‘சாமீ, ……..காயீ, பழம் எல்லாங் கொண்டு வந்தேஞ்சாமி.. எடுத்தாரவா???’
முத்துவின் கட்டைக் குரல் அறிவழகன் பூஜையில் அவனைக் கரடியாக்கியது. ‘சாந்தீ.. என்னன்னு பாரு. அவன் வாசப்படியிலே இந்த கத்து கத்துறானே!!! ஓர் அஞ்சு நிமிஷம் சாமி கிட்ட நிக்க முடியல இந்த வீட்ல’ பொறிந்து விழுந்தான். மீண்டும் கவசம்.. பொல்லாதவரைப் பொடிபொடியாக்கும்’
சாந்தி ஓடி வந்து ‘என்ன முத்து இன்னிக்கு சீக்ரமே வந்துட்டீங்க’ என்று அவசர அவசரமாகக் கேட்டாள்.
‘ஆமாம்மா பெரியாஸ்பத்திரி போற வேலையிருக்கு. அங்கிட்டு போனா சடுதியிலே வர முடியுமா சொல்லு? உனுக்கு முந்தா நாள் குடுத்தது காயீ, பழமெல்லாம். தீர்ந்திருக்குமே. அதான் குடுத்துட்டு போவோம்னு ஓடியாந்தேந்தாயீ..’
சாந்திக்கு ஆச்சர்யம். ‘என்ன நீ கணக்கு வெச்சிருக்கியா? இவ்ளோ பெரிய ஃப்ளாட்லே யார் யாருக்கு என்னென்ன குடுத்தோம், எப்ப எவ்ளோ தீர்ந்திருக்கும்னு?’
மிகவும் அசால்டாக ‘பின் இது என் வேலையில்லயாம்மா?? நமக்கு எப்போ என்னா குடுக்கணும்னு இம்மாம் பெரிய உலகத்தில அத்தினி ஜனத்துக்கும் சாமி கணக்கு வெக்குது. நான் இந்த ஓர் அபாட்மெண்டுக்கு வெச்சுக்கறேன். அம்புட்டுத்தேன்’ என்று சிரித்தார் முத்து. பல்லற்ற பாண்டுரங்கநாய்த் தெரிந்தார் சாந்திக்கு.
‘சரி சரி குடு. நிஜமாவே காய் பழமெல்லாம் தீர்ந்துதான் போய் விட்டன. உனக்குத் தெரிந்த கணக்குக்கூட இந்த வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. இரு இரு அப்படியே கொஞ்சம் பலகாரமும் மோரும் தரேன். சாப்பிட்டு விட்டுப் போ என்ன’ என்று ஆஸ்வாசமாய் சொன்னாள் சாந்தி.
‘அம்மா தாயீ.. நீ குடு, நா எடுத்துகினு போய் சாப்டுக்கறேன். இன்னுஞ்சாமி கும்புடல. கும்புட்டு சாப்டுறேன்’ என்று கூடையைக் கையில் எடுத்தான்.
‘அட நீ என்ன ரொம்ப அதிசயமா இருக்கே!! அதெல்லாம் வேற பண்ணுவியா? உனக்கு ஸ்லோகமெல்லாம் அதான் பாட்டெல்லாம் தெரியுமா? தமிழே ததிங்கிணத்தோம் போடுது!? இதுல என்ன சொல்லி சாமி கும்புடுவே?!?!’ ஆச்சர்யத்தில் படபடவென பொரிந்தாள் சாந்தி.
‘அட நா என்னாம்மா உன்ன மாதிரி சார் மாதிரி படிச்சா இருக்கேங்? ஒண்ணியுமில்ல. ஏதோ எங்க ஆயா சொல்லும். அதுக்கு அது ஆயா சொல்லிக்குடுத்துச்சாங். ஆனா ஒண்ணு. நீ சாரோட ஊட்டாண்ட வந்து பாரேங். ஆச்சர்யப்பட்டுப்பொய்டுவே மா. அம்புட்டு ரெஸ்பான்ஸு. சாமி நல்ல சாமி மா. அது எம் பாட்ட கேக்கும். அந்தப் பாட்டுக்கு பதில்லாஞ்சொல்லும்.’ முத்து கண்ணகல தலையைத்தலையை ஆட்டி அவனுலகத்திலிருந்து சந்தோஷமாகப் பேசியது சாந்தியை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
‘ஓ அப்படியா?? சரி நீ பலகாரத்த எடுத்துட்டுப் போ. நானும் சாரும் உன் வீட்டுப் பக்கம் வந்து பார்க்கறோம். நீ சொல்றதே ஸ்வாரஸ்யமா இருக்கே!!’
‘வா தாயீ வா’ என்று கிளம்பினான் முத்து.
சாந்தி பொறுமை இல்லாமலும் பலவித கற்பனைகளோடும் இங்கும் அங்கும் நடைப்பயணம் போட்டாள் அறிவழகனின் ‘சரணம் சரணம் சண்முகா சரணம்’ வரை கஷ்டப்பட்டு காத்திருந்து பின் சொன்னாள். ‘ஏங்க ப்ளீஸ் வாங்க அப்படி என்ன தான் அவந் சாமி பணணுதுன்னு பாக்கணும் வாங்க போகலாம்’ என்று கையைப் பிடித்து இழுத்தாள்.
அறிவழகனுக்கு இதில் சுத்தமாக இஷ்டமில்லை. பிடிக்கவும் இல்லை. ‘அங்கயெல்லாம் ஒரே நாஸ்டியா இருக்கும் ஷாந்தி; அங்க என்னத்த போய் பார்க்கணும் உனக்கு. அவன் தான் ஏதோ ஒளர்றான். சாமியாவது ரெஸ்பாண்ட் பண்றதாவது. இதெல்லாம் டைம் வேஸ்ட். ஆளை விடு. எனக்கு வேற வேலை இல்லையா என்ன’ என்று கம்ப்யூட்டர் எதிரில் உட்கார்ந்து விட்டான். அவனை இப்போது அசைப்பது ப்ரம்மப்ப்ரயத்தனம்தான். இருந்தாலும் சாந்தி விடுவதாக இல்லை.
‘இல்லங்க ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விதமா அந்த ரெஸ்பான்ஸ் இருக்குன்னு பார்க்க ரொம்ப ஆசையா இருக்குங்க. கூட்டிட்டு போங்க. திரும்பி வந்து உங்களுக்குப் பிடித்த சப்பாத்தியும் தேங்காய்ப்பால் குருமாவும் செய்து தரேங்க’ என்று நயமாகப் பேசினாள்.
அந்தப் ப்ளீஸா, இல்லை சப்பாத்தி குருமாவா, இல்லை அந்த கொ(ஞ்)சலா ஏதோ ஒன்று இவனை அசைக்க மேலும் இதனைத் தள்ள முடியாமல் கிளம்பினான் அறிவழகன். கார் அந்தத் தெருவில் நுழையாதோ என்னமோ என்று கராஜிலிருந்து ஸ்கூட்டரை வெளிக் கொணர்ந்தான். இத்தனை நேரம் ஸ்வாமிக்கு செய்ததை விட வழியெங்கும் சாந்திக்கு அர்ச்சனை செய்தான். ஆனால் என்ன! பள்ளிக்கூடம் படிக்கும் பையன் மாதிரி சாந்தி அதையெல்லாம் எந்தக் காதிலும் வாங்கவில்லை. அர்ச்சுனனின் அம்பு மாதிரி அவளுக்கு முத்து வீடு ஒன்று தான் குறியாக இருந்தது.
முத்து தெருவிலுள்ள பப்ளிக் டாய்லெட்டில் குளித்து, சுத்தமாகி, தன்னுடைய குடிசை பக்கத்தில் நடைபாதையில் ஒரு பழைய ராமர் படம் வைத்து, இரண்டு காட்டுப் பூவை அதன் தலையில் போட்டு, ஓர் அலுமினிய நசுங்கிய தட்டில் சாந்தி கொடுத்த பலகாரத்தை வைத்து இரு கைகளையும் தட்டி அவனுடைய ஸ்லோகத்தை சொல்லலானான்:
ராமா ராமா வா வா கோசல ராமா வா வா
பாலா ராமா வா வா சீதா ராமா வா வா
காட்டுக்கு போனியே வா வா சீதய தொலைச்சியே வா வா
ஆஞ்சனேயா வா வா சீதா எங்கே கண்டு பிடி
ராவணன குத்திப்போட்டு சீதம்மாவ கொண்டு வா
காப்பாத்தி அயோத்தி கூட்டி வா வா
கொன்னாம்பாரு ராவணநை சீதம்மாவ கூட்டியாந்தான்
ராமன் அனுமன் அல்லாருமே அயோத்திக்கே வந்தாங்க
நல்லாருங்க எல்லோரும் கதைய் கேட்ட அல்லாருக்கும் நல்லதெல்லான் நடக்கட்டும்
முத்து முடித்ததும் அவனை மொய்த்தது ஒரு பத்து குரங்குகள். அத்தனைக்கும் பலகாரங்கள் கொடுத்து, தானும் சாப்பிட்டுத் திரும்பியவன் சாந்தியையும் அறிவழகனையும் திடுக்கிட்டுப் பார்த்தான். குழந்தைத்தனமாக. கைக் கொட்டி சிரித்துக்கொண்டே யதார்த்தமாக ‘இன்னம்மா எஞ்சாமி வந்துச்சு பாத்தியா?! அது என் பாட்டு கேட்டு ஓடியாந்துடும். நான் குடுப்பதைச் சாப்ட்டு அது பாட்டுக்கு எங்குனா போய்டும். நாளைக்கு திரும்ப பாட்ட பாட சொல்லோ வரும். எஞ்சாமிகிட்ட பேசாம அதுக்கு சோறு வெக்காம நான் சாப்பிட முடியுமா சொல்லு. அது கீதில்ல பசியோட. என் பொஞ்சாதி என்னை விட்டுப் போன அப்புறம் எங்களுக்கு குழந்தையும் இல்லாததினால் இவங்கதான் எனக்கு குழந்தங்க, என்னைப் பெற்ற சாமியும் கூட. இப்ப நீ கூட பாத்தியே எப்படி சொல்லு’ என்றான்.
சாந்தி கண்களில் ஆச்சரியம். வார்த்தைகள் இல்லை. இவன் அறிவாளியா, பாமரனா, பக்திமானா? எதில் சேர்த்தி?! வேண்டா வெறுப்பாக வந்த அறிவழகனோ கண்களில் மிரட்சியோடு பார்த்து சிலை ஆகி விட்டான். ‘இலக்கண சுத்தமான பூஜையில் இல்லாத ஒன்று இவனுடய எளிமையான பூஜையில் உள்ளது’ என்று அவன் மனம் சொல்லியது.
ஆம் எளியோரும் பெரியோரும் இறைமுன் ஒன்றே! எல்லாவற்றையும் இறையேயென்றுணர்.’