர்களும் தன் சொற்பொழிவினூடே செய்தது வியப்பு!
வீமன் சபதம், அர்ச்சுனன் சபதம், திரெளபதி சபதம் என பாடல்களைப், பதம் பிரித்து, பொருள் சொல்லும் முன் அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறி உணர்ச்சிப் பிழம்பாகப் பாடல்களை வாசித்த விதம், கண் முன் முண்டாசுக் கவிஞனைக் கொண்டு வந்து நிறுத்தியது.
எங்கெங்கே பாரதி தன் குரலில் ஒலிக்கின்றான் (இறை வணக்கம், பாத்திரங்களின் குணநலன்கள், இயற்கையை வருணித்தல், கண்ணனின் புகழ் பாடுதல், இடையே ‘ஜெய ஜெய பாரத சக்தி, பராசக்தி’யை அழைத்தல்) என்பதை சுட்டிக்காட்டினார். வியாச பாரதத்தில் இல்லாதவற்றை எப்படி பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில், பாத்திரங்களின் மனநிலைக்கேற்றவாறு எழுதுகின்றான் – திருக்குறள், கம்பராமாயணம் போன்றவற்றிலிருந்து மேற்கோள்கள் என ஓர் இலக்கியப் பேருரையாக மாற்றிய வ .வே.சு. வணக்கத்திற்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
“மகாகவி பாரதியின் மந்திரச் சொற்கள்” என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானதுதான் – மந்திரத்தால் கட்டுண்டுதான் கிடந்தோம் ஒவ்வொரு வாரமும்.
பாரதியை எல்லோரும் வாசிக்க வேண்டும். மேற்கோள் காட்டுவதற்கு மட்டுமல்ல – ஆழ்ந்து வாசித்து, அவனை அறிந்து, நல்ல தமிழை அவன் கவிதைகளின் மூலம் சுவாசிக்கவும் வேண்டும்.
வ வே சு அவர்களுக்கும், குவிகம் இலக்கிய வாசலுக்கும் ஓர் வேண்டுகோள்! பாஞ்சாலி சபதம் சொற்பொழிவுகளை ஒரு மின் புத்தகமாகக் கொண்டு வருதல் வேண்டும்! காலத்திற்கும், எல்லோருக்கும் பயனளிக்கும் என்பது என் எண்ணம்!
(தொடர் சொற்பொழிவின் காணொளிகளின் தொகுப்பு (play list): https://bit.ly/2Tm5Bs
==========================================
டாக்டர் தென்காசி கணேசன்
குவிகம், இணையம் வழியாக நடத்திய மஹாகவியின் மந்திரச் சொற்கள் – சிறு கண்ணோட்டம்
(முனைவர் தென்காசி கணேசன் – சென்னை 92 )
பாரதி
உன்னைப் பற்றி என்ன சொல்ல? எந்த விதத்திலும் வசதிகள் இல்லாத ஒரு சூழ்நிலையில் – வருமானம் இல்லை, ஆங்கில அரசின் எதிர்ப்பாளர் என்ற முத்திரை, சொந்தங்களும் பந்தங்களும் உதறிய நிலை, எப்போதும் பின் தொடரும் ஒற்றர்களும், போலீசும் ; பரிதவித்துக் கொண்டிருக்கும் மனைவியும் குடும்பமும் – இத்தனைக்கும் நடுவில் உன்னால் எப்படி தேசத்தை மட்டுமே சிந்திக்க முடிந்தது? கவிதைகளும் கட்டுரைகளும், எழுதிக் குவிக்க முடிந்தது? எப்படி சந்தோஷமாக – ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்றும், எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் என்றும் குதூகலிக்க முடிந்தது.?
தாமிரபரணி தந்த தங்கக் கவியே – உன் கவிதைகள் அதிசயம் என்றால் நீயே ஒரு அதிசயம் தான். அதனால் தான் நீ கூறிய வார்த்தைகள் எல்லாம் மந்திரச் சொற்கள் ஆயின. எங்கள் மனதில் இருத்தி, எங்களை மயங்கவும் வைத்தன.
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் –
இது உலக நீதி
பாரதியே – உன் நினைவு இருந்தால்தான்
எங்களுக்கே நெஞ்சே இருக்கும் !
குவிகம்
உங்களின் பல்வேறு தொடர் சேவைகளில், முத்தாய்ப்பானது இந்த நிகழ்வு என்பதே உண்மை. மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
பேராசிரியர் முனைவர் வ வே சு
சிலர் பேசினால் நிமிடங்கள் கூட மணியாகத் தோன்றும்
நீங்கள் பேசினால், மணி கூட நிமிடமாக மாறுகிறதே.
சுந்தரத்தமிழின் தந்திரம் அறிந்தவன் நீ –
தன் திறமும் தெரிந்தவன் நீ – அதனால் தான் உனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள், குற்றால அருவியாக வற்றாமல் கொட்டுகின்றது. வாழ்க !
பாஞ்சாலி சபதம்
முனைவர் வ வே சு அவர்கள் 10 வாரமாக, ஒரு யாகம் போல இந்த சொற்பொழிவை தந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. முடிகின்றதே – அடுத்த புதன் எப்போது வரும் என்றே மனம் எண்ணியது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது மாற்றி பொன்னான பாஞ்சாலி சபத வீச்சு, எங்களுக்கு ஒவ்வொரு புதன் அன்றும் கிடைத்தது.
வடமொழியில் வியாசர் – தமிழில் பாரதி – எந்த இடத்தில் அப்படியே எடுத்து ஆள்கிறார் – எந்த இடத்தில் வேறுபடுகிறார் என்பதை எல்லாம் விளக்கமாக தந்தார். (வியாசர் த்ருதராஷ்டிரனை தீயவனாக பார்க்க, பாரதி கொஞ்சம் அன்பு காட்டுகிறான் – வியாசரிடம் பாஞ்சாலி சிரித்ததாக இல்லை.- அதேபோல தர்மன் பாஞ்சாலியை வைத்து ஆடியது என இரண்டிற்கான ஒப்பீடுகள்) அத்துடன், பாரதிக்கு இன்னொரு agenda வும் உண்டு – இந்த தேசத்தின் விடுதலை – அவர் சகுனி மற்றும் கௌரவக் கூட்டத்தை , ஆங்கில அரசாகவே நினைக்கிறார். பாரதி எந்த மனோ நிலையில், வேகத்தில் பாடி இருப்பானோ, அந்த உணர்வை வ வே சு தந்தது இந்த தொடரின் வெற்றிக்கு ஒரு காரணம்.
அதேபோல் பல புதிய அறியாத செய்திகள் –
• மன்னும் இமயமலை வரியில், மன்னும் என்ற சொல்லுக்கான விளக்கம் – எப்போதும் நிலைத்திருக்கும் (மன்னுபுகழ் கோசலை என உதாரணத்தை சொன்னது)
• ஆரிய என்ற வார்த்தைக்கு சிறந்தவர் என்று அர்த்தம் ( ஆரிய திராவிட இந்த புலம்பல் எல்லாம் இல்லை )
• சோரன் – அவ்வெது குலத்தான் என்பதற்கு -யதுகுலத் திருடன் கண்ணன் என்று
• இகல்- இதழ் வேறுபாடு – அதன் அர்த்தம் திரிபு
• சவுரியம் தவறேல் என்பதன் அர்த்தம் (வீரம்)
• வவ்வுதல் நீக்கு – திருடுதல்
• விகர்ணன் – நூறு அயோக்கியர்களில் ஒரு நல்லவன்
• வீரம் சாகும்போது சாத்திரமும், சாகிறது
இப்படி எழுதிக் கொண்டே போகலாம் .
சூதாட்டச் சருக்கம் இரண்டு வாரமும், திகில் படம் பார்ப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது வ வே சு வின் சிறப்பு.
நிறைவாக இரண்டு சொன்னார் –
வேதம் புதுமை செய் என்றான் பாரதி. அப்படி என்றால் , அதை மீட்டெடு – பின்பற்று என்கிறான் தவிர மாற்று என்று கூறவில்லை.
(நாவினில் வேதம் உடையவள் எங்கள் தாய் என்றும் வேதம் நிறைந்த தமிழ்நாடு என்றும் கூறுகிறான் – யாருடைய மண் என்ற ஐயமே வேண்டாம் என்கிறான் முண்டாசுக் கவிஞன் )
வியாசனிடம் இல்லாதது எட்டயபுரத்தானிடம் இருக்கிறது – அவனிடம் இருந்து வந்தது ஆவணம்
இவனிடம் இருந்து வந்தது ஆவேசம் –
இது தான் வித்தியாசம் என்றது அருமை
எப்படியோ – பாரதியையும் பாஞ்சாலி சபதத்தையும் மீண்டும் வாசிக்க வைத்த குவிகத்திற்கும் , முனைவர் வ வே சு அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.