வரும் முன் நலன் காப்போம் என்ற மந்திரத்தைப் பரப்பி விடுவது எப்போதுமே எனது குறிக்கோள். கல்வி-மனநலம் கலவையுள்ள பல வொர்க் ஷாப்பில் இதில் அடங்கும். பல குழந்தைகள் நலனை அடைய இதை ஒரு நல்ல கருவியாகக் கருதினேன். கல்வி-மனநலன் கலவை தகவல்கள் சேகரித்துப் பல மாதங்களுக்கு ஆசிரியர் குழுக்களுக்கு வர்க்ஷாப் வடிவமாகச் செய்வேன். அப்படித் தான் இந்த ஆசிரியர் கூடத்தில் நடந்து கொண்டிருந்தது.
இவர்களுக்கு, குழந்தைகளின் மனநலத்தை எவ்வாறு கண்டறிதல் என்பதைப் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தோம். இதை அவர்கள் வகுப்பில் ஒரு மாதத்திற்குக் கவனித்து, குறித்து வர வேண்டும் என்று அமைத்தேன். அதையொட்டிய பல தகவல்களை வொர்க் ஷாப்பில் நடத்தினேன்.
கால அவகாசம் முடிந்ததும், பலவிதமான கேள்வி, சந்தேகங்கள் குவிந்தன. இங்கே பூஜா டீச்சரின் அனுபவத்தைப் பகிரப் போகிறேன்.
ஆங்கிலம் கற்றுத் தருபவள் பூஜா டீச்சர். தன்னுடைய நான்காம் வகுப்பில் உள்ள அண்ணன் ஆர்யவர்மன், மற்றும் ஒன்றாம் வகுப்பில் உள்ள தங்கை அஸ்வதி இருவரும் “அம்மா” என்ற சொற்கள் வந்தாலே அழுது விடுவதாய்ப் பகிர்ந்தாள். அவர்கள் எழுத்தில் விதவிதமான பிழை இருப்பதாகவும் கூறினாள். பல வாரங்களாக இருவரையும் யாரிடமாவது காட்ட வேண்டும் என்ற நினைப்பு இருப்பதாகவும், என்னுடைய அப்ஸர்வேஷன் (observation) ஹோம்வர்க் செய்யும் போது, இதன் தேவை புரிந்தது என்றாள். அவர்களை என்னிடம் அழைத்து வருவதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பேசி முடிவெடுத்தோம்.
அப்படியே, அண்ணன் தங்கை இருவரையும் என்னிடம் அழைத்து வந்தாள் பூஜா டீச்சர். சிறுவர்கள் என்பதால் கூடவே அவர்களின் தாயார் மஹாவிபூதி வரவேண்டும் என்றதால் அவளும் வந்திருந்தாள். இருபத்தி ஐந்து வயதுடையவள்.
ப்ளே தெரபி வடிவில் இரு குழந்தைகளையும் முதலில் ஒன்றாகப் பார்த்தேன். எழுத்தோ, படிப்போ சம்பந்தப்பட்ட எவையும் இல்லாமல் கற்பனைக் கதைகள், பாடல்கள், வரைவது, புதிர், என அமைத்தேன். இருவரும் அம்மா என்ற சொல்லைத் தவிர்த்தார்கள்.
குழந்தைகள் ஒருவரை ஒருவர் பார்த்துச் செய்தார்கள். அவர்களைப் பற்றிப் புரிய வாய்ப்பானது. தனித்துச் செய்யவும் அமைத்தேன்.
அவ்வப்போது ஒரு துளி சந்தோஷம் எட்டிப் பார்த்து ஓடிப்போய் விட்டதைக் கவனித்தேன். பகிர்ந்ததில், இன்னல்கள் என்னென்ன என்பதைப் புரிந்து கொண்டேன்.
மஹாவிபூதி தனக்கு அம்மா யார் என்று தெரியாததால், குழந்தைகள் இந்த சொல்லை உபயோகித்தால் தனியாக அறையில் மூடிவிடுவாள், குறிப்பாக ரித்திகா பாட்டி அருகிலிருந்தால். இதனால் குழந்தைகள் அந்த சொல்லைக் கண்டே அஞ்சினார்கள். தவிர்த்தார்கள்.
விலங்கோ, பறவையோ, மனிதனோ மணிக்கட்டில் பேண்ட் ஏய்ட்டை (band aid) போட்டு, அதைச் சுற்றிச் சிவப்பு நிறம் போட்டு, அந்த காயத்தை, கட்டை விவரிக்கச் சொன்னால் “அப்பாக்கு” என்றார்கள். இந்த நிலைமையைச் சீக்கிரமாகக் கவனிக்க வேண்டியது என்று எனக்குத் தோன்றியது.
சில ஸெஷன்களுக்கு பிறகு அவர்களாகவே படங்களுக்குப் பெயர் சூட்டினார்கள். எக்கச்சக்கமான பிழைகள்.
இதுவரை நடந்த பல விஷயங்கள் ஆர்யவர்மன், அஸ்வதி மனதில் சங்கடங்கள் நிறைத்திருந்ததைக் குறித்தது. அதற்கு மூல காரணி, அப்பா அடிக்கடி அழுவது, பெற்றோர்கள் இடையே மனஸ்தாபம், அம்மா எப்போதும் “யார் என் அம்மா?” எனப் புலம்புவது என்ற வீட்டுச் சூழல். அதனுடைய ஒரு பிரதிபலிப்புதான், குழந்தைகளின் எழுத்துப் பிழைகள். மன வேதனை இவ்வாறு ஆக்கலாம். இதைச் சரி செய்ய சில ஸெஷன்கள் தேவை என மஹாவிபூதிக்கு விளக்கினேன். தயக்கத்துடன் ஒப்புக் கொண்டாள். பூஜாவிடம் பகிர்ந்தேன்.
ஸெஷன்களில் முளையும் மொட்டுக்கள் போலவே இந்த ஆர்யவர்மன் அஸ்வதி தென்பட்டார்கள். இருவரையும் ஒன்றாகவும் தனியாகவும் பார்த்து வந்தேன்.
குழந்தைகள் ஸெஷன்களில் செய்ததை மையமாக வைத்தே அவர்கள் சங்கிலிக் கதைபோல உருவாக்கும் விளையாட்டு ஒன்று அமைத்தேன். தாம் எழுதுகிறோம் என்ற எண்ணத்திற்கு அப்பால் போவதற்காகவே இப்படி. விறுவிறுப்பாக மூன்று நான்கு வரிகளில் கதை எழுதத் தொடங்கிய கைகள் தயங்கி, பிறகு வாயால் கதையை வளர்த்தார்கள். ஒவ்வொரு உருவாக்கத்திலும், அவர்கள் குடும்ப நிலை, உணர்வுகள் எதிரொலித்தது. திரும்பத் திரும்ப அம்மா குறைபடுவது, அப்பா தான் தோல்வியுற்றவன் என வர்ணிப்பது வந்து கொண்டே இருந்தது.
அவர்களின் எழுத்தில் பல சிக்கல் கண்டதும், மஹாவிபூதி அவர்களுக்குக் கற்றுத்தரும் விதத்தைப் புரிந்து கொள்ள, நான் அவளையும் ஸெஷன்களில் சேர்த்துக் கொண்டேன். மஹாவிபூதி எழுத்துக்களிலும் பல பிழைகள். அவளுடைய கர்வமான சுபாவம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவளுடைய பெற்றோரின் அதிகமான பாதுகாப்பும். அதாவது தத்து எடுத்தவள் என்பதால் யாரும் அவளைத் திருத்தவோ, குறை கூறவோ கூடாது. அவர்களும் இதில் கடைப்பிடிக்க மஹாவிபூதி தான் பிழையே செய்வதில்லை என நினைத்துக் கொண்டாள். ஆறு ஸெஷன்களில் இதை விளக்கிட, புரியவைக்க, அவள் ஒப்புக் கொண்டு புரிய வந்தது.
மஹாவிபூதியின் கர்வமான சுபாவம், அவள் மனதில் போராட்டம் இருப்பதைக் காட்டியது. அவளுடைய பிழைகளுக்கும் காரணம் இந்த மனநிலை தான். அத்துடன் அவளுக்கு தன் எழுத்துப் பிழைகளைக் கண்டறியத் தெரியவில்லை. பாடங்களை மனப்பாடம் செய்ததாக ஒப்புக்கொண்டாள். மூவருக்கும், பிழைகளை சரி செய்வதற்கென்று இருக்கும் ஸ்பெஷல் எஜுகேட்டர் (educator) ஏற்பாட்டை அவளுக்கு விளக்கினேன். ஒப்புக்கொண்டாள்.
அதற்கான ஏற்பாடு செய்வதற்கு முன்பு பூஜா டீச்சர், மற்ற ஆசிரியர்களிடமும் உரையாடி பிள்ளைகளின் கற்றல் முறையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் சில பாடங்களின் நடுவில் பதில் அளிக்காமல், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோம்வர்க் இருந்திடும். வரைபடங்கள் எல்லாம் வெறுப்பு, தனிமையைக் குறித்தது.
ஆர்யவர்மன், அஸ்வதி வகுப்பு ஆசிரியை, குழந்தைகளிடம் தன் குடும்பத்தினரை ஒரு ஆல மரம் போல் பெயர்களுடன் புகைப்படம் ஒட்டித் தயார் செய்யச் சொல்லி இருந்தார். ஆர்யவர்மன் மற்றும் அஸ்வதி இருவரின் மரங்களிலும் அம்மாவின் பெற்றோர் பெயர், படம் தவிர்த்து மீதி எல்லோரும் இருந்தார்கள். பூஜா டீச்சரின் கவனத்திற்கு இது வந்ததும் என்னிடம் காட்டினாள். இது குடும்பத்தில் ஏதோ பிரச்சினை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தது. இதைக் கையாள முடிவெடுத்தேன்.
அதற்கு முன்பாக, ஏற்கனவே மஹாவிபூதி, ஆர்யவர்மன், அஸ்வதியிடம் சொல்லி அவர்கள் ஆமோதத்துடன் ஸ்பெஷல் எஜுகேட்டரை அறிமுகம் செய்தேன். டீச்சரும் குழந்தைகளும் நன்றாக இணைந்தார்கள். அதுதான் மதர் மேரி டீச்சர்!
குறிப்பாக இந்த மதர் மேரியை ஸ்பெஷல் எஜுகேட்டராகத் தேர்ந்தெடுத்ததில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!! ஒன்று, அவர்களை எல்லோரும் “மதர் மேரி டீச்சர்” என்று அழைப்பது. “அம்மா” என்ற சொல்லைத் தவிர்க்க முடியாது! வாரத்தில் இரண்டு நாளைக்கு வெவ்வேறு பாஷையில் “அம்மா” என அழைப்பது என்ற பழக்கம் வைத்திருந்தாள். மற்ற பாஷையை மதிக்க இந்த சொல்லை ஒரு ஊன்றுகோலாக அமைத்திருந்தாள். அப்படிப்பட்ட மதர் மேரி இவர்கள் படிக்கும், எழுதும் விதத்தைத் திருத்த ஆரம்பித்தாள்.
வகுப்பில் ஆர்யவர்மன், அஸ்வதி மாறிவருவதை அறிந்தேன். அழைத்து வந்த பூஜா டீச்சர் பள்ளிக்கும் எனக்கும் இணைக்கும் பாலமாக இயங்கினாள்.
நன்றாகி வருவதால், குழந்தைகள் என்னிடம் வருவதை வாரத்திற்கு ஒரு முறை என்று குறைத்தேன். ஸெஷன்கள் முடியும் போது பல மாற்றங்கள் இருக்கும். ஆனால் மறுபடி வரும்போது அப்பா அசோக் கை அடிபட்டதைப் பற்றிச் சொல்ல, இவையெல்லாம் மறைந்து போயிருக்கும்.
அஷோக் என்னிடம் வரப் பரிந்துரைத்தேன். எரிச்சல் பொங்க வந்தான். ஆர்யவர்மன் அஸ்வதி சொன்னது போல, மணிக்கட்டில் பல கீறல்கள், புதிதாக ஒரு பேண்ட் ஏய்ட். இருபத்தி எட்டு வயதுடையவன். உடை நடை எதிலும் ஆர்வம், விருப்பம் இல்லை என்றான். ஸ்டோர் மேனேஜர், நல்ல சம்பளம். ஆனால் இப்போதெல்லாம் வேலையில் கவனம் செலுத்தக் கடினமாக இருப்பதாகச் சொன்னான். ஏன் கல்யாணம் செய்து கொண்டோம் என்று மனம் தவிக்கிறது என்றான். எல்லா வர்ணனையும் அவன் மன உளைச்சலைக் காட்டியது.
தானே தன்னைக் காயம் படுத்திக் கொள்வது, தற்கொலை எனப் பயமுறுத்திப் பேசுவது, இவை அவனுக்கு மன உளைச்சல் மாத்திரை தேவை என்று எடுத்துக் காட்டியது. அதற்காக மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என அசோக்கிடம் தெரிவித்தேன். நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர், நாங்கள் மாத்திரை மருந்து கொடுப்பதில்லை என்றதை விளக்கினேன். சந்திக்க வேண்டிய ஸைக்காட்ரிஸ்ட்டின் விவரங்களைத் தந்தேன். அந்த டாக்டரை அழைத்து, க்ளையண்ட் பற்றிக் கூறி, ஒரு ரிப்போர்டும் அனுப்பி வைத்தேன். மறுநாள் டாக்டர் அழைத்து, அசோக்குக்கு மருந்துகள் தந்ததாகவும், வாரத்தில் இரு முறை தெரப்பி அதாவது நேருக்குநேர் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கே, என்னுடன் மஹாவிபூதி ஸெஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அவளுடைய பட்டப் படிப்பு முடித்ததும் கல்யாணம் ஆனது. கொஞ்சமும் பிடிக்காமல் மஹாவிபூதி கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டாள். வீட்டில் ஹாயாக இருக்க வேண்டும் என நினைத்தாள். கல்யாணம் முடிவான பிறகே அவள் இதுவரையில் அறியாத ஒன்றைத் தெரிந்து கொண்டாள்.
அசோக் குடும்பத்தில் கேட்ட போது, மஹாவிபூதியின் பெற்றோர் சுந்தரம், ரித்திகா மஹாவிபூதி தத்து எடுக்கப் பட்டவள், கடவுளின் ஒளி, என்பதைச் சொல்லி இருந்தார்கள். தன்னை தத்து எடுக்க சுந்தரம் வேலை மாற்றி, ரித்திகா புத்தகக் கடையை மூடியது எல்லாவற்றையும் பற்றி அன்று தான் மஹாவிபூதி தெரிந்து கொண்டாள். திடீரென அதை ஏற்க மிகுந்த வேதனையாக இருப்பதாகக் கூறினாள். தன்னிடம் முன்னரே சொல்லாதது நம்பிக்கைத் துரோகம் என்றாள்.
முதல் சில ஸெஷன்களில். தத்து எடுத்ததைப் பற்றிச் சொல்லாததைப் புரிந்து கொள்ள, சுந்தரம் ரித்திகாவுடன் மஹாவிபூதி வருவதாக ஏற்பாடு. மூவரின் பல உணர்வுகள் பொங்கி எழுந்தது. அதனால் பல தெளிவும் ஏற்பட்டது. சுந்தரம், ரித்திகா தத்து எடுத்ததை மறைக்க வேலையை மாற்றி, வெளியூர் மாறினார்கள். வெளிப்படையாகக் குழந்தை தத்து எடுக்கப் பட்டவள் என்று சொன்னால் ரித்திகா மலடி என்றாகும், சுந்தரம் ஆண்மை கேள்விக்குறியாகும். இதற்கு அஞ்சி அவ்வாறே விட்டார்கள். இப்படிச் செய்ய ரித்திகாவின் தங்கை பரிந்துரை செய்தாள். தத்து எடுத்த நிறுவனம் இதை ஆமோதிக்காததால் அவர்களிடமிருந்தும் விலகி விட்டார்கள்.
யாரும் மஹாவிபூதியிடம் தத்து என்று சொல்லி விடக் கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தினார்கள். எந்தக் குறையும் தெரியாமல் இருக்க அளவுக்கு மீறிய செல்லம், சலுகைகள் குவித்தார்கள். பெற்றோர் அதிகமாகப் புகழ்வதாலேயே மஹாவிபூதிக்கு தன்னைப் பற்றிய கர்வம். யார் எது சொன்னாலும் அவர்களைத் துச்சமாகப் பார்த்து விட்டுச் சென்று விடுவாள்.
இந்த நடத்தைகள் தாக்கத்தை இப்போதைய வாழ்வில் நேர்வதைப் பட்டியல் இட்டோம். அடுத்த பல வாரங்களுக்கு இவைகளைப் பரிசீலனை செய்தோம். தெளிவு பெற ஆரம்பித்தது. உதாரணத்திற்கு, வருடாவருடம் மஹாவிபூதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் அவளைத் தத்து எடுத்த விடுதியில் தான் நடைபெறும். . மஹாவிபூதி அங்கே ஏன் போகிறோம் என்ற எந்த சவாலும் கேட்காமலிருந்தாள். கர்வமும் கசிந்தது. அங்கு உள்ள அனாதையாக இருப்போருக்கு உபகாரம் செய்வது என்ற பெற்றோரின் பரந்த மனப்பான்மை என எடுத்துக் கொண்டாள்.
ஸெஷன்களில் இதை எடுத்து பரிசீலனை செய்ததில் மஹாவிபூதி தன்னைக் கண்ணைக் கட்டிய விதத்தை உணர்ந்தாள். பெற்றோரும் இந்த சந்தர்ப்பத்திலும் உண்மையைப் பகிரவில்லை. ஒரு முறை கூட இது தன்னை அங்கிருந்து எடுத்து வந்ததால் எனச் சுந்தரம், ரித்திக்கா புரிய வைக்க வில்லை.
அதுமட்டுமின்றி மஹாவிபூதியின் சித்தி தன் தரப்பில் பெற்றோருடன் அவளுக்கும் இருக்கும் ஆறு வித்தியாசங்களைக் காட்டினாள். ஏன் இப்படிச் சொல்கிறாள், இவளா எனக்குப் பிடித்த சித்தி என மஹாவிபூதி வியந்தாள்!
சுந்தரம் ரித்திகா உண்மையை முன்னரே சொல்லாததின் விளைவை ஸெஷன்களில் ஆராய்ந்தோம். மூவரும் பகிர்ந்து கொள்ள, மஹாவிபூதி இப்போது புரிந்து கொண்டாள். சொல்லாமல் இருந்தால் நிதர்சனமாக ஓடி விடும் என எண்ணி குழந்தையிடம் சொல்லாமல் விட்டது, தத்து என்ற வித்தியாசத்தைக் காட்டாமல் இருக்க. அவர்கள் மனதில் உண்மை மறைத்து வைக்க ஊசலாடிய போராட்டம். மஹாவிபூதியை தெய்வத்தின் ஓளி ஸ்தானத்தில் வைத்ததாலும். இவ்வாறு தாங்கள் மனதில் நினைத்து நடந்து கொண்டதெல்லாம் எவ்வாறு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றதைப் பெற்றோர்கள் பல ஸெஷன்களுக்கு பிறகே உணர ஆரம்பித்தார்கள்.
தன் பங்குக்கு மஹாவிபூதிக்கு தன்னுடைய மனப்பான்மை, கர்வத்தைப் பற்றிய புரிதல் ஆரம்பமானது. அவளுக்கு ஆங்கிலம் நன்றாகப் பேச வரும் என்பதால் தன்னை பற்றி உயர்வாக நினைத்தாள். எழுத்தில் பிழைகளைச் சட்டைப் படுத்தவில்லை. தவறாக எழுதினாலும் திருத்திக் கொள்ளவில்லை. பெற்றோர் நன்கொடை தருவதால் பள்ளியில் ஆசிரியர்கள் பல அட்ஜஸ்ட்மென்ட் செய்ததில் மஹாவிபூதியின் தவறுகள் திருத்தப் படவே இல்லை. இப்போது ஆர்யவர்மன், அஸ்வதிக்கு உதவுவதற்காகத் தன்னைச் சரிசெய்ய மதர் மேரி டீசர் ஸெஷன்களில் ஆர்வம் காட்டினாள்.
அம்மா அப்பா மேல் கோபம் தளர்ந்து வர, உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டாள். ஸெஷன்கள் போகப்போக மெதுவாகச் சமாதானம் ஆக ஆக, தனக்கென்ற குடும்பம், கல்யாணம் உருவாக்கினார்கள் என்ற நன்றி உணர்வும் தலை தூக்க ஆரம்பித்தது..
உறவுகளைப் பற்றிப் பேசி வரும்போது மஹாவிபூதி செய்யும் இன்னொரு விஷயம் வெளியானது. கல்யாணம் ஆனபிறகும் அப்பா மடியில் உட்காருவது, அசோக், அவன் பெற்றோர், ரசிக்கவில்லை. ரித்திகா எதிர்த்தாலும் உட்கார்ந்தாள். சுந்தரம் மௌனமாக இருந்தான். அதேபோல் பெற்றோர் நடுவில் உட்காருவது, படுத்துக் கொள்வது. நம் கலாச்சாரத்தில் ஒரு கட்டத்தில் இவைகளைத் தவிர்க்கவே பல செய்-தவிர் என்றவை உள்ளன. பாதுகாக்கவே. மேலும் மற்றவர்களுக்குத் தர வேண்டிய இடைவெளி தர, உணர வைப்பதும் இதில் அடங்கும். மீறினால், உறவுகள் இதனால் முறியக் கூடும்.
ஸெஷனின் இந்தக் கட்டத்தில், மஹாவிபூதிக்கு தனக்கும் அசோக்கின் இடையே நேரும் சஞ்சலங்கள் புரிய ஆரம்பித்தது. அசோக்கை அனுப்பிய ஸைக்காட்ரிஸ்டிடம் கலந்து பேசினேன். மெரைட்டல் தெரப்பி (கணவன் மனைவியை சிகிச்சைக்கு பார்ப்பது) செய்ய முடிவானது. மேலும் மஹாவிபூதி மனதில் அசோக் பரிதாபப் பட்டு ஏற்றுக்கொண்டு விட்டதாக எண்ணம் இருந்தது. இந்த எண்ணத்திற்குப் பதில் கிடைக்கும், இருவரையும் ஒன்றாக ஸெஷன்களில் பார்ப்பதில்.
ஆமாம் மறைத்தால் இவ்வாறும் நேரலாம். மஹாவிபூதியின் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது…