இராஜாதித்தன் தொடர்ச்சி
இராஜாதித்தன் முன்கதை:
சோழன் பராந்தகன், பாண்டியப் போர்க்களம் கண்டு வெற்றியுடன் இருக்கையில், வடதிசை அரசுகள் எதிரிகளாகிறது. பட்டத்து இளவரசன் இராஜாதித்தன் அந்த பகைகளைத் தடுக்கத் திட்டமிடுகிறான். பகை மேகங்கள் கருக்கத் தொடங்குகிறது. இனி நாம் தொடர்வோம்.
தஞ்சாவூர் அரண்மனையில் ஒரு காட்சி:
இளவரசர்கள் இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் மூவரும் அரசியல் பேசக் கூடினர். முதலில் குடும்பப் பேச்சு தான் நடந்தது.
இராஜாதித்தன் – கண்டராதித்தனின் மனைவியின் உடல் நிலை பற்றி வினாவினான். கண்டராதித்தன் “சிவன் சோதனை! அவள் வாழும் நாட்கள் சில நாட்களே என்று தோன்றுகிறது” – என்றான்.
இராஜாதித்தன் “கண்டராதித்தா! அந்தப்புரத்தில் அந்த இளம் பெண் – அது தான் அந்த மழவன் மகள் – உன் மனைவியைக் கண் போலக் காத்து வருகிறாளே. உன் மனைவியின் நலத்துக்காகத் தினமும் சிவபூசை செய்து வருகிறாளே” என்றான்.
“ஆமாம் அண்ணா! அவளது சிவபக்தியும், அன்பும் என் மனதுக்குப் பெரும் நிம்மதி தருகிறது” – என்றான் கண்டராதித்தன்.
இராஜாதித்தன் “கண்டராதித்தா! அந்த மழவன் மகளை நீ திருமணம் செய்து கொள். உங்கள் இருவருக்கும் ஒருமித்த சிவஞானம் இருப்பது நல்ல பொருத்தம்” என்றான்.
இராஜாதித்தன் சொல்வதின் உண்மையை உணர்ந்த கண்டராதித்தன் மௌனம் சாதித்தான்.
இராஜாதித்தன் அரிஞ்சயனைப் பார்த்து “அரிஞ்சயா! கல்யாணி எப்படியிருக்கிறாள்? உனது குட்டிப் பராந்தகன் எப்படியிருக்கிறான்? அவனது அழகைப் பார்த்து, இனி நான் அவனை சுந்தரன் என்று தான் கூப்பிடப்போகிறேன்” -என்றான்.
அரிஞ்சயன் “அண்ணா .. அனைவரும் நலம். தம்பிகள் நாங்கள் மணமுடித்து வாழும் போது, நீங்கள் இன்னும் மணமுடிக்காதது ஏன் அண்ணா? விரைவில் சோழச்சக்கரவர்த்தி ஆகவுள்ள தாங்கள் சோழ வம்சவிருத்திக்காக விரைவில் மணமுடிக்க வேண்டும்” – என்றான்.
இராஜாதித்தன் சிரித்தான்.
“நமது முன்னோர்கள் கனவு கண்டனர். விஜயாலயன், ஆதித்தன், பராந்தகன் என்று ஒவ்வொருவரும் வீரம் ஒன்றை மட்டும் பயிரிட்டு, சோழ நாட்டை சாம்ராஜ்யமாக்கக் கனவு மட்டுமல்ல – செய்தும் காட்டினர். ஆனால், அந்தப்பணி முழுதாக நிறைவேறவில்லை. பாண்டியன் தொங்கிக்கொண்டிருக்கிறான். கங்க நாடு பூதகனின் வசமாக வாய்ப்புகள் உள்ளன. அவன் நமது எதிரியாகவும் உருவாகக் கூடும். இராட்டிரகூடம் நமக்கு வைரியாகிவிட்டது. இந்தப்பகைகளை ஒருங்கே அழித்த பின் தான் நான் திருமணம் செய்வேன்.”- என்றான்.
குடும்ப சம்பாஷணை அரசியல் சம்பாஷணையாகத் தொடர்ந்தது..
“அண்ணா! அண்ணா! போரின்றி நாம் காரியத்தில் வெற்றி காண முடியாதா?” என்று தம்பி கண்டராதித்தன் கேட்டான். இராஜாதித்தன் சிரித்தான். அவன் குரலில் மிகுந்த ஏளனம் கலந்திருந்தது.
“ஆகா! பேஷாக! மான்ய கேட நகரத்தில், கிழவன் அமோகவர்ஷன் ஆர்ப்பரிக்கிறான்! அவனிடம் தூது அனுப்புவோம். ஏன், நீயும் நானும் செல்வோம்! அந்தக் கிழவன் முன்பு மண்டியிட்டு சோழச்சக்கரவர்த்தியின் மருமகப்பிள்ளைக்கு மீண்டும் சிங்காதனத்தைக் கொடுங்கள். எங்கள் ஆருயிர் சகோதரி வீரமாதேவிக்கு அரசி என்னும் பட்டப்பெயரை மீட்டுக் கொடுங்கள் என்று வேண்டுவோம்” என்று மிகவும் அமைதியான குரலில் இராஜாதித்தன் கூறினான்.
கண்டராதித்தன் மௌனம் சாதித்தான்.
இராஜாதித்தன் தொடர்ந்தான். “கண்டராதித்தா! நம் தந்தையின் போக்கு தான் மிகவும் விசித்திரமாக இருக்கிறது. ஈழ நாட்டுப் படைத்தலைவன் சக்கசேனாபதியை ஓடோட விரட்டிய பராந்தக சோழமன்னரா இப்படி இராஷ்டிரகூடர்களின் அவமதிப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? இராஷ்ட்டிரகூட படையெடுப்பைப் பற்றிப் பேசியவுடன் அவர் மௌனம் சாதிக்கிறார்”.
இளவரசர்கள் மனம் அன்றைய அரசியலின் வெப்பத்தால் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
மறுநாள், அரிஞ்சயன் வீரம்மாவிடம் சென்றான். “அக்கா, இராட்டிரகூட ராணியாக இருந்த நீங்களும், மாமா கோவிந்தரும் இவ்வாறு நாடு விட்டு வரவேண்டிய காரணம் நாம் அனைவரும் அறிந்தது தான். உங்கள் எண்ணங்கள் என்ன” – என்று கேட்டான்..
வீரமாதேவியின் குரல் கம்மியிருந்தது.
“அரிஞ்சயா, என் சோகக்கதையைக் கேள். வேங்கி நாட்டில் யுத்தமல்லனும், வீமனும் மனக்கசப்புக் கொண்டனர். இவரும் சும்மாயிருக்கக் கூடாதா? யுத்தமல்லனுக்கு உதவி செய்வதற்குத் தன் படைகளை அனுப்பினார். தோல்விதான் ஏற்பட்டது. தோல்வி ஏற்படாமல் என்ன செய்யும்? ‘நம் வீரர்களிலேயே நம்மைப் பிடிக்காதவர் பலர் இருக்கிறார்கள்’-என்பதை இவர் அறிந்து கொள்ளவில்லையே! யுத்த தந்திரம் தெரியவில்லையே! இந்தத் தோல்வியை அறிந்த இவருடைய சிறிய தகப்பன் மகன் கிருஷ்ணதேவன், நாட்டில் தனக்கு வேண்டியவர்களை ரகசியமாகச் சேர்த்து வந்தான். பெண் உகுக்கும் கண்ணீர் எப்போதும் தீயாய் மாறி அழித்துவிடும். எத்தனை கன்னிகள் கண்ணீர் விட்டனரோ! அவர்களின் சாபம் எங்களை நாட்டை விட்டு ஓட்டியது. இரகசியமாகச் சதித்திட்டம் வகுத்த கிருஷ்ணதேவன், ஒரு நாள் போர்க்கொடி உயர்த்தினான். எங்கும் கலகம். தோல்வி நிச்சயம் என்பது தெளிவானது. நான்தான் இவரை வற்புறுத்தினேன். ‘இனி ஒருகணம் கூடத் தாமதிக்கக் கூடாது’ என்று. இரவோடு இரவாகத் தப்பித்து ஓடி வந்தோம். கிருஷ்ணதேவன் முதியவரான தன் தந்தை அமோகவர்ஷனுக்கு முடிசூட்டி அவர் சொற்படி நாட்டை ஆள்கிறான்”
அரிஞ்சயன் : “அக்கா! அண்ணன் இராஜாதித்தன் வீரம் தாங்கள் அறியாததல்ல. உங்கள் வாழ்வுக்காக அவர் செய்த சபதம் வீணாகாது. இன்று தந்தை அவர் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார். விரைவில் யுத்தம் வரும். உங்கள் வாழ்வு மலரும்” என்றான்.
940: பராந்தகனுடைய துன்பங்கள் துவக்கமானது. பூதுகன் கங்க குலத்தில் பிறந்தவன். கங்க மன்னன் பிருதிவிபதியிடம் பகை கொண்டிருந்தான். கங்க நாட்டை அடையத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். இராட்டிரகூட மூன்றாம் கிருஷ்ணனின் தங்கை ரேவகாவை மணந்திருந்தான். அதனால் இராட்டிரகூட உதவி அவனுக்கு இருந்தது. கங்கநாட்டின் சில பகுதிகளை ஆளத்தொடங்கியிருந்தான்.
அன்று மாலை – செய்திகள் சுடச்சுட வந்தன.
பல மாவீரர்கள், மன்னர்கள் – ஒரே நாளில் மரணம்!
பராந்தகனின் உற்ற நண்பன் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவீபதி. பிருதிவிபதியின் மகன் மாவீரன் விக்கியண்ணன் பல போர்களில் சாகசம் செய்து கங்க நாட்டுக்கு வெற்றி சேர்த்தவன். விக்கியண்ணன் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தான். அவன் அன்று இறந்துவிட்டான். வந்த மரணம், அவன் தந்தை பிருதிவிபதியையும் அன்றே தின்றது. இப்படி இரு தலைவர்களும் ஒரே நேரம் இறந்தது, பூதகனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. இந்தச் சமயத்துக்காகப் பல வருடங்கள் காத்திருந்த பூதகன் உடனே அரியணையைக் கைப்பற்றி கங்க நாட்டு மன்னனானான். கண்ணிமைக்கும் நேரத்தில் இவை அனைத்தும் நிகழ்ந்து விட்டது.
சற்று வடக்கே, இராட்டிரகூட நாட்டு மன்னன் அமோகவர்ஷனும் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தான். அவனும் அன்றே மரணம் அடைந்தான்.
எமன் அன்று ரொம்பவும் சுறுசுறுப்பாகப் பணி புரிந்திருக்கிறான் போலும். பல அரச உயிர்களைக் கவர்ந்து சென்றான். அமோகவர்ஷனின் மகன் மூன்றாம் கிருஷ்ணதேவன் மன்னனானான். ஒரு நாளில் இத்தனை மாற்றங்கள் சோழ நாட்டுக்கு வடக்கே நடந்து முடிந்தது.
ஆக, ஒரே நாளில் சோழநாட்டுக்கு எதிரான கூட்டணி – பூதகன், மூன்றாம் கிருஷ்ணன் – இவ்விருவருடனும், வாணர், வைதும்பர் என இவர்களது கூட்டணி வலுப்பெற்றது.
அன்று மாலையே பராந்தகன் இளவரசர்களை அவசரக்கால அடிப்படையில் அழைத்தான்.
பராந்தகன் சொன்னான்: “இராஜாதித்தா! ஒரே நாளில் நமது வட நாட்டு நட்பு அரசுகள் அனைத்தும் நமக்குப் பகைவராக்கிவிட்டன. அந்தக் கூட்டணி வலுவாகியுள்ளது. எனக்கு இன்னும் போர் வெறி தணியவில்லை. எத்தனை ஆசையுடன் நான் மதுரைக்குச் சென்றேன்! அரியணையில் அமர்ந்து பாண்டிய மகுடத்தைச் சூடிக்கொள்ள விரும்பினேன். அது கிடைக்காமல் போன ஏக்கம் என்னை இன்னும் வாட்டுகிறது. வீரமாதேவி இன்று கலங்கிய கண்களுடன் இங்கு வந்திருக்கிறாள். அவள் துயரத்தை நான் இன்னும் தீர்க்காமல் இருக்கிறேனாம். என் மருமகனை அடித்து விரட்டியவனை இன்னும் சிங்காதனத்திலிருந்து இறக்காமல் இருக்கிறேனாம். இப்படிப் பலர் கூறுவதைக் கேட்கிறேன். வெகு தூரத்திலுள்ள மான்யகேடம் நோக்கிச் செல்வது முறைதானா? போர்த்தந்திரப்படி நான் கேட்கவில்லை. பல காத தூரம் படைகளை நடத்திச் செல்ல வேண்டுமே, அது சரிதானா?”-என்றான்.
பதில் சொல்ல வந்த இராஜாதித்தனைக் கையசைப்பில் நிறுத்திய பராந்தகன் மேலும் சொன்னான். “விக்கியண்ணன் வேறு இறந்துவிட்டான். அவன் தந்தை பிருதீவிபதியும் மகனைத் தொடர்ந்து இறந்தான். பல்லாண்டுகளுக்கு முன்பு வாணர் நாட்டைக் கங்க நாட்டரசன் பிருதிவீபதிக்கு நாம் பரிசு கொடுப்பதாக அறிவித்தோம். இப்போது கங்க நாட்டில் பூதுகன் ஆட்சி செலுத்துவதால் கொடுத்த பரிசை நாம் திரும்பப் பெறுவதோ, பரிசைப் பறிப்பதோ தகாது. இராஜாதித்தா! நேரம் இன்று வந்துவிட்டது. எதிரிகள் வலுவாகிக்கொண்டு வருகின்றனர். படைகளைத் திரட்டு“ என்று உத்தரவிட்டான்.
தந்தையின் அந்தக் கட்டளையைத் தானே அவன் நெடுநாட்களாக எதிர் பார்த்திருந்தான்! அவன் அகமலர்ச்சியுடனும் தினவெடுத்த தோள்களுடனும், துடிக்கும் கரங்களுடனும், தந்தையின் எதிரே போய் நின்றான்.
மாவீரன் இராஜாதித்தன் போர் ஆணை கேட்டதும், இரை பார்த்த சிங்கம் போல மகிழ்ந்தான்.
சரித்திரத்தில் அவனுடைய பதிப்பை விட, அவனுடைய பாதிப்பு தான் அதிகம். அது என்ன? கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போமே!