“அவன் சிறியேனென்றேனோ ஆழ்வாரைப்போலே”
ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார், திருமாலைப் பாடாமல், தன் ஆசார்யரான நம்மாழ்வாரை மட்டுமே போற்றிப் பாடியுள்ளார்! இவர் பாடிய பாசுரங்கள் திவ்யப் பிரபந்தத்தில் சேர்ந்து சிறப்பு பெற்றன. அது போலவே திருமாலைப் பாடாத இவரை ஆழ்வார்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வதில் கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர் பிறந்த ஊர் திருக்கோளூர் – குலம் -சோழிய பிராம்மணர் குலம்.
சீதையைக் காட்டுக்கனுப்பிய பாவத்திற்காக, பதினாறு ஆண்டுகள் அசையாத பிம்பமாகப் பிறவி எடுக்கிறார் ஶ்ரீராமபிரான். ஆழ்வார்த்திருநகரியில் நம்மாழ்வார் அவதாரம் இவ்வாறாக நிகழ்கிறது.
தன் கட்டளையை மீறிய லட்சுமணனை, ‘மரமாகப் போக’ இராமன் சபிக்க, தன் அண்ணனைப் பிரிய முடியாமல் மனம் வருந்துகிறான் லட்சுமணன். தன் தம்பியின் மனமறிந்த இராமன், அவனை ஆழ்வார்த்திருநகரியில் ஆதிநாதன் கோயிலில் புளிய மரமாக நிற்கச் சொல்கிறார். அவன் நிழலில் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் இருக்கிறார் நம்மாழ்வாராக இராமன்! வேளாண் குலத்தில் உதித்த நம்மாழ்வார், பதினாறு வயது வரையில் உண்ணாமல், பேசாமல் ஒரு ஜடமாக இருந்திருக்கிறார். அவரைவிட வயதில் மூத்தவரும், அந்தண குலத்தைச் சேர்ந்தவருமான திருக்கோளூர் மதுரகவியாழ்வார் அவரது நிஷ்டையைக் கலைத்து அவரது சீடராகிறார் – அவரை மட்டுமே போற்றிப் பாடி, ஆழ்வாராக பரமனடியிலும் சேர்ந்து விடுகிறார்!
ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாகச் சொல்வது வைணவ மரபு! பூதத்தாழ்வார் – சிரசு, பெரியாழ்வார் – முகம், திருமங்கை ஆழ்வார் – நாபிக்கமலம், மதுரகவி, நாதமுனிகள் – திருவடிகள் இப்படி…
இருக்கும் இடத்தை விட்டு அசையாமல், ‘உறங்காப் புளி’ய மரத்தின் கீழ் அமர்ந்தவாறே, பல தலங்களுக்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார் நம்மாழ்வார். இவரது திருவாய்மொழி கிடைக்க, எல்லா திருத்தலப் பெருமான்களும், இவர் தங்கியிருந்த புளிய மரத்தின் இலைகளில் தரிசனம் தந்ததாகப் புராணம் கூறுகிறது.
பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை, நம்மாழ்வார்,
“விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய், கடல்சேர்ப்பாய்!
மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி,
உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ?”
என்ற ஒரே பாசுரத்தில் குறிப்பிட்டிருப்பது பிரமிக்க வைக்கிறது!
நான்கு வேதங்களின் சாரத்தை, திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி எனப் பிரபந்தங்களாக இயற்றியதால், ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ எனப் போற்றப்படுகிறார் நம்மாழ்வார்.
திருவந்தாதியில் பெருமானிடம் ‘என் மனதினுள் நுழைந்து எனக்குள்ளே தங்கிவிட்டாய். எனவே நான் உன்னைவிடப் பெரியவனா, அன்றி நீ பெரியவனா’ என்று கேட்குமளவுக்கு புண்ணியசீலர் நம்மாழ்வார்….
அப்படிப்பட்ட பெருமை ஏதும் இல்லாதவள் ( “அவன் சிறியேனென்றேனோ ஆழ்வாரைப் போலே” -14) நான் என்று கூறி வைணவத்தின் முக்கியமான 81 சம்பவங்களை ஶ்ரீராமானுஜருக்குச் சொல்கிறாள் திருக்கோளூரில் ஒரு சாதாரண இடையர்குலப் பெண்மணி. அந்தப் பெண் சொன்னவையே ‘திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்’ என்னும் ரகசிய கிரந்தமாகும்! அடியார் ஆச்சாரியருக்குக் கூறியது!
ஒற்றை வரியில் சுருக்கமாகச் சொல்லும் அவளது ஞான அறிவை வியந்து, அவள் வீட்டிற்குச் சென்று, அவள் சமத்த உணவை உண்டு அவளை வாழ்த்துகிறார்! ஶ்ரீமன் நாராயணன் முன் சாதி பேதம் கூடாது என உரைக்கும் வைணவத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த ஶ்ரீராமானுஜர் – திருக்கச்சி நம்பிகள் மூலம் காஞ்சியில் எம்பெருமானிடம் தன் ஐயங்களைத் தீர்த்துக் கொண்ட ஶ்ரீராமானுஜர் – ஒரு சாதாரணப் பெண்ணின் ஞானத்தைப் போற்றுகிறார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்று திருக்கோளூர் – தூத்துகுடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் ஆழ்வார்த்திருநகரியிலிருந்து 2 கிமி தூரத்தில் உள்ளது. நவதிருப்பதியில் மூன்றாவது தலம்.
(பிரபந்தம் 3409).
உண்ணும் சோறு பருகும்நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்,* எம்பெருமான் என்று என்றே* கண்கள் நீர்மல்கி,*
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே.
கண்ணன்,* எம்பெருமான் என்று என்றே* கண்கள் நீர்மல்கி,*
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே.
(விளக்கம்;
உண்ணுகின்ற சோறும் குடிக்கின்ற தண்ணீரும் தின்னுகின்ற வெற்றிலையும் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று என்றே கண்கள் நீராலே நிறைய, பூமியிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளத்தால் மிக்கவனான எம்பெருமானுடைய திவ்விய தேசத்தையும் கேட்டுக் கொண்டு, என்னுடைய இளமான் புகும் ஊர்
திருக்கோளூர் என்னும் திவ்விய தேசமேயாகும். இது நிச்சயம்.).
பெண்களை உயர்வாகச் சொன்னது வைணவம். ஒரு பெண்ணை ஆழ்வாராகவே போற்றுகிறது! திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியத்தில் குறிப்பிடப்படும் பெண்கள் குறித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது!
கண்ணனுக்கும் மற்ற சிறுவர்களுக்கும் உணவு அளித்த முனிபத்தினிகளில் ஒரு பெண்மணி கண்ணனைப் பிரிய மனமில்லாமல் உயிரையே விடுகிறாள்!(3).
சீதாப்பிராட்டி, இராவணனின் அழிவிற்குக் காராணமாகிறார். தன் கற்பின் திறத்தாலும், இராமனின் மீது கொண்ட பக்தியாலும் இது சாத்தியமாகிறது.(4).
அனுசூயை ஒரு தாயைப் போல் சீதைக்கு அலங்காரம் செய்கின்றாளாம்( வேளுக்குடி உபன்யாசத்தில் சொன்னது). மும்மூர்த்திகளுக்கும் தாயாகி அமுது படைத்தவள் அனுசூயை. (7).
இராமன் பாதம் பட்டால், கல்லும் பெண் போல மென்மையாகிவிடும்! ஶ்ரீராமன் பாதம்பட்டு, சாப விமோசனம் பெற்றவள் அகலிகை.(10).
சிறு வயதிலேயே ஞானம் பெற்றவள் ஆண்டாள்! எம் பெருமானை அடைந்தவள் – ‘பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே’ (11).
அசோகவனத்தில் சீதையின் துயர் குறைக்க, ஆறுதல் வார்த்தைகளைச் சொல்கிறாள் திரிசடை(18).
இராவணன் இறந்த போது கதறும் மண்டோதரி, ‘இராமன் விஷ்ணுவின் அவதாரம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்களே’ என்கிறாள் (வால்மீகி) (19).
தேவகியைப் போல தெய்வத்தைப் பெறும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்?(22).
கண்ணனின் குழந்தைப் பருவத்தை அனுபவித்தவள் யசோதை – பெற்றவள் தேவகிக்குக் கூட வாய்க்காத பேறு (24).
மற்றும் சபரி, கொங்குப்பிராட்டி, திரெளபதி, நீரில் குதித்த கணப்புரத்தாள் என புராணத்தின் பெண் பாத்திரங்களின் பெருமைகளைச் சொல்லி, ‘இம்மாதிரி ஏதும் செய்யாத நான் இந்தப் புனிதமான திருக்கோளூரில் முயலின் புழுக்கையைப் போல, இருப்பதில் ஏதும் பயனில்லை – ஆகவே ஊரை விட்டுச் செல்கிறேன்’ என்று வருந்திச் சொல்வதாய் அமைந்துள்ளது ‘திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்’!
( உதவிய புத்தகங்கள்:
- குவிகம் கிருபானந்தன் இப்புத்தகம் பற்றிக் கூறினார். திரு டி வி ராதாகிருஷ்ணன் அழகாகத் தொகுத்துள்ளார். வானதியின் பதிப்பு ‘திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்’ – வாசிக்க வேண்டிய புத்தகம்!
2. வேணு சீனிவாசனின் 12ஆழ்வார்கள் –
திவ்ய சரிதம். (கிழக்கு பதிப்பகம்).)