கடைசி நிமிடத்தின் வேதனை படிந்த அந்த முகம் சரளாவினுள் எழுப்பிய அலைகளை அவளாலேயே இனம் காண முடியவில்லை. வதங்கிய ரோஜா மாலையைப் போல் தரையில் கிடத்தப்பட்டுள்ள சுந்தரின் உடல்.. புரிந்தும், புரியாமலும் அருகில் ‘அப்பா, ஏந்திருப்பா, வெளயாடணும்ப்பா’ என்று அந்த உடலை உலுக்கிக் கொண்டிருக்கும் ரோஷன். உண்மையாகவே இறந்து விட்டாரா என்ன? நாப்பத்தியோரு வயதில் இதயம் துடிப்பதை நிறுத்தக் கூடுமா? கல்யாணமான புதிதில் இதே போல அவன் படுத்திருந்தது அவள் நினைவிற்கு வந்தது.
இரு வார விடுமுறைக்குப் பின் அன்று தான் சரளா புதிய அலுவலகத்திற்குப் போயிருந்தாள்; திருமணத்திற்கு முன்பே இட மாற்றம் கேட்டு அவள் விண்ணப்பத்திருந்தாள். அதிக வேலையின் காரணமாக சற்று தாமதித்துத்தான் கிளம்ப முடிந்தது. மின்சார ரயில் இரண்டை கூட்டத்தினால் வேண்டுமென்றே தவிர்த்தாள். புது இடம், கல்யாணக் களை இன்னமும் முகத்தில் மீதமிருக்கிறது, காத்திருப்பதில் அர்த்தம் இல்லையென்று ஏறியதில் கசகசவென்ற கூட்டத்தின் நடுவில் கண் தெரியாத சிறுமியர் இருவர் பாடிக் கொண்டே பிச்சை எடுத்த காட்சி அவளை வதைத்தது; கூட்டத்தைச் சாக்காகக் கொண்டு அந்த சிறுமியரின் மார்புகளை இரு அயோக்கியர்கள் பிசைந்து எடுத்தனர். பாட்டு அந்தரத்தில் நின்று, ‘அண்ணா, விட்டுடு’ என்று கதறிய குரல்கள். சரளா உட்பட யாரும் எதுவும் பேசவில்லை. அந்த ஆட்கள் சிரித்துக் கொண்டே அடுத்த நிலையத்தில் இறங்கிப் போயினர். ‘காசு பத்ரம்டீ, இல்லாட்டி அங்க வேற அடி வாங்கணும்’ என்ற ஒரு சிறுமியின் குரலை சரளாவால் இன்றளவும் மறக்க முடியவில்லை. இத்தனை அவமானத்தோடு, கண்களுமில்லாமல் இவர்கள் வாழ்வதற்கு செத்துப் போகலாம் என்று மனதில் தோன்றிய எண்ணத்திற்காகத் தன்னையே கடிந்து கொண்டாள்.
இந்த மனவாதையோடு வீட்டிற்குள் வந்தால், வீடு திறந்திருக்கிறது, கூடத்தில் விளக்குப் போடவில்லை, சமையலறையில் முணுக்முணுக்கென்று சிறிய ஜீரோ வாட் பல்ப் எரிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் படுக்கை அறையிலும் விளக்கில்லை. திறந்திருந்த சாளரம் வழியே வந்த வெளிச்சத்தில் தரையில் சுந்தர் பயமுறுத்தும் கோணத்தில் விழுந்து கிடந்தான். அவள் விளக்கைப் பொருத்தி விட்டு அவனை பயத்துடன் அணுகினாள்; தொட்டு அசைத்தாள், பலகீன பயந்த குரலோடு கூப்பிட்டுப் பார்த்தாள்; சுந்தரிடம் அசைவேதுமில்லை; ‘சுந்தர், சுந்து, சுந்தர் ஐயோ, தெய்வமே, இவருக்கு என்ன ஆச்சு? நா என்ன செய்வேன், சுந்து, ஏந்துருடா ஏந்துருடா’ என்று அவள் அலறிய பிறகு அவன் சடாரென்று எழுந்தான். அவள் திகைத்துப் போனாள். ‘நன்னா ஏமாந்தியா? எத்தன தரம் சொன்னேன், என்ன சுந்துன்னு கூப்டுன்னு, பட்டிக்காடு மாரி மாட்டேன்ன இப்பப் பாத்தியா? எப்படி ஐயாவோட நடிப்பு? எங்க ஆஃபீஸ் ரிக்ரியேஷன் க்ள்ப்ல போடப் போற ட்ராமாவில ஒரு சீன்ல நான் செத்தமாரி நடிக்கணும். ஒரு கல்ல இரண்டு மாங்கா பாத்தியா?’ தன் கைகள் வலிக்கும் வரை சுந்தரின் மார்பில் அன்று குத்தியது இன்று நினைவிற்கு வர இத்தனை சோகத்திலும் அவளுக்கு சிறு புன்னகை வந்தது. இன்று அப்படி அலறினால் அவன் மீண்டு வர மாட்டான். உண்மையாகவே இறந்துவிட்டான்.
முதுகைத் துளைப்பது போல் புகுந்த வீட்டினர் பார்த்துக் கொண்டிருப்பதையும் அவள் அறிவாள். சுந்தரின் சாவிற்கு சரளாவைக் குற்றம் சொல்லும் பார்வைகள் அவை. ஒருக்கால், அவள் தான் குற்றவாளியோ? சுந்தர் அவளுக்கு என்னதான் தரவில்லை? திருமணமான இரு வருடங்களில் சுந்தர் துணிச்சலாகத் தன் வேலையை விட்டான். கைவிடப்பட்ட கப்பல்களை உடைத்து இரும்பு மற்றும் அபூர்வப் பொருட்கள் அதிலிருந்தால் அதைத் தோண்டி எடுத்து சந்தையில் விற்றான். அபூர்வப் பொருட்களின் சந்தையில் பல நேரங்களில் பணம் கொட்டியது. அவர்களின் வாழ்க்கைத்தரமே மாறியது. மூன்றாம் வருடம், அவளது இருபத்தி நாலாம் வயதில் பிள்ளை பிறந்தான். வாழ்வில் கடவுள் இத்தனை போகங்களையும் தந்திருப்பதே அவளுக்கு வியப்பாக, சில நேரங்களில் குற்ற உணர்ச்சியாகக் கூட இருந்தது.
அவள் வேலையை விட்டுவிட்டாள். முன்னர் கற்றுக் கொண்ட வயலினில் நல்ல முன்னேற்றம் அடைந்தாள். நாட்டியக் கச்சேரிகளில் வாசித்தவள் தனிக் கச்சேரிகள் செய்பவளாகவும், பெரும் பாடகர்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பவளாகவும் முன்னேறினாள். இணைய வழியில் சொல்லிக் கொடுத்ததில், சுந்தருக்கு இணையாக அவளும் பல நாடுகளுக்குப் பயணித்தாள்.
எத்தனை முறை சொன்னாள், அவள் ஒரு பிள்ளையே போதும் என்று. சுந்தர் கேட்பதாக இல்லை. முப்பத்து நான்கு வயதில் கருத்தரிக்கவே பயப்பட்டாள் அவள். சுந்தர் ஆனந்தக் கூத்தாடினான். கருவில் இருக்கும் போதே குழந்தைக்குக் கண்களில்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அவள் அழிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தாலும், சுந்தர் நம்பிக்கையை விடவில்லை. சரி செய்ய முடியாத குறையோடு கண்களே இல்லாமல், அந்த இடத்தில் வெறும் சதைக் கோளங்களுடன் பிறந்த பெண் குழந்தை. அதை அவள் மனதார வெறுத்தாள். முழுமையான வாழ்க்கை என்ற கர்வத்திற்கு விழுந்த அடியோ இது? இல்லை, அவள் தோற்க மாட்டாள். அவள் பூரணி, இது அபஸ்மாரம். வீட்டிற்கு ஏற்றதில்லை; அவள் அந்தக் குழந்தையை, அந்தக் குறையை, தன்னிடம் வைத்துக் கொள்ள மாட்டாள்.
சுந்தர், உலகின் பெரும் பெரும் மருத்துவர்களிடம் பேசியே ஓய்ந்து போனான். கையறு நிலை; சரளா ஒரு வார்த்தையும் பேசாமல் தன்னைக் குத்திக் கிழிப்பதைப் போலப் பார்க்கும் பார்வையை அவனால் தாள முடியவில்லை.
‘இங்க ஒரு ஹோம்; அங்க வச்சுப் பாத்துப்பாங்களாம்; மொத்தமா முப்பது லட்சந்தான் கேக்கறாங்க.’ என்றாள் அவள்
“என்ன சொல்ற சரளா நீ? அவ நம்ம பொண்ணு; அவள எதுக்கு அனாதையா ஆக்கணும் நாம?”
‘இல்ல, இவள வளக்க முடியாது. அவளுக்கு கண்ணா நா இருக்க முடியாது. நானும் காந்தாரி மாரி கண்ணக் கட்டிக்க வேண்டியதுதான்.’
“பைத்தியமாட்டு பேசற. உனக்கு முடியல்லன்னா ஆளப் போட்டுப்போம். நா உசிரோட இருக்கச்சே எம் பொண்ண எங்கயோ விடமுடியாது.”
‘சுந்து, பி ப்ராக்டிகல். நீ மாசத்ல இருவது நாள் இந்தியாவிலேயே இருக்கறதில்ல. ஐஞ்சாறு மாசமா தள்ளிப் போட்ட கச்சேரியெல்லாம் இன்னும் ரண்டு மாசத்ல ஸ்டார்ட் ஆறது எனக்கு. ரோஷன் இருக்கான், அவன் போறும் நமக்கு. வெறுமன சென்டிமென்ட் பாத்துண்டு வாழ முடியாது.’
“என்னடி பேத்தற. அவ நம்ம பொறுப்பு; அதை சமூகத்தோட தலயில கட்டறது என்ன ந்யாயம்? அப்படித்தான் அந்த கச்சேரிக்கு என்ன அவசியம்? அத விட நீ நம்ம பொண்ண பாத்துண்டு, சந்த்ரசேகருக்கு அவரோட அம்மா துணையாயிருந்து சொல்லிக் கொடுத்து பெரிய வயலின் வித்வானா ஆக்கின மாரி செய். அது தான் சரி.”
‘சுந்து, அதுக்கான மெனக்கெடல் எங்கிட்ட இல்ல. மேடைல உக்காந்து வாசிக்கறப்போ, பாடம் நடத்தறப்போ, என் திறமையைப் பத்தி டி வில, பேப்பர்ல, காட்றப்போ வரும் பாரு ஒரு சந்தோஷம், அது எனக்கு முக்யம்.’
“அதத்தான் விட்டுடுன்னு சொல்றேன். காலப் போக்ல அதெல்லாம் திரும்ப வந்துடும். நீயும், நம்ம பொண்ணும் சேந்தே கச்சேரி செய்யலாம்.”
‘சுந்து, உங்க வேலய விடமாட்டீங்கள்ல, அந்த மாதிரி தான் இதுவும். அதுதான் பணம் கொடுக்கப் போறோமே? வேணும்னா கூடக் கொஞ்சம் கொடுத்தா போறது. என்னால, எங்கண்ணு முன்ன எம் பொண்ணு பார்வ இல்லாமத் தடுமாற்றதப் பாக்க முடியாது. அந்த ஹோம்ல வசதி இருக்கு; இதப் போல கொழந்தைகள வளத்தறத்துக்குன்னு நெறய பேர் இருக்காங்க; இந்தக் கொழந்தைக்கும் அந்தச் சூழல் தான் நல்லது செய்யும்.’
“அவங்கள்ல ஒத்தரயோ, ரெண்டு பேரையோ நாம உதவியா வச்சிக்கலாம். நம்ம கொழந்த நன்னா இருக்கணும், சரளா. அவ அனாதயில்லடி.”
‘நா என்ன சொல்லணுமோ சொல்லிட்டேன். இந்தப் பொண்ணு நமக்கு மட்டும் கால்கட்டில்ல. ரோஷனுக்கும் தான். நம்மோட இவ இருந்தா, அவனுக்கும் மாரல் ரெஸ்பான்சிபிலிடி வந்துர்றது இல்லியா? நம்ம காலத்துக்கப்றம் அவன்னா இவளைப் பாத்துக்கணும்? இவளுக்காக அவன நாம ஏன் கஷ்டப்படுத்தணும்?’
சுந்தர் மருத்துவரிடமும், அவர் மூலமாக அந்தக் குழந்தைகள் காப்பகத் தலைவரிடமும் பேசினான். சுந்தரும், சரளாவும் அந்தக் காப்பகத்தாரோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
மருத்துவர் அவனிடம் சொல்லியிருந்தார், சில நாட்களிலேயே உங்கள் மனைவியின் மன நிலை மாறிவிடும். அது வரைக்கும் குழந்தை ஹோமில் இருக்கட்டும் என்று. ‘ஒரு மாசம் மட்டும் எங்க ரோஷினி, எங்க பொண்ணு, உங்க ஹோம்ல இருக்கட்டும். என் வொய்ஃப் ஒடம்பு தேறின உடனே நாங்க கூட்டிண்டு போயிடறோம். இல்லயில்ல, கொடுத்த முப்பது லட்சம் உங்க ஹோமுக்குத்தான்; பாவம், எத்தன கொழந்தங்க. ஆமாங்க, உங்க எம் டியோட பேசி அக்ரிமென்ட் போட்டு ரிஜிஸ்தரும் செஞ்சாச்சு. பணம் ஹோம் கணக்குக்கு அனுப்ச்சு ரசீது வந்தாச்சு, பாருங்க. கொஞ்சம் ரகசியமா இந்த விஷயத்த வச்சுக்கங்க. என் வொய்ஃப்புக்குக் கூடத் தெரியாது.”
சரளா வீட்டிற்குத் திரும்பி வந்து மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. அவள் குழந்தையை நினைக்கவில்லை; சுந்தர் மறக்கவில்லை; அவன் அவர்கள் கை விட்ட பெண்ணைப் பற்றி பேச்சு எடுக்கும் போதெல்லாம் அலட்சியப் படுத்தினாள்; ‘என் மார்ல பால் கட்டிண்டு செத்து செத்துப் பொழச்சிண்டிருக்கேன். நீங்க வேற என்னக் கொல்லாதீங்கோ’.
ஒரு மாதம் முடியப் போகிறது. தாய்ப்பாலின்றி வளரும் தன் பெண்ணை நினைக்கையில் அவன் நெஞ்சு வெடித்து விடுவது போல் வலித்தது. இவளை எந்த விதத்திலும் ஒப்புக் கொள்ள வைக்க முடியாததில் அவன் மறுகி மறுகி அதுவே அவன் மனதை உடைத்து உயிரை எடுத்து விட்டதை அறியாமல், ஹோமிலிருந்து அவன் செல்லிற்கு ஃபோன் வந்து கொண்டே இருந்தது.
அருமையான கதைக்களன். எளிமையான எழுத்து நடை. வாழ்த்துகள்
LikeLike
மனதைப் பிழிந்தெடுத்து விட்டது.
LikeLike