எங்கிடுவின் மரணம் கில் காமேஷுக்கு அளவில்லா துக்கத்தை மட்டுமல்ல மரணபயத்தையும் ஏற்படுத்தியது.
“ என் நண்பன் எங்கிடுவிற்காக அழுவதற்கு நான் இருக்கிறேன். எனக்காக யார் இருக்கிறார்கள்? நானும் ஒரு நாள் இப்படி மாண்டு போவேனே! அதை நினைக்கும் போதே மனத்தின் அடித்தளத்தில் ஒருவித பயம் உண்டாகிறதே! இந்த சாவிலிருந்து யாரும் தப்பவே முடியாதா?.” என்ற எண்ணத்துடனே அவன் காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்தான்.
‘என் மரண பயத்தைப் போக்கிக்கொள்ள ஒரே வழி நான் சாவையும் வெற்றி கொள்ள வேண்டும். எல்லோரையும் வென்ற நான் சாவையும் வெல்வேன். இன்று முதல் என் குறிக்கோள் அமரத்துவம்தான்’ என்று உறுதி பூண்டான்.. ஆனால் அமரத்துவம் என்பதை எந்த மனிதனாலும் பெறமுடியாது என்று அவன் சந்தித்த அனைவரும் அவனுக்கு அறிவுரை கூறினார்கள். இதனால் அவன் உறுதி மேலும் அதிகரித்ததே தவிரக் கொஞ்சமும் குறையவில்லை
அப்பொழுது அவனுக்கு உத்னபிஷ்டிம் என்ற ஒரு மனிதன் சாகாமல் என்றும் அமரனாக இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. உலகில் பெரும் பிரளயம் வந்து அனைவரும் அழிந்துபோனபோது அவன் ஒருவனை மட்டும் தேவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அழியாமல் காப்பாற்றினார்களாம். சாவை வென்ற அவனை நித்யமனதேவன் என்று எல்லோரும் அழைத்தார்கள் சூரியதேவனின் நந்தவனத்திற்கு அருகே உள்ள தேசத்தில் அவன் இருப்பதாகவும் அறிஞர்கள் கில்காமேஷுக்குக் கூறினார்கள்.
உத்னபிஷ்டிமைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக நெடிய நீண்ட பயணத்திற்குத் தயாரானான். எண்ணத்தைச் செயலாக்க அவனைவிடச் சிறந்தவர் யாருமில்லை. காடு மலை வனாந்திரங்களையெல்லாம் கடந்து போனான். வழியில் சிங்கங்கள் அவனைத் தாக்க வந்தன. அவன் தயங்காமல் தன் இடுப்பிலிருந்த கோடாரியைக் கையில் எடுத்துக் கொண்டு அவற்றின் மீது பாய்ந்து போரிட்டான். பல சிங்கங்கள் மடிந்தன. மற்றவையெல்லாம் அவனுக்குப் பயந்து ஓடின.
இலக்கை நோக்கி அவன் பயணம் தொடர்ந்தது பல நாள் பயணத்திற்குப் பிறகு மாஷி என்ற மலைத்தொடருக்கு வந்தான். அதன் உயரமான இரு சிகரங்கள் வானத்தைப் பிளந்துகொண்டு மேலே சென்றிருக்கின்றன. அதன் வேர்கள் பாதாளம் வரை பாய்ந்திருக்கின்றன. சூரியனின் வெளிச்சத்தையே தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை வாய்ந்த சிகரங்கள் அவை. அதன் வாசலில் இலட்சக்கணக்கான கொடுந்தேள்கள் காவல் இருந்தன. அவை ராட்சசத்தன்மையும் மனிதத் தன்மையும் கொண்ட பயங்கரமான பிராணிகள். அவற்றின் தலைகளைச் சுற்றி ஓடும் காந்த ஒளி சூரியனின் கிரணங்களைப் பிரதிபலித்து எதிரே நிற்பவரைச் செய்யலாற்றவராக்கிவிடும் தன்மை உடையது. அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே மனிதர்கள் இறந்துவிடுவார்கள்.
கில்காமேஷ் அந்தத் தேள் கூட்டத்தின் முன்னே நின்றான். அவற்றின் தகதகப்புள்ள காந்த வெளிச்சம் அவன் கண்களைக் கூசச் செய்தது.அவன் தன் கண்களை ஒரு வினாடி மூடிக்கொண்டான்.ஒரே விநாடிதான். பின் கண்களை அகலாத திறந்துகொண்டு தன் கோடலியை எடுத்துக் கொண்டு அவற்றைத் தாக்க முன்னேறினான்.
தங்கள் கூட்டத்திற்கு எதிரே ஒருவன் தைரியமாக வருவதை அந்தத் தேள் கூட்டத்தின் தலைவனும் தலைவியும் பார்த்துத் திகைத்துப்போயினர். இவன் நிச்சயம் மனிதனாக இருக்க முடியாது. என்று உணர்ந்தனர். உண்மையில் மூன்றில் இரண்டு பங்கு தேவன் ஒரு பங்குதான் மனிதன், அதுமட்டுமல்ல அவன் கடவுளின் குழந்தை என்ற உண்மையையும் அவை அறிந்துகொண்டன.
அதனால் தேள்களின் தலைவன் அவனைத் தாக்காமல் அவனிடம் அங்கு வந்த காரணத்தைக் கேட்டுத் தன் விசாரணையைத் துவக்கியது.
“ நான் சாவை வெல்லும் வழியைக் கண்டுபிடிக்கும் பணியில் என்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறேன். அதுதான் என வாழ்வில் இலட்சியம். அதற்குக் காரணம் என நண்பன் எங்கிடு. அவன் மரணத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனை எப்படியாவது உயிர்ப்பிக்கவேண்டும் என்று பல நாட்கள் அவன் உடலைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. என் கண்ணீர் அவனை உயிர்ப்பிக்கவில்லை. அவன் போன பிறகு என் உள்ளத்தில் அமைதி இல்லை.அதனால் சாவுத் தேவனை எதிர்க்கப் புறப்பட்டுவிட்டேன். சாவை வென்ற உத்னபிஷ்டிம் என்ற மாமனிதன் இந்த சிகரங்களுக்கு அப்பால் இருப்பதாக அறிந்தேன். அதனால் அவனைச் சந்திக்கப் போகின்றேன். என்னைத் தடுக்காதீர்கள் “ என்று பதில் கூறினான் கில் காமேஷ்.
அந்தத் தேள் தலைவன், “ தேவ குமாரா! நீ செய்வது மிகவும் அபூர்வமான காரியம். மனிதனாகப் பிறந்த எவனும் சாவை வெல்லும் பணியில் ஈடுபட்டதில்லை. இப்படி ஒரு கடினமான பயணத்தையும் மேற்கொண்டதில்லை. இதுவரை நீ கடந்து வந்த பாதையே மிகவும் கடுமையானது. இனி நீ செல்ல விரும்பும் பாதை இது வரை யாரும் கடக்காதது. இந்த சிகரங்கள் சூரியனை மறைத்துக் கொள்வதால் இங்கு எப்போதும் இருள்தான் கப்பியிருக்கும்.அந்த இருளில் பன்னிரண்டு காதம் செல்லவேண்டும். பாதையும் சரியாகத் தெரியாது. நீ எப்படி இதைக் கடந்து செல்லப் போகிறாய்? “ என்று வினாவினான்.
“நான் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை. கஷ்டமோ துன்பமோ எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நான் தொடர்ந்து செல்வேன். மலைகளைத் தாண்ட எந்த வழியில் செல்லவேண்டுமோ அந்தக் கதவைத் திறந்துவிடுங்கள்” என்று கில்காமேஷ் பணிவன்புடன் கூறினான்.
அவன் உறுதியைக் கண்டு வியந்து பாராட்டிய தேள் தலைவன் அவனுக்கு ஆசிகள் வழங்கி மாஷி மலைகளைத் தாண்டிப்போகும் கதவையும் திறந்துவிட்டான்.
கில்காமேஷ் அந்த அந்தகார இருளில் தைரியமாகத் தன் பயணத்தைத் துவக்கினான். கும்மிருட்டாக இருந்தது. காலை எங்கே எடுத்து வைப்பது என்பதே புரியவில்லை. இருந்தாலும் முன்னேறிக் கொண்டே சென்றான். ஒவ்வொரு காதமாகக் கடக்கக் கடக்கப் பாதை மேலும் மேலும் கடினமாக மாறத் தொடங்கிற்று. எட்டாவது காதத்தில் அவனால் தொடர்ந்து முன்னே செல்ல முடியவில்லை. கோபம் கொண்ட கில்காமேஷ் சிங்கம் போல உரக்கக் கர்ஜித்தான். அப்பொழுது மெல்லிய காற்று அவன் உடலைத் தழுவி உடல் வழிகளைப் போக்கியது. இருந்த குகையின் முடிவு தென் படுவதுபோல தூரத்தில் இலேசாக வெளிச்சம் தெரிந்தது. பதினொன்றாம் காதம் கடந்தபோது சூரியனின் உதய வெளிச்சம் கண்ணில் பட்டது. பன்னிரண்டாவது காதம் தாண்டியபோது சூரியனின் ஒளிக் கிரணங்கள் கண்களைக் கூசச் செய்வதைப் பார்த்தான்.
அங்கே சூரியனின் நந்தவனம் தெரிந்தது. மலர்க்கூட்டம் தெரிந்தது. தூரத்தே கடல் தெரிந்தது. அதில் முத்துக்கள் பளிச்சிட்டன. அவற்றிற்கு நடுவே சூரிய கடவுள் காமேஷ் அமர்ந்திருந்தார். அவர் தனக்கு வழி காட்டுவார் என்று எதிர்பார்த்து அவரை வணங்கினான். ஆனால் சூரியதேவன், ‘கில் காமேஷ்! எந்த மனிதனும் வர இயலாத இடத்துக்கு நீ வந்திருக்கிறாய். ஆனால் நீ விரும்புகிற சாவில்லாத வாழ்வை உன்னால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால் நீ திரும்ப உன் ஊருக்கே போய்விடு “ என்று அறிவுரை வழங்கினார்.
தான் போற்றி வணங்கும் காமேஷ் கடவுளே இப்படிக் கூறுவதைக் கேட்டும் கில் காமேஷ் மனதைத் தளரவிடவில்லை.” சூரியதேவனே ! எத்தனையோ கடினமான பாதைகளைக் கடந்து வந்தபிறகு நான் எடுத்த காரியத்தை முடிக்காமல் திரும்புவதா? என் தலை மண்ணில் புரண்டு செத்து விடுவதா நான்? உன் ஒளி ஒன்று இருந்தால் போதும். நான் என பயணத்தைத் தொடர்வேன். நான் செத்தே மடிந்தாலும் உன் ஒளியைக் கண்டுகொண்டே சாவேன்! அந்த வாரத்தை மட்டும் எனக்குத் தா!” என்று வேண்டிக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
அப்போது சூரிய நந்தவனத்தில் ஒரு கோடியில் சிதுரி என்னும் திராட்சை மதுவின் அரசி அவள் உடம்பு யாருக்கும் தெரியாதவாறு சால்வை போர்த்திக்கொண்டிருந்தாள். மிருகங்களின் தோல்களையே ஆடையாக உடுத்தி மிகுந்த களைப்புடன் தூரத்தில் வரும். கில்காமேஷைப் பார்த்தாள்.
“யார் இவன்? இங்கு ஏன் வருகிறான்? இவனைப் பார்த்தால் துஷ்டனாகத் தெரிகிறான். எதற்காக இவன் இங்கே வருகிறான்? இவனை இந்தப்பாதையில் அனுமதிக்கக் கூடாது” என்று யோசித்து அவன் வரும் வழியை அடைக்கும்படி அங்கிருந்த கதவைத் தாளிட்டு குறுக்குப் பூட்டையும் போட்டு ஒன்பது தாழ்ப்பாள்களையும் போட்டாள். கதவுக்கு வெளியே நின்று எதிரே வரும் கில்காமெஷை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏன் இந்த மதுவரசி என் வழியை அடைக்கிறாள் என்பதைப் புரியாத கில்காமேஷ் மனம் குழம்பி நின்றான்.
(தொடரும்)
.
.