சாக்லேட் பேப்பர் – எஸ் எல் நாணு

 

கயாவில் துளசி செடி வளராததற்கும், பல்குனி நதி வற்றியதற்கும் - தினசரி தமிழ்

காலையில் எழுந்து பால்கனியில் எட்டிப் பார்த்த எனக்கு எரிச்சலாக வந்தது.  காரணம் பால்கனி திண்டில் கிடந்த பிரித்த சாக்லேட் பேப்பர்கள். நாங்கள் இருப்பது முதல் தளத்தில். எங்களுக்கே மேலே இன்னும் ஆறு தளங்கள். முதல் தளம் என்பதால் எங்கள் பால்கனியை ஒட்டி ஒரு திண்டு உண்டு. அதில் என் சகதர்மணி துளசி மற்றும் பெயர் தெரியாத சில செடிகளை உரம் போட்டு வளர்க்கிறாள். தினமும் காலையில் பார்த்தால் இரண்டு மூன்று பிரித்த சாக்லேட் பேப்பர்கள் செடிகளில் ஒய்யாரமாக ஆடிக் கொண்டிருக்கும். அதிலும்  துளசிச் செடி என்றால் அதற்கு ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது. தினமும் ஒரு சாக்லேட் பேப்பராவது துளசிச் செடியில் மடியாக விழுந்து அதன் மருத்துவ மணத்தில் மூழ்கியிருக்கும்.

உடனே என் சகதர்மணிக்கு இது அச்சான்யமாகப் படும். (துளசிச் செடி லெஷ்மி ஸ்வரூபி.. எச்ச சாக்லேட் பேப்பர் அதுல படலாமோ?) ரொம்பவே பிரயத்தனப் பட்டு அந்த சாக்லேட் பேப்பரை நான் அகற்றும் வரை விடமாட்டாள். ஆனால் மறுபடியும் மாலையில் மூன்று நான்கு சாக்லேட் பேப்பர்கள் தங்கள் இடத்தைப் பிடித்து ஒய்யாரமாக ஆடிக் கொண்டிருக்கும். எனக்கு அந்த சாக்லேட் பேப்பர் விழுவதை விட அதை உடனே அப்புறப் படுத்த என் சகதர்மணி என்னை விரட்டுவது தான் ரொம்பவே கடுப்பாக இருக்கும்.

எங்கள் பிளாட்டில் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் யாரை என்று குற்றம் சாட்டுவது?

“பேசாம அசோசியேஷன்ல கம்ப்ளெய்ன் பண்ணுங்கோ” என்று சகதர்மணி உத்தரவு.

“இதுக்கெல்லாம் அசோசியேஷன் கிட்டப் போக முடியாது.. நாம தான் பார்த்துக்கணும்.. இரு.. என்ன பண்ணலாம்னு யோசிக்கறேன்”

என்று அவளை அடக்கி விட்டு நிஜமாகவே யோசித்தேன் (நம்புங்க சார்!!)

அப்போது இந்தச் செய்தியை பத்து செகண்டுக்குள் நூறு பேருக்கு அனுப்பா விட்டால் என் தலை சுக்கு ஆயிரமாக (பத்து மடங்கு) வெடிக்கும் என்று வாட்ஸ் ஏப்பில் ஒரு செய்தி வரவே எனக்கு ஒரு திடீர் யோசனை..

எங்கள் குடியிருப்பு வாசிகளுக்கென்று ஒரு தனி வாட்ஸ் ஏப் க்ரூப் இருக்கிறது. அதில் பிரச்சனையை விளக்கி தயவு செய்து பிரித்த சாக்லேட் பேப்பரை பால்கனியிலிருந்து தூக்கி எறியாத படி உங்கள் குழந்தைகளுக்கு அட்வைஸ் பண்ணுங்கள் என்று செய்தி அனுப்ப முடிவு செய்து.. அதிசயமாக உடனே அனுப்பியும் விட்டேன்..

சுவரில் அடித்த பந்து போல் உடனே பதில் வந்தது..

“எங்கள் வீட்டில் இல்லை”

“நாங்கள் டஸ்ட் பின் பயன் படுத்த எங்கள் குழந்தைகளைப் பழக்கியிருக்கிறோம்”

“எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதே இல்லை.. சாக்லேட் தின்பது உடல் நலத்துக்குக் கேடு” (புகைப் பிடிப்பது… அதே சாயல்)

ராக்கெட் வேகத்தில் இந்தப் பதிலெல்லாம் வந்ததே தவிற செடிகளில் சாக்லேட் பேப்பர் விழுவது மட்டும் நிற்கவில்லை.

அடுத்த கட்டமாக என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்..

நான் சீனியர் கணக்கதிகாரி(!) என்பதால் “ஆடிட்” ஞாபகம் வந்தது. அதாவது மேல் தளத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமாக அக்கு வேறு ஆணி வேராகப் பிரித்து யார் இதை செய்யக் கூடும் (எனக்கு தினமும் வேலை வைக்கக் கூடும்) என்று ஆராய்வது என்ற முடிவுக்கு வந்தேன்..

மேல் தளத்தில் கன்னைய்யா லால். குஜராத்தி குடும்பம். குஜாராத்திகள் நிறைய இனிப்பு சாப்பிடுவார்கள்.. அவர்களின் ஊறுகாய் கூட இனிப்பாகத் தான் இருக்கும்.. அதுவும் அவர்கள் வீட்டில் நான்கு குழந்தைகள் வேற.. நிச்சயமாக சஸ்பெக்ட் நம்பர் ஒன்.. காகிதத்தில் குறித்துக் கொண்டேன்..

ஆறாவது தளத்தில்.. எங்கள் அசோசியேஷன் கமிட்டி மெம்பர் ஸ்ரீவத்ஸன்..

“இது ரொம்ப தப்பாச்சே.. நீங்க என்ன பண்ணறேள்.. குளோஸா வாட்ச் பண்ணுங்கோ.. கேட்ச் த கல்ப்ரிட் ரெட் ஹேண்டட்”

போன் பண்ணி உபதேசம் பண்ணினார்.

இவர் சொன்னார் என்பதற்காக ராத்திரி பகல்னு பார்க்காம பால்கனிலேர்ந்து அண்ணாந்து பார்த்துண்டேவா நிக்க முடியும்?

அதற்குக் கீழே பல்பீர் சிங் குடும்பம்.. அதிலும் மூன்று குழந்தைகள்.. பஞ்சாபிகள் சாக்லேட் பிரியர்கள் என்று என் நண்பன் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.. கண்டிப்பாக சஸ்பெக்ட் நம்பர் டூ..

அடுத்ததாக பிரதாப் ரெட்டி.. அவன் மனைவி சரளா.. ஐ.டி.யில் வேலை பார்க்கும் புதுமண தம்பதிகள்.. அவர்களுக்கு சாக்லேட் சாப்பிடும் சுவாரஸ்யம் இருக்குமா என்பது சந்தேகமே..

“யாரு சொன்னா? இந்தக் காலத்துல ஐ.டி.ல வேலை பார்க்கிறவா தான்.. ஆபீஸ்ல ப்ரீயா கொடுக்கறான்னு நிறைய சாக்லேட் சாப்பிடறாளாம்.. அதனால அவாளுக்கெல்லாம் சீக்கிரமே சக்கரை வியாதி வந்துடறாதாம்.. தினம் வாட்ஸ் ஏப்புல வரதே”

சகதர்மணி சொன்னவுடன் இந்த இளம் தம்பதிகள் சஸ்பெக்ட் நம்பர் த்ரீ ஆகி விட்டனர்.

அதற்குக் கீழே மூன்றாவது மாடியில் எண்பது வயது விஸ்வநாதன் மாமா.. சகுந்தலா மாமி.. சான்ஸே இல்லை..

எங்களுக்கு நேர் மேலே மிஸ்டர் அண்ட் மிஸஸ் அலெக்ஸாண்டர்.. வீட்டையே சுத்தமாக வைத்திருப்பவர்கள். ஒரு தூசு துரும்பு இருக்காது.. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அவர்கள் வீட்டுக் குப்பைத் தொட்டி கூட பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.. அவர்கள் எப்படி குப்பையை வெளியே போடுவார்கள்? அதனால ரூல்ட் அவுட்..

நாங்களே எங்க பால்கனில சாக்லேட் பேப்பர் போட மாட்டோம்.. அதனால நாங்களும் ரூல்ட் அவுட்..

ஆக இப்ப சந்தேகத்தில் இருப்பது மூன்று குடும்பங்கள் தான்..

கன்னையா லால் குடும்பம்..

பல்பீர் சிங் குடும்பம்..

புதுமண தம்பதிகள்.. பிரதாப் ரெட்டி.. அவன் மனைவி சரளா..

இவர்களில் யார் என்று எப்படிப் பிடிப்பது?

அலுவலகத்தில் அரவிந்தனிடம் இதைப் பற்றி பிரஸ்தாபித்தேன். உடனே அவன் வழி சொன்னான்.

“ரொம்ப சிம்பிள். சி.சி.டி.வி. கேமரா மாதிரி ஒண்ணு உன் பால்கனில பிக்ஸ் பண்ணு.. அதை உன் உன் லேப்-டாப்போட கனெக்ட் பண்ணிக்கோ.. அதுல எல்லாம் பதிவாயிரும்.. நீ ஈஸியா குற்றவாளியைப் பிடிச்சிரலாம்”

அரவிந்தன் கொடுத்த பில்ட்-அப்பில் ஏதோ கொலை குற்றவாளியைப் பிடிக்கப் போவது போன்ற பிரமை எனக்கு ஏற்பட்டது.

மறுநாளே அரவிந்த் ஒரு ஆளுடன் வந்தான்.. வந்தவர் பால்கனியைப் பார்த்தார். அண்ணாந்து மேலே பார்த்தார். மறுபடியும் கீழே பார்த்தார்.. பின் முகவாயைத் தடவிய படி யோசித்தார்.. பின் கையிலிருந்த ஐ-பேடில் ஏதோ கணக்குப் போட்டார்.. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவராக..

“ஹைட் ரொம்ப அதிகமா இருக்கு.. சாதாரண கேமராவுல க்ளாரிட்டி இருக்காது.. மேகமூட்டம் மாதிரி ஒரு உருவம் தெரியுமே தவிற.. யாரு என்ன ஏதுன்னு பின்பாயிண்ட் பண்ண முடியாது.. அதனால நீங்க கொஞ்சம் ஹை-எண்ட் கேமரா தான் போகணும்”

எனக்கு உடனே வயிற்றில் புளி கரைத்தது.

“ஹை-எண்ட்னா..?”

என்று நான் இழுக்க அவர் என்னை அலட்சியமாகப் பார்த்தார்.

“ஆமா சார்.. ஆள் யாருன்னு தெரியணும்லியா? இம்போர்டட் கேமரா தான் பெஸ்ட்..”

“சரி.. அதுக்கு எவ்வளவு செலவாகும்?”

“பயப்படாதீங்க.. அதிகம் ஒண்ணுமில்லை சார்.. கேமரா.. மத்த ஆக்ஸஸரீஸ்.. இன்ஸ்டலேஷன்.. எல்லாம் சேர்த்து அம்பது ரூபாய்ல முடிச்சுரலாம்.. நீங்க அரவிந்த் சாரோட பிரெண்டாப் போயிட்டீங்க.. அதனலால எனக்கு பிராபிட்லாம் வேண்டாம்.. காஸ்ட் மட்டும் கொடுங்க போறும்”

எனக்கு பகீரென்றது..

ஒரு சாக்லேட் பேப்பரை யார் தூக்கி எறிகிறார்கள் என்று கண்டு பிடிக்க ஐம்பதாயிரம் ரூபாய் செலவா?

“ஓக்கேன்னா சொல்லுங்க.. நாளைக்கே வந்து பிக்ஸ் பண்ணிக் கொடுத்துடறேன்”

யோசித்துச் சொல்வதாக வந்தவரை அனுப்பி விட்டேன்.

“டேய்.. ஆதாரத்தோட கையும் களவுமா குற்றவாளியைக் கண்டு பிடிக்கணும்னா இது தான் ஒரே வழி..”

அரவிந்த் சொன்ன போது நான் பேசாமல் இருந்தேன். உடனே அவன் என் சகதர்மணியிடம் திரும்பி..

“இவன் எப்பவுமே இப்படித் தான்.. உடனே முடிவு எடுக்க மாட்டான்.. நீங்க தாம்மா சரியான ஆளு.. டக்கு டக்குன்னு முடிவு எடுபீங்க.. அதுவும் சரியா முடிவு எடுப்பீங்க..”

அரவிந்த் “நாராயண.. நாராயண” என்று பத்த வைத்து விட்டுக் கிளம்பி விட்டான்.

அடுத்த அரை மணிநேரத்தில் அந்த கேமராவை வாங்கா விட்டால் நான் மனிதப் பிறவி எடுத்ததே வியர்த்தம் என்ற ரேஞ்சுக்கு என் சகதர்மணியின் அருளுரைகள் இருந்தன என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை..

திடீரென்று ஐம்பதாயிரத்துக்கு என்ன செய்வது என்று நான் யோசிக்கும்  நேரத்தில் இது என் சகதர்மணிக்கு ஒரு கௌரவப் பிரச்சனையாக உரு மாறிக் கொண்டிருப்பது எனக்குப் புரிந்தது. அதற்குக் காரணம் எதிர்த்த வீட்டு சரோஜா.

“வெறும் சாக்லேட் பேப்பர் தானே.. இதுக்குப் போய் இவ்வளவு கலாட்டா பண்ணுவியா? பேசாம விடுவியா”

என்று சரோஜா கேட்கப் போக..

“அதெப்படி விட முடியும்? இதுவே வேற யாராவது வீட்டுல இப்படிக் குப்பை விழுந்தா விடுவாளா? ஊரைக் கூட்டி தகறாரு பண்ண மாட்டா? இதை விடக் கூடாது சரோஜா..”

“நான் அதுக்குச் சொல்லலை.. சாதாரண சாக்லேட் பேப்பர்.. அதுக்குப் போய்..”

“என்ன சாதாரண சாக்லேட் பேப்பர்?.. ஒரு நாள்னா பரவாயில்லை.. தினம் தினம் இதே பாடாப் போச்சு.. யாரோ வேணும்னே பண்ணறா.. இதை நான் சும்மா விட மாட்டேன்.”

என் சகதர்மணியை உசுப்பேற்றி விட வேண்டும் என்றே சரோஜா கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதை ஏன் இவள் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்…

“இதப் பாருங்கோ.. என் செடில தினம் யாரு எச்ச சாக்லேட் பேப்பரைப் போடறான்னு கண்டு பிடிச்சே ஆகணும்.. என்ன செய்வேளோ ஏது செய்வேளோ தெரியாது.. நாளைக்கே பணத்துக்கு ஏற்பாடு பண்ணி அந்த கேமராவை கொண்டு வரச் சொல்றேள்”

சுப்ரீம் கோர்ட் ஆர்டர். அதற்கு மேல் அப்பீல் கிடையாது.

நல்லவேளையாக இன்று ஞாயிற்றுக் கிழமை. இல்லாவிட்டால் இப்பவே ஏற்பாடு பண்ணச் சொல்லி என்னை விரட்டியிருப்பாள்.

பணத்துக்கு என்ன செய்வது.. பி.எப்.பில் லோன் போட்டால் வர ஒரு மாதம் ஆகுமே.. எப்.டி.யை உடைக்கணுமா? அது மகனின் காலேஜ் அட்மிஷனுக்காக என்று தானே நினைத்திருந்தேன்.. அதைப் போய் ஒரு சாக்லேட் பேப்பருக்காக?… ம்.. வேறு என்ன தான் வழி?

நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே காலிங் பெல் அடித்தது.

ஆறாவது மாடி ஸ்ரீவத்ஸன்..

“ஒரு பேட் நியூஸ்.. நம்ம விஸ்வநாதன் மாமா போயிட்டார்”

என்னால் நம்ப முடியவில்லை.

“நேத்து கூட மாமியைக் கீழ பார்த்தேன்.. மாமா நன்னா இருக்கார்னு சொன்னாரே”

“இப்பத்தான்.. பத்து நிமிஷம் முன்னால மாஸிவ் அட்டாக்..”

சகதர்மணியுடன் உடனே போனேன்.

டாக்டருக்குச் சொல்லி அனுப்பி.. ஐஸ் பெட்டிக்கு ஏற்பாடு பண்ணி..

புளோரிடாவில் இருக்கும் அவர்களின் ஒரே மகனுக்கு தகவல் சொல்லி.. மற்ற உறவினர்கள் யார் என்று மாமியிடம் மெதுவாகக் கேட்டு ஒவ்வொருவரையாக அழைத்து விவரம் சொல்லி..

உடனே வேறு யாரும் துணை இல்லாததால் நானும், சகதர்மணியும் ஸ்ரீவத்சனும் மாமி கூடவே இருந்தோம்..

மாமியைப் பார்க்க நிஜமாகவே பாவமாக இருந்தது.

“கவலைப் படாதேங்கோ.. நாங்க இருக்கோம்”

மாமியின் கையை ஒரு மகனாகப் பிடித்துக் கொண்டேன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த மாமி.. மெதுவாகச் சொன்னாள்..

“இனிமே உங்க வீட்டு பால்கனில சாக்லேட் பேப்பர் விழாது”

நான் எதுவும் புரியாமல் மாமியைப் பார்த்தேன்.

“மாமாவுக்கு டயபடீஸ்.. ஆனா சின்ன வயசுலேர்ந்தே சாக்லேட் பிரியர்.. நான் கத்துவேன்னு எனக்குத் தெரியாம பக்கத்து வீட்டுப் பையன் கிட்டச் சாக்லேட் வாங்கிண்டு வரச் சொல்லி ஒளிச்சு வெச்சிருப்பார்.. நான் குளிக்கும் போதோ.. இல்லை சாமான் வாங்க கடைக்கு எங்கயாவது போகும் போதோ சாக்லேட் எடுத்துச் சாப்பிடுவார்.. உரிச்ச சாக்லேட் பேப்பரை எங்காத்துக் குப்பைத் தொட்டில போட்டா எனக்குத் தெரிஞ்சுடும்னு பால்கனி வழியா வெளில போட்டுருவார்.. இது எனக்கு சமீபத்துல பக்கத்து வீட்டுப் பையன் சொல்லித்தான் தெரிஞ்சுது.. ஏற்கனவே அவருக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு.. எப்ப வேணாலும் எது வேணாலும் ஆகலாம்னு டாக்டர் சொல்லியிருந்தார்.. சரி இருக்கிறவரை சந்தோஷமா இருக்கட்டுமேன்னு நானும் கண்டுக்கலை.. பாவம்.. ”

மாமி விரக்தியாகச் சொல்லி முடித்தாள். அப்போது தான் எனக்கு உரைத்தது.. மாமாவின் உடலை ப்ரீஸர் பெட்டியில் வைத்த போது மாமி அவசரமாக அவர் தலைக்குப் பக்கத்தில் எதையோ வைத்தாள்.. எதேச்சையாக எட்டிப் பார்த்தேன்.. கேட்பரீஸ் சாக்லேட்..

மறுநாள் காலையில் எழுந்து பால்கனியைப் பார்த்த எனக்கு வெறுமையாக இருந்தது.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.