பரிச்சயமில்லாதவர்களைப் பார்த்து புன்னகைத்தால்
என்னவோ போலப் பார்கிறார்கள்
பரிச்சயப்பட்டவர்களோ பயப்படுகிறார்கள்
உறவுகள் சந்தேகங்கொள்கிறார்கள்
நண்பர்கள் புறக்கணிக்கிறார்கள்
தின்பண்டம் எட்டாத குழந்தையை
முத்தம் கொஞ்சி ஆசையாகத் தூக்கினால்
கடைகாரர் பதட்டமடைகிறார்
உயிரென நேசித்தவர்களோ
தள்ளியிருந்தே ஆறுதல் சொல்கிறார்கள்
அன்பில் தத்தளிக்கும் சொற்களை
யாரிடமாவது பேசிவிட ஏங்குகிறேன்
நிராகரிப்பின் வலி தாளாமல்
வசைச்சொற்களைப் பெருக்குகிறது மனம்
மனதினுள் ஒப்புவித்தும் தீராத
உபரி சொற்கள்
உதடுகளில் உதிர்ந்துவிடும்போது
சந்தேகிக்கிறாள் அம்மாகூட
இன்னும் “கிறுக்கன்” என்றே அழைப்பவர்களுக்கு
எப்படி நிரூபிப்பது நான் பூரண குணமானதை
தொடர்ச்சியாக எனது கவிதைகளை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தி வரும் குவிகம் இதழுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். மகிழ்ச்சி. ஆசிரியர் குழுவுக்கும் அருமையாக வடிவமைத்திருக்கும் வடிவமைப்பாளருக்கும் அன்பின் நன்றிகள். இதழின் மற்ற பகுதிகளை விரைவில் படித்துவிட்டு கருத்துகள் பகிர்கிறேன்…
தொடர்ந்து பயணிப்போம்…
LikeLike