குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மௌளி கவித்தனன் வரும் என்றென்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன் ஒரு தமியன் சென்றான்
பரதன் நாடாள்வான் , நீ காடாளாப் போ என்று கைகேயி சொன்ன பின், இராமன் அவள் மாளிகையை விட்டு வருகிறான். கோசலையை காண வருகிறான்.
தனியாக வருகிறான். முடி சூட்டி சக்ரவர்த்தியாக வர வேண்டிய இராமன், தனியாக யாரும் இல்லாமல் நடந்து வருகிறான். அதை தூரத்தில் இருந்து கைகேயி பார்க்கிறாள்.
முன்னால் வீசி விரும் கவரி இல்லை.
பின்னால் தாங்கி வரும் வெண்கொற்றக் குடை இல்லை.
பிள்ளை தனியாக வருகிறான். அவள் கண்ணுக்கு வேறு இரண்டு பேர் தெரிகிறார்கள்.
இராமனுக்கு முன்னே விதி செல்கிறது. அவன் பின்னே தர்மம் வருகிறது.
விதி என்ன என்று யாருக்கும் முதலில் தெரியாது…வாழ்க்கை செல்ல செல்லத் தான் விதியின் வெளிப்பாடு தெரியும். அடுத்த அடி எடுத்து வைத்த பின் தான் அது எங்கே வைக்கிறோம் என்று தெரிகிறது.
விதி இராமனை முன்னே பிடித்து இழுத்து செல்கிறது…இராமன் பிறந்தது , கானகம் சென்று இராவணணை கொல்ல. அந்த விதி அவனை முன்னே இருந்து இழுத்து செல்கிறது.
பின்னால் தர்மமோ , போகாதே இராமா, நீ போவது தர்மம் அல்ல என்று பின்னால் நின்று கெஞ்சி கேட்கிறது.
இந்த விதிக்கும், தர்மத்திற்கும் நடுவில், மகுடம் சூட்டி வருவான் என்று ஆவலோடு இருந்த கோசலை முன் இராமன் தனியாக வந்து நின்றான்.
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ
தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,
சோலையை நாட்டிய மேடையாகவும்
மயிலை நடன மாதராகவும்
குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்
தாமரை மலரை விளக்காகவும்
மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்
வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்
பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்து
தன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.
இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன.
கம்பனின் கவித்திறம், தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உத்திகள் அனைத்தையும் நாம் நினைத்து பார்த்தால் கம்மன் தமிழுக்கு கிடைத்த வரம் எனலாம்.