குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
- பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
- அம்மா அப்பா ! – ஜூலை 2020
- ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
- இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
- எனது நாடு – செப்டம்பர் 2020
- காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
- செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
- மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
- நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
- அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
- எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
- பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
- ஜன கண மன ! – ஜனவரி 2021
- ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
- எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
- பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
- சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
- கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
- பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
- வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
- பஸ்ஸில் போகலாம் – மே 2021
- சிட்டுக் குருவி – மே 2021
- ஆகாய விமானம் – ஜூன் 2021
- எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
- பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
- வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
- தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
- விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
- மழையே வா !
மழையே மழையே வா வா !
பருவத்தில் நீயும் பெய்தே வா !
உன்னால் நாங்கள் வாழ்கின்றோம் !
உன் வரவால் புத்துயிர் பெறுகின்றோம் !
வாழ்க்கைக்கே நீ ஆதாரம் ! – நீ
இல்லையென்றால் சேதாரம் !
வா வா வந்தெமை வாழ்விப்பாய் !
பூமியில் உயிர்களைக் காத்திடுவாய் !
தூறல் ஒன்று வந்துவிட்டால் –
உடனே நாங்கள் அதில் நனைவோம் !
சாரல் என்றால் ஜாலிதான் !
வீட்டுக்கு நாங்கள் வரமாட்டோம் !
இடியும் மின்னலும் சேர்ந்தடித்தால் –
என்றும் எனக்கு சந்தோஷம் !
கொட்டும் பெருமழை பெய்துவிடும் !
தண்ணீர் இங்கே சேர்ந்துவிடும் !
செடி கொடி மரங்கள் யாவையுமே –
தண்ணீர் இருந்தால் தழைத்துவிடும் !
பூச்சி விலங்கு பறவையினம் –
அனைத்தும் வாழும் மழை இருந்தால் !
மரங்களை நாங்கள் வளர்த்திடுவோம் !
மனதினில் அன்பை பயிர் செய்வோம் !
மழையே நீயும் வந்துவிடு !
மகிழ்ச்சியை வாரித் தந்துவிடு !
***************************************************
- பாரதிக்கு பாப்பா சொன்னது…….!
பாரதி மீசை பார்த்தாலே
வீரம் பெருகும் – ஆம் பாப்பா !
முண்டாசு தலையைப் பார்த்தாலே
மேனி சிலிர்க்குது பார் பாப்பா !
பாப்பா பாட்டு தந்திட்டார் !
வாழும் நெறியைக் காட்டிட்டார் !
பாரதி என் தமிழ்ப் பாட்டனடா !
சாரதி அவனே – தேர் பூட்டிடடா !
ஆணும் பெண்ணும் சரி சமமாய் –
வாழும் அறிவுரை கூறிட்டார் !
சாதிகள் இல்லை என்றிட்டார் !
சமத்துவக் கருத்துகள் தந்திட்டார் !
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடச் சொல்லிட்டார் !
சக்தியைக் கொண்டாடிட்டார் !
சகலரும் ஒன்றே என்றிட்டார் !
ஓடி விளையாடும் போதெல்லாம் –
ஓயாமல் அவரை நினைக்கின்றேன் !
உத்தமன் அவரிங்கு பிறந்ததனால் –
உயர்ந்தது தமிழ்நாடென்றிட்டேன் !
பாரதி உன்னைப் போற்றிடுவேன் !
உன் நினைவை என்றும் காத்திடுவேன் !
தமிழ்ப் பாடல் என்றும் பாடிடுவேன் !
பாரதி பாரதி என்றிடுவேன் !